இறையோ இதுவோ இப்பிறையோ?
இல்லை; இல்லை தேய்ந்திடுதே!
முறையாய் பெரிய கதிர்கூட
முழுதாய் மறையுது அந்தியிலே
நிறைந்த சிந்தை இபுறாஹீம்
நெஞ்சில் பூத்த தேடலிலே
இறையின் மார்க்கம் விளங்கியதே
இம்மை வாழ்வு சிறந்திடவே!
கனவில் கண்டார் பலியிடவே
கருணை பரிசாம் இளம்மகனை!
நினைந்தே உறுதி பெற்றிட்டார்
நிச்சயம் இறையாணை! என
அணைத்தே மகனைக் கேட்டாரே
அவரும் ஒப்பத் துணிந்தாரே
புனையா உண்மை தேடிடுவோம்
புரிந்தால் நன்மை நமக்கன்றோ!
அறுக்கத் துணிந்தார் அருமகனை
அல்லாஹ் நாட்டம் அதற்கில்லை
பொறுத்துப் பார்த்தார் இபுறாஹிம்
பேரிறை அளித்தான் ஆடொன்றை
சிறந்த எண்ணச் சோதனைக்கே
செய்த வழியாம் அக்கனவு
துறப்பீர் பாசம் பற்றெல்லாம்
தூயோன் இறையின் ஆணைக்கே!
உற்ற துணையை, சிறுமகவை
ஒன்றும் இல்லாப் பாலையதில்
பற்றை அறுத்து விட்டுவிட்டார்
படைத்தோன் இறைவன் சொன்னபடி
சுற்று முற்றும் ஒன்றுமில்லை
சுகமாய் வாழ ஏதுமில்லை
பெற்ற மகவும் பரிதவிப்பில்
அன்னை அடைந்தார் அகத்துயரம்
சற்றே நில்லும் என்கணவா!
சடுதி விரைந்து செல்லுமுன்னே
“பற்றை அறுத்துப் போவதெல்லாம்
படைத்தோன் முடிவோ, உம் முடிவோ?”
குற்ற மின்றிக் கேட்டுவிட்டார்
குமைந்தே சொன்னார் “இறையாணை!”
மற்ற விளக்கம் வேண்டாமல்
மாண்பாம் இறையே போதுமென்றார்
தாகத் தவிப்பில் சிறுகுழந்தை
தாயும் செய்ய ஏதுமின்றி
ஏகன் இருக்கப் பயமற்று
எங்கும் நீரைத் தேடிவர
போக வரவும் பொழுதாக
புரண்டு உதைத்துக் குழந்தையழ
மேகம் கூட உதவாத
மென்மை அறியாப் பாலைவனம்
காணக் கிடைத்த மலைகளிடை
கடுகிக் கடந்தார் தொங்கோட்டம்
கானல் என்று அறியாமல்
கண்ட நீரைக் காணவில்லை
வானம் பார்த்தார் வழியில்லை
வாழ்வில் இதுபோல் துயரில்லை
பிள்ளையின் அழுகுரல் நின்றிடவே
பெற்றவள் மனமும் கலங்கியதே
காண வந்தார் குழந்தையினை
கண்டார் ஊற்றைக் காலடியில்!
பெருகப் பெருகும் நீரன்று
பெரியொன் இறையோன் கருணையது
உருகிப் போனார் உளமாற
உண்மை இறையைப் புகழ்ந்தாரே!
நெருங்கிச் சொன்னார் நீரிடமே
நில்நில்! நீரும் நின்றதுவே
உருக்கும் நிகழ்விது உணர்த்திடுதே
உண்மை இறையைச் சார்ந்திடென்றே!
*அனைத்து உறவுகளுக்கும் நட்புகளுக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்*
இப்னு ஹம்துன்