மனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை

ன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

அண்மையில் நமது தளத்தில் கேள்வி-பதில் பகுதியில் வெளியான, ‘மனைவியின் அனுமதி தேவையா?’ எனும் ஆக்கத்துக்கு விமர்சனமாக இரண்டு பின்னூட்டங்கள் வந்தன. அவ்விரண்டும் பின்னூட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

அவற்றில் இடம்பெற்ற விமர்சனக் கருத்துகளும் அவற்றுக்கான கூடுதல் விளக்கங்களும் கீழே:

“சத்தியமார்க்க கட்டுரை ஆசிரியருக்கு நம்ம டீக்கடை மக்களே எம்புட்டோ தேவலாம்”

அல்லாஹ் எங்களுக்கு வழக்கியுள்ள அளவிடப்பட்ட அறிவைக்கொண்டு, அவனுடைய மார்க்க மூலாதாரங்களிலிருந்து இயன்றளவு விளங்கிச் செயல்பட்டு மற்றவர்க்கும் எடுத்துச் சொல்லிவருகின்றோம், அல்ஹம்து லில்லாஹ்!

மற்றபடி, “எங்களைவிடச் சிறந்தவர் – அல்லது – தேவலாம் ஆக எவருமிலர்” என்னும் சாத்தானியச் சிந்தனை எங்களுக்கு இல்லை. அந்தச் சிந்தனை எங்களுக்கு ஏற்பட்டுவிடாமல் அல்லாஹ் எங்களைக் காப்பானாக!

எங்களைவிட எம்புட்டோ தேவலாமாக டீக்கடை மக்கள் இருப்பதும் டீக்கடை மக்களைவிட ஒரு காஃப்பிக்கடை மக்கள் எம்புட்டோ தேவலாமாக இருப்பதும் காஃபிக்கடை மக்களைவிட ஒரு ஆப்பக்கடை மக்கள் எம்புட்டோ தேவலாமாக இருப்பதும் வெகு இயல்பானது.

“நாங்கள் கற்றுத் தேர்ந்தவர்கள்” என்றோ “நாங்கள்தான் கற்றுத் தேர்ந்தவர்கள்” என்றோ “நாங்கள் மட்டும்தான் கற்றுத் தேர்ந்தவர்கள்” என்றோ என்றைக்கும் நாங்கள் மார் தட்டிக்கொள்வதில்லை.

டீக்கடையில் உள்ளவர்கள் முதல் சத்தியமார்க்கம் உட்பட எவருக்குமே பதில் சொல்ல விருப்பம் இல்லாத எனது வினா இதுதான்: கணவனின் மறு கல்யாணத்துக்கு அனுமதிக்கவே மாட்டேன்… மீண்டும் அனுமதிக்கவே மாட்டேன்… என எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் மனைவியை என்ன செய்வது..???
———இந்த கேள்வியை கேட்டால்….
சுத்தி வளைச்சு எலலாரும் சொல்றது… எப்படியாச்சும் மார்க்கத்தை சொல்லி நைச்சியமா பேசி கன்வின்ஸ் பண்ணி அனுமதிக்க வச்சிடணும். வேறன்ன செய்ய..?
அந்த எழவைத்தான் “அனுமதி” வாங்கிக்கிங்கப்பா ன்னு சொல்லிட்டு இருக்க்கேன்….

அல்லாஹ்வும் ரஸூலும் வாங்கச் சொல்லாத அனுமதியை முதல் மனைவியிடமிருந்து வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்த எவருக்கும் யோக்கிதை இல்லை. இஸ்லாம் “உண்டு” என்று சொல்வதை “இல்லை” என்று மறுப்பதற்கோ “இல்லை” என்று இஸ்லாம் சொல்வதை “உண்டு” என்று சொல்வதற்கோ தனி மனிதராயினும் அரசாங்கமே ஆயினும் எவருக்கும் உரிமை கிடையாது. மீறிச் சொன்னாலும் அது செல்லாது.

“மாட்டுக்கறி ஹலால் உணவு” என இஸ்லாம் சட்டம் விதித்திருக்க, “மாட்டுக்கறி ஹராம் – சாப்பிடாதே! சாப்பிட்டால் சிறையிலடைப்பேன்; அபராதம் விதிப்பேன்; நாடு கடத்துவேன்” என அரசே சட்டம் விதித்தாலும், சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தாலும் மாட்டுக்கறி ஹராமாகி விடாது.

“ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது” எனத் தெள்ளத் தெளிவாக்கி இஸ்லாம் முழுமைப்படுத்திவிட்டது. பலதார மணம் சந்தேகத்திற்கு இடமில்லா ஹலால் எனவும் இஸ்லாம் உறுதிப்படுத்தியுள்ளது. அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் ஹலாலாக்கி அனுமதித்துள்ள “இரண்டாம் திருமணத்திற்கு முதல் மனைவி ஒப்புதலளிக்க வேண்டும். முதல் மனைவியின் அனுமதியின்றி கணவன் இரண்டாம் தாரம் மணமுடிக்கக்கூடாது” என்றால் அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரத்தை முதல் மனைவிக்கு வழங்கியவர் யார்?

கணவன் இரண்டாம் தாரமாக மணக்கவிருக்கும் மணப் பெண்ணின் மன ஒப்புதல் கட்டாயம் வேண்டும் என்பதில் நியாயமுள்ளது. ஏனெனில், “மணப் பெண்ணின் சம்மதமின்றி மணமுடித்தால் அத்திருமணம் செல்லாது” என இஸ்லாம் கூறுகின்றது (புகாரீ 5136) . மணக்கவிருக்கும் மணப்பெண் சம்மதித்தால் திருமணம் நிறைவேறிவிடும். ஏற்கனவே தன் திருமணத்தை ஏற்றுக்கொண்டு, “கபில்த்து” சொன்ன முதல் மனைவி, கணவனின் இரண்டாம் தாரம் திருமணத்திற்கும் “கபில்த்து”ச் சொல்ல வேண்டும் என்பது புத்திக்குப் பொருந்துவதாகவும் இல்லை.

“கணவனின் மறு கல்யாணத்துக்கு அனுமதிக்கவே மாட்டேன்” என்று கூறுவதற்கு மனைவிக்கு அதிகாரமே இல்லை எனும்போது நைச்சியம் பேசி மசிய வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. “நீங்கள் வேறொரு கல்யாணம் செய்துகொள்வது எனக்கு விருப்பமில்லை” என்று கணவனிடம் மனைவி கூறலாம். மிஞ்சிப் போனால், “நீங்கள் வேறு பெண்ணை மணப்பதாயின், என்னை மண உறவிலிருந்து விடுவித்துவிடுங்கள்” என்று விருப்பத் தேர்வைக் கணவருக்குக் கொடுக்கலாம். ஹதீஸ் அதைத்தான் கூறுகிறது:

… அலீ பின் அபீதாலிப், என் மகளை (ஃபாத்திமாவை) மணவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய பெண்ணை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்) – புகாரீ 5230.

இன்னும் ஒருபடி மேலேறி, தன் பேச்சைக் கேட்காத கணவனிடமிருந்து குல்உ மூலம் தன்னையே விடுவித்துக் கொள்ளலாம்.

இஸ்லாமிய சிலதாரமணம்…. ரோட்டில் நிற்கும் அநாதைகளை வீட்டுக்குள் கூட்டி வர அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு கூடுதல் சுமை. அச்சுமையை மறுக்கத்தான் ஆண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாறாக…. இஸ்லாமிய சிலதாரமணம்…. தலாக் விடப்பட்ட புதுப்புது அநாதைகளை உருவாக்க அல்லாஹ்வால் ஆண்களுக்கு தரப்பட்ட பாக்கியம் அல்ல…!

ஒரு கட்டுரை எழுதுவதற்கு, அதன் கருவைப் பற்றிய தகவல்கள் ஓரளவு தெரிந்திருந்தால் போதும். ஆனால் ஓர் ஆக்கத்தை விமர்சிப்பதாக இருந்தால் அதன் கருவைப் பற்றிய ஆழமான அறிவு வேண்டும்.

அல்குர் ஆன் 4:3இல் இடம்பெறும் அநாதைகளை மணந்துகொள்வது பற்றிய இறைவசனம் அருளப்பட்ட பின்னணி:
ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணந்தார். அவளுக்குப் பேரீச்சமரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்ச மரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரின் உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை. எனவே, அவர் விஷயத்தில் தான் ‘அநாதை(ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டாவதாக, மூன்றாவதாக, நான்காவதாக நீங்கள் மணந்து கொள்ளலாம்’ எனும் (அல்குர்ஆன் 4:3 வது) வசனம் அருளப்பட்டது – புகாரீ 4573.

சத்தியமார்க்கம் உட்பட கட்டுரையை பாதியோடு நிறுத்தி விட்டு தப்பி விடுகிறார்கள். அடுத்த பகுதிக்குல்வ் வர மாட்டிங்கிறாங்க.
அந்த அலி ரலி — பாத்திமா ரலி மேட்டரில் கூட சுயவிளக்கம் கொடுத்து புகுந்து விளையாண்டு இருக்காங்க.

சத்தியமார்க்கம் தப்பிக்கும் அடுத்த பகுதி எது? என்பதைப் பற்றியும் புகுந்து விளையாடிய சுயவிளக்கப் பகுதிகள் எவை என்பதையும் போல்ட்டில் அல்லது எழுத்து நிற வேறுபாட்டின் மூலமும் விளக்கமாகக் குறிப்பிட்டால் தெரிந்துகொண்டு பதிலளிக்க ஏதுவாகும்.

யாரை கல்யாணம் பண்ணிக்க போறார்ங்கிறது பாத்திமா ரலி அவர்கள் எழுப்பிய பஞ்சாயத்து அல்ல. அவர் கல்யாணம் பண்ணிக்க போறார் என்பதுதான் பஞ்சாயத்து. பின்னாடி அது நபியின் மூலம் யார்ங்கிறதுதான் முக்கிய பஞ்சாயத்தா மாறிடுது.

அதாவது, ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) இரண்டாவது திருமணம் முடிக்கப் போவது மட்டும் தெரியுமே அல்லாமல் அப்பெண் அபூஜஹ்லின் மகள் என்பது தெரியாது என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தம் எதிரியின் மகள் என்பதால் முன்விரோதம் காரணமாக அலீ (ரலி) அவர்களுக்கு அனுமதி மறுத்து, பாலிடிக்ஸ் செய்துவிட்டார்கள் என்பதும் கொடுமையான விமர்சனப் பஞ்சாயத்து.

வலிமையான ஊடகமான இணையம், குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் பலருக்கும் ஆகிப்போய் ஆண்டுகள் கடந்துவிட்டன. யாரைப் பற்றி, என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலேயே எழுதித் தள்ளும் இணைய நோயாளிகள் மலிந்துவிட்டனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதருடைய தீர்ப்புகளையே விமர்சனம் செய்யும் அபாயகரமான நோய் இணையத்தில் பரவி வருவது சான்றாகத் திகழ்கிறது.

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ المِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، قَالَ: إِنَّ عَلِيًّا خَطَبَ بِنْتَ أَبِي جَهْلٍ فَسَمِعَتْ بِذَلِكَ، فَاطِمَةُ فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَزْعُمُ قَوْمُكَ أَنَّكَ لاَ تَغْضَبُ لِبَنَاتِكَ، وَهَذَا عَلِيٌّ نَاكِحٌ بِنْتَ أَبِي جَهْلٍ، …

புகாரீயின் 3729ஆவது பதிவின்படி,
அலீ (ரலி), அபூஜஹ்லின் மகளை மணந்துகொள்வதற்குப் பெண் பேசி முடித்ததைக் கேள்விப்பட்ட ஃபாத்திமா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “உங்கள் பெண்மக்களை(எத்தகைய சோதனை வந்து அடைந்தாலும் அதை)ப் பற்றி நீங்கள் கண்டுகொள்ளமாட்டீர்கள் என்று உங்கள் சமூகத்தவர் பேசத் தலைப்பட்டுவிட்டனர். … இந்த அலீ, அபூஜஹ்லின் மகளுக்கு மணாளர் (ஆகப் போகிறார்) …” என்பது ஃபாத்திமா (ரலி) அவர்களின் நேரடி வாக்குமூலக் குற்றச்சாட்டு.

மீண்டும் அறிவுறுத்துகின்றோம் – ஒரு கட்டுரை எழுதுவதற்கு, அதன் கருவைப் பற்றிய தகவல்கள் ஓரளவு தெரிந்திருந்தால் போதும். ஆனால் ஓர் ஆக்கத்தை விமர்சிப்பதாக இருந்தால் அதன் கருவைப் பற்றிய ஆழமான அறிவு வேண்டும். விமர்சனத்தைப் பொருத்த மட்டில் அரைகுறை அறிவு என்பது அரைக் கிணறு தாண்டுவதைவிடவும் ஆபத்தானது.

யாரை கல்யாணம் பண்ணிக்க போறார்ங்கிறது பாத்திமா ரலி அவர்கள் எழுப்பிய பஞ்சாயத்து அல்ல என்பது பிழை என்பதும் பின்னாடி அது நபியின் மூலம் யார்ங்கிறதுதான் முக்கிய பஞ்சாயத்தா மாறிடுது என்பது நபி (ஸல்) அவர்களைத் தரம் தாழ்த்தி எழுதிய கொடுமை(1) என்பதும் புகாரீ 3729ஆவது பதிவின்படி தெளிவாகிறது.

ஃபாத்திமா(ரலி)யை வெறுப்படைய செய்தது எது? தம் கணவர் மற்றொரு திருமணம் முடிப்பதா அல்லது அல்லாஹ்வின் எதிரி மகளை(அவர் முஸ்லிமாகவே இருந்தாலும்) திருமணம் முடிப்பதா?
முஸ்லிமாகிவிட்டாலும்கூட தந்தை மோடி முஸ்லிம்களின் எதிரி என்பதால் மோடியின் மகளை ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொள்ளக்கூடாதா?

இதற்கான விளக்கம்: “அல்லாஹ் மீதாணையாக அல்லாஹ்வின் தூதரின் மகளும், அல்லாஹ்வின் விரோதியின் மகளும் ஒரே இடத்தில் ஒன்று சேர முடியாது!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதுதான்.

“அபூதாலிபின் மகன் அலீ, அபூஜஹ்லின் மகளை மணமுடிக்கவிருக்கிறார்” என்று பெயர் குறிப்பிட்டு ஃபாத்திமா அதிர்ச்சியடைகிறார். அபூஜஹ்லின் மகளைத் தவிர, நபித்தோழர்களின் புதல்வியரில் எவரையாவது அலீ (ரலி) தமது மறுமணத்திற்காகப் பெண் பேசியிருந்தால் ஃபாத்திமா வெறுப்படைந்தருக்க மாட்டார். இதை யூகமாக நாம் சொல்லவில்லை. இறைவசனங்களின் – ஹதீஸ்களின் சொல்லாட்சியிலிருந்து அவ்வாறுதான் விளங்குகிறோம்(2).

முதல் மனைவி இருக்கும்போது கணவன் இரண்டாவது திருமணம் முடிக்க மார்க்கத்தில் தடை இல்லை, அதற்கு முதல் மனைவியிடம் அனுமதிபெற வேண்டியதுமில்லை எனும் இஸ்லாத்தின் விதிமுறையின்படியே அலீ (ரலி) இரண்டாவது கல்யாணத்திற்குப் பெண் பேசுகிறார். ஆனால், அவர் பெண் பேசியது அபூஜஹ்லின் மகளை.

அபூஜஹ்லின் முஸ்லிம் மகள், முஸ்லிம் ஆண்மகன் எவரும் மணமுடிக்க ஆகுமானவர்தான்(3). இதைத் தெரிந்துதான் அலீ (ரலி) பெண் பேசினார். ஆனால், தம் முதல் மனைவியான அல்லாஹ்வின் நபிமகளும், அல்லாஹ்வின் விரோதியின் மகளும்  ஒரே நேரத்தில் ஒருவரின் இரு மனைவிகளாக இருக்க முடியாது என்பது அலீ(ரலி)க்குத் தெரிந்திருக்கவில்லை. அதை நபி (ஸல்) எடுத்துக் கூறிய பின்னரே, சேரக்கூடாத இடத்தில் பெண் பார்த்திருக்கிறோம் என்பதை அலீ (ரலி) உணர்ந்து, தமது மறுமண ஏற்பாட்டைக் கைவிட்டார்.

அடுத்தடுத்த மணம் புரிய முந்தைய மனைவியின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயமில்லை என்பதாலேயே அலீ(ரலி), அபூஜஹ்லின் மகளைத் திருமணம் புரிய ஆலோசனைகள் முன்னெடுத்தார்.

இல்லை என்றால், ‘இன்னொரு திருமணம் செய்வதற்கு முதல் மனைவியின் ஒப்புதல் பெற வேண்டுமென்ற மார்க்கச் சட்டம் அலீ(ரலி)க்குத் தெரியாது’ என்று கூற வேண்டியிருக்கும். ஃபேஸ்புக் போராளிகளுக்குத் தெரிந்த விசயம்கூட தெரியாத அளவுக்கே ஸஹாபாக்கள் இருந்துள்ளனர் என்ற மோசமான முடிவை நோக்கி வாசகர்களை இழுத்துச் செல்லும் அபாயம் இதில் பொதிந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

அலீ (ரலி) யாரை மறுமணம் செய்யப்போகிறார் என்று கேள்விப்பட்டவுடன், நபி (ஸல்) அவர்களின் எதிர்வினை இவ்வாறு இருந்தது:

“நான் ஹலாலை ஹராம் என்று தடைசெய்பவன் அல்லன்” என்று ஏற்கெனவே பலதார மணம் ஹலாலாக்கப்பட்டதுதான் அதில் மாற்றம் இல்லை. அலீ என் மகளின் கணவர் என்பதற்காகப் பலதார மணம் அவருக்கு ஹராம் என்று தடைவிதிக்க மாட்டேன்; அல்லாஹ்வின் விரோதியின் மகளை மணப்பது மட்டுமே தடை – அந்தத் தடையும் என் மகளைத் தலாக் சொல்லிவிட்டால் நீங்கிவிடும்” என்கிற நபி (ஸல்) அவர்களின் சொல்லாட்சியிலிருந்து அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் ஹலாலாக்கியதை வேறு எவரும், எதுவும் ஹராமாக்கிட முடியாது; இதில் முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை என்பதும் அடங்கும். அதாவது முதல் மனைவி அனுமதித்தாலும் அனுமதிக்கவில்லை என்றாலும் கணவன் இரண்டாம் தாரம் மணமுடிப்பது ஹராமில்லை என்கிற நமது பேசுபொருள் அதில் அடங்கியுள்ளது.

oOo

முக்கியக் குறிப்புகள்:

(1) தமக்கு இன்னல்கள் இழைத்தவர்களை, தம் பிரச்சாரத்திற்கு எதிராக இடையூறு செய்தவர்களை தண்டிப்பதற்காக அவர்களின் குடும்பத்தாரை நபிகள் நாயகம் (ஸல்) பழிதீர்த்ததாக வரலாறு இல்லை என்பதற்கான பல சான்றுகளுள் ஒரு சான்றாகத் திகழ்ந்தவர் ரம்லா. இஸ்லாத்தின் எதிரிகளாகத் திகழ்ந்த தலையானவர்களுள் ஒருவரும் மக்காவின் நகரப் பெருந்தலைவருமான அபூஸுஃப்யானின் மகள்தான் ரம்லா. நபி (ஸல்) திருமணம் செய்துகொண்டதால் ரம்லாவை இஸ்லாமிய வரலாறு “அன்னை உம்மு ஹபீபா” என்று அடையாளப்படுத்துகின்றது.

(2) அபூஜஹ்லை, 96ஆவது அத்தியாயத்தின் 9-15 வசனங்களில் “என்னுடைய விரோதி” என்று அல்லாஹ் பிரகடனப்படுத்தியதால், அந்நிகழ்வில் ஃபாத்திமா (ரலி) நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததால் இறைநபியின் மகளும் இறைவிரோதியின் மகளும் ஒருவருக்கு வாழ்க்கைப்படுவது சாத்தியமில்லாது போனது.

(3) அபூஜஹ்லின் மகள் ஜுவைரிய்யாவை, அபூஸுஃப்யானின் உறவினரும் மக்காவின் ஆளுநருமான அத்தாப் பின் உஸைத் எனும் நபித் தோழர் திருமணம் செய்து கொண்டார் (அல் இஸாபா 4/430-431).