99. டமாஸ்கஸ் தீர்வு
சிரியாவில் வடக்கே ஹும்ஸு, ஹமா, ஹரிம், ஹலப் (அலெப்போ) பகுதிகளில் பரங்கியர்களின் படையெடுப்புகளும் இளம் மன்னர் ஸாலிஹின் எதிர் நடவடிக்கைகளும் மும்முரமாக இருந்த நேரத்தில், ரம்லா போரிலிருந்து எகிப்துக்குத் திரும்பியிருந்த சுல்தான் ஸலாஹுத்தீன் அப்போரில் ஏற்பட்டிருந்த இழப்புகளைச் சரி செய்து, புத்துணர்ச்சியுடன் மீண்டெழுந்திருந்தார். போரில் மரணமடைந்த படை வீரர்களின் வெற்றிடத்தை நிரப்பப் புதிய வீரர்கள், தளவாடங்கள், குதிரைகள், கால்நடைகள் என இராணுவத்திற்குத் தேவையான அனைத்தும் மீண்டும் கட்டமைக்கப்பட்டன. நான்கு மாதங்களுக்குள்ளாக இழப்புகள் அனைத்தும் ஈடுசெய்யப்பட்டிருந்தன. கெய்ரோவில் அதன் கோட்டை, நகரின் சுற்றுப்புறச் சுவர் ஆகியனவற்றின் கட்டுமானப் பணிகளும் மும்முரமடைந்தன.
கட்டுமான, புனர்நிர்மாணப் பணிகள் ஒருபுறமிருக்க, வெகு முக்கியமாகத் தொலைநோக்குப் பார்வை ஒன்று ஸலாஹுத்தீனிடம் ஏற்பட்டிருந்தது. அது முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் ஏற்படுத்த வேண்டிய ஒற்றுமை. ஒற்றை வார்த்தையில் அதைச் சொல்லிவிட்டாலும் அதற்குப் பின் பொதிந்துள்ள இமாலய சிரமங்களை அறிய வேண்டியது அவசியமாகிறது. அதைத் தெரிந்துகொண்டால்தான் சுல்தான் ஸலாஹுத்தீனின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
அன்றுவரை லெவண்த்தில் பரங்கியர்களுக்கு எதிரான முஸ்லிம் ஆட்சியாளர்களின் இராணுவ நடவடிக்கை என்பது கோட்டை முற்றுகை, சண்டை, போர், மாகாண ரீதியான தாக்குதல் என்றளவில் இருந்தது. அவற்றுக்கு அந்தந்தப் பகுதி மன்னர்களின், அமீர்களின், ஆளுநர்களின் படைகளும் உதவிக்குத் தேவைப்படும் துணைப்படைகளும் போதுமானவையாக இருந்தன. தவிர அந்தப் போர்களும் பருவ காலத்திற்கு ஏற்பவே நிகழ்ந்தன. குளிர்காலமும் மழையும் துவங்கி விட்டால், களமும் நிலமும் சகதியாகி, போருக்கும் போக்குவரத்துக்கும் தகுதியற்றதாக மாறிவிடும் என்பதால் அமீர்களும் ஆளுநர்களும் போரை நிறுத்திவிட்டு ஊர்களுக்குத் திரும்பிவிடுவர். ஆக்கிரமிப்பாளர்களான பரங்கியர்களை அச்சுறுத்தும் அளவிற்கு, பருவத்தைக் கடந்து முஸ்லிம் படைகள் களத்தில் இருந்ததில்லை. பருவகாலம் மாறும் வரை முஸ்லிம்களின் தாக்குதலைச் சமாளித்து விட்டாலே போதும்; அதுவே நமக்கு வெற்றிதான் என்பதைப் பரங்கியர்களும் நன்கு அறிந்து வைத்திருந்தனர். சுல்தான் ஸலாஹுத்தீனுக்கும் இது தெரிந்திருந்ததால், ஜெருசலம் முற்றுகையும் அதை மீட்பதற்கான போரும் என்பது உச்சக்கட்ட முயற்சி; அதற்கான திட்டமும் வியூகமும் வேறு பரிமாணத்தில் அமைய வேண்டும் என்பதை அனுபவம் அவருக்குக் கற்றுத் தந்திருந்தது. படை பலமும் பொருளாதார வலிமையும் அடிப்படைத் தேவைகள் என்ற தெளிவு அவருக்கு இருந்தது.
ஜெருசல ராஜாங்கத்திற்கு ஆபத்து என்றால் சந்தேகமேயின்றி அனைத்து மாகாணங்களிலிருந்தும் பரங்கியர்களின் படைகள் பெரும் எண்ணிக்கையில் ஓடி வந்து ஒன்று திரளும். ஐரோப்பாவிலிருந்தும் சிலுவைப்படை வரும். அவர்களை எதிர்த்துப் போரிட வெறுமே எகிப்து-டமாஸ்கஸ் கூட்டணிப் படை போதுமானதன்று. அலெப்போ கூட்டணிக்குள் வர வேண்டும்; இதர அமீர்களும் மெஸபடோமியாவின் படைகளும் வந்து இணைய வேண்டும் என்பதை ஸலாஹுத்தீன் உணர்ந்தார். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய அரசியல் சூழலில் அது அத்தனை எளிதா என்ன? சிதறுண்டு தனி ஆவர்த்தனமாக ஆட்சி செலுத்தும் முஸ்லிம் மன்னர்கள்; அவர்களிடையே நிலவும் அதிகாரப் போட்டி எனப் பல சிக்கல்கள் இருந்தன.
அந்தத் தலைவர்களை ஸலாஹுத்தீன் தம் தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும்; ஜெருசலத்தையே அவர்களது இலட்சியப் புள்ளியாக மாற்ற வேண்டும் என்றால் தத்தம் அதிகாரத்திலும் செல்வத்திலும் சுகபோகத்திலும் சுகித்துத் திளைத்திருந்த மன்னர்களும் அமீர்களும் எளிதில் இணங்கி விடுவார்களோ? ஸலாஹுத்தீன் அழைத்தார் என்பதற்காக உடனே அனைத்தையும் உதறிவிட்டு ஜிஹாதுக்கு வந்து நிற்பார்களோ? அதற்கான பக்குவத்துடன் அவர்கள் இல்லை என்பதை ஸலாஹுத்தீன் நன்றாகவே அறிந்திருந்தார். ஆடும் மாட்டையும் பாடும் மாட்டையும் அதற்கேற்ப ஆடிப் பாடித்தானே அதன் மடியில் கை வைக்க வேண்டும்? அதைப்போல், பிரிந்து கிடந்த அவர்களையெல்லாம் அவரவர் போக்கிற்கு ஏற்ப சாம, தான, பேத, தண்டம் அனைத்தையும் பிரயோகித்து வளைக்கும்படி இருந்தது அவருக்கு. அவரது அரசியல் நகர்வுகளும் இராணுவ நடவடிக்கைகளும் அடுத்தடுத்து அதையொட்டியே அமைந்தன. அவற்றுக்கான மதியூகமும் தலைமைத் தகுதியும் பண்பும் நிறைந்திருந்ததால் மிளிர்ந்தார், வென்றார், வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார் சுல்தான் ஸலாஹுத்தீன்.
ஷவ்வால், ஹி. 573 / ஏப்ரல் கி.பி. 1178. ஸலாஹுத்தீன் எகிப்திலிருந்து தம் படையினருடன் கிளம்பி சிரியா வந்து சேர்ந்தார். பரங்கியர்கள் சிரியாவின் மீது தொடுத்திருந்த போர்கள் மட்டுமின்றி, டமாஸ்கஸின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த சகோதரர் ஷம்சுத் தவ்லா தூரான்ஷாவின் நடவடிக்கைகளும் அவர் சிரியா திரும்புவதற்கான முதன்மைக் காரணங்களாக அமைந்துவிட்டன. மட்டுமின்றி, சிலுவைப் படையினர் ஆக்கிரமித்து ஆட்சி செலுத்தும் பகுதிகளையும் ஜெருசலத்தையும் மீட்டெடுப்பது அவரது அடிப்படை இலட்சியமாக ஆகிவிட்டதால் புவியியல் ரீதியாக டமாஸ்கஸ் நகரமே அதற்குப் பொருத்தமான தளமாக இருந்தது. அதற்கான காரணத்தை அவர் கலீஃபாவுக்கு எழுதியிருந்ததையும் முன்னர் பார்த்தோம். ஆகவே டமாஸ்கஸ் வந்து சேர்ந்த ஸலாஹுத்தீன் அதையே தமது நிரந்தரத் தலைமையகமாக ஆக்கிக்கொண்டார்.
அடுத்த இரண்டாண்டுகளில் பரபரவென்று பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. அவை ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கப் போவதால் அவற்றை முன்னும் பின்னும், பின்னும் முன்னுமாகப் பிரித்து, முடிந்தவரை எளிமையாக்கிப் பார்த்து விடுவோம்.
oOo
ஸலாஹுத்தீன் சிரியாவுக்கு வருவதை அறிந்து அஞ்சிய பரங்கியர்களின் படை, அலெப்போ இளம் மன்னர் ஸாலிஹின் மிரட்டலுக்கு அடிபணிந்து சமாதானம் ஏற்படுத்திக்கொண்டு, நான்கு மாத ஹரிம் முற்றுகையை முடித்துக்கொண்டது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமில்லையா? அதற்குப் பின் அல்ஸாஸின் ஃபிலிப் ஐரோப்பா திரும்பிவிட்டார். வந்ததற்குத் தாம் சாதித்தது எதுவுமில்லை என்றான பின், ஜெருசலத்திற்குப் புனிதப் பயணமாகச் சென்று பிரார்த்தித்துவிட்டு, கப்பலேறி விட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாம் சிலுவைப்போருக்காக மீண்டும் அவர் ஃபலஸ்தீனுக்குத் திரும்பி வந்து, ஏக்கர் நகர் முற்றுகையின் போது மரணமடைந்தது பின் கதை. அதை அச்சமயம் பார்ப்போம்.
ரம்லா போரில் ராஜா பால்ட்வின் அடைந்த வெற்றி தீர்க்கமானதாக இருந்தபோதிலும் எகிப்துப் படையினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த போதிலும் ஸலாஹுத்தீன் தமது இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பிய வேகமும் அடுத்த நான்கு மாதங்களில் அவர் படையினருடன் டமாஸ்கஸுக்கு வந்து சேர்ந்ததும் பரங்கியர்களை வியப்புற வைத்தன. தங்களது வெற்றி ஒரு விதிவிலக்கு; ஸலாஹுத்தீனை ஒருபோதும் முழுமையாகத் தோற்கடிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். அவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அடுத்து அவர்கள் கனவுடன் கட்டிய கோட்டையும் மேற்கொண்ட நடவடிக்கையும் மற்றொரு பெரிய கதை. அதை விரிவாக அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம். இப்பொழுது டமாஸ்கஸ்.
ஸலாஹுத்தீன் எகிப்துக்குத் திரும்பும்போது டமாஸ்கஸின் நிர்வாகத்தை, யெமனிலிருந்து திரும்பிவிட்ட தம் அண்ணன் ஷம்சுத் தவ்லா தூரான்ஷாவிடம் ஒப்படைத்திருந்தார். தூரான்ஷாவும் சிறப்பான போர் வீரர்தாம்; களங்களில் உறுதியுடன் நின்று போரிடுபவர்தாம்; அதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருந்ததில்லை. ஆனால் ஆட்சி நிர்வாகம்? அது அவருக்கு வசப்படவில்லை; திறமை போதவில்லை. மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதிருப்தி அதிகரித்தது. ஸலாஹுத்தீன் டமாஸ்கஸ் வந்தடைந்த நேரத்தில் அது குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. விளைவாக, தம் சகோதரரைப் பதவியில் இருந்து நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றானது ஸலாஹுத்தீனுக்கு.
‘நல்லது! எனக்கு பால்பெக் தரவும். அங்குச் சென்று விடுகிறேன்’ என்று ஒப்புக்கொண்டார் தூரான்ஷா. அந்த பதிலில் கிளம்பியது புதிய சிக்கல். ஸலாஹுத்தீன் தம் ஆட்சிக்காலம் முழுவதும் எதிர்கொள்ளப்போகும் சிக்கல்களுள் ஒரு சோற்றுப் பதம் இந்த விவகாரம். ஏன்? எப்படி?
அஸாஸியர்கள், எஞ்சியுள்ள ஃபாத்திமீ ஆதரவாளர்கள், போதாதற்கு சிரியாவிலும் இராக்கிலும் அவரது வளர்ச்சியை விரும்பாத அதிருப்தியாளர்கள் என்று ஸலாஹுத்தீனைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது ஆபத்து. அதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் நம்பகமானவர்களே தம்மைச் சுற்றியிருக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் பெரும்பாலும் தமது குடும்ப உறவுகளையே தளபதிகளாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அது சில சமயங்களில் அவருக்கு வேறுவித நிர்வாகப் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. தம் உறவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத இடைஞ்சலை அளித்தது. ஆனாலும் அந்தச் சிக்கல்களை எல்லாம் ஸலாஹுத்தீன் பெரும்பாலும் சமாளித்து வெற்றி பெற்றார் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம். இச்சமயம் இந்தப் பிரச்சினையில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல் என்னவென்றால், தூரான்ஷா தம் பதவியை விட்டுத்தர இழப்பீடாகக் கேட்ட பால்பெக்.
ஸலாஹுத்தீனிடம் டமாஸ்கஸ் நகரை இப்னுல் முகத்தம் ஒப்படைத்தார்; பகரமாக அவருக்கு பால்பெக்கையும் அதன் தலைமையையும் ஸலாஹுத்தீன் அளித்தார் என்பதை முன்னர் பார்த்தோம். டமாஸ்கஸை விட்டுத்தர வேண்டுமென்றால் தமக்கு அந்த பால்பெக் நகரம்தான் வேண்டும் என்று தூரான்ஷா கேட்க, அதைத் திருப்பித் தர மறுத்தார் இப்னுல் முகத்தம். இன்றைய லெபனானின் பிகா பள்ளத்தாக்கில் பெய்ரூட் நகரிலிருந்து வடகிழக்கே, லிட்டனி ஆற்றின் கிழக்கே உள்ள பால்பெக் 11,000 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். வளமான பகுதி. அதனால் அந்நகருக்குச் சிறந்த வருமானம், ஏராள நிதியாதாரம். அந்த நகரத்தில்தான் தூரான்ஷா வளர்ந்தார். அதனால் அதன் மீது அவருக்கு மண் பாசமும், தனி ஈர்ப்பும் இருந்தன.
அண்ணனின் வேண்டுகோளையும் தட்ட முடியாமல், தாம் அன்பளிப்பாக அளித்ததை இப்னுல் முகத்தமிடமிருந்தும் பெற இயலாமல் சங்கடத்திற்கு உள்ளானார் ஸலாஹுத்தீன். அண்ணனை அவரது வயதுக்கு ஏற்ற வகையில் மரியாதையுடன் நடத்த வேண்டும்; இப்னுல் முகத்தமையும் பகைத்துக்கொள்ளக் கூடாது என்றால் என்ன செய்வது? ஸலாஹுத்தீன் இப்னுல் முகத்தமிடம் பேசிப் பார்த்தார்; புகழ்ந்து பணிய வைக்க முயன்றார்; ஆனால் அவற்றுக்கெல்லாம் மசிய மறுத்தார் அவர். தமது ராஜ தந்திர முயற்சிகளுக்குப் பலனில்லை என்றானதும் இராணுவ ரீதியாக அழுத்தம் அளிக்க பால்பெக்கை முற்றுகையிட்டார் ஸலாஹுத்தீன். கோட்டைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டார் இப்னுல் முகத்தம். 1178ஆம் ஆண்டின் குளிர்காலம் முழுவதும் நீடித்தது அந்த முற்றுகை. ஸலாஹுத்தீனின் நோக்கம் அழுத்தம் அளிப்பதாகத்தான் இருந்ததே தவிர, அனாவசியமான போரை, சண்டையைத் தவிர்க்கவே விரும்பினார். தவிர, ஆயுத மோதல் என்று ஏற்பட்டால், அது அஸாஸியர்களும் அலெப்போவினரும் பரங்கியர்களும் இடையில் புகுந்து ஆதாயமடையும் ஆபத்தும் இருந்தது.
நீண்ட முற்றுகைக்குப் பின் ஒருவழியாக 1179ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் பால்பெக்கை ஸலாஹுத்தீனிடம் ஒப்படைத்தார் இப்னுல் முகத்தம். அவருக்கு அரசவையில் இடமளிக்கப்பட்டது. அந்தாக்கியாவிலும் அலெப்போவின் தெற்கிலும் உள்ள வளமான நிலங்கள் மானியமாக அளிக்கப்பட்டன. அதன் பின் தமது வாழ்நாள் முழுவதும் ஸலாஹுத்தீனுக்கு விசுமானவராக மாறிப்போனார் அவர்.
ஷம்சுத் தவ்லா தூரான்ஷாவுக்கு பால்பெக் அளிக்கப்பட்டது. ஆனால் அங்கும் அவரது ஆட்சி திறமையற்றதாகவே இருந்ததாகத் தெரிகிறது. அதனால் அவரை அங்கிருந்து எகிப்துக்கு அனுப்பி வைத்தார் ஸலாஹுத்தீன். அங்கு 1180ஆம் ஆண்டு மரணமடைந்தார் தூரான்ஷா.
oOo
ஸலாஹுத்தீனின் முழு கவனமும் பால்பெக் மீது நிலைத்திருந்த நேரத்தில் ஜெருசல ராஜா முக்கியமான ஒரு காரியத்தில் இறங்கினார். முஸ்லிம்களுக்கும் டமாஸ்கஸ் நகருக்கும் ஆபத்தை விளைவிக்கத்தக்க நகர்வு அது. மிகவும் சாதுர்யமாக பரங்கியர்கள் திட்டம் தீட்டியிருந்தார்கள். அதுவும் அதையொட்டி நிகழ்ந்த சச்சரவுகளும் போரும்-
(தொடரும்)
-நூருத்தீன்
