சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 100

Share this:

சுல்தான் ஸலாஹுத்தீன் பால்பெக் நகருக்காக இப்னுல் முகத்தமுடன் மோதிக்கொண்டிருந்த போது, டமாஸ்கஸுக்கும் ஜெருசலம் இராஜ்ஜியத்திற்கும் இடையிலுள்ள எல்லைப் பகுதியில் ஆபத்து ஒன்று உருவாக ஆரம்பித்தது. மாண்ட்கிசார்ட் (ரம்லா) போரில் அடைந்த வெற்றியால் உவப்புற்றுக் களிப்பில் இருந்த ஜெருசல ராஜா நான்காம் பால்ட்வினிடம் ஃபலஸ்தீன் பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் டமாஸ்கஸில் தலையெடுத்திருக்கும் அய்யூபி ஆதிக்கத்தைத் தகர்க்கவும் ஒரு யோசனை முன்மொழியப்பட்டது. அது ஏற்கப்பட்டு, சிரியாவை அச்சுறுத்தும் வகையில் வடிவம் பெற்றது திட்டம். துணிச்சலுடன் காரியத்தில் இறங்கினார் நான்காம் பால்ட்வின்.

அந்த நிகழ்வுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, பன்னிரண்டாம் நூற்றாண்டில் எல்லைகள் எவ்வாறு வரையறுக்கப்பட்டிருந்தன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அக்காலத்தில் லெவண்த்தில் முஸ்லிம்களின் பகுதிகளுக்கும் பரங்கியர்கள் ஆக்கிரமித்து உருவாக்கியிருந்த மாவட்டங்களுக்கும் இடையேயான எல்லைக்கோடுகள் பெரும்பாலும் தோராயமானவையே. இரு தரப்பினரின் நிலப்பரப்புக்கும் இடையே ஆளரவமற்ற பகுதிகள் இருந்தன. அவை பெரும்பாலும் மலைகள், ஆறுகள், அடர்ந்த காடுகள், பாலைவனங்கள் போன்றவை. அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு முயற்சி ஏதேனும் நிகழ்ந்தால், சமநிலை குலைந்து, அதன் பின்வினை சண்டையில், சச்சரவில், போரில் சென்று முடியும். எல்லைக்கோடுகள் உறுதியாகிவிட்ட இன்றைய காலகட்டத்திலும் அத்தகு பிரச்சினை முடிவுறாமல் தொடரத்தானே செய்கின்றது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் பிணக்கு ஓர் உதாரணமல்லவா?

ஜெருசல ராஜாவின் வசமிருந்த பரங்கியர் மாவட்டத்திற்கும் ஸலாஹுத்தீனின் டமாஸ்கஸுக்கும் இடையே ஜோர்டான் ஆற்றில் Jacob’s ford என்றொரு பகுதி அமைந்திருந்தது. ஆற்றை நடந்து கடக்கத்தக்க ஆழமில்லாப் பகுதி அது. அதை ஆங்கிலத்தில் ford என்று சொல்கின்றனர். தமிழில் நாம் அதை ’நீர்க்கடவு’ எனலாம்.

டமாஸ்கஸுக்குத் தென்மேற்கே உள்ள ஹெர்மான் மலையில் (Mount Hermon) உள்ளது ஜோர்டான் ஆற்றின் நதிமூலம். அங்குத் துவங்கி தெற்கே டைபீரியாஸ் ஏரி (Lake Tiberias) வழியாகப் பாய்ந்து சாக்கடலில் முடிவடையும் ஜோர்டான் ஆற்றின் நீளம் சுமார் 250 கி.மீ. (டைபீரியாஸ் ஏரியின் மற்றொரு பெயர் கலீலி கடல் [Sea of Galilee] என்பது உபதகவல்). இந்த ஜோர்டான் ஆற்றில், ஜெருசலத்திலிருந்து தோராயமாக 100 மைல் வடக்கே, ’ஏக்கர்’ நகரிலிருந்து டமாஸ்கஸ் செல்லும் பிரதானச் சாலையில், டமாஸ்கஸிலிருந்து ஒருநாள் நடைப்பயண தூரத்தில் வீற்றிருந்தது யாக்கோபின் நீர்க்கடவு.

oOo

விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் அத்தியாயத்தில் ஆபிரகாமின் பேரனும் இஸ்ரவேலர்களின் மூலப்பிதாவுமான யாக்கோபு, தேவனுடன் மல்யுத்தம் செய்து, ’இஸ்ரவேல்’ என்ற பெயர் பெற்று வெளியேறினார் என்று ஒரு தகவல் உள்ளது. அந்தக் கதை நடைபெற்ற இடம்தான் இது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. அதனால் அவ்விடத்திற்கு யாக்கோபின் நீர்க்கடவு என்ற காரணப்பெயர் ஏற்பட்டுவிட்டது. முஸ்லிம்களுக்கோ அப்பகுதியின் பெயர் பைத்துல் அஹ்ஸான் (Bait al-Ahzan) – அதாவது துக்கவீடு (House of sorrow) என்பதாகும். நபி யாக்கூப் (அலை), தம் மகன் யூஸுஃப் (அலை) இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு துக்கம் அனுசரித்தப் பகுதி அது என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவே முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அப்பகுதி மதரீதியாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. அது ஒருபுறமிருக்க சிலுவைப் போருக்குப் பிறகு புவியியல் ரீதியாகவும் அது ஒரு பதற்றமான பிரதேசமாகவே இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வந்தது.

ஆற்றின் மேல்பகுதியில் சதுப்பு நிலங்களும் தெற்கே நீரோட்டங்களும் நிரம்பியிருந்ததால், பரங்கியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த ஃபலஸ்தீனுக்கும் முஸ்லிம்கள் வசமிருந்த சிரியாவுக்கும் யாக்கோபின் நீர்க்கடவே முக்கியமான நுழைவாயில். ஆற்றின் இருபுறமும் இருந்த விவசாயிகளுக்கும் தங்கள் மந்தைகளை மேய்ச்சலுக்கு மறுபுறத்திற்கு அழைத்துச் செல்ல அந்த நீர்க்கடவுதான் பாதை. அதனால் முஸ்லிம்களும் பரங்கியர்களும் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு அப்பகுதியை, உள்ளது உள்ளபடி நிர்வகித்து வந்தனர். அதை இராணுவ ரீதியாக பலப்படுத்த மாட்டோம் என்று பரங்கியர்கள் மேலதிக உறுதியும் அளித்திருந்தனர். இவையன்றி அப்பகுதியில் வழிப்பறிக் கொள்ளையர்களின் ஆபத்தும் மிகுந்திருந்தது. மின்னல் வேகத்தில் வந்து, பயணிகள் மீது தாக்குதல் தொடுத்து, கொள்ளையடித்து, மலைகளில் உள்ள மறைவிடத்திற்குள் புகுந்துவிடும் அக்கொள்ளைக் கூட்டம்.

”கொடியவன்; அகங்காரமும் ஆணவமும் கொண்டவன்” என்று விவரிக்கப்பட்டுள்ள டெம்பளர்களின் தளபதி கிராண்ட்மாஸ்டர் ’ஓடோ-டி’ செயிண்ட் அமாண்ட் மூன்று அத்தியாயங்களுக்கு முன் நமக்கு அறிமுகமானான் அல்லவா, அவன் ராஜா பால்ட்வினைச் சந்தித்துப் பேசினான். கொள்ளையர்களின் அட்டகாசத்தையும் டமாஸ்கஸுக்கு வந்துவிட்ட ஸலாஹுத்தீனால் உருவாகக் கூடிய ஆபத்தையும் விவரித்து எச்சரிக்கை தூபம் போட்டான்.

“அவ்வழியாக ஜெருசலம் செல்லும் புனிதப் பயணிகளுக்குக் கொள்ளையர்களால் ஏகப்பட்ட பிரச்சினை ஏற்படுகிறது. அது போதாதென்று, நம்மிடம் தோற்று, எகிப்துக்கு ஓடிய ஸலாஹுத்தீன் இப்பொழுது டமாஸ்கஸுக்கு வந்துவிட்டார். அங்கிருந்து யாக்கோபின் நீர்க்கடவு ஒருநாள் பயண தூரம் மட்டுமே. அவர் நமக்குப் பேராபத்து. ஆகவே, அப்பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டுவோம்; நிரந்தரமாக இராணுவப் படையையும் நிறுத்துவோம். அது, புனிதப் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளித்ததாகவும் ஸலாஹுத்தீனின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கத் தற்காப்பு ஏற்பாட்டை நிறுவியதாகவும் ஆகிவிடும். மட்டுமின்றி, ஸலாஹுத்தீன் ஜெருசலத்தை நோக்கி முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தும் அரணாகி விடும் நாம் கட்டவிருக்கும் கோட்டை” என்றெல்லாம் கூறி, விடாமல் அழுத்தம் கொடுத்தான் ஓடோ.

அவற்றையெல்லாம் கேட்டுக் கற்பனையில் கோட்டை கட்டிப்பார்த்தார் ராஜா பால்ட்வின். ஜோர்டான் ஆற்றின் மேற்புறமுள்ள பகுதியில் ஜெருசலத்தின் மேலாதிக்கத்தை நிறுவுவது உசிதமாகவே தோன்றியது. முந்தைய வெற்றி அளித்த உத்வேகமும் ஸலாஹுத்தீன் பால்பெக் பிரச்சினையினால் கவனம் சிதறிக் கிடக்கும் செய்தியும் அவருக்கு மேலதிக ஊக்கம் அளித்தன. ஆனால் சிக்கல்களும் இருந்தன. யாக்கோப் நீர்க்கடவின் அருகே கோட்டையைக் கட்டப் பொருத்தமான இடமாக அவர்கள் திட்டமிட்ட மலை, ஆற்றிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த முஸ்லிம்களின் நிலப்பகுதி. அதைக் கைப்பற்ற வேண்டும்; அதுவரை நடைமுறையில் இருந்த ஒப்பந்தத்தை மீற வேண்டும்.

‘அதனால் என்ன?’ என்று முரட்டுத் துணிச்சலுடன் காரியத்தில் இறங்கிவிட்டார் ஜெருசல ராஜா நான்காம் பால்ட்வின். கலீலி கடலுக்கு வடக்கே இருந்த நிலப்பரப்பை ஆட்கொண்டிருந்த டெம்ப்ளர்கள் ராஜாவுடன் உதவிக்குச் சேர்ந்துகொண்டனர். மேற்பார்வையிட, விரைந்து கட்டளைகள் இட, முஸ்லிம்கள் தாக்கினால் பாதுகாப்பு வழங்க, கட்டுமானப் பணியிடத்தைத் தமது தற்காலிகத் தலைமையகமாக ஆக்கிக்கொண்டு ஜெருசலத்திலிருந்து கிளம்பி அங்கு வந்து அமர்ந்துவிட்டார் பால்ட்வின். பொறியாளர்கள் வந்து சேர்ந்தனர். ஏராளமான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கும் படையினருக்கும் தேவையான உணவையும் தானியங்களையும் கருவிகளையும் உபகரணங்களையும் கொள்ளையர்களிடம் பறிபோகாமல் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்தனர் வில் வீரர்கள். ரோந்துப் படைகள், சாலைகளிலும் மலைச்சரிவுகளிலும் காவல் புரிந்தன. அனைவருக்கும் ஊதியமாக வழங்கும் நாணயங்களை உருவாக்குவதற்காக பிரத்யேக நாணயத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. செலவு அனைத்தையும் மன்னரும் டெம்ப்ளர்களும் ஏற்றுக் கொண்டனர்.

கோட்டையைக் கட்டுவதற்கு அக்டோபர் 1178இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்து விறுவிறுவென்று காரியங்கள் நடைபெற்றன. ஸலாஹுத்தீன் படை திரட்டி வருவதற்குள் உள்சுவர், வெளிச்சுவர், வாயில்கள், அகழி அனைத்தையும் கட்டிவிட வேண்டும் என்ற அவசரம் இருந்தது அவர்களுக்கு. முதல் காரியமாக, தாக்குதலிலிருந்து பாதுகாக்கக்கூடிய வகையில் கட்டுமானத்தை உள்சுவரில் தொடங்கி, வெளிப்புறம் முடிக்க வேண்டும் என்று விரிவாகத் திட்டமிடப்பட்டது. குளிர்காலம் முழுவதும், நடுங்க வைக்கும் பனியைக்கூடப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தது பணி. கூழாங்கற்களின் அடித்தளம் அமைத்து அதன் மீது, செதுக்கப்பட்ட 20,000 கற்களை அடுக்கிச் சுவர்கள் எழுப்பினர். அந்தக் கற்கள் பட்டறையிலிருந்து கோவேறு கழுதைகள் மூலம் கொண்டுவரப்பட்டன. 4 மீட்டர் தடிமன் கொண்ட உள்சுவர்கள், 150 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு செவ்வகத்தை உருவாக்கின. அதன் சுற்றளவு சற்றொப்ப அரை கிலோமீட்டர். ஐந்து வாயில்களும் சூளையும் நீர்த்தேக்கமும் நிறுவப்பட்டன. 10 மீட்டர் உயரமுள்ள சுவர்களுடன் உயர்ந்தது கோட்டை கோபுரம்.

ஏப்ரல் 1179. ஜெருசலப் பரங்கியர்களுக்குத் தற்காப்பு அரணாகவும் ஸலாஹுத்தீனின் அய்யூபிப் பேரரசுக்கு அச்சுறுத்தலாகவும் ஆறே மாதத்தில் மளமளவென்று உருவாகி நின்றது கோட்டை. அதை டெம்ப்ளர்களிடம் ஒப்படைத்தார் ராஜா பால்ட்வின். ஆனால் மேலும் பல பணிகள் மிச்சமிருந்தன. அவற்றைச் செய்துமுடிக்கவும் பாதுகாவலுக்காகவும் ஆயிரத்து ஐந்நூறு படைவீரர்கள், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கொத்தனார்கள், கட்டிடக் கலைஞர்கள், கொல்லர்கள், ஆயுதம் தயாரிப்பவர்கள், முஸ்லிம் கைதிகள் என்று அவ்விடத்தில் ஒரு கிராமமே உருவாகிவிட்டது.

எல்லைப் புறத்தில், ஒப்பந்த அடிப்படையில் நட்புக்குரியதாகத் திகழ்ந்த பகுதியில், ஜெருசல ராஜா பால்ட்வின் கோட்டையைக் கட்டி அப்பகுதியை இராணுவமயமாக்கியதும் அங்குக் குடியிருந்த கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இருதரப்பினருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மிகுந்த கோபம் ஏற்பட்டு, ‘வந்து உதவுங்கள் சுல்தானே’ என்று ஸலாஹுத்தீனிடம் முறையிட்டார்கள் அவர்கள்.

யாக்கோபின் நீர்க்கடவுப் பகுதியில் உருவாகியுள்ள கோட்டையும் அதில் வந்து அமர்ந்துவிட்ட டெம்ப்ளர்களும் முஸ்லிம்களுக்கு எப்பேற்பட்ட ஆபத்து என்பதை ஸலாஹுத்தீனும் அறிந்திருந்தார். அவர்களுடைய படைகள் முஸ்லிம் பிரதேசங்களில் திடீர் தாக்குதல் தொடுப்பதும் வர்த்தகக் குழுக்களைத் தம்மிஷ்டத்திற்குச் சூறையாடுவதும் நடக்கும். டமாஸ்கஸ் நகருக்கு எந்நேரமும் ஓர் அச்சுறுத்தல் தொடர்ந்தபடியே இருக்கும். அவை ஒருபுறம் இருக்க ஸலாஹுத்தீன் ஜெருசல இராஜ்ஜியத்தின் மீது தாக்குதல் தொடுக்க அது நிச்சயமான முட்டுக்கட்டை. இவ்வாறான ஆபத்துகளைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு அலெப்போ, மெஸபட்டோமியா மீதான அதிகார விரிவாக்க இலட்சியங்களை அவர் எப்படி நிறைவேற்ற முடியும்? உடனே நடவடிக்கை எடுக்கலாம் என்றாலோ வாய்ப்புக்கேடாக பால்பெக் முற்றுகையும் இப்னுல் முகத்தம் பிரச்சினையும் அவரைத் தடுத்தன. படைகள் அங்கு முற்றுகையில் இருக்கும்போது இங்கு என்ன செய்வது?

உடனே எதிர் நடவடிக்கையில் இறங்க முடியாமல் போன போதும், யாக்கோபின் நீர்க்கடவை அவர்களிடமிருந்து மீட்பேன் என்று உறுதிமொழி மட்டும் அளித்தார் சுல்தான் ஸலாஹுத்தீன். கோட்டையின் கட்டுமானம் நிறைவடையும் தருவாயில், அந்தச் செய்தி அவருக்கு வந்து சேர்ந்தது. அதற்கு அவரிடமிருந்து வெளிப்பட்ட நிதானமான, ஆனால் தீர்க்கமான பதில், ‘அவர்கள் அதைக் கட்டி முடிக்கட்டும். நாம் அங்கு சென்று அதை அழித்து முடிப்போம்’.

சம்பிரதாய சமாதானம் போலன்றி அந்தச் சூளுரை நிறைவேறியது. வலிமையுடன் உருப்பெற்று நின்ற கோட்டையின் ஆயுட்காலம் பதினொரு மாதங்களில் முடித்து வைக்கப்பட்டது. அதற்கேற்ப 1179ஆம் ஆண்டின் வசந்தகாலம் சிறு மோதல்களுடன் போர்ப் பருவமாகத் தொடங்கியது. பரங்கியர் தரப்பில் முக்கிய தலைவர் ஒருவர் ஸலாஹுத்தீனின் படைக்கு இரையானர். அதிர்ஷ்டவசமாக ஜெருசல ராஜா நான்காம் பால்ட்வின் மட்டும் உயிர் தப்பினார்.

(தொடரும்)


Share this: