ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை!

புனித ரமளான் மாதத்தில், உலக முஸ்லிம்களின் இரண்டாவது புனித வணக்க ஸ்தலமான பைத்துல் மக்தஸில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 10.5.2021 திங்கட்கிழமை இரவு தொடங்கிய இஸ்ரேலின் வெறியாட்டம், நேற்று 21.5.2021 வியாழக்கிழமை அதிகாலையில் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 11 நாட்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மொத்தம் 230 ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களுள் 65 குழந்தைகளும் 39 பெண்களும் அடங்குவர் என்றும் 1,710 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கஸ்ஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

50 பள்ளிக்கூடங்கள் மீதும் குழந்தைகளின் 6 பாதுகாப்பு மையங்கள் மீதும் இஸ்ரேலின் ராக்கெட்டுகள் தாக்குதல் நடத்தின.

தங்கள்  தரப்பில் 20 வீரர்கள் ஷஹீதாயினர் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.

ஹமாஸும் வேறு சில ஃபலஸ்தீன ஆயுதப் போராட்டக் குழுவினரும் இணைந்து நடத்திய எதிர் தாக்குதலில் சுமார் 3500-4000 வரையிலான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவி, இதுவரையில் இல்லாத சேதத்தையும் கதி கலக்கத்தையும் ஃபலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்குப் பரிசளித்துள்ளனர்.

விளைவு?

எகிப்தைத் தொடர்பு கொண்டு, “நாங்கள் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு தயார்” என இஸ்ரேல் அறிவித்தது.

இரண்டொரு நிபந்தனைகளுடன் ஹமாஸும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளது.

ஃபலஸ்தீன் அமைதிப் பூமியாக மாற்றம் பெறுவதே உலக முஸ்லிம்கள் அனைவரின் அவாவும் துஆவும்!