நண்பனின் நினைவில்…..!

ஆயிரம் நண்பர்கள் என் வாழ்க்கைப்படகில்
அருகிலிருந்து பயணத்திருந்தாலும்
ஆதரவாக உடனிருந்து துடுப்பு
அதிகம் போட்டவன் நீ மட்டும்தான்!

நண்பா!

 

நீ ஈருலகத்தையும் கற்றுக்கொண்டிருந்தாய்

நான் உன்னை கற்றுக்கொண்டிருந்தேன்!

 

எனக்கு நண்பனாய், நடமாடும் நூலகமாய்

பல்கலைக்கழகமாய், பகுத்தறிவாளனாய்

பசிபோக்கும் அன்னையாய் இருந்தாய்ஆனால்

வாழ்நாளை வளமாக பெற்றிருக்கவில்லையே!

 

அல்லாஹ் மிகப்பெரியவன் என கடைசியாக

சொல்லிவிட்டு நீ சென்ற பிறகு, என்னிடம்

ஞ்சியிருப்பது  நீ விட்டுச்சென்ற நினைவுகளும்

நான் கற்றுக்கொண்ட பாடங்களும்தான்!

 

படிப்பை பாதியிலேயே விட்டு விட்ட

பாதிப்பு மட்டுமல்ல எனக்கு!

பள்ளி சென்று, தோள் சேர்த்து முன்போல்

பரவசமுடன் தொழ எழும் ஆதங்கமும்தான்!

 

நண்பா! 

 

நீ ஈருலகத்தையும் கற்றுக்கொண்டிருந்தாய்

நான் உன்னைக் கற்றுக்கொண்டிருந்தேன்!

 

நான் கரையை தொலைத்திருந்த போது

கலங்கரை விளக்காய் இருந்த நீ, நான்

கரைவந்து சேரும்போது, கைபிடித்து

தோள் சேர்க்க கரைக்கு ஏன் வரவில்லை?

 

உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு

உன்னிடம் உள்ளதைக் கொடு என்று

எனக்கு உபதேசித்து விட்டு, கேளாமலேயே

எளியோருக்கு நீ அள்ளிக் கொடுத்தாயே!

 

நண்பா!

 

அல்லாஹ் மிகப்பெரியவன் என கடைசியாக

சொல்லிவிட்டு நீ சென்ற பிறகு, என்னிடம்

மிஞ்சியிருப்பது நீ விட்டுச்சென்ற நினைவுகளும்

நான் கற்றுக்கொண்ட பாடங்களும்தான்!

 

"உலகில் உள்ளவர்களில் என்னுடைய முஃமினான அடியானுக்கு மிகப் பிரியமான

நண்பன் ஒருவனின் உயிரை நான் பறித்துக் கொள்ளும்போது, அதனை எனக்காக

அவ்வடியான் பொறுமையாக  தாங்கிக் கொண்டிருந்தால்அத்தகைய விசுவாசமுடைய

அந்த அடியானுக்கு சுவனத்தை தவிர என்னிடத்தில் வேறு  சன்மானம் இல்லை"

 

பள்ளியில் ஹதீஸ் குத்ஸி அறிவிக்க கேட்டேன்!

பொறுமையாக இருக்கிறேன், நம் மறுமை

வெற்றிக்கான துஆவுடன் – நாம்

ஒன்றிணையும் மகிழ்ச்சியான அந்நாளுக்காக!

 

நண்பா! 

 

நீ ஈருலகத்தையும் கற்றுக்கொண்டிருந்தாய்

நான் உன்னை கற்றுக்கொண்டிருந்தேன்!!

 

அல்லாஹ் மிகப்பெரியவன் என கடைசியாக

சொல்லிவிட்டு நீ சென்ற பிறகு, என்னிடம்

மிஞ்சியிருப்பது நீ விட்டுச்சென்ற நினைவுகளும்

நான் கற்றுக் கொண்ட பாடங்களும் தான்!

 

ஆக்கம்: அபுஷிஃபா