மொத்தமாய் மதி கெட்டோர்
உத்தம நபிக் கெதிராய்
நித்தமே சதி செய்த
மக்க நகர் மீதாணை!
சதிகாரர்க் கெதிராக
விதியான போர் இருந்தும்
பொறுமையுடன் நீர் வசிக்கும்
பெரு நகரின் மீதாணை !
பெற்றெடுத்த தந்தை மீதும்
பிறந்துவிட்ட பிள்ளை மீதும்
முற்றும் அறிந்த இறை
முதல்வன் இடும் ஆணை !
எளிதாய்க் கடந்துவிட
இயலாத அல்லலுடன்
இங்கும் இன்னு மெங்கும்
மனிதனை யாம் படைத்தோம்
தன்னைத் தட்டிக்கேட்டுத்
தண்டிக்க எவருண்டு?-என
தற்பெருமை கொண்டு அவன்
தலை கனத்து அலைகின்றான்!
நேர்வழி அழைக்கும் உங்கள்
நன்னெறிக் கெதிராகப்
பெருஞ் செல்வம் அழித்ததாய்
பீற்றிக்கொண் டிருக்கின்றான்!
தினமும் அவன் செய்த
தீய பல சதிச் செயல்கள்
யாரும் பார்க்கவில்லை என
இறுமாந்து போகின்றான்?
இரவு பகல் பொழுதறிந்து
வடிவு வண்ணம் வகையுணர்ந்து
கண்டு களித்திட -அவனுக்கு
கண்கள் இரண்டையும்…
பாவ மொழி தவிர்த்து
பண்புடன் மொழிய நாவும்
நல்மொழி கேட்டிட செவியிரண்டும்
நாம் அமைத்துத் தரவில்லையா?
நாடினால் செல்ல நன்மை
நட்டப்பட்டோர்க்குத் தீமை, எனும்
நல்ல-தீய இரு வழிகளை
நா மன்றோ காண்பித்தோம் ?
இருந்துமென்ன இழிவடைந்தோன்
இயன்றவரை மறுதலித்து
கடமையாய் விதித்திருந்த
கடுஞ் சோதனையைக் கடக்கவில்லை;
அச் சோதனையின் பொருளறிந்து
அறிவித்த தெது உமக்கு?
அன்புசார் செயல்க ளதன்
அகப் பொருள் என்னவெனில்…
பொருள் உடைமை ஏதுமின்றி
பெருந் துயரில் வாடும் ஓர்
அடிமையின் விலங் கவிழ்த்து
விடுதலை செய்வதுவும்…
ஆதரிக்க ஆளில்லா
அநாதைச் சொந்தத்துக்குப்
பசியுடைய ஒரு நாளில்
புசித்திட உணவளித்து…
வறுமை நோயில் உழன்று
வாழும் ஓர் ஏழைக்கு
வாழ்நாளில் ஒரு நாளேனும்
வயிற்றுப் பசி ஆற்றுவதுவும் ஆகும்!
இன்னும் இவ்வுலகில்
இயல்பாகப் பொறுமையாலும்
இறை விசுவாசம் என்னும்
இனிமையான பண்பாலும்…
ஒருவருக் கொருவர் தம்மில்
ஓரிறையில் அன்புகொள்ள
உபதேசம் செய்துகொண்டும்
உலகில் சீவிப்பதாகும் !
இத்தகைய இயல்புடையோர்
எல்லா நன்மையோடும்
வளம் மிக்க வாழ்வுதரும்
வாய்மைசொல் வலப் புறத்தார்
எம்முடைய வசனங்களை
எவ ரொருவர் மறுதலித்து
ஏளனம் செய்பவரோ
இடப் புறத்தில் இடம் பிடிப்பார்!
இவ்வாறு இடப் புறத்தில்
இடம் பிடித்து இழிந்தோரின்
எல்லாப் புற மிருந்தும்
எரியும் நெருப் பிருக்கும் !
oOo
(மூலம்: அல் குர்ஆன் /சூரா 90 : மாநகர்)
– சபீர்