சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 78

Tareekhul Yeman
Share this:

78. ஃபாத்திமீக்களின் சதி வலை

யெமன் நாட்டின் திஹாமா மாகாணத்தின் முர்த்தான் எனும் ஊரில், ஹிஜ்ரீ 515இல் பிறந்த  உமாரா என்றொருவன் இருந்தான். அவனது முழுப்பெயர் : உமாரா (பின் அபில் ஹஸன் பின் அலீ ஜைதான் பின் அஹ்மது அல் ஹகமீ அல் மத்ஹஜீ) என்பதாகும். சுருக்கமாக உமாரா.

முந்தைய அத்தியாயத்தில் நமக்கு அவனது சுருக்கப் பெயர் மட்டும் அறிமுகமாகி இருந்தது. ஸன்னி முஸ்லிமான அவனது வாழ்க்கையின் தொடக்கம் நல்லவிதமாகத்தான் இருந்தது. ஸபீத் நகரில் மூன்றாண்டுகள் தங்கியிருந்து இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் வழித்துறையைப் பயின்று, மார்க்கச் சட்டக்கலையிலும் தேர்ச்சி பெற்று, இஸ்லாமியக் கடமைகள் குறித்து நூல் ஒன்றையும் எழுதி முடித்தான். வரலாற்றையும் அவன் விட்டுவைக்கவில்லை. அவனுடைய வரலாற்றுப் படைப்புகளுள் ‘தாரீகுல் யெமன்’ (யெமனின் வரலாறு) எனும் நூல் பிரபலமான ஒன்று. பிறகு கவிதை புனைவதில் அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டு, அதுவும் அவனுக்குக் கைகூடி, கவிஞன் என்ற பட்டமும் அவனது பெயருடன் ஒட்டிக்கொண்டது.

ஸபீத் அரசரின் தாயார் ஹஜ்ஜுக்குச் சென்ற போது கவிஞன் உமாராவுக்கும் அந்த ஹஜ் பயணம் வாய்த்தது. அதில் அந்த மகாராணியாரின் நல்லபிமானத்தைப் பெற்று, அவரது மரியாதைக்கு உரியவனாகி, அவரது தயாள உள்ளத்தால் பண வரவு ஏராளமாகி, செல்வந்தனாகவும் ஆகிவிட்டான். பிறகு யெமனில் அவனுக்கு என்னவோ பிரச்சினை. நாட்டை விட்டு அவன் வெளியேற வேண்டிய நிலை. தப்பிப் பிழைத்து ஓடியவன் ஹஜ்ஜுக்குச் சென்று, அங்கு மக்காவின் ஆளுநராக இருந்த காஸிம் என்பவரிடம் நெருக்கமாகிவிட்டான். அவர் உமாராவைத் தம்முடைய தூதுவனாக எகிப்துக்கு அனுப்பி வைக்க, ஃபாத்திமீ அரசவைக்கு வந்து சேர்ந்தான் அவன்.

ஆடிய காலும் பாடிய வாயும் ஓயா அல்லவா. வந்த இடத்தில் அவன் ஃபாத்திமீ வஸீர் இப்னு ருஸீஃகைப் புகழ்ந்து கவிதை பாட, அகமகிழ்ந்து போனார் அவர். பிறகென்ன? எக்கச்சக்க வெகுமானம், சன்மானம், மேட்டுக்குடிகளுடன் பரிச்சயம், நட்பு, நெருக்கம் என்று ஃபாத்திமீக்களிடம் அவன் மிகவும் பிரபல்யமாகி, ஷிஆ வர்க்கத்தின் கோட்பாட்டைப் பேசுவது அவனது பணியானது. விலை போனது அவன் பயின்ற இஸ்லாமிய அறிவு. ஃபாத்திமீ இராஜாங்கம் முடிவுற்ற போது மனமுருகி அவன் வடித்த இரங்கற்பா அதன் கவிதை வடிவத்திற்காகப் போற்றப்பட்டாலும் அவனது அரசியல் நிலைப்பாட்டைக் கேள்விக்குறி ஆக்கியது. அதனால், ஃபாத்திமீக்களைப் புகழ்ந்து அவன் வடித்த கவிதைகள் அவர்களிடம் விலை போனதைப் போல் ஸலாஹுத்தீன் ஆட்சிக்கு வந்தபின் அவரைப் புகழ்ந்த அவனது கவிதைகள் அவரிடம் செல்லுபடியாகவில்லை. அரசவை மவுசு குறைந்து, பித்தம் தலைக்கு ஏறி, அது தெளியக் காத்திருந்தவனுக்கு அமைந்தது கூடா நட்பு. அவன் மனத்தில் குன்றாமல் இருந்த ஃபாத்திமீக்களின் மீதான அபிமானம் அவனைத் தீவினைக்கு இட்டுச் சென்றது. சுல்தான் ஸலாஹுத்தீனுக்கு எதிரான சதிக் குழுவினர் எண்மருள் முக்கிய உறுப்பினன் ஆனான் கவிஞன் உமாரா.

oOo

1173ஆம் ஆண்டு. எகிப்தின் வரவு செலவினங்களைத் தணிக்கை செய்ய அல்-முவஃப்ஃபக் இப்னுல் ஃகைஸரானி என்பவரைத் தமது தணிக்கையாளராக அனுப்பி வைத்தார் நூருத்தீன். அதன் அடிநாதம் இரண்டு என்று குறிப்பிடுகின்றார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஸலாஹுத்தீன் எகிப்தின் சுல்தானாக இருக்கலாம்; ஆனால் அங்கு அவர் என்னுடைய பிரதிநிதியே என்ற வலியுறுத்தல் ஒன்று. அடுத்தது, தமது ஜிஹாதுக்குக் குறிப்பிட்ட அளவிலான திறை தொடர்ச்சியாக வந்து சேர வேண்டும்; அதற்கேற்ப வரவு செலவு நடைபெறுகிறதா என்ற தெளிவிற்கான கணக்கெடுப்பு.

பரங்கியர்களுக்கு எதிரான ஜிஹாது, ஜெருசலம் மீட்பு இரண்டும் ஏதோ பெயரளவிலான இலட்சியமாக இல்லாமல் நூருத்தீனின் நாடி நரம்பெங்கும் இரத்தமாகவே ஓடின. ஒருநாள் அவருடைய திவான் இமாதுத்தீன் இஸ்ஃபஹானி டமாஸ்கஸின் இதமான தென்றல், அந்நகரின் அருமை-பெருமை, பகட்டு, செழிப்பு, சிறப்பு ஆகியனவற்றைக் குறிப்பிட்டு உரையாடும்போது நூருத்தீன் பதில் அளித்தார், “இந்த சொகுசுகளை விட ஜிஹாதையே நான் உவப்பானதாகக் கருதுகிறேன்”

எகிப்திலிருந்து சிரியாவுக்கு எதுவும் செல்லாமல் இல்லை. ஸலாஹுத்தீன் அவ்வப்போது திறை அனுப்பிக்கொண்டுதான் இருந்தார். அந்த ஆண்டும் தங்கம், வெள்ளி, முத்துகள், மாணிக்கங்கள், யானை, 60,000 தீனார் ஆகியன அனுப்பப்பட்டிருந்தன. ஆனால் நூருத்தீன் எதிர்பார்த்ததோ தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் ஒரு தொகை.

ஸலாஹுத்தீன் அனுப்பி வைத்த செல்வம் வந்த போது, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்தச் செல்வம் நமக்குத் தேவையில்லை; நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் அதை நாம் கோரவில்லை. ஸலாஹுத்தீனுக்கும் அது தெரியும். சிரியாவின் எல்லைகளைக் காக்க, பரங்கியர்களை வேரறுக்கப் பணம் தேவைப்படுகிறது. அதை அவரும் அறிவார்” என்பதே நூருத்தீனின் பதிலாக இருந்தது.

எகிப்தின் வரவுக்கு ஏற்ப, அதன் நிர்வாகத்திற்கும் இராணுவத்திற்கும் பெரும் தொகை செலவாகி வந்ததால், தணிக்கையாளரின் வருகையைப் பற்றி ஸலாஹுத்தீன் கவலைப்படவில்லை. மடியில் கனம் இருந்தால்தானே தணிக்கையில் அதிருப்தி கொள்ள. எனவே, தணிக்கையாளர் வந்து சேர்ந்ததும் ஸலாஹுத்தீன் அவரை வரவேற்றார். தம் சார்பாக ஈஸா அல்-ஹக்காரியை உதவியாளராக நியமித்து, தணிக்கையாளர் கோரும் அனைத்தையும் அளித்து ஒத்துழைக்கக் கட்டளையிட்டார். தணிக்கைப் பணி தொடங்கியது; நடைபெற்றது.

ஹி. 569 / கி.பி. 1174 – ஸலாஹுத்தீனைத் தீர்த்துக்கட்ட எகிப்தில் முழு வீச்சில் விரிவாகப் பின்னப்பட்டது சதி வலை. அதன் மூலகர்த்தாக்கள் ஃபாத்திமீ ஆதரவாளர்கள். அவர்களது முயற்சியில் ஒன்றிணைந்திருந்தோர் ஃபாத்திமீக்கள், அர்மீனியர்கள், நுபியர்கள், அஸாஸியர்கள் இதர அதிருப்தியாளர்கள் அடங்கிய குழு. அதில் முக்கியமான அங்கத்தினன் கவிஞன் உமாரா. அவர்கள் தனிமையில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள். சுல்தான் ஸலாஹுத்தீனுக்கு மிக முக்கியமான, வலிமையான தளபதி அவருடைய அண்ணன் ஷம்ஸுத் தவ்லா தூரான்ஷா. நமது கிளர்ச்சி கெய்ரோவில் வெடிக்கும்போது அவர் இங்கு இருக்கக்கூடாதே என்று எழுந்த கவலையை சரியாகக் கையாண்டான் கவிஞன் உமாரா. அவனது தூண்டுதலில் தூரான்ஷா யெமனுக்குச் சென்றுவிட, தந்தை நஜ்முத்தீனும் மரணமடைந்திருந்த நிலையில் ஸலாஹுத்தீனின் சக்தியைப் பறித்துவிட்டோம் என்று அவர்கள் கணித்தனர்.

சதிகாரர்கள் பரங்கியர்களைத் தொடர்புகொண்டார்கள். ஜெருசல ராஜாவுக்குக் கசக்கவா செய்யும்? கூட்டணி உருவானது. அடுத்ததாக இத்தாலியின் தெற்கில் உள்ள சிசிலி நாட்டின் நார்மன் படையினருடன் பேச்சு வார்த்தை நடந்தது. சிசிலியிலிருந்து கப்பற்படை திரண்டு வந்து அலெக்ஸாந்திரியாவை முற்றுகை இட வேண்டும் என்று பேசி உடன்பாடு உருவானது. குறிப்பிட்ட காலம் ஒன்றில் சிசிலிய கப்பற்படை அலெக்ஸாந்திரியாவை முற்றுகை இட்டால், ஸலாஹுத்தீனுக்கு இரண்டே தேர்வுகள் இருக்கும். ஒன்று அவர் வடக்கே அலெக்ஸாந்திரியாவுக்குத் தம் படையுடன் செல்வது. அப்படிச் சென்றுவிட்டால், நாம் இங்கே கிளர்ச்சியில் இறங்கி கெய்ரோவைக் கைப்பற்றுவோம். அவர் மீது அதிருப்தியுள்ள நம் படையினர் அங்கே அவரைக் கைவிடுவர். விளைவாகப் பரங்கியர்களிடம் அவர் தோற்பார். அப்படியின்றி, அங்கு துருப்புகளை அனுப்பிவிட்டு அவர் கெய்ரோவில் தங்கினால், பற்றாக்குறையான படையுடன், தூரான்ஷாவும் இன்றித் தனித்து இருக்கும் அவரைக் கைது செய்வோம்.

அது மட்டும் போதாதே. அவரைத் தீர்த்துக் கட்ட வேண்டுமே. அதை எப்படிச் செய்வது? கவனத்திற்கு வந்தார்கள் அஸாஸியர்கள்.

இரண்டு நூற்றாண்டு புகழுடன் ஆட்சி புரிந்த ஷிஆ கிலாஃபத் முடிவுக்கு வந்ததில் அஸாஸியர்களுக்கு ஏகப்பட்ட துக்கம்! ஃபாத்திமீக்கள் தங்களது சோம்பலை முறித்துக்கொண்டு வெளிவந்து ஷிஆக்களின் பொற்கால சகாப்தத்திற்குள் நுழைவார்கள் என்று நம்பியிருந்த அவர்கள் மனமொடிந்து வெறுத்துப்போனார்கள். மலையிலிருக்கும் முதியவர் (the ’Old Man of the Mountain’) என்று அறியப்பட்ட, சிரியாவிலிருந்த, அவர்களின் தலைவரான ஷேக் அல்-ஜபல் ரஷீதுத்தீன் ஸினான் அமால்ரிக்குக்குத் தகவல் அனுப்பினார்.

‘நானும் என்னுடைய ஆதரவாளர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட தயாரக இருக்கின்றோம்.’

அச்சமயம் அஸாஸியர்கள் மத்திய சிரியாவில் உள்ள பல கோட்டைகளையும் கிராமங்களையும் கைப்பற்றித் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். முந்தைய ஆண்டுகளின் அக்கிரமக் கொலையாட்டங்களை நிறுத்திவிட்டு ஓரளவு அமைதியாக வாழ்க்கையைக் கழித்தபடி இருந்தனர். நன்கு பயிற்சி பெற்ற குழுக்களையும் கொலையாளிகளையும் பிரச்சாரகர்களையும் ரஷீதுத்தீன் தமது கட்டளைக்குக் கட்டுப்படும்படி வைத்திருந்தாலும், பெரும்பாலானோர் விவசாயிகளாக மாறியிருந்தனர். டெம்ப்ளர்களுக்கு வரியும் செலுத்திவந்தனர்.

கிழவர் ரஷீதுத்தீன் ஸினானுக்கு ஒரு நப்பாசை. மதம் மாறுகிறேன் என்று வாக்களித்தால் கிறிஸ்தவர் அல்லாதவர் செலுத்தவேண்டிய வரியிலிருந்து தம் பிரிவினருக்குப் பரங்கியர்கள் விலக்களிக்கப்பார்கள் என்று அவர் நம்பினார். ஆனால் டெம்ப்ளர்கள் தங்களுடைய பண விவகாரங்களில் வெகு கெட்டி. அதையெல்லாம் அவர்கள் விளையாட்டாக எடுத்துக்கொள்வதே இல்லை. அவர்கள் அமால்ரிக்குக்கும் அஸாஸியர்களுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளை அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தனர். அஸாஸியர்கள் ஓரளவு ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்தது. ‘இதற்குமேல் பொறுக்க முடியாது ராசா’ என்று ராஜா அமால்ரிக்கை உதாசீனப்படுத்திவிட்டு, ஒருநாள் ரஷீதுத்தீனின் தூதுக்குழு ஜெருசல ராஜாவைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது பதுங்கிப் பாய்ந்தார்கள். கொலையாளிகளான அஸாஸியர் பலரை அனாயசமாகக் கொன்றார்கள் டெம்ப்ளர்கள். அத்துடன் அஸாஸியர்கள் மதம் மாறும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

வெறுத்துப்போய் மலையில் அமர்ந்திருந்த ஷேக் அல்-ஜபல் ஸினானிடம் எகிப்திலிருந்த சதிகாரர்களிடமிருந்து தூது வந்தது. ‘ஐயா! நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் நமது நோக்கம் என்னவோ ஒன்று. எனவே ஒன்றிணைவோம். எங்களது முக்கிய வேண்டுகோள், ஸலாஹுத்தீனின் கொலை. உங்களது தொழில் நேர்த்தியே அதுதானே. கச்சிதமாக காரியத்தை முடியுங்கள்.’

அவர்களது திட்டப்படி அனைத்தும் சீராகத்தான் சென்றன. ஆனால், ‘அல்லாஹ்வின் அருளால் சதி முறியடிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கிறார் அக்காலத்திய வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர். சதித்திட்டம் வெளியானது குறித்து இருவேறு தகவல்கள் உள்ளன.

ஸலாஹுத்தீனின் அவையைச் சேர்ந்த எழுத்தாளன், அப்துல் ஸமது அல்-காதிப். அவனுக்கு காழீ அல்-ஃபாதிலிடம் அளவுக்கு மீறிய அன்பு, பணிவு, மிகையான அடக்க ஒடுக்கம். ஏதேனும் செய்து அவருடன் நெருக்கமாக முயற்சி செய்தபடி இருப்பான். அவரைக் கண்டால் முந்திக்கொண்டு ஓடிப்போய் முகமன் கூறுவான். சதிகாரர்களுள் ஒருவனான அவனுக்கு, திட்டம் நிச்சய வெற்றி என்று தெரிந்ததாலோ என்னவோ, ஒருநாள் காழீ அல்-ஃபாதிலைச் சந்தித்தவன் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. அவனின் அந்தப் பாராமுக நடவடிக்கை அல்-ஃபாதிலின் மனத்தில் ஓர் எச்சரிக்கை மணியை அடித்துவிட்டது. என்ன காரணமாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க, இப்னு நஜா என்ற மத விரிவுரையாளரை வரவழைத்து, விஷயத்தைக் கூறி, அவர்களிடையே ஊடுருவ விட்டார். அவர் சதித் திட்டத்தை வெளியே கொண்டுவந்தார் என்பது ஒரு கூற்று.

மற்றொரு கூற்று, இப்னு நஜா ஏற்கெனவே அந்தச் சதிக் குழுவில் இடம் பெற்றுவிட்டார். சதிகாரர்கள் தங்களது திட்டம் நிச்சய வெற்றி என்று முடிவெடுத்துத் தங்களுக்குள் கலீஃபா, வஸீர் பதவிகளைப் பகிர்ந்துகொள்ளும்போது சச்சரவு ஏற்பட்டு, அச்சமயம் இப்னு நஜா மனம் மாறி, ஸலாஹுத்தீனிடம் சதியை அம்பலப்படுத்திவிட்டார் என்பது மற்றொன்று. எது எப்படியோ, சதித்திட்டம் இப்னு நஜாவினால் ஸலாஹுத்தீனின் காதை எட்டியது என்பது மட்டும் உண்மை.

அனைத்தையும் கேட்டறிந்த சுல்தான் ஸலாஹுத்தீன் அவசரப்படவில்லை. இதற்கு முந்தைய நிகழ்வில் எப்படி நடந்துகொண்டாரோ, அதேபோல் நிதானமாகச் செயல்பட்டார். இப்னு நஜாவிடம், ‘அவர்களிடம் திரும்பிச் செல். உறவாடு. நிகழ்பவற்றைத் தொடர்ந்து தெரிவி’ என்று அவரை ஒற்றராக மாற்றினார்.

இங்கு இவை இவ்விதம் நிகழ, ஜெருசல ராஜா அமால்ரிக்கின் தூதுவன் ஒருவன் ஒரு நாள் ஸலாஹுத்தீனிடம் வந்து சேர்ந்தான். யதார்த்த அரசுத் தகவல் பரிமாற்றத்திற்கு அவன் அனுப்பப்பட்டிருந்தாலும் அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியப் பணி, கெய்ரோவிலுள்ள காப்டிக் கிறிஸ்தவர் உதவியுடன் சதிகாரர்களைத் தொடர்புகொள்வது. அதை முற்கூட்டியே அறிந்திருந்த ஸலாஹுத்தீன் தம் நம்பிக்கைக்குரிய கிறிஸ்தவரை அத்தூதுவனிடம் நட்பாக்கி, முழுத் திட்டத்தையும் கறக்கச் செயதார். அவர் தம் பணியைத் திறமே நிறைவேற்ற, திட்டம் முழுவதும் வெளி வந்தது.

சதிகாரர்கள் அத்தூதுவனிடம் ராஜா அமால்ரிக்குக்கு மடல் அனுப்பினார்கள்: ‘இது அறுவடைக் காலம். இதுவே சரியான தருணம். படையினர் அவரவர் நிலங்களுக்குச் சென்றுள்ளனர். துருப்புகள் சிதறியுள்ளன. சிலர் மட்டுமே கெய்ரோவில். உங்களது படையை எல்லைப் பகுதிக்கு அனுப்புங்கள். சிசிலி கப்பற்படை வந்து அலெக்ஸாந்திரியாவை முற்றுகை இடட்டும். அதை எதிர்கொள்ள இங்குள்ள மற்றவர்கள் விரைவார்கள். ஸலாஹுத்தீன் தனித்து விடப்படுவார். நாங்கள் முன்னர் சொன்னபடி கிளர்ச்சியில் இறங்குவோம். வேலையை முடிப்போம்’

அறுவடைக் காலம் அவர்களுக்கு முக்கியமான ஒன்று. படையினர் தங்களுக்கு உடைமையாக உள்ள நிலங்களுக்கு அறுவடையைக் கவனிக்கச் சென்று விடுவது வழக்கம். எனவே, அக்காலத்தை சரியாகத் தேர்ந்தெடுத்தனர் சதிகாரர்கள். அதற்கு மேல் ஸலாஹுத்தீன் காத்திருக்கவில்லை. துரிதமாக, துல்லியமாகச் செயல்பட்டார். உடனே உத்தரவு இடப்பட்டது. சதிகாரர்கள் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டனர். இழுத்து வரப்பட்டனர்.

மார்க்க அறிஞர்கள், நீதிபதிகள் அடங்கிய குழு ஸலாஹுத்தீனின் தலைமையில் கூடியது. ஆலோசனை நிகழ்த்தினார் சுல்தான். முடிவில், 1174ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி சனிக்கிழமையன்று சதிகாரர்களின் பங்களிப்புக்கு ஏற்ப, பெரும்பாலானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பானது. கவிஞன் உமாரா உட்பட, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள். மட்டுமின்றி, அவர்களது சடலங்கள் மக்களின் பார்வைக்காக அப்படியே தொங்கவிடப்பட்டன.

சுல்தான் ஸலாஹுத்தீனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுபவர்களுக்கு என்ன முடிவு ஏற்படும் என்பதைத் தெள்ளத் தெளிவாக அனைவருக்கும் உணர்த்தியது அது. கலகம் நசுக்கப்பட்டது. ஃபாத்திமீ அரச குடும்பத்தினர் தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். பதுங்கிப் பிழைத்த இதர அஸாஸியர்கள் கெய்ரோவிலிருந்து சிதறி ஓடினர்.

காழீ அல்-ஃபாதில் கலக நிகழ்வுகளையும் அது முறியடிக்கப்பட்டதையும் மிக விரிவாக எழுதி நூருத்தீனுக்குக் கடிதம் அனுப்பினார்.

oOo

அவ்விதம் வெற்றிகரமாக நசுக்கப்பட்ட கிளர்ச்சியை மீறி வேறொரு கவலை ஸலாஹுத்தீனைச் சூழ்ந்தது. அது சிரியாவில் நடைபெற்று வந்த இராணுவ முன்னேற்பாடு. 1174ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். நூருத்தீன் மோஸுலில் இருந்த தம் சகோதரனின் மகனைப் படையுடன் கிளம்பி வரச் சொல்லியிருந்தார். அங்கிருந்து பெரும் படை சிரியா வந்து சேர்ந்திருந்தது. மேலும் சில அமீர்களின் படை, நூருத்தீனின் படை என்று போருக்கான ஆயத்தங்கள் சிரியாவில் மும்முரமாக நடைபெறுவதாகத் தகவல்கள் பரவின. நூருத்தீன் எகிப்துக்குப் படையுடன் அணிவகுக்க இருக்கிறார் என்று யூகத்தைக் கிளறின.

சுல்தான் ஸலாஹுத்தீனிடம் இராணுவ நீதிபதியாகப் பணியாற்றியவர் பஹாவுத்தீன் இப்னு ஷத்தாத். அவர் அன்றைய வரலாற்று ஆசிரியரும்கூட. சுல்தான் ஸலாஹுத்தீன் பின்னர் தம்மிடம் அதைக் குறித்துக் கூறியதை அவர் எழுதி வைத்துள்ளார்: “நூருத்தீன் எகிப்தின் மீது படையெடுத்து நம்மைத் தாக்கலாம் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். அவரை வெளிப்படையாக நாம் எதிர்க்க வேண்டும், அவரது அதிகாரம் நிராகரிப்பட வேண்டும், அவருடைய விரோத நடவடிக்கை உண்மையென்றால், அவருடைய படையினருடன் போரிட்டு விரட்ட வேண்டும் என்று என்னுடைய ஆலோசகர்கள் பலர் அறிவுறுத்தினர். அவர்களுடன் நான் ஒருவன் மட்டுமே உடன்படவில்லை. அப்படிக் கூறுவது எதுவுமே சரியில்லை என்று வலியுறுத்தினேன். எங்களிடையே நிலவிய இந்தக் கருத்து வேற்றுமை நூருத்தீனின் மரணச் செய்தி வரும்வரை நீடித்தது.’

சிரியாவிலும் எகிப்திலும் நிலவிய அந்த அத்தனைப் பதற்றத்துக்கும் யூகத்துக்கும் வதந்திக்கும் 1174ஆம் ஆண்டின் மே மாதம் 6ஆம் நாள் இறைவிதி முற்றுப்புள்ளி இட்டது.

அது நூருத்தீனின் மரணம்! விரிவாக அது–

(தொடரும்)


Share this: