மயக்கம்…..!

தாங்கிய தாய் வயிற்றில் ஒரு மயக்கம்!

தரணி மண் மீது விழுந்தபின் ஒரு மயக்கம்!

 

விழுந்த வேதனையில் விடியும்வரை ஒரு மயக்கம்!

விடிந்தபின் பசி கொடுக்கும் ஒரு மயக்கம்!

 

பசி நீங்க பருகும் தாய்ப்பால் ஒரு மயக்கம்!

தாய்ப்பால் நின்றவுடன் தானாக வரும் ஒரு மயக்கம்!

 

தகுதிகாண் பருவம்வரை தாங்காத ஒரு மயக்கம்!

தக்கதொரு காலத்தில் கல்வியே ஒரு மயக்கம்!

 

வளர்ந்த பின் பருவ காலத்தில் ஒரு மயக்கம்!

வடிவழகு மனைவி மீது ஆசை ஒரு மயக்கம்!

 

ஆசையின் ஆளுகையில் காண்பதெல்லாம் ஒரு மயக்கம்!

காலமெல்லாம்  குடும்பத்தை  சுமப்பதுவும் ஒரு மயக்கம்!

 

வயதான காலத்தில் இளமையின் நினைவு ஒரு மயக்கம்!

வாட்டும் மூப்பு நோய் வந்தபின் ஒரு மயக்கம்!

 

காடு விரும்பி அழைக்கும் போது ஒரு மயக்கம்!

கண்மூடி மறையும் போது மீளாத ஒரு மயக்கம்!

 

பிறந்தது முதல் பிரியும் வரை தீராது இந்த மயக்கம்!

பேரறிஞன் இறை படைப்பை அறிவதற்கு ஏன் இன்னும் தயக்கம்?

 

ஆக்கம்: அபுயாசின்