மிதக்கிறது எங்கள் நகரம்..!

மிதக்கிறது எங்கள் நகரம்..!
தவிக்கிறது எங்கள் உள்ளம்.!

புசிக்கவோ- பருகவோ ஏதாகிலும் கிடைக்குமா
என்கிற நப்பாசையில் எம் நாவுகள்..!!

எதுகை மோனைகளை ரசிக்கும்
நிலையிலில்லை நாங்கள்..!

மழையைத்தா – ஆண்டவனே.!
என்பதாய் – ஏங்கும் ஊரார் எவர்க்கேனும்
எங்கள் மழையை, தாராளமாய் தானம் செய்ய
இதோ நாங்கள் தயார்.!

திசை மாற்றி மேகங்களைத் திருப்ப
திறனேதுமுண்டோ எவரிடமேனும்.?

கேட்டுச் சொன்னால் வழி பிறக்கும்.!
விட்டுப் போனால் இன்னமும் வலி பெருகும்.!

நாங்கள் வானம் பார்த்தே
வருடங்கள் பல ஆச்சு.!
இந்நாட்களிலோ.!
வானம் பார்ப்பதே
எங்கள் வாழ்க்கையாச்சு..!

கரை வேட்டி கட்டி வந்த
ஒரு வெட்டிப்பய –
அழுக்காகாம வந்து போனான்..!
அவன் கமிசனை –
அழகாக அமுக்கிப் போனான்.!

அன்று கண்ட கனவு.!
நனவாகிப் போனது இன்று.!

எம் சாலைகளில் – இப்போதெல்லாம்
தெளிவாய்த் தெரிகிறது எம் முகங்கள்.!

எம் நிலைகளில் – மாற்றம் வருவது எப்போவென
தெளிவின்றியே கழிகிறது எம் நாட்கள்..!

அந்தோனியும் – அம்மாவாசையும்
அருகருகே உறங்குகிறான்
விரிந்து கிடக்கும் மசூதியின்
அறைகளுக்குள்..!

இதோ.!
உணவுப் பொட்டலம் வருவதாய்
அறிவிப்புக் கேட்கிறது.!

புறப்படத் தயாராகிறேன்.!
என் சக இந்தியனின்
ஆதரவுக் கரம் பற்றவும் –
அடைக்கலம் தேடவும்…!!

– அப்பாஸ் அல் ஆஸாதி