88. அஸாஸியர்களின் இரண்டாம் கொலை முயற்சி
அலெப்போவிற்கு வடக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது அஸாஸ். முற்றுகைப் போர்த் திறனும் அரண்களுக்குக் குழி தோண்டும் நிபுணத்துவமும் ஏராளம் தேவைப்பட்ட கடினமான கோட்டை அது. மன்பிஜ் நகரை வென்றபின் ஸலாஹுத்தீன் தம் படையுடன் அங்கு நகர்ந்தார். அலெப்போவோ சரணடைய மறுக்கிறது. அதைச் சுற்றிலும் உள்ள நகரங்களையும் கோட்டைகளையும் வசமாக்கிவிட்டால் நடுவே, தன்னந்தனியே விடப்படும் அலெப்போ, தானே கனிந்து விழத்தானே வேண்டும்?
மே 1176 / துல்கஃதா 571 – அஸாஸ் கோட்டை முற்றுகையிடப்பட்டது. ஆனால் அங்கு ஸலாஹுத்தீனின் உயிரைக் குறி வைத்து நுழைந்தது பேராபத்து!
கூட்டணிப் படையுடன் ஸலாஹுத்தீனிடம் இருமுறை மோதி, படு கேவலமாகத் தோல்வியைத் தழுவிய குமுஷ்திஜினின் தூண்டுதலா, அல்லது அஸாஸியர்களின் தலைவன் ஷேக் அல்-ஜபல் ரஷீதுத்தீன் ஸினானின் பழியுணர்ச்சியா, அல்லது இரண்டுமா என்பது தீர்க்கமாகத் தெரியவில்லை. முந்தைய ஆண்டு தங்கள் முயற்சியில் தோல்வியுற்ற அஸாஸியர்கள் இம்முறை வெகு நேர்த்தியாகத் திட்டம் தீட்டினார்கள். ஆயுதங்கள் கூராக்கப்பட்டன. கொலைப் பணி கொலைஞர்கள் நால்வரிடம் அளிக்கப்பட்டது. அவர்கள் கோட்டையிலிருந்து வெளி வந்தார்கள். ஸலாஹுத்தீனின் துருப்புகளுள் சாமர்த்தியமாக இடம் பிடித்தார்கள். அவர்களுள் இரண்டறக் கலந்து ஒன்றாகி, அஸாஸ் கோட்டை முற்றுகையின் போது கூடாரங்களுக்குள் ஊடுருவினார்கள்.
அங்கு ஒருநாள் அமீர் ஒருவரின் கூடாரத்திற்குள் போர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ஸலாஹுத்தீன். குறுவாளை ஓங்கியபடி உள்ளே நுழைந்த முதல் கொலைஞன் மின்னல் வேகத்தில் அவர் மீது பாய்ந்து, அவரது தலையைக் குறிவைத்து அதில் குறுவாளை இறக்கினான். போர்க்காலம் ஆதலால் உடலிலும் தலையிலும் கவசம் பூண்டிருந்தார் ஸலாஹுத்தீன். கொலை வெறியுடன் இறங்கிய குறுவாளை அவரது தலைக் கவசம் தடுத்து நிறுத்தியது. எனினும் இறங்கிய வேகத்தில் தலைக் கவசத்தின் சங்கிலிகள் வழியே நழுவி அவரது கன்னத்தை வெட்டிக் கிழித்தது.
அத்தகு தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத ஸலாஹுத்தீன் தடுமாறி நிலைகுலைந்தார். உடனே சுதாரித்து சமாளித்தவர் ஆயுதம் ஏந்தியிருந்த அவனது கையைத் தடுத்துப் பிடித்து முறுக்கினார்; இருவரும் பின்னிப் புரண்டனர். அவனது அடுத்தடுத்த அடிகள் வீரியமிழந்தன. ஆயினும் கொலைஞன் அவரது கழுத்தை நோக்கிக் குறுவாளைப் பாய்ச்ச அவரது உடல் கவசத்தின் கழுத்துப்பட்டை அதைத் தடுத்து நிறுத்தியது. ஸலாஹுத்தீனுக்கும் கொலைஞனுக்கும் இடையே சண்டை நிகழ, அமீர் யஸ்கூஷ் (Yazkush) ஓடி வந்து கொலைஞனின் கையில் இருந்த குறுவாளைப் பிடுங்க முயன்றார். அவன் அவரைப் படுகாயப்படுத்த, அதை சமாளித்து அவர் மறுகையால் தம் வாளை அவன் மீது வீசிக் கொன்றார்.
அடுத்துப் பாய்ந்து வந்தான் மற்றொரு கொலைஞன். அதற்குள் பாதுகாவலர்கள் இரைச்சல் கேட்டு ஓடிவர, கூடாரத்தில் நிலவரம் பரபரப்படைந்தது. மான்கலான் என்பவர் ஓடிவந்து அந்த இரண்டாம் கொலைஞனைத் தடுத்துச் சண்டையிட்டுக் கொன்றார். ஓடிவந்த மூன்றாமவனை அமீர் அலீ அபுல் ஃபவாரிஸ் தடுத்து, அவனது தலையைத் தமது கட்கத்திற்குள் உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொள்ள நாஸிருத்தீன் முஹம்மது இப்னு ஷிர்குஹ் அவனைத் தமது வாளால் குத்திக் கொன்றார். வெருண்டு ஓடிய நான்காம் கொலைஞனை, வீரர்கள் விரட்டிப் பிடித்துக் கொன்று முடித்தனர்.
அஸாஸியர்களின் வரலாற்றில் அவர்களின் துல்லிய தாக்குதலுக்கு இரையான முஸ்லிம், கிறிஸ்தவத் தலைவர்கள் மிகப் பலர். நூலிழையில் தப்பித்தவர்கள் சிலர். அவர்களுள் ஸலாஹுத்தீனும் ஒருவர். கூடாரத்திலிருந்து சோர்ந்து, தள்ளாடி வெளியே வந்தார் ஸலாஹுத்தீன். தாம் தப்பிப் பிழைத்ததை அவராலேயே நம்ப முடியவில்லை. இந்நிகழ்வு அவரை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கொலைஞர்கள் வெகு எளிதாக முகாமிற்குள் ஊடுருவியிருக்கின்றார்கள்; தமது கழுத்தின் மீது கத்தியை வைக்குமளவிற்கு நெருங்கியிருக்கிறார்கள் என்றால்?
அவரது கூடாரத்திற்கு வேலி போடப்பட்டு, படுக்கைப் பகுதி தூண்களால் உயர்த்தி அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. உடனடி நடவடிக்கையாக அவரை அண்மியுள்ள துருப்பினர் அனைவரும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஸலாஹுத்தீன் யாரையெல்லாம் அடையாளம் காண இயலவில்லையோ, அவருக்கு யாரெல்லாம் அறிமுகமில்லையோ அவர்களெல்லாம் அகற்றப்பட்டனர்.
இந்நிகழ்வின் சோகக் குறிப்பு ஒன்று: இரண்டாம் கொலைஞனைக் கொன்ற ஸலாஹுத்தீனின் பாதுகாவலர் மான்கலான் சண்டையில் படுகாயமடைந்திருந்தார். சிகிச்சை பலனின்றி சில நாட்களில் மரணமடைந்தார் அவர். அந்த அமீர் மான்கலான் ஒரு குர்தியர்; உதவி கோரி விண்ணப்பம் அளித்தவருக்கு உதவியது மட்டுமின்றி அவரைத் தம் பாதுகாவலராகவும் ஸலாஹுத்தீன் நியமித்தார் என்பதை முன்னர் வாசித்தது நினைவிருக்கலாம். அதற்குப் பிரதியுபகாரமாகத் தம் உயிரைக் கொடுத்து ஸலாஹுத்தீனைக் காப்பாற்றினார் மான்கலான்.
oOo
அஸாஸ் கோட்டையின் முற்றுகை முப்பத்தெட்டு நாள்கள் தொடர்ந்தது. சுரங்கக் குழிகள் தோண்டப்பட்டு, தீ வைக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் சண்டை. ஒவ்வொரு சண்டையும் முந்தைய நாளைவிடத் தீவிரம். ஸலாஹுத்தீனின் கடுமையான தாக்குதல்களைச் சமாளிக்க இயலாமல், –துல்ஹஜ் 571 / ஜுன் 1176– சரணடைந்தது அஸாஸ். அங்கிருந்து அலெப்போவை நோக்கி அணிவகுத்தார் ஸலாஹுத்தீன். அடுத்த நான்கு நாட்களில் அலெப்போ முற்றுகையிடப்பட்டது. தல் சுல்தான் போரில் தப்பி அடைக்கலம் புகுந்திருந்த அகதிகளால் நெரிசலில் நெளிந்தது அலெப்போ. ஆயினும் வழக்கம் போல் சரணடைய மறுத்தது.
ஸலாஹுத்தீனின் வலிமையும் புகழும் என்னதான் சிரியாவில் பரவியிருந்தாலும் அலெப்போவில் இருந்த மக்கள் மட்டும் நூருத்தீனின் மகன் இளம் மன்னர் ஸாலிஹுக்கு விசுவாசமாகவே இருந்தனர். அவர்கள் முற்றுகையை எதிர்ப்பதில் பெரும் பங்கு வகித்தனர். ஸாலிஹும் குமுஷ்திஜினும் அலெப்போவில் இருந்த பெருவாரியான ஷிஆ முஸ்லிம்களிடமிருந்து நூருத்தீன் பிடுங்கியிருந்த சலுகைகளை எல்லாம் திரும்ப அளித்துத் தங்கள் வசமாக்கியிருந்தார்கள் அல்லவா? அதனால் அந்த விசுவாசமும் ஃபாத்திமீக்களின் இராஜாங்கத்தை ஒழித்தவர் என்ற வகையில் ஸலாஹுத்தீனின் மீதிருந்த கோபமும் வெறுப்பும் அந்த ஷிஆக்களையும் மும்முரமாக முற்றுகையை எதிர்க்க வைத்தன.
அலெப்போ இவ்வளவு தீவிரமாகத் தம்மை எதிர்க்கும்போது, அவர்களது மனங்களை வெல்லாமல் அலெப்போவைத் தாக்கவோ, போரிட்டு வெல்லவோ ஸலாஹுத்தீன் விரும்பவில்லை. பிறகு அலெப்போவை வழிக்குக் கொண்டு வருவது எப்படி? அச்சமயத்திற்கு எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனமாக இருந்தது. எனவே சமாதான உடன்படிக்கையை நோக்கி அவரும் கை நீட்டினார். அலெப்போவும் அதன் கூட்டாளியாக இணைந்திருந்த மோஸுலும் கை நீட்டின. சமாதானத் தூதும் பேச்சுவார்த்தைகளும் நிகழ்ந்தன. இறுதியாக 20 முஹர்ரம் 572 / 29 ஜூலை 1176 உடன்படிக்கை கையெழுத்தானது. அதிலிருந்த நிபந்தனைகள்:
’சிலுவைப்படையினருக்கு எதிராக அனைவரும் (ஸலாஹுத்தீன், அலெப்போவின் ஸாலிஹ், மோஸுலின் ஸைஃபுத்தீன்) ஒன்றிணைந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்; எவரும் இந்த உடன்படிக்கையை முறிக்கக் கூடாது; அப்படி யாரேனும் முறித்தால் மற்ற இருவரும் ஒன்றிணைந்து அவரிடம் போரிட வேண்டும்’.
இவையன்றி மற்றொரு பரோபகரமும் ஸலாஹுத்தீனிடமிருந்து வெளிப்பட்டது.
மன்னர் அஸ்-ஸாலிஹுக்குத் தங்கை ஒருத்தி இருந்தாள். நூருத்தீனின் மகளான அவள் இள வயது சிறுமி. ஸலாஹுத்தீனின் மென் உணர்வுகளைக் குறி வைத்து அவரைச் சந்திக்க அவளை அனுப்பி வைத்தார்கள். தம் எசமானர் நூருத்தீனின் மகளான அவளை அன்புடன் வரவேற்று உபசரித்து, ஏராளமான பரிசுகளை வழங்கினார் ஸலாஹுத்தீன்.
‘மேலும், என்ன வேண்டும் கேள்?’ என்று அவர் வினவ, அச்சிறுமி அளித்த பதில், ‘அஸாஸ் கோட்டை’. அவளுக்கு அவ்விதம் பயிற்சி அளித்திருந்தார்கள் அலெப்போவின் பிரதானிகள்.
ஸலாஹுத்தீன் தம் உயிரைப் பணயம் வைத்துக் கைப்பற்றியிருந்த அஸாஸ் கோட்டையை நூருத்தீனின் மகள் கேட்டதும், அவர் தயங்கவில்லை, தாமதிக்கவில்லை. அதை உடனே அளித்தார். தம் முற்றுகையை நீக்கினார். அலெப்போவை விட்டுத் தம் படையினருடன் கிளம்பினார்.
எங்கே? அஸாஸியர்களின் கோட்டையை நோக்கி!
oOo
அகண்ட சிரியாவில் (Greater Syria – இது வரலாற்று ரீதியாக லெவண்ட் [Levant] பிராந்தியத்தின் பரந்த பகுதியைக் குறிக்கிறது, சமகாலத்தில் சிரியா, லெபனான், ஜோர்டான், ஃபலஸ்தீன், தெற்கு துருக்கி ஈராக்கின் சில பகுதிகள் ஆகியவை இதனுள் அடங்கும்) பேராபத்தாய் வேர்விட்டிருந்த அஸாஸியர்களின் பிரச்சினைக்கு, தம்மைக் கொல்ல ஆயுதத்துடன் திரியும் அக்கொலைஞர்களின் இயக்கத்திற்கு முடிவுகட்ட விரும்பினார் ஸலாஹுத்தீன்.
சிரியாவில் அவர்கள் எட்டு கோட்டைகளைப் பிடித்து வைத்திருந்தனர். அதிலொன்று பத்தாம் நூற்றாண்டின் பைஸாந்தியக் கோட்டை ’மஸ்யஃப்’. அஸாஸியர்களின் தலைவன் ஷெய்குல் ஜபல் ரஷீதுத்தீன் ஸினானின் தலைமையகம் அது. பாறை உச்சியில் வீற்றிருந்தது. 170 மீட்டர் நீளமுள்ள நீள்வட்டச் சுவர்கள், பாறையின் மைய பாகத்திலிருந்து உயர்ந்துள்ள கோபுரங்கள், புறக்காவல் கோபுரங்கள். உள்ளே அறைகள், படிக்கட்டுகள், பிரிந்து, வளைந்து, மீண்டும் திரும்பும் சிக்கலான வலைப் பின்னல் பாதைகள், மலையைச் சுற்றி மேலோடும் நிலைகளில் சுரங்கங்கள் என்று அதன் கட்டுமான அமைப்பு பயங்கரம். கூரை ஒன்றில் துளை ஒன்று வெட்டப்பட்டு, உள்ளே நுழையும் படைகளை உச்சியிலிருந்து தாக்குவதற்கு வாகான அமைப்பும் அதனுள் அமைக்கப்பட்டிருந்தது. அடித்தளத்தில் பாறை செதுக்கப்பட்டு, மூன்று நீர்த்தொட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. சுமார் 400,000 லிட்டர் நீரைத் தேக்கி வைக்கும் கொள்ளவுள்ள தொட்டிகள். அவை 1,000 பேருக்கு ஆறு மாதங்களுக்குப் போதுமான நீராதாரம்.
சுருக்கமாக, அஸாஸியர்களின் தலைவன் ஷெய்குல் ஜபல் ரஷீதுத்தீன் ஸினானின் மீது படையெடுப்பவர்களுக்கு ’மஸ்யஃப்’ என்பது ஒரு கெட்ட கனா.
அந்த மஸ்யஃப் கோட்டை முஹர்ரம் 572 / ஆகஸ்ட் 1176 – முற்றுகையிடப்பட்டது. ரஷீதுத்தீன் ஸினானுக்கு மிரட்டல் விடுத்து ஸலாஹுத்தீன் கடிதம் ஒன்று எழுதி அனுப்பினார். அதற்கு அவன் அனுப்பிய பதில் கடிதத்தில் கவலையோ, அச்சமோ இன்றித் துணிச்சலே மிகைத்திருந்தது.
’உனது கடிதத்தை நான் கவனமாகப் படித்தேன். நீ என்னை அச்சுறுத்துகிறாய் என்பது எங்களுக்குப் புரிகிறது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, இது வியப்பாக இருக்கிறது. (அதெல்லாம்) யானையின் காதில் ரீங்காரமிடும் ஈ, ஒரு சிலைக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாத ஒரு கொசுவைப் போன்றுள்ளது அது.
உனக்கு முன்னும் எங்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் இருந்தார்கள். ஆனால், நாங்கள் அவர்களை அழித்தோம். அவர்களுக்கு ஆதரவாளர்களே இல்லை. நீங்கள் உண்மையை எதிர்த்துப் போராடுகிறீர்களா, பொய்யை ஆதரிக்கிறீர்களா? தவறு செய்பவர்கள் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை உணர வேண்டும். என் தலையை வெட்டி, வலுவான மலைகளில் கட்டப்பட்ட என் கோட்டைகளை வேரோடு பிடுங்க உத்தரவிட்டால், அது வெற்று ஆசையும் கற்பனையும் மட்டுமே. ஏனென்றால் இலட்சியங்களைக் கற்பனைகளால் அழிக்க முடியாது; ஆன்மாக்கள் நோயால் மாள்வதில்லை. ‘என்னைப் போல் எந்த தீர்க்கதரிசியும் துன்புறுத்தப்படவில்லை’ என்றுரைத்த அல்லாஹ்வின் தூதரிடம் எங்களுக்கு நல்லதோர் உதாரணம் உள்ளது. நபியவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் என்ன நிகழ்ந்தது என்பது உனக்குத் தெரியும். அது இன்னும் அவ்விதமே உள்ளது, அவ்விதமே தொடர்கிறது.
நாங்கள் எப்பேற்பட்டவர்கள், எங்கள் ஆட்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் எப்படி மரணத்தை விரும்புகிறார்கள், மரணத்தின் நீர்த்தேக்கத்தை நெருங்க அவர்கள் எப்படிக் கடுமையாக முயற்சி செய்கிறார்கள் என்பது உனக்குத் தெரியும். ‘வாத்துக்குத் தண்ணீர் கொடுத்து மிரட்டுகிறாயா?’ என்ற சொலவடையைப் போல் உள்ளது உனது செயல்.
எங்களால் உனக்கு ஏற்படவிருக்கும் துன்பங்களுக்கும் மரணத்திலிருந்து உன்னைக் காத்துக்கொள்வதற்கும் தயாராகு. நான் உன்னிடமிருந்தே உனக்கு எதிரானவர்களை அனுப்புவேன். தன் கைகளால் மரணத்தைத் தேடுபவன் போல் நீ இருப்பாய். அது அல்லாஹ்வுக்குக் கடினமானதன்று. எனவே உன்னை எச்சரிக்கையுடன் கவனித்துக்கொள். (சூரா) அந்-நஹ்லின் தொடக்கத்தையும் (சூரா) ஸஆதின் முடிவையும் வாசி’
அதைக் கண்டு பின்னடைபவரா ஸலாஹுத்தீன்? ஸினான் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார். ஆக்ரோஷமாகக் கவண் தாக்குதல்கள் தொடர்ந்தன. எளிதாக எதிர்த்து நின்றது மஸ்ஃயப். சிக்கலான தேக்க நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது அந்த முற்றுகை. பிறகு திடீரென என்ன நிகழ்ந்தது என்பது மட்டும் புதிரானது.
ஸலாஹுத்தீனிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லியும் இல்லையெனில் அவர்களுடைய குடும்பத்தில் பலரும் அஸாஸியர்களின் வாளுக்கு இலக்காக நேரிடும் என்று அச்சுறுத்தியும் அவருடைய தாய் மாமன் ஷிஹாபுத்தீனை ஸினான் மிரட்டியதாக ஒரு தகவல் உண்டு. அதையடுத்து பேச்சுவார்த்தையும் நடந்தது, என்ன உடன்படிக்கை ஏற்பட்டது என்பது வெளிவரவில்லை – ஒரு வாரத்தில் ஸலாஹுத்தீன் தமது முற்றுகையை முடித்துக்கொண்டார். அந்த உடன்படிக்கை இன்றளவும் ஒரு ரகசியமாகவே நீடிக்கிறது. வரலாற்று ஆசிரியர்களின் யூகங்கள் மட்டுமே நூல்களில் பதிவாகியுள்ளன. ஆனால், அந்த முற்றுகைக்குப் பின் இரு தரப்புக்கும் இடையே அமைதி நீடித்தது; இறுதி வரை அவர்கள் ஸலாஹுத்தீனின் பாதையில் மீண்டும் குறுக்கிடவே இல்லை என்பதை மட்டும் அனைத்து ஆசிரியர்களும் ஏக மனதாக ஒப்புக்கொள்கின்றனர்.
oOo
டமாஸ்கஸுக்குத் திரும்பினார் ஸலாஹுத்தீன். அங்கு முக்கியமான நகர்வொன்றை நிகழ்த்தினார். நூருத்தீனின் விதவை இஸ்மத் என்பவரை மறுமணம் புரிந்துகொண்டார் ஸலாஹுத்தீன். தம் சகோதரி ராபியாவை இஸ்மத்தின் சகோதரருக்கு மணமடித்துத் தந்தார். விளைவாக ஸெங்கி, அய்யூபி வம்சாவெளி இடையே நெருங்கிய திருமண பந்தம் உருவானது. (இந்த இஸ்மத் இளம் மன்னர் அஸ்-ஸாலிஹின் தாயாரல்லர்).
அச்சமயம் இஸ்மத்தின் வயது நாற்பதுகளில். அரசியல் காரணங்களுக்காக அத் திருமண உறவு உருவாகியிருந்த போதிலும் பின்னர் இருவரும் கருத்தொருமித்த தம்பதிகளாக இறுதி வரை வாழ்ந்தனர். மற்ற மனைவிகளின் மூலம் ஸலாஹுத்தீனுக்கு ஏழு வாரிசுகள் இருந்தனரே தவிர இஸ்மத் மூலம் குழந்தை பிறக்கவில்லை.

அதன் பின் அக்டோபர் மாதம் கெய்ரோவுக்குப் பயணமானார் ஸலாஹுத்தீன். அங்கு அவரைத் தொடரும் முன், வேறு சில நிகழ்வுகளை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அதில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒன்று மைரீயோஹ்கெஃப்ஹலோன் போர் (Battle of Myriokephalon). செல்ஜுக் துருக்கியரிடமிருந்து அனடோலியாவின் உள்நாட்டுப் பகுதிகளை மீட்கும் பைஸாந்தியர்களின் முயற்சிகளை முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வந்த இரண்டாம் கிலிஜ் அர்ஸலானின் சாகசம் அது. அடுத்த அத்தியாயத்தில் விரிவாக அதைப் பார்ப்போம்.
அதற்கு முன் நாம் அறிய வேண்டிய முக்கிய தகவல் ஒன்று உள்ளது. தல் சுல்தான் போரை அடுத்து ஸலாஹுத்தீனின் அழுத்தம் தாங்காமல் அலெப்போவின் குமுஷ்திஜின் பரங்கியர்களிடம் இணக்கமாகி அவர்களது ஆதரவைப் பெற மாபெரும் பிழை ஒன்றைச் செய்தார். அது, நூருத்தீனால் கைது செய்யப்பட்டுப் பதினைந்து ஆண்டுகள் காவலில் இருந்த ஷட்டியோனின் ரேனால்ட், மூன்றாம் ஜோஸ்லின் ஆகிய இருவருக்கும் அவர் அளித்த விடுதலை.
இஸ்லாத்திற்கும் சுல்தான் ஸலாஹுத்தீனுக்கும் இறுதி வரை கொடிய வில்லனாகத் திகழப் போகிற ஷட்டியோனின் ரேனால்ட், சோம்பல் முறித்து வெளியே வந்தான். சுதந்திரக் காற்றை சுவாசித்தான். சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபியின் வரலாற்றினுள் பிரவேசித்தான்.
(தொடரும்)