சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-52

52. இரண்டாம் சூல்

கி.பி. 1146 ஆம் ஆண்டின் ஈஸ்டர் நாள். பிரான்சின் வெஸிலே (Vezelay) நகரில் தேவாலயத்திற்கு வெளியே தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்ட ஜனத்திரள். கோமான்களும் பிரபுக்களும் நிரம்பியிருந்தனர். ராஜா ஏழாம் லூயீயும் அவருடைய அழகிய மனைவி எல்லெநோரும் (Eleanor) தலையாய விருந்தினர்களாக இடம் பெற்றிருந்தனர். மடாதிபதி பெர்னார்ட் ஆசிர்வதிப்பதைச் செவியுற அவர்கள் மண்டியிட்டுக் காத்திருந்தார்கள்.

அன்றைய நிகழ்விற்கு அந்த நாளும் ஊரும் இடமும் சிரத்தையுடன் வெகு கவனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன. அத்திட்டம் வேலை செய்தது. மக்கள் மதவெறி வேகத்தில், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர்.

‘நம் மத விரோதிகளைக் கொன்று உங்களது பாவக் கறைகளைப் போக்க விரையுங்கள். தன்னுடைய வாளை எதிரிகளின் இரத்தத்தால் கறைப்படுத்தாதவன் சபிக்கப்படுவானாக’.

பெர்னார்ட் இரண்டாம் சிலுவைப்போருக்கு முன்னுரை வாசித்தார்.

“ஜெருசலத்துக்கு”, “ஜெருசலத்துக்கு” என்று உச்சக் குரலில் கோஷமிட்டது கூட்டம். போருக்குச் சிலுவையைச் சுமக்கிறோம் என்று வாக்களித்தார்கள் ராஜாவும் ராணியும். சூல் கொண்டது போர் மேகம்!

oOo

இமாதுத்தீன் ஸெங்கி எடிஸ்ஸாவை மீட்டதும் – அது தங்களிடம் இருந்து பறிபோனதும் – பரிதவித்துப்போன பரங்கியர்கள் தூதுக்குழு ஒன்றை ஏற்படுத்தினார்கள். ஜெருசலத்து ராணியும் சிரியாவின் இதர மாநிலத்து பரங்கியர் தலைவர்களும் அர்மீனியர்கள், பரங்கியர்கள் இணைந்த தூதுக்குழுவை உருவாக்கி, ‘உதவிக்கு ஓடி வாருங்கள்’ என்று ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்குத் தகவல் அனுப்பினார்கள். ஐரோப்பா வந்து சேர்ந்த தூதுக்குழுவினர் போப் மூன்றாம் யூஜினியஸை (Pope Eugenius III) சந்தித்தார்கள். பிரான்சு மன்னர் ஏழாம் லூயீ, ஜெர்மனியின் ராஜா மூன்றாம் கான்ராட் (Conrad III) ஆகியோரிடமும் பேசினார்கள். ‘எடிஸ்ஸா நம்மை விட்டுப் போய்விட்டது’ என்று துக்கத்தில் அழுதார்கள். கிழக்கில் உள்ள கிறிஸ்தவர்களை நிர்மூலமாக்க ஆபத்தொன்று உருவாகிவிட்டது என்று எச்சரித்தார்கள். அவை இலத்தீன் கிறிஸ்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பாவில் அதிர்வு பரவியது.

இதை அப்படியே தமக்கு சாதகமாக்கத் திட்டம் தீட்டினார் போப் மூன்றாம் யூஜினியஸ். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உதவிப்படை வேண்டி பைஸாந்தியம் அனுப்பிய தகவலைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்தி முதலாம் சிலுவைப்போருக்கு வித்திட்ட போப் இரண்டாம் அர்பனின் அதே சூட்சுமத்தை இந்த போப் மூன்றாம் யூஜினியஸும் பிரயோகித்தார். அதற்குரிய தனிப்பட்ட காரணமும் இவருக்கு இருந்தது. முதலாம் சிலுவைப்போரில் அவர்கள் ஜெருசலத்தைக் கைப்பற்றி, அச்செய்தி அளித்த களிப்பில் இலத்தீன் கிறிஸ்தவர்கள் துள்ளிக் குதித்து மகிழ்ந்து, ஆடிப் பாடித் திளைத்த போதை எல்லாம் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் அடங்கிப்போய், அந்த உற்சாகம் மெதுமெதுவே வடிந்து விட்டிருந்தது. இடைவிடாத போரும் பரபரப்பும் லெவண்த் பகுதியில் உருவாகிவிட்ட பரங்கியரின் மாநிலங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேதான் நிலவிவந்தன. அதற்கான உதவியாகச் சிறுசிறு படைகள் ஐரோப்பாவிலிருந்து வந்தனவே தவிர, முதலாம் சிலுவைப்போரின் பிரம்மாண்டத்துடன் பெரும் படையெடுப்பு எதுவும் கிழக்கு நோக்கி நிகழவில்லை.

மாறாக, ஐரோப்பாவில் வேறு பல அரசியல் மோதல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. வடக்கிலிருந்த ஜெர்மனியின் ஏகாதிபத்தியத்துக்கும் தெற்கில் உருவாகியிருந்த சிசிலியின் (Sicily) நார்மன் ராஜ்ஜியத்துக்கும் இடையே கடுமையான அதிகாரப் பகை ஏற்பட்டிருந்தது. அவர்களுக்குத் தமது ஆளுமையைப் பறைசாற்றுவதில் போட்டி. விளைவாக அவர்கள் ரோம் நகருக்கு அழுத்தம் அளித்து, போப்புக்குப் போட்டியாகப் பல எதிர் போப்புகள் உருவாகியிருந்தனர். இந்நிகழ்வு நடைபெறும் கி.பி. 1145ஆம் ஆண்டு அதிகாரபூர்வமான போப் மூன்றாம் யூஜினியஸ் ரோம் நகருக்குள்கூட நுழைய முடியாத நிலையில் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

சிஸ்டார்ஷென்(Cistercian) என்று கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் மத ஒழுங்குப் பிரிவு ஒன்று உள்ளது . அது பெனடிக்ட் பிரிவிலிருந்து உருவான கிளை. அந்த சிஸ்டார்ஷென் அமைப்பின் முன்னாள் துறவியான போப் மூன்றாம் யூஜினியஸ் அந்த ஆண்டின் பிப்ரவரி மாதம்தான் பதவி ஏற்றிருந்தார். பதவிக்கு வந்த நாளாய், ரோம் நகரின் நிர்வாகத்தைத் தம் வசம் வைத்திருந்த மதச்சார்பற்ற சக்திகளுடன் முட்டலும் மோதலுமாகவே அவருடைய நாள்கள் கழிந்தன. இந்நிலையில்தான் கிழக்கிலிருந்து அபயக்குரல் அவரை அடைந்தது. அதைக் கச்சிதமாகப் பற்றிக்கொண்டார் போப் யூஜினியஸ். தமது புதிய முயற்சிக்கு மதம் எனும் மேலங்கியை இலாகவமாகப் போர்த்தினார். சிலுவைப்போரில் கலந்து கொள்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்; அப்போரில் மரணிப்பவர் உயிர்த்தியாகி என்று தம் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன், 1137இல் பிரான்சில் பட்டத்திற்கு வந்திருந்த ஏழாம் லூயீக்கு அச்சமயம் இருபத்துச் சொச்சம் வயது; அவருக்கு வயதுக்கேற்ற இளமைத் துடிப்பு. அவரது ஆட்சித் தொடக்கமே ரோம் நகருடன் பெரும் பிணக்குடன்தான் ஆரம்பித்தது. யூஜினியஸுக்கு முன் போப்பாக இருந்தவருடன் லூயீக்குப் பெரும் பகை. அதன் உச்சமாக 1143ஆம் ஆண்டு, அவருடைய படையினர் தேவாலயம் ஒன்றை ஆயிரம் பேருடன் வைத்துத் தீயிட்டுக் கொளுத்தி, சாம்பலாக்கிவிட்டனர். அதற்குப் பின்னர் அக்கொடுஞ் செயலுக்கு மனம் வருந்திய லூயீ புதிய போப் யூஜினியஸுடன் இணக்கமாகி விட்டார். அவருக்கு மத பக்தி அதிகரித்தது. தம் தவற்றுக்குக் கழுவாய் தேடும் வேட்கை ஏற்பட்டது. இத்தகுப் பக்குவத்தில் அவர் இருந்த நிலையில் எடிஸ்ஸாவின் செய்தி வந்து சேர்ந்ததும் தானாகக் கனிந்திருந்த அவரது மனம் எளிதாகப் போப்பின் மடியில் விழுந்தது.

போப் யூஜினியஸும் மன்னர் லூயீயும் இணைந்து புதிய சிலுவைப்போருக்குத் திட்டம் தீட்டினார்கள். போப், அதிகாரப்பூர்வமான சுற்றறிக்கையும் இலத்தீன் மொழியில் எழுதி அனுப்பினார். ஆனால் அது தொடக்கத்தில் எந்த வீரியமும் இன்றி நமுத்துப் போனது. மூன்று மாதம் கழித்து போப் யூஜினியஸ் மீண்டும் அதே போன்ற ஒரு சுற்றறிக்கையை உருவாக்கினார். தலைப்பு எதுவும் குறிப்பிடப்படாத அதற்கு, அதன் முதல் வாக்கியத்தின் முதல் இரண்டு வார்த்தைகளான Quantum praedecessores (நமது முன்னோர்களைப் போலவே) என்பது பெயராகி நிலைத்து விட்டது. முதலாம் சிலுவைப்போருக்கான வித்தானது போப் இரண்டாம் அர்பனின் க்ளெர்மாண்ட் உரை என்றால் இரண்டாம் சிலுவைப்போருக்கு போப் மூன்றாம் யூஜினியஸின் Quantum praedecessores அரசாணை.

‘இது தெய்வீக ஆணை; புனிதப் போரைத் தொடங்க ஆண்டவர் நமக்குக் கொடுத்த அதிகாரம். இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் எதிரிகள் எடிஸ்ஸாவைப் பிடுங்கி விட்டார்கள்; நம் மதகுருமார்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் அவர்களைத் தங்களது காலடியில் போட்டு நசுக்கி இருக்கிறார்கள். இவை யாவும் கிறிஸ்தவத்திற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து’ என்று அது உணர்ச்சியைக் கிளறியது. ‘முந்தைய படையெடுப்பில் பங்குபெற்றவர்களுக்குக் கிடைத்த ஆன்ம வெகுமதியைப் போன்றே இந்தப் போரில் பங்கு பெறுபவர்களுக்கும் கிடைக்கும்; அதில் எந்தக் குறைவும் இருக்காது’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. யாரெல்லாம் பங்கு பெறலாம்; அவர்களுக்கு என்னவெல்லாம் சிறப்புரிமையும் வெகுமதியும் காத்திருக்கின்றன என்று விவரித்தது. போரில் கலந்துகொள்ள வசதிகள் செய்து தரப்படும். வென்று பிழைப்பவர்களுக்கு உணவு, பெண்கள், கொள்ளைப் பொருள் என்று ஏராள வெகுமதி இவ்வுலகிலேயே உண்டு; மரிப்பவர்களுக்குச் சொர்க்கம் என்று சிலுவைப்போருக்கு மக்களை வசீகரித்தது அந்த அரசாணை.

உணர்ச்சியைத் தூண்டும் வகையில் எழுதியாகிவிட்டது சரி. புதிய போப் தம் அதிகாரத்தை மத்திய இத்தாலியில்கூடச் செலுத்த முடியாத நிலையில், தமது அரசாணையை ஐரோப்பா முழுவதும் எப்படிப் பரப்புவார்?

வாகான உதவியாக அமைந்தார் ஒருவர். அவர்தாம் பெர்னார்ட்; க்ளெர்வோவின் மடாதிபதி. (Bernard of Clairvaux) சிஸ்டார்ஷென் துறவு அமைப்பை க்ளெர்வோ எனும் கிராமத்தில் ஏற்படுத்தி, அதைப் பிரபலமாக்கி, பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தார் பெர்னார்ட். டெம்ப்ளர்களின் ஆதரவாளர் அவர். போப் ஆகத் தேர்ந்தெடுக்கப்படும் முன் க்ளெர்வோவில்தான் துறவியாக இருந்தார் மூன்றாம் யூஜினியஸ். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. யூஜினியஸின் திட்டத்திற்கு மிகச் சிறப்பான பரப்புரைவாதியாகி, இரண்டாம் சிலுவைப்போருக்கு வீறுகொண்டு படை திரள அரும்பாடுபட்டவர் இந்த பெர்னார்ட்தாம். மிகச் சிறந்த பேச்சாளரான அவருக்கு, தம் பேச்சில் மக்களைக் கட்டிப்போடும் திறன் இருந்தது. அவரது புனைப்பெயர், ‘தேனொழுகப் பேசும் அறிஞர்’.

பரப்புரையைத் துவக்க நாள் குறிக்கப்பட்டது – ஈஸ்டர்.

ஊர் தேர்ந்தெடுக்கப்பட்டது – வெஸிலே.

இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது கன்னிமாட தேவாலயம்.

பிரான்சின் வடகிழக்கே உள்ளது வெஸிலே. அதன் மலை முகட்டில் அமைந்துள்ளது கன்னிமாட தேவாலயம். கிறிஸ்தவர்களிடம் அந்நகருக்குப் புனிதச் சிறப்பு இருந்தது. இயேசுநாதரின் பெண் தொண்டரான மேரி மேக்டலன் (மகதலேனா மரியாள்) என்பவரின் எலும்பு மீதங்கள் அங்கு இருப்பதாக அவர்கள் நம்பினர். அந்த எலும்புகள் அவருடையவைதாம் என்று போப்பும் உறுதிப்படுத்தியிருந்தார். ஆகையால் அத்தேவாலயத்திற்குப் பல திசைகளில் இருந்தும் மக்கள் புனித யாத்திரை வர ஆரம்பித்துவிட்டனர். அங்கிருந்து, ஸ்பெயினில் உள்ள புனித நகரமான ஸாண்டியாகோ டி காம்போஸ்தெலாவை (Santiago de Compostela) நோக்கிச் செல்வதற்கும் அந்த ஊர் ஆரம்பப் புள்ளியாக அவர்களுக்கு ஆகிவிட்டது.

oOo

அன்றைய நிகழ்விற்கு, ராஜா ஏழாம் லூயீ பேரழகியான தம் மனைவி எல்லெநோரையும் அழைத்து வந்திருந்தார். சக்தி வாய்ந்த அக்விடீன் (Aquitaine) பிரபுவின் வாரிசு அந்த ராணி. அழகும் அதிகாரமும் சேர்ந்ததாலோ என்னவோ, அவருக்குத் தலைக்கணம் இருந்திருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன் தம் பதினேழாவது வயதில் பதினைந்து வயது எல்லெநோரை திருமணம் செய்துகொண்டார் ஏழாம் லூயீ. நாளாவட்டத்தில் ராஜா லூயீக்கு பக்தி அதிகரித்துவிட, தம்பதியருக்கு இடையேயான இல்லற அன்பு தேய்ந்து குறைந்து போயிருந்தது. இருந்தாலும் ராஜாவுக்குத் துணையாகத்தான் ராணி இருந்தார். இரண்டாம் சிலுவைப்போருக்கும் தம் கணவருடன் சென்றார்.

ராஜாவின் சகோதரர் கோமான் ராபர்ட், ஏராளமான பரங்கிய மன்னர்கள், கோமான்கள், எண்ணற்ற மேட்டுக்குடிச் செல்வந்தர்கள் கலந்துகொள்ள நிரம்பி வழிந்தது மக்கள் திரள். தேவாலயத்திற்குள் இடம் போதாமல், வெளியே மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டு நடைபெற்றது பொதுக்கூட்டம். உணர்ச்சி மிக்க உரையை நிகழ்த்தி முடித்தார் மடாதிபதி பெர்னார்ட். கூட்டத்தில் கொதிநிலை.

ராஜா லூயீயின் ஆடையில் போப் சிறப்பாக அனுப்பி வைத்திருந்த துணிச் சிலுவை பதிக்கப்பட்டது. தமக்கும் சிலுவை என்று ஆர்ப்பரித்தது மக்கள் கூட்டம். பெர்னார்ட் கொண்டுவந்திருந்த சிலுவைகள் தீர்ந்து போயின. சமயோசிதமாக மக்களின் உணர்ச்சியை மேலும் தூண்டும் காரியமொன்றைச் செய்தார் பெர்னார்ட். அவர் தமது உடையைக் கிழித்துத் தர அதில் சிலுவைகள் உடனுக்கு உடனே தைத்துத் தயாரிக்கப்பட்டு வினியோகமாகின. ஏற்பட்ட நெரிசல், ஆரவாரத்தில் மேடை இடிந்து விழுந்தது.

திட்டமிட்டபடி பெரும் வெற்றியுடன் நடைபெற்று முடிந்தது வெஸிலே நிகழ்வு. அதையடுத்துப் பற்றியது தீ. அடுத்த ஓராண்டில் அந்த நெருப்பு சிலுவைப்போர் வேட்கையாக ஐரோப்போ முழுவதும் பரவியது. போப்பின் அரசாணை சுழன்று சுற்றியது. பொது மக்கள் கூடும் இடங்களில், பேரணிகளில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. பெர்னார்ட் ஓயாமல் ஒழியாமல் செயல்பட்டார். ஐம்பது வயதைக் கடந்த அவர் பலவீனமாக இருந்த போதிலும் பல நாடுகளுக்கும் பயணம் செய்து பரப்புரை புரிந்தார். சிலுவைப்போரின் புனிதத்தை விவரித்து அவர் எழுதிய கடிதம் ஒன்றில், ‘பரலோகத்தின் தேவன் தன்னுடைய நிலத்தை இழப்பதால் பூமி நடுங்குகிறது… சிலுவையின் எதிரி, வாக்களிக்கப்பட்ட நிலத்தை, புனித நிலத்தைத் தன்னுடைய வாளால் சூறையாட மீண்டும் தலை நிமிர்ந்துவிட்டான். தேவன் வாழும் அந்நகரம் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும். இதற்கு ஒரே தீர்வு மீண்டும் புதிய சிலுவைப்போர்’ என்று விவரித்திருந்தார். அவரது பரப்புரையை நகலெடுத்து, திக்கெங்கும் ஆட்கள் கொண்டு சென்றனர்.

பெர்னார்ட் பயணித்த ஊர்களில், நூற்றுக்கணக்கான முடவர்கள் நலமுற்றனர்; ஆவியால் பீடிக்கப்பட்டவர்களின் ஆவிகள் விரட்டப்பட்டன; இறந்தவர் ஒருவர் எழுப்பப்பட்டார் என்றெல்லாம் பேச்சுகள் பரவின. ஜெர்மனிக்குச் சென்றார் பெர்னார்ட். அவருக்கு ஜெர்மன் மொழி தெரியாது என்பதால் அவரது உரை மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டது. அதற்கே கண்ணீர் விட்டுக் கதறினார்கள் ஜெர்மானியர்கள். ஜெர்மனியில் அதன் ராஜா மூன்றாம் கான்ராடையும் தனியே சந்தித்தார் பெர்னார்ட். விளைவாக அடுத்த நாள் ராஜா கான்ராடும் சிலுவையைத் தூக்கினார்.

கி.பி. 1147 ஆம் ஆண்டு, பிரான்சின் ராஜா ஏழாம் லூயீ, ஜெர்மனியின் ராஜா கான்ராட் இருவரின் இரு பெரும் படைகளும் இணைந்த பிரம்மாண்டமாக இரண்டாம் சிலுவைப்போர்ப் படை உருவானது. இதற்குமுன் குடியானவர்கள் முதல் கோமான்கள், பிரபுக்கள், இளவரசர்கள் என்று பலரும் சிலுவைப்போரில் இணைந்த போதும் ஐரோப்பாவின் அரசர்கள் நேரடியாக அதில் பங்கு பெற்றதில்லை. இப்பொழுது கான்ராடும் லூயீயும் போப்பின் அரசாணையை ஏற்று, சிலுவையைத் தூக்கிக்கொண்டு நேரடியாகப் போரில் இறங்கியதும் இரண்டாம் சிலுவைப்போருக்குப் புதுப் பரிமாணம் ஏற்பட்டுவிட்டது.

முந்தைய ஆண்டு வெஸிலேவில் மடாதிபதி பெர்னார்ட் சிறப்பு நிகழ்வு நடத்தியதைப் போல், இந்த ஈஸ்டர் நாளில் பாரீஸ் வந்தார் போப் மூன்றாம் யூஜினியஸ். அங்கு நூறு டெம்ப்ளர்கள் பரங்கியரின் படையில் இணைந்தனர். கோலாகலமான சடங்கு நடைபெற்றது. தாம் தேவனின் சேவைக்கு அடிபணிந்துள்ளதைப் பறைசாற்றும் விதமாக ராஜா லூயீ தொழுநோயாளிகளின் குடியிருப்புகளை இரண்டு மணி நேரம் சுற்றி வந்தார். பிறகு போப்பும் மக்கள் திரளும் ஜேஜேவென்று திரண்டிருந்த கூட்டத்திற்கு வந்து அடக்க ஒடுக்கமாகத் தரையில் சிரம் பதித்து வணங்கினார். புனித யாத்திரைப் பயணிக்கான தடியையும் தொங்குபையையும் போப் அவருக்கு வழங்கி ஆசிர்வதிக்க, நெக்குருகி நின்றது கூட்டம். எப்பேற்பட்ட ராஜா, தேவனின் சேவைக்காக, புனிதப் போருக்காக, தன்னை இப்படி அடிமையாக்கிக்கொண்டு நெடுந்தொலைவு பயணம் சென்று களம் காணப் போகின்றானே என்று சிலிர்த்தனர் மக்கள்!

ஜெர்மனியில் இருந்து மூன்றாம் கான்ராட் தலைமையிலான படையும் பின்னர் பிரான்சிலிருந்து லூயீ தலைமையில் பரங்கியர் படையும் ஒன்றன்பின் ஒன்றாக இடைவெளி விட்டுப் புறப்பட்டன. அக்காலத்து வரலாற்று ஆசிரியர்கள், படை எண்ணிக்கை 140,000 என்கின்றார்கள். பிற்காலத்தவர் 400,000 என்று குறிப்பிடுகிறார்கள். எது எப்படியோ, இலட்சக்கணக்கான படையினர் என்பது மட்டுமே உறுதி.

இரண்டாம் சிலுவைப்போர் படை லெவண்ட் நோக்கி நகர்ந்தது.

oOo

வரும், இன்ஷா அல்லாஹ் …