உலகிற்கு வழிகாட்டியாக ஈரான்!

Share this:

ஈரானின் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்தபொழுது கைதுசெய்யப்பட்ட 15 பிரிட்டிஷ் கடற்படையினரை எவ்விதபிரதிபலனுமின்றி மன்னித்து ஈரான் விடுதலை செய்தது. ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் இதனை அறிவித்தார். பிரிட்டிஷ் மக்களுக்கு (ஈரானியர்களான) நாங்கள் வழங்கும் பரிசுஎன்ற நிலையில் தாங்கள் கடற்படையினரை விடுதலை செய்வதாக அவர் கூறினார்.

 

இதற்குரிய செய்தியாளர் கூட்டத்தின் போது பிரித்தானிய கடற்படையினரை கவனமாக கண்காணித்து ஈரான் கடல் எல்லையை கடக்கும் பொழுது சாமர்த்தியமாக கைது செய்த ஈரான் கடற்படையினருக்கு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் வைத்தே நஜாத் மெடல்கள் வழங்கி பாராட்டினார். அப்போது பேசும்போது பிரிட்டனுக்கு தான் செய்த தவறை ஒப்புக் கொள்ளக்கூடிய நெஞ்சுரம் இல்லை; இருப்பினும் பிரிட்டிஷ் கடற்படையினர் எவ்வித விசாரணையுமின்றி உடன் நாடு திரும்புகின்றனர். அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையோ, விசாரணையோ நடைபெறாது. அவர்கள் சுதந்திரமாக விடப்படுவர். என்று கூறினார். அவர்கள் இன்று காலை தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதுவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து நாடு திரும்பினர்.

 

இரானின் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததை ஒப்புக்கொண்டதற்காக பிரிட்டிஷ் கடற்படையினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நிஜாத் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேய்ரிடம் கோரிக்கை வைத்தார்.

 

மற்ற நாடுகளில் அத்துமீறி நுழைவதை விட்டு நீதியைக் குறித்தும், நியாயத்தைக் குறித்தும் சிந்திக்க வேண்டும் என நான் ப்ளேய்ரிடம் கோரிக்கை வைக்கின்றேன். தன்னுடைய சுய இலாபங்களுக்கல்லாமல் பிரிட்டிஷ் மக்களுக்காக செயல்பட வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் கூறினார். கைது செய்யப்பட்ட கடற்படையினர் ஈராக்கின் கடல் எல்லைக்குள் தான் இருந்தனர் என்றும் அவர்கள் ஈரானின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையவில்லை எனவும் பிரிட்டிஷ் அரசாங்கம் முதலில் இருந்தே கூறிவந்தது. உண்மையை தங்களது மக்களிடம் மனம் திறந்து கூறும் தைரியம் கூட பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இல்லை.

 

ஈரானின் கடல் எல்லையில் நுழைந்த பிரிட்டிஷ் கடற்படையினரை விசாரணை செய்யவும், தண்டனை விதிக்கவும் உள்ள அதிகாரம் தங்களுக்கு உண்டு எனவும், ஆனால் பிரிட்டிஷ் மக்களுக்கு நாங்கள் வழங்கும் பரிசு என்ற நிலையில் ஈரான் அவர்களை எவ்வித நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்காமல் விடுதலை செய்வதாகவும் நிஜாத் கூறினார்.

கடற்படையினருடன் ஒரு குழந்தையின் தாயான ஃபே டெர்ணி என்ற பெண்ணை ஈரானுக்குள் அத்துமீறி நுழைய அனுப்பியதையும் நிஜாத் மிகக் கடுமையாக விமர்சித்தார். அதோடு ஈராக்கில் அமெரிக்கா தலைமையில் நடக்கும் அத்துமீறலையும், லெபனானின் மீதான இஸ்ரேலின் அத்துமீறிய யுத்தத்தையும் அவர் மிகக் கடுமையாக கண்டித்தார்.

 

உலகின் பிரச்சனைகளுக்கும், தகர்வுக்கும் ஒட்டுமொத்தக் காரணமாக இருக்கும் நாடுகளை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாரசீக புதுவருடப் பிறப்பு தினமான நேற்று நிஜாத் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தை கூட்டினார். திருமறை வசனங்களுடன் ஆரம்பித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் புராதன மத்திய ஆசியாவின் சரித்திரமும் மேற்கத்திய ஏகாதிபத்தியர்களுக்கெதிரான விமர்சனமும் நிறைந்து காணப்பட்டன.

 

தங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் இன்றி ஈரான் விடுதலை செய்ததாக அறிந்த பிரித்தானிய கடற்படையினர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்ததாக ஈரான் ஊடகங்கள் அறிவித்தன. கடற்படையினரை விடுதலை செய்வதாக வெளியான நிஜாதின் அறிவிப்பை பிரித்தானிய பிரதமரின் அலுவலர் வரவேற்றார்.

 

இந்த மொத்த நிகழ்வுகளின் வரிசையையும் அதனை மிகச் சாதுரியமாக ஈரான் ராஜதந்திரத்தோடு கையாண்டதையும் பார்ப்போம்.

 

23 மார்ச் 2007: 15 பிரித்தானிய கடற்படையினரை ஈரான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி ஈரான் கைது செய்தது. இதற்கு முன் 2004 ல் ஈரான் புரட்சிப் படைகள் 8 பிரித்தானிய கடற்படை வீரர்கள் ஈரான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கூறி கைது செய்திருந்தது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தை மற்றும் கடற்படையினர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க மூன்று நாட்களுக்குப் பின்னர் அவர்களை விடுவித்தது. ஆனால் தற்போதைய அணுஆயுத பிரச்சனையில் ஈரானுக்கு எதிரான உலக வல்லரசுகளின் நிலைபாடு இப்பிரச்சினையின் மூலம் மேலும் தீவிரமடையும் என கருதப்பட்டது. எனினும் பிரித்தானிய கடற்படையினரை மீட்க அரசு தரப்பில் ஈரானுடன் மேல்மட்ட தொடர்பு கொண்டு வருவதாக பிரித்தானிய அரசு தரப்பு கூறியது. இச்சமபவத்தைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணை விலை கூடியது.

 

24 மார்ச் 2007: அணு ஆயுதப் பிரச்சனையில் ஈரானின் மீது தாக்குதல் தொடுக்க அமெரிக்கா திட்டமிடும் வேளையில், இச்சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஈரான் ஊடகங்கள் கூறின. அணுஆயுத பிரச்சனையில் ஈரான் மீது இரண்டாம் கட்ட தடைக்கு ஓட்டெடுப்பு நடக்கும் இவ்வேளையில் ஈரான் செய்திருக்கும் இச்செயல் அரசியல் காய்நகர்த்தல்கள் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். பிரித்தானிய கடற்படை படகுகள் ஈரான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கூறும் ஈரானின் அறிக்கையை பிரித்தானிய ராயல் நேவி தலைவன் அட்மிரல் சர் ஆலன் வெஸ்ட் நிராகரித்தார். மீண்டும் மீண்டும் தங்கள் படைவீரர்கள் இராக்கிய கடற்பகுதிக்குள் இருந்ததாகவும் அதைத் தம்மால் நிரூபிக்க இயலும் என்றும் பிரிட்டன் வாதிட்டு வந்தது.

 

25 மார்ச் 2007: பிரிட்டிஷ் கடற்படையினர் கைதுக்குப் பின் அமெரிக்கா பிரிட்டிஷ் பிரதமருடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவும் சூழ்நிலைக்குத் தகுந்த முடிவெடுப்போம் என்றும் அறிவித்தது. ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுவதாக அமெரிக்க கூறி வரும் இவ்வேளையில் பிரிட்டிஷ் கடற்படையினர் ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஈரான் கூறியது. இதற்கிடையில் ஈரான் தனது கடல் எல்லையில் ஒரு வாரகால இராணுவ பயிற்சியை அறிவித்தது இப்பிரச்னையின் தீவிரத்தை மேலும் சிக்கலாக்கியது. பலம் மற்றும் தாக்குதல் காரியங்களைக் கூறி ஈரானைப் பயமுறுத்தி பணிய வைக்க முயலும் சக்திகளை ஈரான் தனது எல்லா சக்திகளையும் உபயோகித்து பதிலடி கொடுக்கும் என ஈரானின் ஆன்மீக தலைவர் காம்னயீ அறிவித்தார். எவருக்கும் பயப்படாமல் உலக வல்லரசுகளுக்கு எதிராக தொடர்ந்து துணிந்து செயல்பட்டு வரும் ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனைக் குழப்பத்தில் ஆழ்த்தின.

 

26 மார்ச் 2007: ஈரான் தனது அணு உலை சோதனையை 60 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் எனவும் தவறினால் ஈரானுக்கெதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஐநா தீர்மானம் நிறைவேற்றியது. இதனை ஈரான் ஏற்றுக்கொள்ளாமல் புறம் தள்ளியது.இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 15 பிரித்தானிய கடற்படையினரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக ஈரான் இராணுவத் தலைமையகம் கூறியது. மேற்கொண்டு விசாரணை செய்ய அவர்களை தெஹ்ரானுக்கு கொண்டு சென்றதாகவும் அறிவித்தது. இரண்டாம் முறையாக பிரிட்டனுக்கான ஈரானின் தூதர் ரஸூல் முவாஹிதீனை பிரிட்டிஷ் அரசு நேரில் அழைத்து கடற்படையினரை விடுதலை செய்ய வேண்டுகோள் வைத்தது. பிரிட்டிஷ் கடற்படையினர் ஈரான் கடல் எல்லையை கடந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவர்கள் தங்களால் தவறு நிகழ்ந்ததை ஒப்புக் கொண்டதாகவும் ஈரான் கடற்படைத் தளபதி அட்மிரல் அலி ரஸா அஃப்ஸார் கூறினார். மேலும், ஈரானின் மீது இரண்டாம் கட்ட தடை ஏற்படுத்துவதற்கான ஓட்டெடுப்பு ஐநாவில் நிகழ இருக்கும் இவ்வேளையில் பிரிட்டனின் இத்தகைய அத்துமீறிய செயல் பிரதேசத்தில் பிரச்சனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் எனவும், அவர்கள் எதற்காக ஈரான் கடல் எல்லையினுள் அத்துமீறி நுழைந்தனர் என்பது தங்களுக்கு தெரிய வேண்டும் எனவும் அவர் கூறினார். அதே சமயம் பிரிட்டிஷ் கடற்படையினரை ஈரான் கைது செய்தது பேரம் பேசுவதற்காக என பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின. அணு உலை சோதனை விவகாரத்தில் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை உறுதிப்பட்டிருக்கும் இவ்வேளையில் அவர்கள் செய்திருக்கும் இக்காரியம் கடற்படையினரை வைத்து பேரம் பேசுவதற்காகத் தான் அப்பத்திரிக்கைகள் கூறின.

 

27 மார்ச் 2007: பிடிபட்ட பிரிட்டிஷ் கடற்படையினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்வோம் என ஈரான் அறிவித்தது. இதற்கிடையில் ஐநாவின் தடை உபயோகித்து ஈரான் மீது தாக்குதல் தொடுக்க அமெரிக்க இராணுவம் தயாராகக் கூடாது என ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்தது. அவ்வாறு அமெரிக்கா ஈரானுக்கு எதிராக போர் தொடங்கினால் நிச்சயமாக அதனை முடிவுக் கொண்டு வருவது அவர்களாக இருக்க மாட்டார்கள் என ஈரான் புரட்சிப்படையினரின்(Revolutionary Guards) கடற்படை கமாண்டர் முர்த்தஸா ஸஃபாரி கூறினார். ஒரு அமெரிக்க படையினரைக் கூட ஈரான் மண்ணில் கால் வைக்க ஈரான் மக்கள் விடமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

 

28 மார்ச் 2007: எல்லை கடந்து அத்துமீறி நுழைந்ததாக ஈரான் கைது செய்த 15 கடல் படையினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேயர் எச்சரிக்கை விடுத்தார். இரானின் கடல் எல்லையில் அத்துமீறி நுழையவில்லை என்பதற்கு அதிகப்படியான ஆதாரங்கள் எதுவும் கொடுக்க உத்தேசிக்கவில்லை எனவும் உடனடியாக கடற்படையினரை விடுவிப்பது தான் நல்லது எனவும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் மார்கரட் பெக்கிட்டும் எச்சரிக்கை விடுத்தார். அதேநேரம் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு கடற்படையினரை கைது செய்ய ஈரானுக்கு முழு அதிகாரம் உண்டு எனவும் இக்காரியத்தில் சர்வதேச சட்டங்கள் எதையும் ஈரான் மீறவில்லை எனவும் உஸ்பெகிஸ்தானின் முன்னாள் பிரிட்டிஷ் தூதர் க்ரெய்க் முர்ரே கூறினார்.

 

29 மார்ச் 2007: இரு நாடுகளுக்கிடையில் நடக்கும் இராஜதந்திர சர்ச்சை தோல்வியில் முடிந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என முன்தினம் பிளேய்ர் அறிவித்திருந்ததற்கிணங்க, ஈரானுடனான அனைத்து பொருளாதார தொடர்புகளையும் பிரிட்டன் தடை செய்தது. தங்களின் படையினர் ஈராக் எல்லையில் இருந்ததற்கான ஆதாரங்களை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கடற்படை (Royal Navy) சமர்ப்பித்தது. அநியாயமாக ஈரான் கைது செய்த தங்களின் படையினரை மீட்க ஈரான் மீது சர்வதேச நிர்பந்தம் ஏற்படுத்துமுகமாக இத்தடை விதிக்கப்படுவதாக ப்ளேயர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

அதேவேளையில் பாரசீக கடல் பகுதிகளில் மிகப்பெரிய இராணுவ ஒத்திகையை அமெரிக்கா ஆரம்பித்தது. ஈராக் ஆக்ரமிப்பிற்குப் பின் வளைகுடா பகுதியில் அமெரிக்கா நடத்தும் மிகப்பெரிய இராணுவ ஒத்திகை இது. 100 போர் விமானங்கள், 2 விமானம் தாங்கி கப்பல்கள், 10000க்கும் மேற்பட்ட படையினர் பங்கு கொள்ளும் பெரிய பயிற்சியாகும். இதில் அதிகமான நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கு பெற்றன. இது ஒரு வெறும் ஒத்திகை மட்டுமே. ஆனால் இதற்கு மற்றொரு பரிமாணம் ஏற்படும் எனில் அதற்கு ஈரானின் நடவடிக்கைகளே முழுக் காரணமாகும் என பஹ்ரைனில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பல் தலைவர் கெவின் கூறினார்.அதே நேரம் பாரசீகக் கடல்பகுதிகளில் நடக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தாங்கள் அதனை தாங்கள் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்றும் ஈரான் அறிவித்தது.

 

இதற்கிடையில் அமெரிக்கா ஈரானை ஆக்ரமிக்க தங்கள் நிலத்தை பயன்படுத்தாது என அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸாயித் அல் நஹ்யான் அறிவித்தார். அரபு நாடுகளை அதிகம் ஒன்றிணைக்க அரபு குழுமம் (Arab League) பயன்படும் என்றும் கூறினார். தங்களின் மூலமாக தரைவழி, ஆகாய வழி, நீர்வழி எங்கள் ஈரான் சகோதரர்களை ஆக்ரமிக்க அமெரிக்கா உபயோகிக்க அமீரகம் அனுமதிக்காது. இராணுவ, ரகசிய, உளவு நிறுவனங்களையும் இதற்காக உபயோகிக்காது. தமது வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம் மூலமாக ஈரானுக்கு இதனை தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இதே நாளில் ஒவ்வொரு நாளும் 22 லட்சம் பீப்பாய் ஏற்றுமதி செய்யும் தனது எண்ணெய் வருமானத்தின் பணப்பரிமாற்றத்தை அமெரிக்க டாலரில் இருந்து வேறொரு கரன்சிக்கு மாற்ற ஈரான் தீர்மானித்தது. கடந்த 6 மாதங்களில் உலக அரங்கில் மிக அதிகமான அளவுக்கு எண்ணை விலை உயர்ந்தது.

 

30 மார்ச் 2007: ஈரானுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்ட பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாட்டை கண்டித்துக் கொண்டு 15 பிரித்தானிய கடற்படையினரில் அங்கமான பெண்ணை விரைவில் விடுவிப்போம் என அறிவித்திருந்த ஈரான் தனது நிலைபாட்டிலிருந்து பின்வாங்கியது. பிரிட்டிஷ் அரசின் தவறான நிலைபாடு கடற்படையினரில் உள்ள பெண்ணை விடுவிப்பதற்கு தடை ஏற்படுத்தியது என்றும், தற்போதைக்கு பெண்ணை விடுவிப்பது நடக்காது என்றும் ஈரான் சுப்ரீம் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லாரி ஜானி அறிவித்தார்.

 

அதேவேளை கடல் எல்லையை அத்துமீறி கடந்ததாக குற்றம் ஒத்துக் கொண்ட பிரித்தானிய கடல்படையினரின் வீடியோ காட்சிகளை ஈரான் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது. அதில் அவர்கள் தங்களை கைதுசெய்த ஈரான் படையினர் தங்களோடு மரியாதையுடன் நடந்து கொண்டதாகவும், தாங்கள் தற்போது மகிழ்ச்சியாகவே உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மனுஷஹர் முத்தகி பிரிட்டிஷ் அரசு தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என  அறிவித்தார். பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளை கடற்படையினரை சந்திக்க வைக்க தயார் என்றும் கூறினார். ஈரானின் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்தது அநியாயமாகும். பிரிட்டிஷ் அரசு தனது குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். அது மட்டுமே பிரச்சினைக்குரிய ஒரே தீர்வாகும் என்று அவர் கூறினார்.

 

பிரச்சினையை தீர்க்க ஐநா அதிகாரி பான் கி.மூன் முத்தகியுடன் சர்ச்சை நடத்தினார். சர்ச்சையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் தொலைகாட்சியில் வெளியான வீடியோ காட்சிகளை அங்கீகரிக்க இயலாது என்றும், ஈராக் கடல் பிரதேசத்தில் வைத்து தான் தங்கள் படையினரை ஈரான் கைது செய்தது என்றும், அவர்களை கட்டாயப்படுத்தி ஈரான் குற்றத்தை சம்மதிக்க வைத்திருக்கின்றனர் என்று பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சர் மார்க்கரட் பெக்கட் கூறினார். தங்கள் படையினரின் விடுதலைக்கு ஐநா கடுமையாக இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று அவர் கோரினார்.

 

31 மார்ச் 2007: தங்கள் படையினரை அநியாயமாக கைது செய்ததை கண்டித்து ஈரானுக்கு எதிராக பிரிட்டன் ஐநாவில் தீர்மானம் கொண்டு வந்தது. ஈரான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக அறிவித்த ஈரானின் அறிவிப்பை நிராகரித்துக் கொண்டு அநியாயமாக கைது செய்த தங்கள் படையினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிய தீர்மானத்தின் முக்கிய வாசகங்களுக்கு எதிராக சீனா, ரஷ்யா, கத்தர், இந்தோனேஷியா போன்ற நாடுகள் கருத்து தெரிவித்தன. சம்பவம் நடந்தது எந்த இடத்தில் வைத்து என்பதை கண்டறிய போதிய வழிகள் ஒன்றும் இல்லாததால் பிரிட்டனின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என அநாடுகள் தெரிவித்தன. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட கடற்படையினரில் நதான் தோமஸ் சமேர்ஸ் என்ற மற்றொருவரும் குற்றம் சம்மதித்துக் கொண்டு மன்னிப்புக் கோரிய வீடியோ காட்சி இரான் தொலைக் காட்சியில் வெளியானது. அனுமதி இல்லாத ஈரான் கடல்பகுதியில் தாங்கள் நுழைந்ததாகவும், அப்போது தான் ஈரான் கடற்படை தங்களை கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார். நடந்த தவறுக்கு ஈரான் மக்களிடம் தான் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் கூறினார்.

 

1 ஏப்ரல் 2007: பிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் இராணுவத்தினரை விசாரணை செய்வோம் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை உறுதி எனவும் ரஷ்யாவில் ஈரான் தூதர் குலாம் ரஸா அன்சாரி அறிவித்தார். பிரச்சனையில் பிரிட்டனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 அங்கத்துவ நாடுகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன.

 

இராணுவத்தினரை கைது செய்ததாக ஈரான் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அனுப்பியதாக பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கரட் பெக்கட் அறிவித்தார். அதே நேரம் பிரச்சனையை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து அதனை அரசியல் ஆக்குவதற்கு எதிராக ஈரான் பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுத்தது. கடல் எல்லையை மீறி நுழைந்ததை பிரிட்டன் ஒப்புக் கொள்ளவும், இனி அவ்வாறு நடைபெறாது என உறுதி வழங்கவும் வேண்டும். அதைவிடுத்து தேவையில்லாமல் ஊடகப்போர் நடத்தி நிலைமை மோசமடையச் செய்வதில் எவ்வித பலனுமில்லை என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மனுஷஹர் முத்தகி அறிவித்தார்.

 

2 ஏப்ரல் 2007: பிரிட்டனின் மாற்றத்திற்காக காத்திருப்பதாக ஈரான் கூறியது. தங்களின் நியாயமான சட்டரீதியான அணுகுமுறைக்கு உரிய ஒத்துழைப்பை பிரிட்டனிடமிருந்து தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், நல்ல மாற்றத்தை பிரிட்டனிடமிருந்து எதிர்பார்த்து தாங்கள் காத்திருப்பதாகவும் முத்தகி அறிவித்தார். மார்க்கரெட் பெக்கட் அனுப்பிய கடித்ததை பரிசீலனையில் எடுத்து தாங்கள் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

 

3 ஏப்ரல் 2007: ஈரான் கடல் எல்லையை அத்துமீறி கடந்ததை கைது செய்யப்பட்ட 15 கடல்படையினரும் ஒத்துக் கொண்ட புதிய வீடியோ காட்சிகளை ஈரான் வெளியிட்டது. அதே நேரம் சம்பவத்தில் பிரிட்டனிடம் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்திற்கு விளக்கமளித்து பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கரட் பெக்கட் ஈரானுக்கு எழுதிய கடிதம் பிரிட்டனிடம் நல்ல மாற்றம் ஏற்படுத்தி உள்ளதாகவும் இதேநிலை தொடர்ந்தால் சம்பவம் நல்ல முறையில் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ஈரான் அரசு தரப்பு தெரிவித்தது. பிரச்சினையை சுமூகமான வழிகளில் தீர்க்க ஈரானுடன் நடத்த அரசு முயற்சி செய்யும் என பிரிட்டிஷ் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

4 ஏப்ரல் 2007: பிரச்சினையில் இரு நாட்டு அரசு தரப்புக்களும் தங்கள் நிலைபாட்டில் சற்று மாற்றம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எழுந்தது. ஈரானுக்கு பிரிட்டன் அனுப்பிய கடிதத்தில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஈரானும் தங்கள் கோரிக்கைகளில் சிலவற்றை விட்டுக் கொடுக்க தீர்மானித்தது. முன்னர் மன்னிப்புக் கேட்டாலே இராணுவத்தினரை விடுவிப்போம் என்று கூறியதையும் பிரிட்டன் தனது கடல்படையினர் ஈரான் கடல் எல்லையை அத்துமீறி நுழைந்ததற்கு வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து திரும்ப பெற்றுக் கொள்ள ஈரான் தீர்மானித்தது. பிடிபட்ட அனைவரும் குற்றம் சம்மதிக்கும் புதிய வீடியோ காட்சிகளை தொலைகாட்சியில் வெளியிட்டாலும் அதில் உள்ள ஒலியை ஈரான் வெட்டியிருந்தது. பிரிட்டனின் பக்கமிருந்து நல்ல மாற்றத்தை தாங்கள் கண்டதால் அதனை வெளியிட்டு மேலும் பிரச்சனையை தாங்கள் நீட்ட விரும்பவில்லை என அலி லாரி ஜானி கூறினார்.

 

ஈரானுடனான அனைத்து தொடர்புகளையும் முன்னர் தடை செய்த பிரிட்டனின் நிலைபாடும் மாறியது. பேச்சு வார்த்தைகளின் மூலம் பிரச்சினையை தீர்க்க ஈரானுக்கு சம்மதம் எனில் பிரிட்டனின் அனைத்து வழிகளும் திறந்தே இருப்பதாக டோனி பிளேயர் அறிவித்தார். இதற்கிடையில் பிரச்சினையில் ஈரானின் நிலைபாட்டை விளக்க ஈரான் அதிபர் நிஜாத் கூட்டியிருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மறுநாளுக்கு மாற்றப்பட்டது. அதேவேளை பிரிட்டிஷ் கடற்படையினரை ஈராக்கின் கடல் எல்லையில் புகுந்து ஈரான் கடற்படையினர் கைது செய்ததாக திரும்பத் திரும்ப செய்தி வெளியிடுக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ஊடகங்கள், பிரிட்டிஷ் கடற்படையினரின் குற்ற ஒப்புதல் வீடியோ காட்சிகளை கண்ட பின்னர் ஷாதல்-அரபு கடல்பகுதிகளில் உள்ள கடல் எல்லைகளில் தற்போதும் தெளிவான வரையறை எதுவும் கிடையாது என தங்கள் பக்கத்தை நியாயப்படுத்த பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளன.

 

இந்த சிக்கலை ஈரான் தேர்ந்த முறையில் ராஜ தந்திரத்துடன் கையாண்டதையும் அதேவேளை முதலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் துணையை நம்பி வீண்முரண்டு பிடித்த பிரிட்டன் தன் தரப்பு குற்றம் தெளிவானவுடன, சற்றே கீழிறங்கி வந்தையும் நோக்கும் போது ஈரான் இப்பிரச்னையைத் திறம்படக் கையாண்டது தெளிவாகிறது. அதேபோல அமெரிக்கா சொல்லுக்கு கேள்வி ஏதுமின்றி அப்படியே தலையாட்டி ஏற்றுக் கொள்ளும் பிற அரபு நாடுகள் ஈரானின் இந்த அணுகுமுறையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பது இந்நாடுகளின் பொதுமக்களின் விழைவாகும்.

 

தொகுப்பு: முன்னா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.