85. அலெப்போவின் முதலாம் முற்றுகை
சுல்தான் ஸலாஹுத்தீன் தம் படையினருடன் அலெப்போ நகரை வந்தடைந்தார். அது 3 ஜமாதுல் ஆகிர் 570 / 30 டிசம்பர் 1174. திடும் திடுமெனக் காலாட்படையும் சீரான குளம்பொலிகளுடன் குதிரைப்படையும் அணிவகுத்து வந்து நின்றிருந்தன. கொடிகளும் பதாகைகளும் காற்றில் படபடவெனப் பறந்தன. பெருந்திரளாக நின்றிருந்தது படை. ஆனால், அலெப்போவின் வாயில்கள் மூடப்பட்டிருந்தன. இழுத்து இறுகப் பூட்டியிருந்தார் குமுஷ்திஜின். ஸலாஹுத்தீன் கட்டளையிட, பாடி இறங்கியது படை. முற்றுகையிடப்பட்டது அலெப்போ. அது முதலாவது முற்றுகை!
‘இது முதலாவது முற்றுகை எனில் ஸலாஹுத்தீன் இதில் வெற்றி அடையவில்லையா’ என்ற கேள்வி எழுகிறதல்லவா? அலெப்போவை ஸலாஹுத்தீன் வெற்றிகொள்ள ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் ஆயின. சிரியாவின் அந்த வடக்குப் பகுதி 1183ஆம் ஆண்டுதான் அவர் வசமானது. அதுவரை மீண்டும் மீண்டும் முற்றுகை, மீண்டும் மீண்டும் இராணுவ நடவடிக்கைகள், சண்டை, பேச்சுவார்த்தை, உடன்படிக்கை, சமாதானம் என்று நீண்டது அவரது அரசியல் பயணம். ஓரிரு முயற்சியிலேயே அலெப்போவை வென்று தமதாக்கும் அளவிற்கு அவருக்கு வலிமை இல்லையா, படை பலம் இல்லையா, சூரத்தனம் குறைவா போன்ற ஐயங்கள் எழுமேயானால் அவை அனைத்திற்கும் ஒரேயொரு பதில் மட்டுமே இருந்தது. அது ஜிஹாது. பரங்கியர்களுடனான ஜிஹாது. அதற்கு முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்; சிரியா மக்களின், குறிப்பாக ஸெங்கி வம்சத்தவர்களின் உள்ளங்களையும் மனங்களையும் வென்றெடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாக இருந்ததேயன்றி முரட்டுத்தனமாக அவர்களைத் தோற்கடித்து, நிலங்களைப் பிடுங்கி நாடாள வேண்டும் என்பது அவர் செயல்திட்டத்தில் இல்லவே இல்லை. தவிர, தம் எசமானர் நூருத்தீனின் மகனுக்கு எதிராக நேரடியாக வாளேந்துவதையும் போரிடுவதையும் அவர் அறவே தவிர்த்தார்.
‘நாடாளும் இதரச் சக்கரவர்த்திகளைப் போல் நான் மண்ணாசை பிடித்தவனல்லன்; எனது இராஜாங்கத்தை விரிவாக்குவது எனது ஆசையன்று. புனித பூமியான ஜெருசலத்தை மீட்டே தீர வேண்டும். பரங்கியர்களை எதிர்த்து நிகழ்த்த வேண்டிய அந்தப் புனிதப் போருக்கு, ஜிஹாதிற்கு, முஸ்லிம்களையும் அதன் ஆட்சியாளர்களையும் ஒருங்கிணைப்பது அவசியம்; ஆனால் அந்த முயற்சியில் முஸ்லிம்களுக்கு இடையே போரும் சிந்தும் இரத்தமும் இயன்றளவு தடுக்கப்பட வேண்டும்’ என்று தம் இலட்சியத்தில் அவர் மிகத் தெளிவாக இருந்தார். இயல்பிலேயே அவருக்கிருந்த தயாள குணம் அந்த முயற்சிகளில் அளவற்று வெளிப்பட்டது. அது எதிர் தரப்பு வரலாற்று ஆசிரியர்களையும் வியப்பின் உச்சிக்குத் தள்ளிவிட்டது.
அக்காலத்தில் வாழ்ந்த பரங்கியர்களின் வரலாற்று ஆசிரியர் டைரின் வில்லியம் (William of Tyre). ஸலாஹுத்தீனின் வெற்றிக்கான முக்கியமான காரணமாக வில்லியம் குறிப்பிடுவது அவரது தாராள மனப்பான்மையையே. அவரது ஆளுமை அதிகரிப்பது குறித்து அஞ்சிய பரங்கியர்கள் அவரிடம் உயர்ந்தோங்கிய பண்பைக் கண்டு வியந்தது அவரது எழுத்தில் ஒளிவின்றி வெளிப்படுகிறது.
ஸலாஹுத்தீனுடைய இராணுவ வலிமையையும் அவருடைய மதியூகத்தையும் அவருடன் இருந்த ஆலோசகர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பண்பையும் வில்லியமால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. ஸலாஹுத்தீன் அவர்களுக்குச் செவிதாழ்த்துவதைக் கண்டு அவருக்கு வியப்பு! முக்கியமாக அவருடைய தாராள மனப்பான்மையை ‘அபாயகரமான குணமாக’க் கருதினார் வில்லியம். ‘ஸலாஹுத்தீனின் அதிகாரத்தை அதிகரிக்கும் எதுவும் ஜெருசல ராஜாங்கத்தின் நலனுக்கு முற்றிலும் தீங்கானதாகத் தோன்றியது. அவர் ஆலோசனை அளிப்பதில் புத்திசாலியாகவும் போரில் வீரமிக்கவராகவும் அளவற்ற தாராளப் போக்குள்ளவராகவும் இருந்தார். … ஆட்சியாளர்கள் தங்கள் பிரஜைகளின் இதயங்களை வெல்லுவதற்கு, அனைவரின் நம்பிக்கையையும் பெறுவதற்கு, தாராளமாகக் கொடை வழங்குவதை விடச் சிறந்த வழி எதுவும் இல்லை’ என்று எழுதி வைத்துள்ளார் வில்லியம்.
கிறிஸ்தவர்களின் ஆவணங்கள் மீண்டும் மீண்டும் இதைத்தான் குறிப்பிடுகின்றன. செல்வம் வந்து குவிந்த போதும், நிலங்கள் வசமான போதும் ஸலாஹுத்தீன் அவற்றையெல்லாம் வினியோகித்து விட்டாரே தவிர, தமக்கென அவர் அச்செல்வத்தைச் சேர்த்துக்கொள்ளவில்லை. பேராசைக்காரர் என்று எவரும் தம்மைத் தூற்ற அவர் வாய்ப்பே அளிக்கவில்லை. வெற்று ஆடம்பரங்களும் படோடபமும் அவருக்குச் சற்றும் தொடர்பில்லாதவை.
வலுவான அரண்களுடனும் எளிதில் தகர்க்க முடியாத பாதுகாவல்களுடனும் உயர்ந்தோங்கி நின்றிருந்த அலெப்போவை சுலபமாக வீழ்த்திவிட முடியாது, அளவற்ற பொறுமை தேவை என்பதை அறிந்திருந்த ஸலாஹுத்தீன், நீண்ட கால முற்றுகைக்கான ஏற்பாடுகளுடன் தயாராகவே இருந்தார். அதைப் போலவே ஸலாஹுத்தீனை எதிர்த்துச் சமாளித்து, அலெப்போவைக் காப்பாற்றுவது எளிதன்று என்பதை குமுஷ்திஜினும் உணர்ந்தார்; நான்கு திட்டங்கள் தீட்டினார். அவை அவருக்கு ஓரளவு பயனும் அளித்தன.
முதலாவது இளம் மன்னர் ஸாலிஹை வைத்து ஓர் உணர்ச்சிப் பிரவாக உரை. இரண்டாவது ஸலாஹுத்தீனைக் கொல்வது. அடுத்த இரண்டு பரங்கியர்களிடமும் மோஸூலில் இருந்த ஸைஃபுத்தீனிடம் இராணுவ உதவி கோருவது.
oOo
நூருத்தீனின் மைந்தர் இளம் மன்னர் அஸ்-ஸாலிஹைத் தம் கைப்பாவையாக ஆக்கியிருந்தார் குமுஷ்திஜின். அதனால், குமுஷ்திஜினே ஸெங்கி வமிசத்தின் பாதுகாவலர், ஸலாஹுத்தீன் சிரியாவை அயோக்கியத்தனமாகப் பறிக்க வந்த எதிரி என்றே தவறாக எண்ணி மதி மயங்கிக் கிடந்தார் அஸ்-ஸாலிஹ். குமுஷ்திஜினின் அரசியல் சதுரங்கத்தில் தாம் ஒரு பகடைக்காயாக நகர்த்தப்படுவதை உணர முடியாத அளவிற்கு அவருக்குப் பக்குவக் குறை. ஸலாஹுத்தீனின் முற்றுகையை எதிர்த்து, அலெப்போ மக்களின் ஒருமித்த ஆதரவைத் திரட்ட குமுஷ்திஜின் அவர்களையெல்லாம் ஒரு சதுக்கத்தில் திரட்டினார். பிதுங்கி வழிந்தது கூட்டம். அங்கு குதிரையில் அழைத்து வரப்பட்டார் அஸ்-ஸாலிஹ். அவர் மக்களிடம் ஸலாஹுத்தீனைத் தூற்றி உரையாற்றினார்.
‘அலெப்போ மக்களே! உங்களில் மூத்தவர் என் தந்தையைப் போன்றவர். இளைஞர் என் சகோதரர். சிறியவர் என் மகன். அநீதியான நன்றிகெட்ட இந்த மனிதரைப் பார்த்தீர்களா! அவருக்கு இறைவனைப் பற்றிய அச்சமில்லை. வேறு எவரைப் பற்றியும் கவலையில்லை. அவர் எனது நாட்டை என்னிடமிருந்து பிடுங்க விரும்புகிறார். நானோ ஓர் அனாதை; உங்களின் கூட்டாளி; விருந்தினன்; அகதி. உங்களை மிகவும் நேசித்தவர் என் தந்தை. அவர் பொருட்டு நீங்கள் என்னைப் பாதுகாப்பீர்கள் என்று நம்பியிருக்கின்றேன்’
அவருக்கு அழுகை முட்டியது. விம்மலோசை எழுந்தது. கண்ணீர் வடிந்தது. அந்தக் காட்சி மக்களின் மனத்தை உலுக்கி அசைத்துவிட்டது. வருவது வரட்டும்; ஒரு கை பார்த்துவிடுவோம் என்று அவர்களிடம் பொங்கி எழுந்தது உணர்ச்சிப் பிரவாகம். ஆண்கள் தங்களின் தலைப்பாகைகளக் கழற்றி உயர்த்தி ஆட்டினர்; அழுது கதறினர். பெருங்குரலில் எதிரொலித்தது அவர்களது வாக்குறுதி.
‘நாங்கள் உங்களுடைய ஆதரவாளர்கள்; உங்கள் தந்தையின் அடிமைகள். உங்களுக்காக நாங்கள் போரிடுவோம்; தியாகம் புரிவோம்; எங்களது செல்வத்தையும் உயிரையும் அர்ப்பணிப்போம்’
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் குடிமக்களின் ஒரு பகுதியான ஷிஆக்கள் தங்களுக்கான சலுகைகளை நிபந்தனையாக விதித்தனர். ‘எங்களுக்கு ஜாமிஆ மஸ்ஜிதின் கிழக்குப் பகுதி ஒதுக்கப்பட வேண்டும்; எங்கள் சம்பிரதாயப்படி எங்களின் விவகாரங்கள் அமலாக்கப்பட வேண்டும்; பாங்கிலிருந்து நீக்கப்பட்ட எங்கள் வாசகங்கள் சேர்க்கப்பட வேண்டும்; பிரேதத் தொழுகையில் எங்கள் பன்னிரெண்டு இமாம்களின் பெயர்களும் குறிப்பிடப்பட வேண்டும்; தக்பீர் ஐந்து முறை உரைக்கப்படும்’
எவற்றையெல்லாம் நூருத்தீன் சிரியாவில் ஒழித்துக்கட்டியிருந்தாரோ அவற்றையெல்லாம், நூருத்தீன் வமிசத்தைப் பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் இப்பொழுது ஏற்று அனுமதித்தார் குமுஷ்திஜின். எப்பேற்பட்ட நகைமுரண். அதையெல்லாம் சிந்திக்க இளம் மன்னருக்கும் தெரியவில்லை; இதர மக்களுக்கும் அவகாசமில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ஸலாஹுத்தீனை எதிர்த்து நின்றது அலெப்போ.
இங்கு இது இவ்விதம் நிகழ்ந்திருக்க மற்றொரு புறம் குமுஷ்திஜினிடமிருந்து அஸாஸியர்களுக்குத் தூது சென்றிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஸலாஹுத்தீனுக்கு எதிராக எகிப்தில் ஃபாத்திமீக்கள் சதிவலை பின்னிய போதே அஸாஸியர்களுக்கு ஸலாஹுத்தீனைக் கொல்லும் பணி அளிக்கப்பட்டிருந்ததும் இறைவனின் உதவியால் அது தோல்வியில் முடிவடைந்ததும் நினைவிருக்கலாம்.
அதுதான் தோல்வியில் முடிந்தது என்றால், அவர் எகிப்திலிருந்து கிளம்பி வந்து இங்கு சிரியாவில் தம் போக்கிற்குத் தம் ஆதிக்கத்தை விரிவாக்குகிறாரே என்று பெரும் கடுப்புடன் கவனித்துக்கொண்டிருந்தார்கள் அஸாஸியர்கள். அந்த வெறுப்புக்குத் தீனியாக இப்பொழுது குமுஷ்திஜினிடமிருந்து மீண்டும் அதே பணி அவர்களுக்கு வந்து சேர்ந்தது. ஸலாஹுத்தீன் மீது தங்களுக்குள்ள பகையைத் தீர்த்துக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு, அதற்கு நிறைய பணம் சன்மானம், சில கிராமங்கள் வெகுமானம் என்றானதும் அகமகிழ்ந்து போனார் அவர்களின் தலைவரான ஷேக் அல்-ஜபல் ரஷீதுத்தீன் ஸினான். சென்ற முறை போல் ஆகிவிடக் கூடாது என்று மேலும் தெளிவாகத் திட்டமிடப்பட்டது. குறுவாள் கூர் தீட்டப்பட்டது. தலைசிறந்த 13 கொலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜனவரி 1175. ஓர் இரவு நேரம். அலெப்போவை முற்றுகையிட்டிருந்த படையினரைக் குளிரும் மழையும் முற்றுகையிட்டிருந்தன. கூடாரத்தில் மூட்டியிருந்த நெருப்பு, படையினருக்கு வெகு இலேசான கதகதப்பை மட்டுமே அளித்தபடி இருந்தது. பதின்மூன்று பேரும் உடைவாளுடன் முகாமிற்குள் ஊடுருவினர்; முன்னேறினர்; ஸலாஹுத்தீனின் கூடாரத்தையும் அண்மிவிட்டனர். அந்த நேரத்தில் குமார்தெஜின் (Khumartegin) என்பவர் அவர்களை அடையாளம் கண்டுவிட்டார். அஸாஸியர்களின் வாழ்ந்த பகுதிகளுக்கு அண்மையில் உள்ள அபூகுபைஸ் கோட்டையின் அமீர் அவர். அதனால் அவர்களின் முகங்கள் அவருக்கு மிகவும் பரிச்சயமாகி இருந்தன. ஸலாஹுத்தீனின் கூடாரத்திற்குள் அவர்களைக் கண்டவுடன் ஆபத்தையும் விபரீதத்தையும் நொடியில் புரிந்துகொண்ட அவர் உடனே தம் வாளுடன் அவர்கள் மீது பாய்ந்தார். சுல்தானை வெட்ட ஓடிய ஒரு அஸாஸியனைத் தடுத்து வெட்டிக் கொன்றார். ஆயுதங்கள் மோதும் ஒலியும் இரைச்சலும் கேட்டு ஸலாஹுத்தீனின் ஸலாஹிய்யா பாதுகாவலர்கள் திடுதிடுவென்று ஓடி வந்தனர். கடுமையான சண்டை நிகழ்ந்தது. இறுதியில் அத்தனை அஸாஸியர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் அச்சண்டையில் குமார்தெஜினும் பாதுகாவலர்கள் சிலரும் மாண்டனர்.
ஸலாஹுத்தீன் தம் சகோதரர் மகன் ஃபாரூக் ஷாவுக்கு இந்நிகழ்வை விவரித்து, ‘குறுவாள்கள் பரிமாறப்பட்டு விட்டன. அஸாஸியர்களுக்குப் பணம் செலுத்தப்பட்டு விட்டன’, என்று அவரையும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்திக் கடிதம் எழுதினார். இந்நிகழ்விற்குப் பின் சுல்தானின் கூடாரம் பலத்த பாதுகாவலுடன் படையினரின் கூடாரத்திலிருந்து தனியாக அமைக்கப்பட்டது. அச்சமயம் அந்த சதித்திட்டம் தோல்வியடைந்தாலும் அஸாஸியர்கள் ஓய்ந்து விடவில்லை. அடுத்த ஆண்டு மீண்டும் வந்து தாக்கினர். அது மேலும் ஆபத்தான ஒன்றாக அமைந்திருந்தது. அதைப் பிறகு பார்ப்போம். இந்த நிகழ்வில் காயமின்றிப் பிழைத்த ஸலாஹுத்தீன் குமார்தெஜினுக்குத் தம்முடைய நன்றிக்கடனை மறக்கவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, புதிதாகத் தாம் கைப்பற்றிய கோட்டை ஒன்றை அவருடைய மகனுக்கு வெகுமதியாக வழங்கி நன்றி செலுத்தினார்.
oOo
ராஜ தந்திரம் என்ற நினைப்பில் சுயநலத்திற்காக ஆட்சியாளர் எடுக்கும் சில நடவடிக்கைகள் வரலாற்றின் போக்கையே மாற்றிவிடத் தக்கவை. அவ்விதம் குமுஷ்திஜின் செய்த காரியம் இரண்டு சாத்தான்களுக்கு அவர்களது விலங்கைக் கட்டவிழ்த்து அளித்த விடுதலை. ஒன்று 1174ஆம் ஆண்டிலும் அடுத்தது இரண்டு ஆண்டுகள் கழித்தும் நிகழ்ந்தது. பத்தாண்டுகளுக்கு முன் நிகழ்வுற்ற போரில் நூருத்தீன் முக்கியமான பரங்கியர் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார். அவர்களுள் ஒருவர் பரங்கியர்களின் செல்வாக்கு மிக்கக் கோமான் திரிப்போலியின் மூன்றாம் ரேமாண்ட் (Count Raymond III of Tripoli).
இந்த ரேமாண்ட்டை 1174ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பணயத் தொகையாக 80,000 தங்க நாணயங்கள், கைதிகள் பரிமாற்றம் என்ற அடிப்படையில் சிறையிலிருந்து விடுவித்து அனுப்பிவிட்டார் குமுஷ்திஜின். விடுதலையான அவர் தமது செல்வாக்கால், அந்த ஆண்டின் இறுதியில் ஜெருசலத்தின் தொழுநோய் ராஜா நான்காம் பால்ட்வினின் ஆட்சிப் பிரதிநிதியாகவும் ஆகிவிட்டார். ‘மூன்றாம் ரேமாண்ட் ஒரு முன்னணி சாத்தான்’ என்பது இப்னுல் அதீரின் உவமை. பின்னர் ரேமாண்ட்டால் விளையப் போகும் பின் விளைவுகளுக்கு அந்த ஒற்றை வரி அறிமுகம் போதுமானது. அவற்றுக்கெல்லாம் முன்னோட்டமாக ஒரு தொந்தரவு அவரால் ஸலாஹுத்தீனுக்கு விளைந்தது. அந்தப் பணியை அவருக்கு அளித்தவர் குமுஷ்திஜின்.
அஸாஸியர்களின் முயற்சி தோல்வியடைந்து விட்டது. ஸலாஹுத்தீன் அலெப்போவின் முற்றுகையைக் கைவிட வேண்டுமென்றால் இதைவிட முக்கியமான பிரச்சினை ஒன்றை உருவாக்கி அவரது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்று முடிவெடுத்தார் குமுஷ்திஜின். ‘ஸலாஹுத்தீன் வசமுள்ள சிரியாவின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்துங்கள்; அவரது கவனத்தைத் திசை திருப்புங்கள்’ என்று மூன்றாம் ரேமாண்ட்டிடம் உதவி கோரினார். விடுதலைக்கான கைம்மாறு என்பதைத் தாண்டி பரங்கியர் தரப்புக்கும் இதில் சாதகம் ஒன்று அமைந்திருந்தது. ஏற்கெனவே எகிப்தும் டமாஸ்கஸும் ஸலாஹுத்தீனிடம் உள்ளன. அலெப்போவும் அவர் வசம் சென்றுவிட்டால் எகிப்துக்கும் சிரியாவுக்கும் ஏகபோக சுல்தானாகி பெரும் சக்தி பெற்றவராக அல்லவா அவர் ஆகி விடுவார். முஸ்லிம்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ் வந்துவிட்டால் ஜெருசலத்தின் நிலை? ஆகவே, அலெப்போ தனியாகப் பிரிந்திருப்பதே தங்களுக்கு நல்லது என்று பரங்கியர்கள் கருதினர்.
அதனால் படையினருடன் அணிவகுத்தார் மூன்றாம் ரேமாண்ட். எங்கே? ஹும்ஸுக்கு! ஹும்ஸ் நகரம் ஸலாஹுத்தீனிடம் சரணடைந்திருந்தது; ஆனால் அதன் கோட்டை மட்டும் அலெப்போவுக்கு ஆதரவாக விடாப்பிடியாக நீடித்தது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமில்லையா? அந்தக் கோட்டையினருக்கு உதவியாக நகர்ந்தது ரேமாண்டின் படை. அங்கு சிறிய அளவில் மட்டுமே வீற்றிருந்த ஸலாஹுத்தீனின் இராணுவம் பரங்கியர் படையை எப்படி எதிர்கொள்ளும்? காலவரையின்றி அலெப்போவின் முற்றுகையை நீட்டிப்பதைவிட ஹும்ஸை இழக்காமல் காப்பாற்ற வேண்டியது ஸலாஹுத்தீனுக்கு முன்னுரிமையானது. எனவே தெற்கே ஹும்ஸுக்கு விரைந்தார் ஸலாஹுத்தீன். ‘நன்று. என் காரியம் முடிந்தது’ என்று பின் வாங்கிச் சென்று விட்டார் திரிப்போலியின் ரேமாண்ட். ஆனால் ஹும்ஸ் வந்த ஸலாஹுத்தீன் அதற்கு மேல் அந்தக் கோட்டைக்கு அவகாசம் வழங்க விரும்பவில்லை. 1175 மார்ச் மாத மத்தியில் கோட்டை ஸலாஹுத்தீன் வசமானது. அடுத்து அங்கிருந்து ஸலாஹுத்தீன் பால்பெக்கிற்கு அணிவகுத்து அதையும் தம் வசமாக்கினார். குமுஷ்திஜினின் திட்டத்தால் அலெப்போ தன்னைத்தான் காப்பாற்றிக்கொண்டதே தவிர, சிரியாவின் ஹமா நகரிலிருந்து தெற்குப் பகுதி முழுவதும் ஸலாஹுத்தீனின் ஆளுகைக்குள் வந்து சேர்ந்தது.
இவை அனைத்தையும் கவலையுடன் கவனித்தது மற்றொரு தரப்பு. அது இராக்கிலிருந்த மோஸூல். அதற்கேற்ப அலெப்போவும் மோஸூலைத் தொடர்புகொண்டது. அங்கிருந்த தம் இரத்த சொந்தங்களிடம் உதவி வேண்டி கை நீட்டினார் நூருத்தீனின் மகன் இளம் மன்னர் அஸ்-ஸாலிஹ்.
அது–
(தொடரும்)
-நூருத்தீன்