தண்ணீர் … தண்ணீர் …!

Share this:

எம்ஜே எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன எம்.டி. இல்யாஸின் அலுவலக அறைக்குள் நுழைந்த ஹஸன், அங்கு மேசையில் இருந்த இரண்டு தண்ணீர் பாட்டில்களைப் பார்த்துவிட்டு “என்ன ஆச்சரியம்?” என்றார். “பாட்டில் தண்ணீர் உபயோகிக்க மாட்டேன் என்பீர்களே! இது ரெண்டும் எங்கிருந்து முளைத்தன?”

“பாட்டில் தண்ணீர் உபயோகிக்கக் கூடாது என்பதல்ல, முடிந்தவரை அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. பாட்டில் தண்ணீர் குடிப்பவர்களில் பெரும்பாலானோர் அதை முழுவதுமாகக் குடித்து முடிப்பதில்லை. அவர்கள் மீதம் வைக்கும் தண்ணீர் வீணாகப் போய் விடும். தவிர, நீர் அடைத்து வரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெரும்பகுதி குப்பையோடு குப்பையாகச் சேர்ந்து சுற்றுச் சூழலுக்குக் கேடாக அமைந்து விடுகிறது.

“இன்னிக்கு காலையிலே சேம்பரில் ஒரு மீட்டிங். வந்த எல்லோருக்கும் ஆளுக்கு ஒரு பாட்டில் கொடுத்தாங்க. ஒரு பாட்டில் தண்ணீரை நாங்க மூணு பேரு பகிர்ந்து குடிச்சுட்டு மத்த ரெண்டு பாட்டில்களையும் எடுத்துட்டு வந்துட்டேன். நீர் சேமிப்பிற்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் ஏதோ என்னாலான சிறு உதவி..” என்று சிரித்தார் இல்யாஸ்.

“நல்லது செஞ்சீங்க!” என்றபடி அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார் ஹஸன்.

“தண்ணீரைப் பற்றி நீங்க பேச ஆரம்பிச்சதாலே அதைப் பத்தி ஒரு விடுகதை சொல்றேன். அதைக் கேட்டுட்டு பிறகு நான் கேக்குற சில கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லணும்” என்றார் இல்யாஸ்.

“சரி. சொல்லுங்க”

“சுமார் 2 லட்சம் பேர் வசித்துக் கொண்டிருந்த ஒரு சிறு நகரம். நகருக்கு நடுவில் ஓர் ஆறு ஓடுகிறது. அது ஒரு அறிவிக்கப்படாத குப்பை கொட்டும் இடமாக மாறிப் பல ஆண்டுகள் ஆகின்றன. சுற்று வட்டாரத்தில் உள்ள சிறிய, பெரிய தொழிற்சாலைகளின் கழிவுகளும் அதில் கொட்டப்படுகின்றன. வாகன உற்பத்தி, காகிதத் தயாரிப்பு, இறைச்சி பதப்படுத்தி டின்களில் அடைக்கும் தொழிற்சாலைகள் எனப் பல வகைத் தொழிற்சாலைகளும் அவற்றுள் அடக்கம்.

“அந்த நகருக்கான தண்ணீர் விநியோகம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் அருகில் உள்ள ஒரு பெரிய நகரின் நீர் சுத்திகரிப்பு நிலையத்திடமிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி, குழாய்கள் மூலம் எல்லா வீடுகளுக்கும் விநியோகம் செய்து வந்தார்கள்.

“நகராட்சியின் வருமானம் மிகக் குறைந்துவிட்டது. பட்ஜெட்டில் பெரிதாகத் துண்டு விழுந்தது. சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொடுக்கப் பணம் இல்லை. ஏற்கனவே வாங்கிய தண்ணீருக்கான கட்டணத்தையே இன்னும் கட்டி முடிக்கவில்லை. பார்த்தார்கள்.. ஊருக்கு நடுவில் அந்த ஆறு சும்மாதானே ஒடுகிறது என்று எல்லா குழாய்களையும் அந்த ஆற்றுப் பக்கம் திருப்பி விட்டார்கள். ‘ஆத்துல போற தண்ணியை அய்யா குடி, அம்மாவும் குடி’ என்ற கதைதான்.

“இதில் பிரச்சனை என்னன்னா அந்த ஆற்று நீரை சுத்திகரிக்கவும் பரிசோதிக்கவும் போதிய ஏற்பாடுகளை நகராட்சி செய்யத் தவறி விட்டது. விளைவு, சுத்தமில்லாத, அழுக்கான, துர்நாற்றமுள்ள தண்ணீர் அந்த நகரின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. நகர மக்களிடையே புதுப் புது நோய்கள் பெருகின. பொதுமக்களின் புகார்களை நகர நிர்வாகம் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. ‘கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்குங்க. அதுக்குப் பிறகு? … அதுவே உங்களுக்குப் பழகிடும்’ என்று சொல்லாத குறைதான்.

“பொது மக்களும் சமூக செயல்பாட்டாளர்களும் பல மாதங்களாகப் போராடி சில முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் முழுமையான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்கின்றார்கள்.

“இது எந்த ஊராக இருக்கும் என்று யூகித்துச் சொல்லுங்கள்” என்று புதிர் போட்டார் இல்யாஸ்.

“நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா ஆப்பிரிக்காவிலோ ஆசியாவிலோ உள்ள ஏதோ ஒரு ஏழை நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊராக இருக்கும் என்று நினைக்கின்றேன்.” என்றார் ஹஸன்.

“இல்லை; இது அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஃபிளின்ட் எனும் ஊர். ” என்று இல்யாஸ் சொன்னதும் “என்னது? உலகின் மிகப்பெரும் வல்லரசான அமெரிக்காவிலா இந்த நிலை?” என்று ஆச்சரியப் பட்டார் ஹஸன்.

“உண்மைதான். ‘மோட்டார் நகரம்’ என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட டெட்ராய்ட் நகரிலிருந்து 68 மைல் தூரத்தில் இருப்பதுதான் ஃபிளின்ட். இந்த ஊர் மக்களுக்குத்தான் இந்த நிலை ஏற்பட்டது.

“இந்தப் பிரச்னை நடந்துக் கொண்டிருந்த காலத்தில் Nestle நிறுவனத்தார் ஒரு காரியம் செய்தார்கள். தினமும் காலை 9 மணிக்கு நெஸ்லே-யின் லாரிகள் அவர்களுடைய Ice Mountain பிராண்ட் தண்ணீர் பாட்டில்களை ஆயிரக்கணக்கில் ஏற்றிக் கொண்டு ஃபிளின்ட் நகரை வந்தடையும். அவற்றை அவர்கள் அந்நகர மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தனர். ஓராண்டு காலத்தில் சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமான பாட்டில்களை நெஸ்லே நிறுவனம் இவ்வாறு விநியோகித்துள்ளது.”

“அட.. உண்மையிலேயே நல்ல காரியம்தானே?” என்றார் ஹஸன்.

“ஆனால் பல சமூக செயல்பாட்டாளர்கள், இதை நெஸ்லே-யின் தன்னலமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளவில்லை. “

“ஏனாம்?”

“இலவச பாட்டில் விநியோகம் ஃபிளின்ட் நகர மக்களின் பிரச்னைக்கு எந்த வகையிலும் தீர்வாகாது. குழாய் நீரை உபயோகித்துக் கொண்டிருந்த மக்களை பாட்டில் நீருக்கு பழக்கப் படுத்துவதன் மூலம் தமது பிராண்ட் நீரை விளம்பரப் படுத்தி அதன் சந்தையை விரிவாக்குவதே நெஸ்லே-யின் நோக்கம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.

“ஃபிளின்ட்டிலிருந்து சுமார் 100 மைல் தூரத்தில் இருக்கும் நகரம் எவர்ட். இந்த வட்டாரத்தில் நிலத்தடி நீர் அபரிமிதமாக கிடைக்கிறது. நெஸ்லே-யின் ‘தண்ணீர் தொழிற்சாலை’ இங்குதான் அமைந்திருக்கிறது. இங்கிருந்துதான் ஃபிளின்ட் நகருக்கு தண்ணீர் பாட்டில்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. இங்குள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 700 கேலன் (சுமார் 2650 லிட்டர்) நீரை நெஸ்லே உறிஞ்சிக் கொண்டுள்ளது. இதில் இரண்டு நாட்களுக்கு வெளியாக்கப்பட்ட நீர் மட்டுமே ஃபிளின்ட் நகர மக்களுக்கு ஓராண்டு காலத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட மொத்த நீரின் அளவிற்குச் சமம். இந்த ‘இலவச நீர்’ போக மீதமுள்ளவை அனைத்தும் பாட்டில்களில் அடைக்கப்பட்டு அமெரிக்காவெங்கும் விற்பனையாகின்றன.

“இப்படி நிலத்தடி நீரை வெளியாக்கிக் கொள்வதற்காக அரசாங்கத்திற்கு நெஸ்லே கட்டும் தொகை வெறும் 200 டாலர், ஓராண்டு காலத்திற்கு. அத்தொகை ஃபிளின்ட் நகர வீடுகள் ஒவ்வொன்றும் தண்ணீர் குழாய் இணைப்பிற்காக மாதா மாதம் செலுத்தும் தொகைக்குச் சமம். மக்களுக்கு ஆத்திரங்கள் வராமல் வேற என்ன வரும்? ‘மாசாமாசம் தண்ணி பில்லு கட்டுற எங்களுக்கு வாயில வைக்க முடியாத சுத்தம் செய்யாத தண்ணீர், உலகத்துலேயே ஆகப் பெரிய குடிபானங்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு கேலன் கேலனா இலவச தண்ணீரா?’

கதையைச் சொல்லி முடித்த இலியாஸ், ஹஸனிடம் கேட்டார், “இப்ப சொல்லுங்க. நெஸ்லே நிறுவனம் மேல சுமத்தப்படும் குற்றச்சாட்டு சரிதானா? இதற்கு என்ன தீர்வு?”

ஹஸன் கதையை உள்வாங்கிக் கொண்டிருந்தார். “எனக்கு ஒரு விஷயம் புரியல. எதனால அரசாங்கம் வெறும் 200 டாலர் வாங்கிக்கிட்டு முழுக் கிணற்றையும் நெஸ்லே-க்கு திறந்து விட்டாங்க?”

“அது அமெரிக்காவில் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை. தண்ணீர் என்பது ஒரு பொதுச் சொத்து. அதை பொது மக்களுக்கோ நிறுவனங்களுக்கோ விற்பனை செய்வதில்லை. ஆனால் அந்த நீரைச் சுத்தம் செய்வதற்கும் விநியோகம் செய்வதற்கும் ஆகும் செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொள்வார்கள். நெஸ்லே விஷயத்தில் அரசாங்கம் எந்தச் செலவும் செய்ய வேண்டியதில்லை என்பதால் லைசென்ஸ் வழங்கும் நிர்வாகச் செலவிற்காக மட்டும் அந்த 200 டாலர்”

“அப்படியென்றால் நெஸ்லே எந்த சட்டத்தையும் மீறவில்லை என்று தெரிகிறது. அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அவர்கள் அந்த நிலத்தடி நீரைப் பயன்படுத்துகின்றார்கள். தவிர ஃபிளின்ட் நகர மக்களுக்கு நீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இல்லை என்ற போதிலும் ஒரு தார்மீக அடிப்படையில் ஓராண்டு காலத்திற்கும் மேலாக அவர்கள் இலவசமாக நீர் விநியோகம் செய்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நெஸ்லே நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்பது என் கருத்து.

“அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் நீர் வளத்தை உபயோகிப்பதற்கு யாருக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்? அதற்கான கட்டணத்தை எப்படித் தீர்மானிக்கின்றார்கள்? இதுவெல்லாம்தான் முக்கியமாக பேசப்பட வேண்டிய பிரச்னைகள். ஒரு பக்கம் பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற நீரை விநியோகம் செய்துகொண்டு இன்னொரு பக்கம் ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு கிட்டதட்ட இலவசமாக நீரை உபயோகித்துக் கொள்ள அனுமதி வழங்கியதில் உள்ள முரண்பாடுகளைப் பற்றிதான் பேச வேண்டும்.

oOo

“கலிஃபா உமர் (ரலி) தொடர்பான ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அரசாங்கத்தின் பராமரிப்பில் இருந்த ஸகாத் கால்நடைகளுக்காக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஒரு மேய்ச்சல் நிலம் இருந்தது. உமர் (ரலி), ஹுனைன் என்றழைக்கப்படும் தம் அடிமை ஒருவரை அதற்குக் காவலராக நியமித்துச் சொன்னார்கள்:

“ஹுனைனே! உன் கையை முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள். ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வினால்) எற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும்.

சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்களை (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான் ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே). “

“உமர் (ரலி) அவர்களின் இந்த உத்தரவு நமக்கு விசித்திரமாகத் தெரியலாம். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான், இந்த இருவருமே நபி (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமான தோழர்கள். இஸ்லாம் மார்க்கம் மேலோங்குவதற்காகப் பல தியாகங்களைச் செய்தவர்கள். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் இவர்களின் கால்நடைகளை அனுமதிக்க ஏன் உமர் (ரலி) மறுத்தார்கள்? அதற்கான காரணத்தையும் உமர் (ரலி) அவர்களே சொல்கிறார்கள்.

“ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தம்) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

“ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்து வந்து, ‘விசுவாசிகளின் தலைவரே! நான் இவர்களை (பட்டினி கிடந்து) சாகவிட்டு விடவா?’ என்ற கேட்பார்கள். எனவே, (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை) விட (அரசின் தனிப்பட்ட மேய்ச்சல் நிலங்களிலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவது எனக்கு இலேசானதாகும்…!” (புஹாரி 3059)

“அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு, உஸ்மான் இப்னு அஃப்பான் இருவரும் பெரும் வணிகர்கள். ஒரு ஒப்பீட்டிற்காக சொல்வதென்றால் அவர்கள் அந்தக்கால கார்பரேட்டுகள். இவர்களின் கால்நடை மந்தைகள் அவர்களின் விற்பனைப் பொருள்கள். அவற்றிக்கான உணவை அவர்கள் எப்படியாகிலும் ஏற்பாடு செய்துவிட முடியும்.

“ஆனால் சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்களுக்கு அவை வாழ்வாதாரம் அளிக்கின்றன. அவர்களின் குடும்பத்தினரின் அன்றாட உணவுத்தேவையை அந்தக் கால்நடைகளிலிருந்து அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். எனவே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேய்ச்சல் நிலத்தை பயன்படுத்திக் கொள்வதில் இவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது உமர் (ரலி) அவர்களின் நோக்கம்.

“உமர் (ரலி) அவர்களின் இந்த கொள்கையை ஃபிளின்ட் நகரத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குப் பொருத்திப் பார்த்தால் ஒரு சுமுகமான தீர்வு கிடைக்கலாம்” என்று முடித்தார் ஹஸன்.

“வெல்டன்!. அருமையா சொன்னீங்க!. உங்க பதிலுக்கு நூற்றுக்கு நூறு மார்க். சரி வாங்க. நாம போய் தண்ணி குடிச்சிட்டு வருவோம்.” என்று புறப்பட்டார் இல்யாஸ்.

oOo

பின்குறிப்பு:
ஃபிளின்ட் நகர தண்ணீர் பிரச்னை ஏப்ரல் 2014-ல் ஆரம்பித்தது. நகராட்சியின் அலட்சியப்போக்கே இதன் முக்கிய காரணம் என பல பொதுநல வழக்குகள் பதியப்பட்டன. அன்றைய அதிபர் ஒபாமா பிளின்ட் நகருக்கு வந்து நிலைமையைக் கண்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டன. சில அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்கள். பாதிப்படைந்த தண்ணீர் குழாய்களை மாற்றும் பணி தொடங்கியது. நிவாரண நடவடிக்கைகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு 6 – 7 ஆண்டுகள் ஆன பிறகும் பிரச்னை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்கிறார்கள். சில வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. நெட்பிளிக்ஸில் இது பற்றி ஒரு டாக்குமென்டரி இருக்கிறது.

கூடுதல் தகவல்கள் ஆங்கிலத்தில் :
https://www.britannica.com/event/Flint-water-crisis


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.