திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்! (பகுதி-2)

Share this:

ஸ்லாம் வணக்க வழிபாடுகளை மட்டும் வலியுறுத்தும் ஒரு மதமோ அல்லது சட்டதிட்டங்களை வகுத்தளிக்கும் வெறும் சித்தாந்தமோ அல்ல; அது ஒரு வாழ்க்கை நெறியாகும்.

இறைவனை வணங்கிவிட்டால் மட்டும் வெற்றி கிடைத்து விடுவதாகவோ சட்டதிட்டங்களை பின்பற்றி நடந்தவுடன் மட்டும் வாழ்க்கை முழுமையடைந்து விடுவதாகவோ இஸ்லாம் கூறவில்லை. இறைவனுக்குச் செய்யும் கடமைகளோடு சக மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் முழுமையாக நிறைவேற்றினாலே ஒருவர் உண்மையான முஸ்லிமாக முடியும் என்பதையும் இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

 

சமீபத்தில் வயதான பெற்றோரைப் பாதுகாக்கும் கடமையை செய்யத் தவறுபவர்களைத் தண்டிக்கும் விதத்தில் சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனைக் குறித்து வந்த செய்தி இவ்வாறு கூறுகின்றது:

வயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

இந்த மசோதாவின்படி, 60 வயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான ஒருவர் அதைத் தட்டிக் கழித்தால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்ட வழிகளில் தீர்வு காணவும் ஏற்பாடு செய்யப்படும். உத்தேச சட்டத்தை மதிக்காவிட்டால் அது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்நிலை மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரை முதியோரின் புகார்களை விசாரித்துத் தீர்வு காண குறைதீர் மன்றம் அமைக்க வகை செய்யப்படுகிறது. இதன்படி துணை டிவிஷனல் அதிகாரிகள் தலைமையில் குழு விசாரித்து வாரிசுகளின் வருவாய் அம்சத்தைக் கணக்கில் கொண்டு பராமரிப்புத் தொகை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு பராமரிப்புத் தொகை கோர 1973ம் ஆண்டு கிரிமினல் நடைமுறைச் சட்டம் இருந்தாலும், தீர்வு காண அதிக காலம், அதிக செலவு ஆகும் என்பதால் எளிமையான, செலவில்லாத, விரைவான தீர்வுக்கு மசோதா கொண்டு வரப்படுகிறது என்று சமூக நீதித்துறை அமைச்சர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா சட்டமானால், உள்ளூர் போலீஸ் நிலையங்கள் தங்கள் பகுதிக்குள் வசிக்கும் அனைத்து மூத்த குடிமக்கள் குறித்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படும். மேலும் தனியே வசிக்கும்முதியோர் மற்றும் தம்பதிக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பதும் அவசியமாகும்.

நாட்டில் சாத்தியமான இடங்களில் மூத்த குடிமக்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்களைக் கட்டவும் முதியோர்இல்லம் போதிய அளவில் இல்லையென்றால் அவர்களுக்குப் பராமரிப்புச் செலவை மாநில அரசுகள் அளிக்கவும்வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இலவச மருத்துவம், போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகளும் செய்து தரப்படும்.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள முதியோரின் எண்ணிக்கை 7 கோடியே 66 லட்சத்து 22ஆயிரத்து 321 ஆகும். இது அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன்படி 2016ல் இது மக்கள்தொகையில் 10சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அமைப்புசாராதுறையில் இருந்ததால் ஓய்வூதியம் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உதவி கிடைக்க வழியில்லை.சொந்த வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளின் பேரில் முதியோர்க்குக் கடன் வழங்கும் திட்டத்தை கிராமப் பகுதிகளுக்குவிரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடனை அவர்கள் வாழும் வரை பயன்படுத்தவும் அவர்களுக்குப்பிறகு வாரிசுகள் கடனைத் திருப்பிச் செலுத்தி மீட்கவும், மீட்க இயலாவிட்டால் சொத்தை விற்று கடனைக் கழித்துஎஞ்சிய தொகையை அவர்களிடம் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

கோலாகலமாக விளங்கிய கூட்டுக் குடும்பங்கள் நாளாவட்டத்தில் சிதைந்து தனித்தனிக் குடும்பங்களான பிறகுதான்முதியோர் தொடர்பான பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. மேலும் குறைந்து வரும் சகிப்புத் தன்மை, மனத்தை விட பணம், பகட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியனவும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

மசோதா ஒருபுறம் இருக்க, பணத்தை விட பாசத்தையே பெரும்பாலானபெற்றோர்விரும்புகின்றனர். பெற்றோரைப்புறக்கணிப்போருக்கு இந்த மசோதா ஓர் எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமாஎன்பது காலப்போக்கில்தான் தெரியும்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20070322125902&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0

நாகரீகத்தின் உச்சியில் வாழும் இக்காலத்தில் கூட ஒருவர் தனது பெற்றோருக்குச் செய்ய வேண்டிய சாதாரணக் கடமையைக் கூட சட்டமியற்றிவலியுறுத்தும் மோசமான நிலையே மனித சமூகங்களுக்கிடையில் நிலவுகின்றது. மேலும் இதற்குக் கூட எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவும் சூழலே தற்போதும் நிலவுகின்றது.

ஆனால் சுமார் பதினான்கு நூற்றாண்டுகளுக்குமுன்பே இவ்விஷயத்தைக் குறித்து இஸ்லாம் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைச் சமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே ”நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”(திருக்குர்ஆன் 31:14.)

மேலும் காண்க: 46:15, (2:83) (2:215) (4:36) (4:135) (6:151) (17:23) (31:14) (29:8) (71:28) (14:41)(31:15).

இஸ்லாத்தில் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு அடுத்த இடத்தில் வயதான பெற்றோரைப்பேணுவது உள்ளது.

அநியாய அக்கிரமங்களுக்கு எதிராக எவருக்கும் பயமின்றி துணிந்து போராடும் ஜிஹாத் எனும் அறப்போர் செய்வதற்கு சமமாக பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை இஸ்லாம் கூறுகிறது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாயும், தந்தையும் உயிருடனிருக்கின்றார்களா?” என்று கேட்டார்கள். அதற்குஅம்மனிதர், “ஆம் (உயிருடனிருக்கின்றனர்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)” என்று கூறினார்கள். (புகாரி: 3004) http://www.rahmath.net/View.asp?RECORDNO=3004

இன்னொரு அறிவிப்பில்,

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். அவர்கள், “தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது” என்றுகூறினார்கள். “பிறகு எது (சிறந்தது?)” என்று நான் கேட்டேன். அவர்கள், “பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது ” என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில்அறப்போர் புரிவதாகும்” என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல்மௌனமாகிவிட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள். (புகாரி: 2782) http://www.rahmath.net/View.asp?RECORDNO=2782

இவ்விடத்தில் இறைவனை வணங்குவதற்கு அடுத்தபடியான சிறந்த செயலாக பெற்றோரைப் பேணுவதையும் அது மற்றெல்லா நற்காரியங்களையும் விட சிறந்ததாகவும் நபி(ஸல்) அவர்களால் குறிப்பிடப்படுகின்றது.

அதுமட்டுமல்ல. வயதான காலத்தில் பெற்றோரை பேணாமல் அவர்களுக்கு துன்பம் விளைவிப்பவர்களுக்கு மிகப்பெரிய தாக்கீதாக அதனை பாவங்களிலேயே மிகப்பெரிய பாவமாக எடுத்துக் கூறி அல்லாஹ்வை நம்பி அவனின் அடியானாக மாறிய எந்த ஒரு முஸ்லிமும் தனது பெற்றோரை துன்பப்படுத்துவதிலிருந்தும் தடுத்துள்ளார்கள்.

“(ஒரு முறை) பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?”என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)” என்று சொன்னார்கள். உடனேநபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம்தருவதும் (தான் அவை)” என்று கூறிவிட்டுசாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள்! பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்) தான்” என்று கூறினார்கள். நிறுத்திக் கொள்ளக் கூடாதா என்று நாங்கள்சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். (புகாரி: 2654) http://www.rahmath.net/View.asp?RECORDNO=2654

பிறக்கும் முன் தந்தையையும், பிறந்து சிலவருடங்களில் தாயையும் இழந்து, பெற்றோரின் அன்பை அனுபவித்திராதமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் பெற்றோரைப் பேணுவதன் அவசியத்தையும் அதனை விடுவதால் ஏற்படும் இழப்பையும் அழகாக வலியுறுத்தியுள்ளதன் மூலம், நபி(ஸல்) அவர்கள்எக்காலத்திற்குமான ஒரு அழகிய முன்மாதிரி என்ற இறைக்கூற்று மீண்டும் நிரூபணமாகிறது!

திருக்குர்ஆனை தங்கள் வாழ்க்கை நெறியாக வைத்துக் கொள்ளும் எந்த முஸ்லிமும் தனது பெற்றோரை எக்காலத்திலும் துன்புறுத்தவோ, அவர்களின் வயதான காலத்தில் நடுத்தெருவுக்கு விட்டு முதியோர் இல்லத்தில் அடைக்கலம் தேடவோ விடமாட்டார்.

நாகரீகம் வளர்ச்சியடையாத, இன்னும் கூறினால் மத்திய ஆசியா ஐரோப்பா போன்ற கண்டங்களின் இருண்டகாலம் என வர்ணிக்கப்படும் காலகட்டத்திலேயே இன்று சட்டமியற்றி வலியுறுத்தும் “பெற்றோர் நலன் சார்ந்த விஷயங்களை” மிகத் தெளிவான உபதேசங்களின் மூலம் முஸ்லிம் சமூகத்தில் முன்மாதிரியாக நிலைநிறுத்தி முழுமனித சமூகத்திற்கும் வழிகாட்டியாக திருக்குர்ஆன் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

 

ஆக்கம்: N.  ஜமாலுத்தீன்

< தொடர்-1 | தொடர்-3 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.