சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 71

Share this:

71. தமீதா போர்

நூருத்தீனுக்கு ஹதீஸ் ஒன்று வாசித்துக் கேட்பிக்கப்பட்டது. ஹதீஸ்களைச் செவியுற்று இன்புறும்போது அவர் புன்னகைப்பது வழக்கம். ஆனால் அன்று அவரது முகம் முழுவதும் கவலை! மகிழ்ச்சியின் சுவடே இல்லை. சபையில் குழுமியிருந்த மாணவர்களுக்கு அதைக் கண்டு வியப்பு. அவரிடம் விசாரித்தார்கள். ‘தமீதாவில் முஸ்லிம்களைப் பரங்கியர்கள் முற்றுகையிட்டிருக்கும்போது, எல்லாம் வல்ல இறைவனின் முன்னிலையில் நான் புன்னகைப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்’ என்று வந்தது பதில். எங்கோ தொலைவில் முஸ்லிம்களுக்கும் அவர்கள் வாழும் நகருக்கும் எதிரிகளால் ஆபத்து என்றதும் சிரியாவில் இருந்த சுல்தான் நூருத்தீனுக்கு மனம் நிம்மதி இழந்து, முகம் வாட்டமுற்று, இறைவனுக்கு எப்படி பதில் சொல்வது என்ற கவலையில் புன்னகையும் அந்நியமாகி விட்டது.

மத்திய தரைக்கடலில் கெய்ரோவிலிருந்து 200 கி.மீ. வடக்கே உள்ளது தமீதா. அது துறைமுகப் பட்டணம். கெய்ரோ நகருக்கு வடமேற்கே கிளைவிடும் நைல் நதியின் ஒரு கிளை, ‘தமீதா கிளை’ என்ற பெயரில் தமீதா வரை ஓடிக் கடலில் பாய்கிறது. அதனால் கடல் வழியாக எகிப்தில் நுழைவதற்கு தமீதாவில் உள்ள நைல் டெல்டாவின் இந்தக் கிழக்குப் பகிர்மானம் பெரிய நுழைவாயில். தமீதாவைக் கைப்பற்றிவிட்டால் போதும், நைல் நதியின் கட்டுப்பாடு நமது, நுழைந்து எகிப்தை ஆக்கிரமிப்பது எளிது என்று சிலுவைப்படையினருக்கு தமீதாவின் மீது தீராக் காதல். எனவே, 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சிலுவைப்போர்களில் இந்நகருக்குப் பெரும் முக்கியத்துவம் ஏற்பட்டுவிட்டது.

கெய்ரோவில் ஸலாஹுத்தீன் மீது அதிருப்தி கொண்ட கும்பல் இருக்கிறது, நுபியர்களின் படை கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது என்ற செய்திகளெல்லாம் பரங்கியர்களுக்கு வந்தபடிதான் இருந்தன. எகிப்தின் மீது மோகம் தீராத அவர்கள் அவசர அவசரமாகத் தங்களது பாதிரியார்களையும் துறவிகளையும் ஐரோப்பாவுக்குத் தூது அனுப்பினர்.

‘எகிப்தில் நமது எதிரி நிலைகுலைந்துள்ளான். இதுவே சரியான தருணம். உடனே உதவிப்படையை அனுப்புங்கள்’ என்று படபடத்தது அவர்களது கோரிக்கை. அதற்கும் முன்பு, அஸாதுத்தீன் ஷிர்குஹ் எகிப்தில் அமர்ந்துவிட்டதும் அச்சத்தில் ஆழ்ந்த பரங்கியர்கள் அது ஜெருசலத்திற்கு எந்நேரமும் வெடிக்க இருக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து, அப்பொழுதே ஐரோப்பாவுக்குத் தூது அனுப்பியிருந்தார்கள். ஆனால், இந்தக் கோரிக்கைகள் வந்து சேர்ந்த நேரத்திலோ இங்கிலாந்து பிரான்சு நாட்டு ராஜாக்களுக்கு இடையே முட்டல், மோதல், பிரச்சினை. அவர்கள் ஒன்றிணைந்தாலும் அடுத்த சிலுவைப்போருக்கு ஓராண்டாவது பரப்புரை செய்ய வேண்டியிருக்கும்; மக்களை மூளைச் சலவை செய்து சிலுவையைக் கையில் சுமத்த வேண்டியிருக்கும்; அதன் பிறகே அக்கூட்டம் படையாய் மாற வேண்டியிருக்கும். எனவே இலத்தீன் கிறிஸ்தவர்களிடமிருந்து விரைவான உடனடி உதவி என்பது சாத்தியமற்றதாக இருந்தது.

அந்த நேரத்தில் பரங்கியர்களுக்கு நல்வாய்ப்பாக இடையில் நுழைந்தார் பைஸாந்திய கிறிஸ்தவச் சக்கரவர்த்தி மேனுவல். எகிப்திய அரசியல் மாற்றம் அவருக்கும் செரிமானக் கோளாறை ஏற்படுத்தியிருந்தது. சிரியாவில் ஆளுமையாக உருவாகிவிட்டார் ஸன்னி முஸ்லிம் நூருத்தீன். அவருடைய தளபதியான ஸலாஹுத்தீனோ எகிப்திய ஃபாத்திமீ ஷீஆக்களின் வஸீராக வந்து அமர்ந்துவிட்டார். இவ்விரு சாம்ராஜ்யங்களும் ஒன்றிணைந்தால் ஜெருசலத்திற்கு மட்டுமா ஆபத்து? கான்ஸ்டண்டினோபிளிலும் அல்லவா நெறி கட்டும். அவரது கவலைகளின் விளைவாக அமால்ரிக்கிடம் நீண்டது உதவிக்கரம். கூட்டணி அமைத்தன பைஸாந்திய கிரேக்கப் படையும் ஜெருசல பரங்கியர் படையும்.

ஃபாத்திமீக்கள் தங்கள் வசம் இருந்த சிரியாவின் துறைமுக நகரங்களைச் சிலுவைப்படையிடம் இழந்த பின், பலவீனம் அடைந்திருந்தது அவர்களது கப்பற்படை. இருபது ஆண்டுகளாகச் சிலுவைப்படையினரும் நார்மனியர்களும் பைஸாந்தியர்களும் அவரவர் பங்கிற்குத் தத்தம் கப்பற்படையால் எகிப்திய கப்பல்களிடம் மோதியிருந்தார்கள். போதாததற்கு எகிப்தின் கப்பல்கள் கட்டுமான நகர் ஃபுஸ்தத்தும் வஸீர் ஷவாரின் தீக்கு இரையாகி, அது இன்னமும் மீண்ட பாடில்லை. இந்நிலையில் பைஸாந்திய சக்கரவர்த்தியின் கப்பற்படை கடல் வழியாகவும் ஜெருசல ராஜா அமால்ரிக்கின் படை தரை வழியாகவும் தாக்கினால்?

ஜூலை 10, 1169.

200 கப்பல்களில் படையினரைத் திரட்டிக்கொண்டு, மூன்று மாத கால உணவுப் பொருட்களையும் நிரப்பிக்கொண்டு, காற்றில் பாய்மரங்கள் படபடக்க, புயலாக எகிப்தை நோக்கி நகர்ந்து வந்தது பைஸாந்தியர்களின் கப்பற்படை. போர் மேகம் மீண்டும் எகிப்தைச் சூழ்ந்தது. அந்தப் பேராபத்தில் எகிப்திற்கு அப்பொழுது அமைந்த அனுகூலம் அமால்ரிக்கின் மந்தம். முந்தைய ஆண்டுகளின் படையெடுப்புகளுக்குப் பின் ஜெருசலம் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் இருந்தது. அதைச் சரிசெய்துவிட்டு, ஜெருசலத்திற்கான பாதுகாப்பை பலப்படுத்திவிட்டு, படையைத் திரட்டிக்கொண்டு ராஜா அமால்ரிக் கிளம்ப அக்டோபர் மாதம் ஆகிவிட்டது. அம்மாத இறுதியில்தான் அவர் எகிப்து பகுதிகளுக்குள் நுழைந்தார். இந்தத் தாமதம் ஸலாஹுத்தீனுக்குப் போதிய அவகாசத்தை அளித்துவிட்டது.

எகிப்திய கலவரங்களையும் சூழ்ச்சிகளையும் கட்டுக்குள் கொண்டுவரும் நேரத்தில் உதித்த இந்தப் போர் ஆபத்து ஸலாஹுத்தீனுக்கு வேறொரு சவாலை அளித்தது. அந்த சங்கடத்தை அவர் நூருத்தீனுக்கு எழுதினார். ‘நான் தமீதாவுக்குச் செல்லவில்லை எனில் பரங்கியர்கள் அதைக் கைப்பற்றிவிடுவர். நான் சென்றாலோ எகிப்தியர்கள் அதை அனுகூலமாக எடுத்துக்கொண்டு இங்கு பிரச்சினையை ஆரம்பித்து விடுவார்கள். எனக்கு எதிராகக் கலகம் செய்வார்கள்; என்னைப் பின்தொடர்ந்து தாக்க வருவார்கள்; எனக்கு முன்னால் பரங்கியர்கள் நிற்க, நாம் முற்றிலும் அழிக்கப்படுவோம்.’

நூருத்தீன் சற்றும் தாமதிக்கவில்லை. சிரியாவிலிருந்து விரைந்து கிளம்பியது அவரனுப்பிய உதவிப்படை. தமீதாவுக்கு அவர்களை அனுப்பிவிட்டு, பரங்கியர்களின் கவனத்தையும் நிம்மதியையும் குலைக்க , சிரியாவின் இதரப் பகுதிகளில் பரங்கியர் வசம் இருந்த கோட்டைகள், நகரங்கள் மீது படையெடுத்தார் நூருத்தீன். ஸலாஹுத்தீன் எகிப்திலிருந்து படையைத் திரட்டி, தம் சகோதரன் மகன் தகீயுத்தீனிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து, தம் தாய் மாமன் ஷிஹாபுத்தீன் மஹ்மூதையும் படையில் இணைத்து தமீதாவுக்கு அனுப்பினார். பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் படை தமீதாவில் குவிந்தது.

நைல் நதியின் மேற்குக் கரையில் தமீதா. மறு கரையில் ஓர் உயர்தோங்கிய கோபுரம். இரண்டிற்கும் இடையே நீரின் குறுக்கே ராட்சத இரும்புச் சங்கிலியைக் கட்டி, நைல் நதியின் முகத்துவாரத்தை முஸ்லிம் படையினர் அடைத்தனர். அது பைஸாந்தியக் கப்பற்படை மேற்கொண்டு நைல் நதிக்குள் நுழைய முடியாமல் நிறுத்தி, ஆற்றின் சுவர் ஓரங்களையும் ஒட்டவிடாமல் தடுத்து விட, நட்டாற்றில் கைவிட்டவன் கதையாக நின்றன கப்பல்கள். இனி அமால்ரிக் நில வழியாக வந்து சேர்ந்தால்தான் அடுத்து ஏதாவது என்பதால் தமீதாவைக் கடலில் சுற்றி வளைத்து நின்றார்கள் பைஸாந்தியர்கள்.

அதே நேரத்தில், நைலின் தெற்கிலிருந்து தமீதாவுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் ஆயுதங்களும் தடையின்றி வந்து சேர்ந்தன. அரண்கள் வலுப்படுத்தப்பட்டன. ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் தம் கருவூலத்தைத் திறந்து பத்து இலட்சம் தீனார்களை, ‘போர்ச் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்’ என்று ஸலாஹுத்தீனுக்கு அளிக்க, நிதிக்கும் தட்டுப்பாடின்றிப் போனது.

நாளுக்கு நாள் முஸ்லிம்களின் தமீதா வலுப்பெறுவதைக் கையைப் பிசைந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார் கிரேக்கத் தளபதி. முற்றுகையை எதிர்த்து நிற்க தமீதாவுக்குத் தேவையான உணவு ஏராளம் நிறைந்துகொண்டிருக்க, இங்கு பைஸாந்தியக் கப்பற்படையினரின் உணவு இருப்பு குறைந்தபடி இருந்தது. மூன்று மாதக் கையிருப்புடன் வந்திருந்தார்கள் இல்லையா? அது தீர்ந்துபோன அக்டோபர் மாத இறுதியில்தான் ஒருவழியாகத் தம் படையுடன் எகிப்தை அடைந்தார் ஜெருசல ராஜா அமால்ரிக். பசியும் பட்டினியுமாய் பலவீனமடைந்திருந்த பைஸாந்திய வீரர்கள் வெறுப்பிலும் பரங்கியர்கள் தாமதமாக வந்து சேர்ந்த கோபத்திலும் கொதித்தார்கள். இருதரப்பும் இணைந்து முழுமையான தாக்குதல் நடத்தலாம் என்று கிரேக்கத் தளபதி முடிவெடுத்தார். ஆனால் அதற்கும் வழியின்றிப் போனது. புதிதாக பலப்படுத்தப்பட்டிருந்த தமீதாவின் அரண்கள் கவண் கற்களைத் தட்டிவிட்டு நின்றன.

அமால்ரிக்கின் ஐம்பதாயிரம் படையினர் முகாமிட்டிருந்த இடம் கரையோரமாய் ஒரு மைல் நீளப் பகுதி. எளிதாக நகரும் வசதியின்றிக் குறுகிய இடத்தில் நெருக்கியடித்தபடி குவிந்திருந்த அந்தப் படை முஸ்லிம் வில்லாளிகளின் அம்புகளுக்கு எளிய இலக்கானது. பரங்கியப் படையில் கணிசமான உயிரிழப்பு. பட்டினியில் வாடிய பைஸாந்தியப் படையினருக்கு சிலுவைப்படையின் உதவி கிடைக்க முடியாத நிலையில் அவர்களும் அந்தப் பக்கம் முஸ்லிம்களின் பலமான தாக்குதலில் பாதிப்படைந்தனர். ஆண்டு இறுதி நெருங்கி, குளிர்காலம் தொடங்கி, தெற்கிலிருந்து பருவக் காற்று வீச ஆரம்பிக்க, முஸ்லிம் படையினர் பரங்கியர்களின் கப்பல்களுக்குத் தீ வைத்தனர். அதை ஊதிப் பெரிதாக்கியது காற்று. அதில் அவர்களுக்கு பலத்த சேதம். திக்குமுக்காடினார்கள்.

அதையடுத்து வந்து சேர்ந்தது பெருமழை. சிலுவைப்படையினரின் கூடாரங்களில் புகுந்தது வெள்ளம். அதில் புதைந்தன அவை. அங்கு பைஸாந்தியக் கப்பல்களோ நெருப்பில் சிதிலமடைந்தவை போக மற்றவை புயல் மழையில் தள்ளாடின. பட்டினியில் பாதி உயிராய்க் கிடந்த கிரேக்க வீரர்கள் அதை சமாளித்துக் கப்பலைச் செலுத்த முடியாமல் கடலில் மூழ்கி இறந்தனர். அமால்ரிக் வந்து சேர்ந்தபின் ஐம்பது நாள்கள் நீடித்த முற்றுகை அத்துடன் முடிவுற்று பைஸாந்திய-பரங்கிய கூட்டணிப் படை அமைதிக்குக் கை நீட்டியது. பரங்கியர்கள் தங்களது கவண்பொறி இயந்திரங்களைக் கொளுத்திவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் போர் நிறுத்தத்தக்கு ஒப்புதல் வழங்கினார் ஸலாஹுத்தீன்.

டிசம்பர் மத்தியில் பைஸாந்தியக் கப்பல்கள் தங்கள் நாட்டுக்கு மிதக்க, பரங்கியர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப, கிறிஸ்தவர்களிடமிருந்து மீண்டும் மீண்டது எகிப்து. அந்த வெற்றி முஸ்லிம்கள்-பரங்கியர் இடையே 1160ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த எகிப்திய போட்டியை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவந்தது. ‘நெருப்புக்கோழி கொம்புகளைத் தேடிப் போய்த் தன் காதுகளை இழந்து திரும்பியது’ என்று கிறிஸ்தவர்களின் அத்தோல்வியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் அக்காலத்திய வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதிர்.

வஸீர் பதவியேற்று ஒன்பதே மாதங்கள். எகிப்து அதிகாரிகளின் சதி, நுபியர்களின் உள்நாட்டுக் கலகம், கிரேக்க-பரங்கியர் கூட்டணிப் போர் அனைத்தையும் முறியடித்து, மக்களின் அபிமானத்திற்கும் ஆதரவுக்கும் உரியவராகி, 1169ஆம் ஆண்டின் இறுதியில் எகிப்தைப் பாதுகாக்கும் தலைவராக உயர்ந்து நின்றார் ஸலாஹுத்தீன் அய்யூபி.

வடக்கே சிரியாவில் நூருத்தீன், தெற்கே எகிப்தில் ஸலாஹுத்தீன் அய்யூபி என்ற இரு பெரும் ஆளுமைகளினால் சிலுவைப்படை அச்சத்திற்கு உள்ளானது. ஜெருசலம் தன்னை மீட்க வரும் நாயகனை எதிர்பார்க்க ஆரம்பித்தது.

(தொடரும்)


Share this: