சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 72

Share this:

72. நூருத்தீனின் மோஸுல் படையெடுப்பு

தமீதா போரின் வெற்றிக்குப் பிறகு எகிப்தில் ஸலாஹுத்தீன் அடுத்து அமைதியாக நிகழ்த்திய அதிரடி நடவடிக்கை ஒன்று இஸ்லாமிய வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. விரிவாகக் காண வேண்டிய அந்நிகழ்வுகளுக்கு முன் நாம் நூருத்தீனைப் பின்தொடர வேண்டியிருக்கிறது. தமீதாவில் நிகழ்ந்த அந்தப் போரின்போது நூருத்தீன், ஸலாஹுத்தீனுக்கு உதவத் துணைப்படையை அனுப்பிவிட்டுப் பரங்கியரின் கவனத்தைக் கலைப்பதற்காக சிரியாவின் சில பகுதிகளில் படையெடுத்தார் என்று பார்த்தோம் இல்லையா? முதலில் அங்கு அவருடன் இணைவோம். பிறகு அங்கிருந்து இராக்குக்குச் சிறு பயணம்.

நூருத்தீன் முதலில் தமது படைகளுடன் சிரியாவில் பரங்கியர் ஆக்கிரமித்திருந்த பகுதிகளுக்குள் நுழைந்தார். தாம் முன்னேறிய வழி நெடுகிலும் அவற்றைக் கபளீகரம் செய்து கொளுத்திவிட்டு முன்னேறியவர் கெராக் கோட்டையை நெருங்கினார். அதை முற்றுகையிட்டார்.

ஜோர்டான் ஆற்றங்கரையைத் தாண்டிக் கிழக்கே, சாக்கடல்-செங்கடலுக்கு இடையே வறண்ட, தரிசான நிலப்பரப்பு கிடந்தது. இன்றைய புவியியல் அமைப்பில் அது ஜோர்டான் நாட்டின் எல்லைப் பகுதி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அது டிரான்ஸ்ஜோர்டன் என்று அழைக்கப்பட்டது. மனித வாடையற்ற பாலைவனம் போன்ற பகுதிதான் அது. ஆனால், சிரியாவுக்கும், எகிப்து, அரேபிய நகரங்களுக்கும் இடையே வர்த்தகத்திற்கும், தகவல் தொடர்புக்கும் டிரான்ஸ்ஜோர்டன் இன்றியமையாத பாதை. அங்கு கி.பி. 1115ஆம் ஆண்டு ராஜா பால்ட்வின் ஷோபக் எனப்படும் பாறை அடுக்குகள் நிறைந்த இடத்திற்குச் சென்று கோட்டை ஒன்றைக் கட்டி அதற்கு மான்ட்ரியல் அல்லது அரசர் மலை என்று பெயரிட்டார். அது ஷவ்பக் கோட்டை என்று வலுவாக உருப்பெற்றதை முப்பத்து ஐந்தாம் அத்தியாயத்தில் பார்த்தோம்.

ஷவ்பக்கிலிருந்து சற்றொப்ப நூறு கி.மீ. தொலைவில் வடக்கே, சாக்கடலின் கிழக்கே கி.பி. 1142ஆம் ஆண்டு உருவானது கெராக் கோட்டை. பேகன் தி பட்லர் (Pagan the Butler) என்பவர் டிரான்ஸ்ஜோர்டன் பகுதியின் சிலுவைப்படை அதிபதியாக இருந்தபோது கட்டிய கோட்டை அது. அக்கோட்டைக்குக் கோபுரங்களைக் கட்டி, வடக்கு-தெற்குப் பகுதியில் பாதுகாப்பிற்காகப் பாறைகளை வெட்டி ஆழமான அகழி அமைத்தார்கள். உள்ளே இரண்டு அடுக்குகளில், மிகப்பெரிய வளைவு மண்டபங்கள். அவை வசிப்பிடங்களாகவும் குதிரைத் தொழுவங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. கவண் தாக்குதல்களை எல்லாம் எளிதில் சமாளித்து எதிர்த்தாக்குதல் நடத்த வாகாகவும் அவை கட்டப்பட்டிருந்தன.

டிரான்ஸ்ஜோர்டன் நிலப்பரப்பில் வெகு முக்கியமான இடத்தில் அமைந்துவிட்டது இந்த கெராக் கோட்டை. டமாஸ்கஸிலிருந்து எகிப்துக்குச் செல்வதாக இருந்தாலோ, மக்காவுக்குப் போக வேண்டும் என்றாலோ அதுதான் பாதை. அதனால் வர்த்தகர்களையும் ஹஜ் பயணிகளையும் அப்பகுதியில் வசித்த பதுஉ அரபியர்களையும் கட்டுப்படுத்திப் பரங்கியர்கள் செய்யத் தொடங்கிய தொல்லை பெரும் வதை.

பின்வரும் காலத்தில் முக்கிய வில்லனாகச் சிறையிலிருந்து விடுதலையான ஷட்டியோனின் ரெனால்ட் 1176ஆம் ஆண்டு இதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். அவன் வர்த்தகர்களுக்குக் கொடுத்தத் தொல்லைகளுடன் தனது அக்கிரமத்தை நிறுத்திக் கொள்ளாமல் ஒரு கட்டத்தில் மக்கா நகரையே தாக்கலாம் என்று முயற்சி எடுத்து இறங்கியதும் அதற்குமேல் பொறுக்க முடியாமல் ஸலாஹுத்தீன் வெகுண்டெழுந்து அவனுடன் மோதி, கெராக்கைக் கைப்பற்றிய வரலாறெல்லாம் பிறகு.

உருவான நாளிலிருந்து பாதையில் விஷ முள்ளாகக் கிடக்கும் கெராக் கோட்டையை இப்பொழுது ஹி. 565 / கி.பி. 1170ஆம் ஆண்டு நூருத்தீன் முற்றுகையிட்டார். கவண் பொறி இயந்திரங்கள் நிறுவப்பட்டன. எதிர்பார்த்ததைப் போலவே கோட்டையைக் காக்க இதரப் பகுதிகளிலிருந்து பரங்கியர்கள் படையெடுத்து வந்தனர். அதன் தலைமையில் அவர்களின் முன்னணி சேனாதிபதிகள். கெராக் கோட்டையில் உள்ளவர்களுடன் அந்தப் படை இணைந்துவிடாமல், வழியிலேயே அவர்களை மடக்கத் திட்டமிட்டு அவர்களை நோக்கித் தம் படையுடன் விரைந்தார் நூருத்தீன். பரங்கியர் படை அப்படியே பின் வாங்கியது. நூருத்தீனின் படை அஷ்தரா என்ற பகுதியில் பாடி இறங்கியது. முன்னேறும் பரங்கியர்களைத் தாக்கி நசுக்கக் காத்திருந்தது. ஆனால் அவர்களோ இருந்த இடத்தை விட்டு நகராமல் நிற்க, நிகழ்ந்தது வேறொரு பேரழிவு.

ஹி. 565 ஷவ்வால் மாதம் / கி.பி. 1170 ஜூலை மாதம் சிரியாவின் வடக்கே பெரும் பூகம்பம். பல நில அதிர்வுகள். பால்பெக், ஹும்ஸ், ஹமா, அலெப்போ நகரங்களில் சொல்லி மாளாத சேதம்; எண்ணிலடங்காத உயிரிழப்பு. போட்டது போட்டபடி, போரையும் முற்றுகையையும் விட்டுவிட்டு நூருத்தீனும் பரங்கியர்களும் பாதிக்கப்பட்ட தத்தம் நகரங்களுக்கு விரைந்தார்கள். அந்தந்த ஊர்களில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார் நூருத்தீன். அலெப்போ நகரம்தான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அங்குச் சென்று அவரும் களமிறங்கி அப்பணிகளில் கலந்துகொண்டார். பூகம்பம் தாக்கிய ஊர்களில் எல்லாம் அரண்களும் நகரச் சுவர்களும் சிதிலமடைந்திருந்தன. பாதுகாப்பு பலவீனமடைந்துள்ள இந்நிலையைப் பயன்படுத்திப் பரங்கியர்கள் படையெடுத்து உள்ளே புகுந்து விட்டால்? அந்த ஆபத்தைக் கருதி அவற்றின் மீள்கட்டுமானம் வெகு வேகமாக நடைபெற ஆரம்பித்தது. பரங்கியர்களுக்கும் நூருத்தீனைக் குறித்து அதே கவலை. அவர் தம் படைகளுடன் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் அவர்களும் தாங்கள் ஆக்கிரமித்திருந்த நகரங்களின் மீள்கட்டுமானத்தைத் துரிதப்படுத்தினர்.

இந்நிலையில் இராக்கில் மோஸுலில் இருந்து வேறொரு துக்கச் செய்தியும் பிரச்சினையும் நூருத்தீனை அடைந்தது!

oOo

இமாதுத்தீன் ஸெங்கி மரணமடைந்த பின் அவருடைய மூத்த மகன் முதலாம் ஸைஃபுத்தீன் காஸி (Sayf al-Din Ghazi I) மோஸுலுக்கும், இளையவர் நூருத்தீன் அலெப்போவுக்கும் அதிபர்கள் ஆகியிருந்தனர்.  அடுத்த மூன்று ஆண்டுகளில் – கி.பி. 1149 – ஸைஃபுத்தீன் இறந்துவிட்டார். அவருக்குப் பின் மற்றொரு சகோதரர் குத்புத்தீன் மவ்தூத் மோஸுலின் அதிபரானார். இருபது ஆண்டுகாலம் நீடித்தது அங்கு அவரது ஆட்சி. அவருக்கு நோய் ஏற்பட்டு, நிலைமை மோசமடைந்து (ஹி. 565 / கி.பி. 1170) மரணமடைந்தார். இறப்பதற்கு முன் அவர் செய்த காரியம் பெரும் அரசியல் பிரச்சினையை அங்கு ஏற்படுத்திவிட்டது.

குத்புத்தீன் மவ்தூதுக்கு இரண்டு புதல்வர்கள். தமக்கு அடுத்து மூத்த மகன் இமாதுத்தீனுக்கு ஆட்சி என்று அறிவித்தார் குத்புத்தீன். இந்த இமாதுத்தீன் நூருத்தீனின் மகளை மணமுடித்து அவருக்கு மருமகனாக ஆகியிருந்தவர். ஆனால், மோஸுலின் ஆட்சி நிர்வாகத்தில் முக்கியப் புள்ளியாக, அதிகாரங்களைத் தம் வசம் வைத்திருந்தார் ஒரு கிறிஸ்தவர். பெயர் ஃபக்ருத்தீன் அப்துல் மஸீஹ். அவர் ஓர் அலி. அவருக்கு இந்த அறிவிப்பு எரிச்சலையும் கவலையையும் அளித்தது. அப்துல் மஸீஹின் முறையற்ற வரி விதிப்புகள், கடுமையான நிர்வாகம், அநீதி ஆகியனவற்றை அறிந்திருந்த நூருத்தீனுக்கு ஏற்கெனவே அவர் மீது அதிருப்தி இருந்து வந்தது. அதை அவரும் அறிந்திருந்தார். இந்நிலையில் நூருத்தீனிடம் அணுக்கமாகவும் அவருக்கு மருமகனாகவும் உள்ள இமாதுத்தீன் ஆட்சிக்கு வந்தால் தம் இருக்கைக்கு ஆபத்து என்று அச்சப்பட்ட அப்துல் மஸீஹின் மூளை சூழ்ச்சிக்குத் தாவியது. குத்புத்தீனின் மனைவியிடம் நைச்சியமாகப் பேசினார். குத்புத்தீனின் இளைய மகன் இரண்டாம் ஸைஃபுத்தீன் காஸியைப்  பட்டத்துக்குக் கொண்டுவருவது என்று தூபமிட்டார்.

கணவர் குத்புத்தீனின் மனத்தை மாற்றினார் மனைவியார். அவரும் மனைவியின் சொல்பேச்சைக் கேட்டு இளைய மகனைப் பட்டத்துக்குரியவராக அறிவித்துவிட்டு மரணமடைந்தார். ஆட்சிக்கு வந்தார் இளையவர் ஸைஃபுத்தீன். அனுபவமற்ற இளவயதினரான அவரையும் ஆட்சியையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் அப்துல் மஸீஹ். விட்டுவிடுவாரா மூத்த மகன் இமாதுத்தீன்?

சகோதரரின் மரணச் செய்தியும் மருமகனின் உதவிக் கோரிக்கையும் நூருத்தீனை அடைந்தன. “என் சகோதரர் மகன்களையும் அவர்களுடைய ஆட்சியையும் வழிநடத்த நானே பொருத்தமானவன்” என்று அறிவித்துவிட்டு, பூகம்ப நிவாரணத்தை முடித்துக்கொண்டு, சிறு படையைத் திரட்டிக்கொண்டு மோஸுலுக்கு அணிவகுத்தார் நூருத்தீன்.

வழியில் ஆங்காங்கே குறுநிலங்கள். ஆட்சியில் சுயராஜ்ஜிய அமீர்கள். அவற்றுள் தமக்குக் கட்டுப்பட மறுத்த நகரங்களைக் கைப்பற்றியபடி முன்னேறிய நூருத்தீன் சின்ஜார் நகருக்கு அணிவகுத்தார்; முற்றுகை இட்டார்; அதையும் கைப்பற்றினார். அங்கிருந்து அவரது படை மோஸுலை நோக்கி நகர்ந்தது. அதை முற்றுகை இட்டது. அப்துல் மஸீஹுக்குக் கதி கலங்கியது. நூருத்தீனை எதிர்த்து நிற்குமளவிற்கெல்லாம் அவருக்குத் திராணியில்லை. எனவே ஆபத்துதவி கோரி அவரது கரம் கிழக்கே நீண்டது.

இராக்கிற்குக் கிழக்கே, தெற்கே ஹம்தானிலிருந்து வடக்கே அஸ்ஹர்பெய்ஜான் வரை பெரும் நிலப்பரப்பிற்கு அதிபதியாக ஆட்சியிலிருந்தார் ஷம்சுத்தீன் இல்திகிஸ் (Shams al-Din Ildikiz). ஒருவேளை அவர் மிரட்டினால் நூருத்தீன் இணங்கி வரலாம் என்று கணக்கிட்டு அவருக்கு அவசரத் தகவல் அனுப்பினார் அப்துல் மஸீஹ். அந்த மன்னரும் ‘இந்நிலங்கள் சுல்தானுக்கு உரியவை. இவற்றைத் தாக்க வேண்டாம்’ என்று நூருத்தீனுக்கு எச்சரிக்கைத் தகவலைத் தம் தூதர் மூலம் அனுப்பினார்.

நூருத்தீன் அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அத்தூதனிடம் கூறினார்:
“உன்னுடைய தலைவரிடம் சொல், ‘நானே என்னுடைய சகோதரர் மகன்களுக்கு உன்னைவிடச் சிறந்தவன். அவர்களிடம் பாசம் மிகைத்தவன். எங்களுக்கு இடையே நீ ஏன் குறுக்கிடுகிறாய்? நான் அவர்களுடைய நிலங்களைப் பங்கிட்டு முடித்தபின், ஹமதான் நகரின் வாயிலுக்கு வந்து உன்னிடம் பேசிக்கொள்கிறேன். பரந்து விரிந்துள்ள நிலங்களைக் கைப்பற்றிய நீ, எல்லைகளைப் புறக்கணித்துவிட்டாய். விளைவாகப் பரங்கியர்கள் அங்கும் நுழைந்துவிட்டார்கள். உன் நிலங்களின் அளவில் கால்வாசியே என் வசம் கொண்டுள்ள நான், போர்க்குணம் மிகுந்த பரங்கியர்களால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டேன். ஆனால், அவர்களிடமிருந்து பெரும்பாலான நிலங்களை மீட்டேன்; அவர்களுடைய தலைவர்களைக் கைது செய்தேன். உன்னைக் குறித்து என் நாவைக் கட்டுப்படுத்துவது எனக்குச் சரியன்று. நீ புறக்கணித்த முஸ்லிம் நாடுகளைப் பாதுகாத்து, முஸ்லிம்களை அடக்குமுறையிலிருந்தும் அநீதியிலிருந்தும் விடுவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்”

ஷம்சுத்தீன் இல்திகிஸின் தகவல் உதாசீனப்படுத்தப்பட்டது மட்டுமின்றி, அவருக்கே நூருத்தீன் பதில் மிரட்டல் அனுப்பியதும் மோஸுல் கலகலத்தது. அங்கிருந்த அமீர்கள் தங்களது விசுவாசத்தை நூருத்தீனுக்குத் தெரிவித்து ரகசிய மடல்கள் அனுப்பினர். மக்களும் படை வீரர்களும் அவர் பக்கம் சாய்ந்தனர். இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை, சாட்சிக்காரனைவிட சண்டைக்காரன் மேல், நூருத்தீனிடமே அடைக்கலம் பெற்றுவிடுவது என்ற முடிவுக்கு வந்தார் அப்துல் மஸீஹ்.

‘சரணடைகிறேன். நகரை ஒப்படைக்கிறேன். எனது உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளியுங்கள். ஸைஃபுத்தீனை மட்டும் ஆட்சியாளராகத் தொடர விட்டுவிடுங்கள்’ என்று தகவல் அனுப்பினார்.

‘நல்லது. மோஸுலை என் சகோதரர் மகன்களிடமிருந்து கைப்பற்ற நான் வரவில்லை. உன்னிடமிருந்து மக்களை மீட்கவும் என் சகோதரர் மகன்களின் பிரச்சினைகளுக்குப் பொறுபேற்கவுமே வந்தேன் . ஆனால் இனி நீ இங்கு இருக்கக் கூடாது. என்னுடன் உன்னை சிரியாவுக்கு அழைத்துச் செல்வேன். அங்கு உனக்கு நிலம் மானியமாக வழங்கப்படும்’ என்று அறிவித்தார் நூருத்தீன். பிரச்சினை போரின்றி சுமுகமாகப் பேசி முடிக்கப்பட்டது. மூத்தவர் இமாதுத்தீனுக்கு ஸின்ஜார் நகரின் ஆட்சி அளிக்கப்பட்டது. இளையவர் ஸைஃபுத்தீன் மோஸுலின் ஆட்சியில் தொடர அனுமதிக்கப்பட்டார். ஆனால் தம்முடைய பிரதிநிதியாக ஸஅதுத்தீன் குமுஷ்திஜின் (Sa’d ad-Din Kaishtakin) என்பவரை மோஸுலின் ஆளுநராக அமர்த்தி, அவரது ஆலோசனையின்படியே ஆட்சி அனுபவமற்ற ஸைஃபுத்தீன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஹி. 566 ஜமாதுல் அவ்வல் / கி.பி. 1171 ஜனவரி. அந்தரங்க வாயில் வழியாக மோஸுல் கோட்டைக்குள் நுழைந்தார் நூருத்தீன். அதையடுத்து அங்கும் அவர் கைப்பற்றிய நிஸ்பிஸ், சின்ஜர், ஃகாபுர் பகுதிகளிலும் இஸ்லாத்திற்குப் புறம்பாக விதிக்கப்பட்டிருந்த வரிகளெல்லாம் ரத்து செய்யப்பட்டன. இதர அனைத்து முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி இடப்பட்டது. மக்களுக்கு அறிக்கை ஒன்று வெளியானது.

“எம்முடைய சட்டப்பூர்வ பங்கு சிறிதே ஆயினும் எமக்கு அதில் திருப்தியே. அல்லாஹ்விடம் யாம் முழு நம்பிக்கை வைக்கிறோம். எம்முடைய மாகாணங்கள் அனைத்திலும் நாம் வரிகளை நீக்கத் தொடங்கியுள்ளோம். கொடூரமான, முறைகேடான சட்டங்களையும் அக்கிரமமான, அநீதியான செயல்கள் ஒவ்வொன்றையும் ஒழிக்க ஆரம்பித்துள்ளோம். இஸ்லாத்தின் ஒவ்வோர் உன்னத சட்டத்தையும் நடைமுறைப் படுத்தத் தொடங்கியுள்ளோம். அல்லாஹ்வின் அதிருப்தியிலிருந்து மீளவும் அவன் தாமதப்படுத்தும் வெகுமதியை வேண்டியும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இவற்றைச் செய்கிறோம். யாம் மேற்கொண்டவை அல்லாஹ்வின் உரிமை. அவற்றை நிறைவேற்றுவது எமது கடமை. இது எமது நற்செயல்; யாம் காட்டிய ஒரு தெளிவான முறை; யாம் வகுத்த எளிய விதி; யாம் வழங்கிய பயனுள்ள நன்மை”

அதன் பின் மோஸுல் நகரில் நூரி மஸ்ஜித் என்றொன்றைக் கட்ட ஏற்பாடு செய்துவிட்டு, நூருத்தீன் அப்துல் மஸீஹைத் தம்முடன் அழைத்துக்கொண்டு டமாஸ்கஸ் திரும்பினார். மஸீஹின் அடிமை என்ற அவரது பெயரை அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்று மாற்றி, வாக்களித்தபடி அவருக்கு நிலமும் மானியமாக வழங்கப்பட்டது. நூருத்தீனைக் கௌரவிக்கும் வகையில் அங்கியை அனுப்பி வைத்தார் அப்பாஸிய கலீஃபா.

இங்கு மோஸுலில் இக்களேபரங்கள் நடைபெற்ற அதே நேரத்தில் அங்கு பக்தாதிலும் பரபரப்பான சில நிகழ்வுகள் நடைபெற்றன. அப்பாஸிய வரலாறு சார்ந்த அவற்றுக்குள் நாம் அதிகம் நுழையாமல் மிகச் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் அறிந்துகொண்டு நகர்ந்து விடுவோம்.

ஹி. 566 / கி.பி. 1170 டிசம்பர் மாதம். அப்பாஸிய கலீஃபா அல்-முஸ்தன்ஜித்பில்லாஹ் நோயுற்றார். அவரைத் தேற்றி எழுப்பத்தானே பார்ப்பார்கள். ஆனால், அவருடைய இரு அதிகாரிகள் அந்த நோயை மேலும் மோசமடையச் செய்ய மருத்துவரை வற்புறுத்திச் சூழ்ச்சி செய்தனர். அவர்களுக்கு கலீஃபாவின் மீதும் அவரது அத்தியந்த வஸீரின் மீதும் பகை. எனவே, நோயுற்ற கலீஃபா அப்படியே போய்ச் சேர்ந்தால் சரி என்று காத்திருந்தார்கள். பிறகு பொறுமையிழந்து ஒருநாள் கலீஃபாவை அவரது விருப்பத்திற்கு மாறாகக் குளிக்க வைக்க இழுத்துச் சென்று குளியலறையில் அடைத்துத் தீர்த்துக் கட்டினார்கள். அந்த அரசியல் தனிக் கதை. இங்கு நமக்கு, அவர் மரணமடைந்தார்; அவரையடுத்து அவருடைய மகன் அபுல் முஹம்மது அல் ஹஸன் கலீஃபாவானார். அவருக்குப் பட்டப் பெயர் அல்-முஸ்ததிபிஅம்ரில்லாஹ் – என்ற கதைச் சுருக்கம் மட்டும் போதும்.

நாம் மீண்டும் எகிப்துக்குத் திரும்புவோம். அங்கு ஸலாஹுத்தீன் நிகழ்த்தப் போகும் வரலாற்றுத் திருப்பத்தைத் தொடர்வோம்.

– தொடரும்


Share this: