அக்ஸா பள்ளிவாசலுக்கு எதிரான இஸ்ரேலின் கெடுதல் நடவடிக்கை

{mosimage}மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் அமைந்திருக்கும் ஹரம் ஷரீஃப் பகுதியில் தடை ஏற்படுத்தி நடைபாலம் உருவாக்கும் இஸ்ரேலின் புதிய செயல்பாட்டிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இஸ்ரேல் அரசின் இந்த அநியாய செயல்பாட்டிற்கு எதிராக ஜோர்டானும் களமிறங்கியுள்ளது. பாலவேலைகளை நிறுத்திவைக்க வேண்டும் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸும் பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யாவும் கோரிக்கை விடுத்தனர்.

ஹரம் ஷரீஃபின் வெளிப்பக்கத்தில் பால நிர்மாணப் பணிகளை இஸ்ரேல் நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் மேற்கு பகுதியை பிரிவினை மதில் சுவரோடு இணைப்பது தான் இஸ்ரேலின் திட்டம்.

நேற்றைய தினம் இதற்கு உதவியாகக் குழி தோண்டுவதற்கு இஸ்ரேல் புல்டோசர்கள் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் "மக்ரிப்" வாசலில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டபின்பே இச்சம்பவம் வெளி உலகிற்குத் தெரிய வந்தது.

"மக்ரிப்" வாசல் மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கிய நுழைவாயிலாகும். இவ்வாசலின் அடியில் மஸ்ஜிதோடு தொடர்புடைய இரு நிலவறைகள் உண்டு. எனவே இப்பகுதியில் குழி தோண்டும் வேலை தொடர்ந்தால் பள்ளிவாசலின் அடித்தளத்திற்கு கேடு உருவாகும் எனவும் அதன் மூலம் ஹரம் ஷரீஃப் தகரும் எனவும் வக்ஃப் அதிகாரி அத்னான் ஹுஸைனி கூறினார். இப்புதிய இஸ்ரேலின் செயல்பாடு அபாயகரமானது எனவும், ஒரு கலவரம் நடப்பதற்கான வழிகளை இஸ்ரேல் திறந்து வைப்பதாகவும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்தார்.

இஸ்ரேலின் இப்புதிய திட்டத்திற்கான செயல்பாடு 1994 ல் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்திற்கு எதிரான வெளிப்படையான அறைகூவல் என ஜோர்டான் மன்னர் அப்துல்லா கூறினார். மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் பகுதிக்கு ஏற்படுத்தப்பட்ட தடைக்கு எதிரான ஜோர்டானின் எதிர்ப்பை இஸ்ரேல் அரசிற்கு தெரியப்படுத்தியதாகவும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா உறுதி படுத்தினார்.

அல்அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க ஃபலஸ்தீனியர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என ஃபலஸ்தீன் பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யா கோரிக்கை விடுத்தார். இஸ்ரேலின் இப்புதிய திட்டம் மஸ்ஜிதைத் தகர்க்கும் கெடுதல் திட்டமாகும் எனவும் ஹனிய்யா கூறினார்.

பள்ளிவாசலை பாதுகாக்க அல்அக்ஸாவிற்கு அனைவரும் செல்ல வேண்டும் என ஃபலஸ்தீன் மக்களிடம் மதிக்கப்படும்  இமாம் ஷேக் அல்தமீனி கோரிக்கை விடுத்தார். பள்ளிவாசலுக்கு விளையும் எந்த ஒரு கேடும் காஸா பகுதியில் நிலவும் சண்டை நிறுத்தத்துக்கு கேடு விளைவிக்கும் என மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்தார்.

அதே நேரம் பாலம் கட்டும் பணிகளை தொடங்குவதற்கு முன்னோட்டமாக பழைய ஜெரூசலம் நகருக்குள் பிரவேசிக்க இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்குத் தடை விதித்தது. 45 வயதிற்கு கீழ் உள்ள பாலஸ்தீன ஆண்களுக்கு இஸ்ரேல் காவல்துறை தடை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பழைய ஜெரூசலத்தில் தொழுகைக்காக வந்து சேர்ந்த முஸ்லிம்கள் நகரத்திற்கு வெளியே காவல்துறை ஏற்படுத்தியுள்ள தடுப்புக்கு முன் தொழுகை நடத்தி திரும்பினர்.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஸா பகுதியில் ஹமாஸ் பேரணி நடத்தியது. பள்ளிவாசலுக்கு ஒரு சிறு கீறல் நேர்ந்தாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் எனப் பேரணியில் பங்கெடுத்தவர்கள் கூறினர்.

பாலப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிக் ஹிஜாத் என்ற இயக்கம் இரண்டு முறை இஸ்ரேல் மீது ராக்கட் வீசி எதிர்ப்பு தெரிவித்தது. தடை ஏற்படுத்தப்பட்ட இஸ்ரேலில் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் ரஅத் ஸலேம் மற்றும் ஆறு பேரை இஸ்ரேல் கைது செய்துள்ளது.