பயணத்தில் தொழ முடியாதபோது …

ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும்,
நாம் பயணத்திலிருக்கும்போது ஃபஜ்ர் தொழகையைத் தொழ இயலவில்லை. எனவே, சூரிய உதயத்திற்குப்பின் ஃபஜ்ர் தொழலாமா?

தெளிவு:
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

…நிச்சயமாக! தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது (அல்குர்ஆன் 004:103).

ஃபஜ்ர், லுஹ்ர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய ஐவேளைத் தொழுகைகளை அதற்கான குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமை என அல்லாஹ் கூறுகின்றான்.

பயணம், தூக்கம், நோய் போன்ற தருணங்களில் குறிப்பிட்ட தொழுகை நேரத்தில் தாமதம் ஏற்படுவது இயல்பு என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் விதிவிலக்கும் வழங்கியுள்ளது இஸ்லாம். நம்மையும் மீறி பயண அலுப்பால் உறக்கம் மிகைத்துவிட்டால் சூரிய உதயத்திற்குப் பிறகு ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஸஹீஹ் புகாரீயில் இடம் பெறும் ஒரு ஹதீஸ் மூலம் அனுமதி உண்டு:

அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இரண்டு இரவு நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர் “இறைத்தூதர் அவர்களே! எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலமே!” என்று கேட்டனர். “நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் “நான் உங்களை எழுப்பி விடுகிறேன்” என்று கூறியதும் அனைவரும் படுத்தனர். பிலால்(ரலி) தம் முதுகைத் தம் கூடாரத்தின் பால் சாய்த்தார். அவரையும் மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் “பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று?” என்று கேட்டார்கள். “இது போன்ற தூக்கம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை” என்று பிலால்(ரலி) கூறினார். “நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பியபோது கைப்பற்றிக் கொள்கிறான்; அவன் விரும்பியபோது திரும்பவும் ஒப்படைக்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு (பிலாலை நோக்கி) “பிலாலே! எழுந்து தொழுகைக்கு பாங்கு சொல்வீராக!” என்றார்கள். (பின்னர்) உளூச் செய்துவிட்டுச் சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்டபோது தொழுதார்கள்  (புகாரி 595).

சூரிய உதயத்திற்குப் பிறகு பாங்கு இகாமத் சொல்லி நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள் என்பதை அறிகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற இயலாத தொழுகையை நேரம் கடந்தாலும் அத்தொழுகையை நிறைவேற்றலாம் எனவும் சலுகை வழங்கியுள்ளது இஸ்லாம். இந்தச் சலுகையை எப்போதாவது நம்மைத் தூக்கம் மிகைத்துவிடும்போது மட்டுமே பயன்படுத்திக் கொள்ளவேண்டுமே அல்லாது வழக்கப்படுத்திக்கொள்ளக் கூடாது. உறங்காமல் பயணம் செய்துகொண்டிருக்கும்போது பயணித்துக்கொண்டே தொழுவதற்குத் தயம்மும் செய்துவிட்டுத் தொழுவதற்கும் சலுகை உண்டு.

(இறைவன் மிக்க அறிந்தவன்)