60. தோல்வியும் வெற்றியும்
‘முஸ்லிம்கள் கி.பி. 1144ஆம் ஆண்டு எடிஸ்ஸாவை மீண்டும் கைப்பற்றும் வரை பரங்கியர்களுக்கு எதிரான போர், தற்காப்பு சார்ந்ததாகவே இருந்தது. மார்க்க அறிஞரான அல்-ஸுலைமி மட்டுமே ஜெருசலம் மீட்புக்கான ஜிஹாதுக்குக் குரல் கொடுப்பவராக இருந்தார். நூருத்தீனின் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் பிறகே மேலும் பலர் ஜெருசலத்தின் முக்கியத்துவத்தையும் அதை மீட்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி உரத்து உரைக்கத் தொடங்கினர்’ என்கிறார் சமகால ஆசிரியர் ஜெஃப்ரி ஹிண்ட்லே (Geoffrey Hindley).
இயற்கைப் பேரிடர்களைத் தாண்டி வந்த நூருத்தீன், நோயுற்று மரணத்தின் வாசல் வரை சென்று வந்த நூருத்தீன், தம் முயற்சியில் சற்றும் மனம் தளராது பரங்கியர்களுக்கு எதிரான அடுத்தடுத்த நடவடிக்கைகளில் வாளும் கையுமாகக் களத்தில் இறங்கினார். அவரது தோற்றம் பக்தியைப் பறைசாற்றியதுதான்; மனம் பெரிதும் பக்குவப் பட்டிருந்ததுதான். அதைப் போலவே சிலுவைப்படை பரங்கியர்களுக்கு எதிரான ஜிஹாது வேட்கையும் வீர தீரத்துடன் பொங்கி நின்றது. எனினும் அதற்காக அவர் முன்னெடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றிக் கோப்பையை அப்படியே அவரது கையில் தூக்கித் தந்துவிடவில்லை. தோல்விகள் இருந்தன. இழப்புகள் துன்புறுத்தின. ஆயாசம் சூழ்ந்தது. அவற்றையெல்லாம் தாண்டி அவர் மிளிர்ந்து படைத்த சாதனைகள்தாம் அவரது வரலாற்றுக்குப் பெருமை சேர்த்துவிட்டன. எந்நிலையிலும் அவர் ஏக இறைவன் மீது கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையே முஸ்லிமல்லாத வரலாற்று ஆசிரியர்களையும் அவரைத் ‘துறவி அரசர்’ என்று சங்கடமின்றி விளிக்க வைத்தது.
ஹி.556 / கி.பி. 1161ஆம் ஆண்டு பரங்கியர்கள் ஒன்றிணைந்து படை திரட்டி வருகின்றார்கள் என்று தகவல் வந்தது. தாமதமின்றி நூருத்தீன் தம்முடைய படையைத் திரட்டிக்கொண்டு, பரங்கியரை எதிர்கொள்ளப் போருக்குச் சென்றார். கடுமையான போர் நடைபெற்றது. ஆனால் அதில் நூருத்தீனின் படையினர் பின்னடைவைச் சந்தித்தனர். களிப்புடன் முன்னேறியது பரங்கியர் படை. மாண்டவர் போக, மீந்தவருள் பலரும் ஓடி விட, நூருத்தீனும் சில வீரர்களும் மட்டும் குழுவாக மலைக் குன்றின் மேல் தோல்வியின் விளிம்பில் நின்றிருந்தனர். நூருத்தீன் கஅபாவின் திசை நோக்கி முகம் திருப்பினார்; இறைஞ்சினார்.
“இறையடியார்களின் அதிபதியே! நான் பலவீனமான சேவகன். இந்த அதிகாரத்தை என் மீது சாட்டியிருக்கிறாய். உனது நிலங்களைப் பராமரித்தேன். உனது அடிமைகளுக்கு ஆலோசனைகள் வழங்கினேன். உனது கட்டளைகளை நிறைவேற்றவும் நீ அனுமதிக்காததைவிட்டு அவர்கள் தங்களைத் தடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தினேன். அவர்கள் மத்தியில் இருந்த துஷ்டர்களைக் களைந்தேன். உனது மார்க்கத்தை அவர்களிடம் அறிவித்துப் பரப்புரை செய்தேன். இப்பொழுது முஸ்லிம்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார்கள்; உன்னுடைய, உன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய எதிரிகளை என்னால் வெல்ல முடியாத நிலையில் இருக்கின்றேன். என்னிடம் இப்பொழுது என் உயிரையன்றி என்னிடம் வேறொன்றுமில்லை. அதை உன் மார்க்கத்திற்காகவும் உன் நபியின் வெற்றிக்காகவும் அர்ப்பணிக்கின்றேன்”
உள்ளார்ந்த அந்த இறைஞ்சலை இறைவன் ஏற்றுக்கொண்டான். போரின் போக்கு சட்டெனத் திசை மாறியது. எதிரிகளின் மனத்தில் திடீரென ஓர் அச்சம். ‘நூருத்தீன் ஏதோ திட்டமிட்டிருக்கிறார். பின் வாங்கிய படையினர் எங்கோ பதுங்கியிருக்கின்றார்கள். நம்மை இப்படி இலகுவாக முன்னேற விட்டு, எதிர்பாராத வகையில் அவர்கள் நம் மீது பாய்ந்து தாக்கப் போகின்றார்கள்; பேரிழப்பு காத்திருக்கிறது’ இந்த எண்ணம் தோன்றியதும், வேகவேகமாக முன்னேறி வந்தவர்கள் பீதி சூழ்ந்து ஓரிடத்தில் தேங்கி நின்றுவிட்டார்கள். அவர்கள் முன்னேறியிருந்தால் பலவீனமுற்றிருந்த நூருத்தீனின் படை துடைத்து அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இறைவிதி அதை மாற்றியது!
எதிரிகள் தரப்பிலிருந்து இருவர் மட்டும் முன் வந்து முஸ்லிம்களைத் துவந்த யுத்தத்திற்கு – ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு – அழைத்தனர். தம் தந்தை இமாதுத்தீன் ஸெங்கியின் பணியாளாக இருந்த ஃகத்லாக் என்பவரை அனுப்பி வைத்தார் நூருத்தீன். அந்த இருவரையும் கொன்று கதையை முடித்தார் ஃகத்லாக்.
ஷேக் தாவூத் அல்-மக்திஸி என்பவர் அந்தப் போரில் நூருத்தீனுடன் இறுதி வரை உறுதியாக நின்றிருந்தவர். அன்றைய நிகழ்வின் சில விஷயங்கள் அவரது நேரடி சாட்சிமொழியாக முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளில் இடம் பெற்றுள்ளன:
“ஜெருசலம் ராஜா, முன்னொரு சமயம் எனக்குக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்பாக அளித்திருந்தார். அதன் மீதேறி நான் நூருத்தீனுடன் நின்றிருந்தேன். எதிரிகள் முன்னேறி நெருங்கி விட்டனர். அவர்களது இரைச்சலைச் செவியுற்ற எனது கழுதை கத்தியது. கழுதையையும் அதன் மீது வீற்றிருக்கும் என்னையும் கண்ட அவர்கள், ‘இதோ தாவூதும் அவரது கழுதையும் நூருத்தீனுடன் நின்றிருக்கின்றனர். பதுங்கிப் பாயும் முன்னேற்பாடும் வேறு ஏதோ தந்திரமும் இருந்தாலன்றி அவர்கள் இத்தகு சிறு குழுவுடன் இப்படித் துணிவுடன் நிற்க மாட்டார்கள்’ என்று கூறிவிட்டு அப்படியே நின்று விட்டனர்.
அந்த நூலிழை மாற்றம் நூருத்தீனின் படை வீரர்களைப் பரவசத்தில் ஆழ்த்தி விட்டது! பூமியில் சிரம் பதித்து முத்தமிட்டவர்கள், ‘ஓ மன்னா! இங்கு இஸ்லாத்தின் கேடயம் நீ. முஸ்லிம்கள் பலவீனமடைந்து எதிரிகள் அவர்களைக் கைப்பற்ற முனைந்த நிலையில் நாங்கள் என்ன செய்திருக்க முடியும்? அவர்களை யார் தடுத்திருக்க முடியும்?’ என்றனர்”
தாங்கள் அஞ்சியபடி எந்தத் தந்திரமும் இல்லை என்பதைப் பின்னர் அறிந்த எதிரிகள் தம் தலைகளில் அடித்துக்கொண்டு வருந்தியது தனிக் கதை.
oOo
ஹி. 558 / கி.பி. 1163ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெருசலம் ராஜா மூன்றாம் பால்ட்வின் நோயுற்று மரணமடைந்தார். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காசநோய் என்று காரணம் தெரிவிக்கின்றார் அக்காலத்திய வரலாற்று ஆசிரியர் வில்லியம். முப்பத்து மூன்று வயதில் பால்ட்வின் இறந்துவிட, அவருக்கு மனைவியாக இருந்த தியோடோரா தமது பதினெட்டாம் வயதில் விதவையானார். தம் பதின்மூன்றாம் வயதில் மூன்றாம் பால்ட்வினுக்கு மனைவியாகி இருந்தார் அவர். ஐந்தாண்டு இல்லற வாழ்வில் அவர்களுக்கு வாரிசு உருவாகவில்லை. எனவே, ஃபுல்கின் இரண்டாம் மகனும் மூன்றாம் பால்ட்வினின் சகோதரருமான அமால்ரிக் ஜெருசலத்தின் ராஜாவாக ஆட்சிக்கு வந்தார்.
மூன்றாம் பால்ட்வினின் மரணம், இலத்தீன் கிறிஸ்தவர்களுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்ததால் அவர்கள் நிலைகுலைந்திருந்தனர். தடுமாற்றத்தில் இருந்தது ஜெருசல ராஜாங்கம். அடுத்தவர் ராஜாவாக அரியணை ஏறாத நேரம். ‘இதுவே சரியான தருணம்; படையெடுத்துச் சென்று அவர்களைத் தாக்கலாம்; ஜெருசலத்தை மீட்டு விடலாம்’ என்று நூருத்தீனிடம் ஆவலுடன் தெரிவித்தனர் அவருடைய ஆலோசகர்கள். ஆனால், ‘தம் மன்னனை இழந்து துக்கத்தில் மூழ்கியிருக்கும் அவர்கள் மீது போர் தொடுப்பது சரியில்லை’ என்று அத்திட்டத்தை அப்பட்டமாக நிராகரித்து விட்டார் நூருத்தீன். அவரின் அந்த முடிவு தவறு என்றும் பெருந்தன்மை என்றும் இரு தரப்புக் கருத்துகள் நிறைய எழுதி வைக்கப்பட்டுள்ளன. சரியோ, தவறோ – ஜெருசலத்தின் நாயகராக ஸலாஹுத்தீன் அய்யூபி உருவாகி வர வேண்டும் என்பதற்காகக் காலம் காத்திருந்தது என்பது மட்டும் வரலாற்று உண்மை.
அடுத்து மூன்று மாதம் கழித்து, மே மாதம் திரிப்போலியின் வடக்குப் பகுதிக்கு நூருத்தீன் படையெடுத்தார். பொகியா (Bouqia) பள்ளத்தாக்கில் பாடி இறங்கினார். வடக்கே அன்ஸாரியா மலைகள், தெற்கே லெபனான் மலை இவற்றுக்கு இடையே அமைந்திருந்தது பொகியாவின் பரந்த சமவெளி. செய்தி பரங்கியர்களுக்குச் சென்று சேர்ந்தது. அவரை எதிர்க்க அந்தாக்கியாவில் இருந்த பரங்கியர்கள் படை தயாரானது. பிரான்ஸின் அக்வுடைன் (Aquitaine) பகுதியிலிருந்து பெரும் எண்ணிக்கையில் யாத்ரிகர்கள் கூட்டம் ஒன்று அச்சமயம் அங்கு வந்திருந்தது. அவர்களையும் பைஸாந்திய கிரேக்கப் படை வீரர்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு டெம்ப்ளர் கில்பர் (Templar Gilbert of Lacy) என்பவரின் தலைமையில் பரங்கியர் படை அணிவகுத்தது.
நண்பகல் நேரம். அன்ஸாரிய்யா மலையடிவாரத்தின் பின்புறமிருந்து சிலுவைக் கொடிகளும் உயர்த்தி ஏந்திய சிலுவைகளும் தென்படலாயின; நெருங்கின. அலையலையாக வந்தது படையணி. தாக்குதல் தொடுத்தது. போரைத் துவக்கியது. முஸ்லிம் படையினரின் முற்பகுதி அதைச் சற்றும் எதிர்பார்க்காத தருணம். சிறு யுத்தத்திற்குப் பிறகு பின்வாங்கிய அணி நூருத்தீனின் முகாமை நோக்கி ஓடிவந்தது. துரத்தி வந்தனர் பரங்கியர்கள். அங்கிருந்த முஸ்லிம் படைகளுக்கோ தீடீரென வந்து சேர்ந்த பரங்கியர் படையை எதிர்த்து ஆயுதம் ஏந்தவும் கூடப் போதிய நேரம் இருக்கவில்லை. முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டு ஏராளமானோர் போர்க் கைதிகள் ஆயினர்.
நூருத்தீன் தங்கியிருந்த கூடாரத்தையும் அவர்கள் தாக்கத் தொடங்க, பின்புற வாயில் வழியாக நூருத்தீன் அவசரமாகத் தப்பித்துச் செல்லும்படி ஆனது. நிலைமையின் தீவிரத்தில், அந்த அவசரத்தில் குதிரையின் கால்கள் கட்டப்பட்டிருந்ததைக்கூட அவர் கவனிக்கவில்லை. குர்திய வீரன் ஒருவன்தான் அதைக் கவனித்துவிட்டு அந்தக் கயிற்றைத் துரிதமாகத் துண்டித்தான். ஆனால் அவனது உயிர் எதிரிகளின் வாள்களுக்கு இரையானது.
சந்தேகமே இன்றி நூருத்தீனின் படை பொகியா போரில் சந்தித்த பெரும் தோல்வி அது. திகைத்து விக்கித்தது படை. முஸ்லிம்களின் மனவுறுதியைத் தகர்த்து பாதித்தன அன்றைய இழப்புகள்.
நூருத்தீனும் அப்போரில் தப்பித்தவர்களும் ஹும்ஸுப் பகுதிக்குச் சென்றனர். ஒருவர் நூருத்தீனிடம், ‘நீங்கள் இங்குத் தங்கக் கூடாது. பலவீனமான நிலையில் இருக்கிறோம். பரங்கியர்கள் தொடர்ந்து வந்து நம்மைத் தாக்கக்கூடும்’ என்றார். உறுதி வாய்ந்த குரலில், சபதம் உரைத்தார் நூருத்தீன். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இஸ்லாத்திற்காக அவர்களைப் பழிவாங்கும் வரை நான் எந்தக் கூரையின் கீழும் தஞ்சமடைய மாட்டேன்”
அது இயலாமையில், ஆத்திரத்தில் உரைத்த சபதமன்று. அதைச் சாதித்துக்காட்டினார் நூருத்தீன். பரங்கியர்களின் பொகியா வெற்றியைத் தற்காலிகமானதாக மாற்றினார். அதுவும் எப்படி?
அப்போரில் ஏற்பட்ட நஷ்டத்திற்கும் முஸ்லிம் படையினர் சந்தித்த இழப்பிற்கும் ஈடு செய்யத் தம்முடைய சொந்தப் பணத்திலிருந்து மிகப் பெரும் தொகையை இழப்பீடாக அளித்தார். ஆயுதங்கள், தளவாடங்கள், குதிரைகள், இராணுவத்திற்குத் தேவையானவை அனைத்தையும் சேகரிக்க அந்தப் பணம் செலவழிக்கப்பட்டது. எந்த ஆட்சியாளரும் செய்யாத, எண்ணிப் பார்க்கவும் துணியாத காரியம் அது. உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு நில உரிமை அளிக்கப்பட்டது. தம்மைக் குதிரையில் அனுப்பிக் காப்பாற்றிவிட்டு எதிரிகளுக்குப் பலியான வீரனின் குடும்பத்தினரைக் கண்டறிந்து அவர்களுக்கு ஏராள வெகுமதி அளித்து, அக்குடும்பத்தினரின் பராமரிப்புப் பொறுப்பையும் நூருத்தீன் ஏற்றுக்கொண்டார்.
சிலர், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இழப்பை மிகைப்படுத்தியும் அதிகப்படுத்தியும் கூறினர். அதிகாரிகள் அதை அறிந்தனர். விஷயம் நூருத்தீன் காதையும் எட்டியது. ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. எக்குறையுமின்றித் தாராளமாக நிவாரணம் வழங்கப்பட்டது. அள்ளி அள்ளி இறைக்கப்பட்டது பணம். சில நண்பர்கள் அவரிடம், “அவர்களுக்கும் வறியவர்களுக்கும் இப்படி ஏராளமாக வழங்குகின்றீர்களே” என்று வேறு விதமாக ஆலோசனை அளிக்க முனைந்தபோது, கோபமுற்ற நூருத்தீன், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதைக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் நான் வெற்றியை நாடுகிறேன். உங்களுடைய இறைவன் பலவீனமான அவர்களைக் கொண்டே உங்களுக்கு வாழ்வாதாரமும் வெற்றியும் அளிக்கிறான் எனும்போது, அவர்களுக்கு உரியதை நான் எப்படித் தவிர்க்க முடியும், தட்டிப் பறிக்க முடியும்? அவர்கள் என்னுடன் இணைந்து போரிடுகின்றனர்; குறி தவறாது அம்பு எய்கின்றனர். இத்தகு மக்களுக்கு அவர்களுக்கு உரிய உரிமை கருவூலத்தில் உண்டு” என்று கூறி அவர்களின் வாயடைத்தார்.
தோல்வியின் பாதிப்பே தெரியாத வகையில் படையின் பலம் மீட்டெடுக்கப்பட்டது. புத்துணர்ச்சியுடன், புது பலத்துடன் நூருத்தீன் நிமிர்ந்து எழுந்து நிற்க, பரங்கியர்கள் போர் நிறுத்த சமாதானம் பேசித் தூது வந்தனர். தயக்கமே இன்றி நூருத்தீன் அதை அப்படியே நிராகரித்தார்.
நூருத்தீனின் இறை பக்தி, தொழுகை, நோன்பு, ஆகியனவற்றைக் கேள்விப்பட்டு. சிரியாவிலும் மெஸப்பட்டோமியாவிலும் இருந்த உலமாக்கள், மார்க்க வல்லுனர்கள், இஸ்லாமிய ஆன்மிகவாதிகள் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவு பெருகியிருந்தது. பெருமளவில் அவர்களும் நூருத்தீனின் படையில் வந்து இணைந்தனர். மட்டுமின்றி, நூருத்தீனின் திட்டத்துக்குப் பிரச்சாரச் செயல் வீரர்கள் ஆனார்கள். நலிவுற்று, விரக்தியுற்றுக் கிடக்கும் முஸ்லிம்களிடம் ஜிஹாது வேட்கையைத் தீவிரப்படுத்தும் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலுவைப்படையினரின் வெறி, முஸ்லிம்களின் நிலங்களைப் பறித்து ஆக்கிரமித்து ஆட்சி அமைத்துவிட்ட பரங்கியர்கள் மக்களுக்கு இழைக்கும் தீமைகள், கொடூரங்கள், ஜெருசலத்தை மீட்க வேண்டிய கடமை ஆகியனவற்றை அவர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கச் சேர்க்க மக்கள் மனத்தில் ஜிஹாது வேட்கை தீயாய்ப் பரவியது.
இராக், ஜஸீரா பகுதிகளிலிருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் ஜிஹாதுக்குப் படை திரட்டும்படி நூருத்தீன் தகவல் அனுப்பியதும் தன்னலம் பிரதானமாக இருந்தவர்களும்கூட நூருத்தீன் மீதிருந்த பெருமதிப்பால், படையில் இணையும்படி ஆனது. பரங்கியர்களுக்கு எதிரான படையெடுப்பில் பங்குபெற அமீர் ஒருவருக்கு அழைப்பு விடுத்துத் தகவல் அனுப்பினார் நூருத்தீன்.
“நான் நூருத்தீனிடம் விரைந்து சென்றுவிட வேண்டும். இல்லை என்றால், அவர் எனது அதிகாரத்தையும் ஆட்சியையும் எளிதில் பிடுங்கிவிடுவார். மக்களுக்கும் இமாம்களுக்கும் அவரது கடிதங்கள் ஏற்கெனவே வந்துவிட்டன. அவர்களை இறைவனிடம் இறைஞ்சும்படியும் முஸ்லிம்களை ஜிஹாதுக்கு ஊக்குவிக்கும்படியும் எழுதியிருக்கின்றார். இந்த நொடி அவர்கள் தங்கள் சீடர்களுடனும் நண்பர்களுடனும் நூருத்தீனின் கடிதங்களைப் படித்துவிட்டு, விம்மி அழுது என்னைச் சபித்தபடி உள்ளனர். அச்சாபங்களிலிருந்து என்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டுமெனில் நான் அவரது அழைப்புக்குச் செவிசாய்த்தே ஆக வேண்டும்” – வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர், அந்த அமீரின் முடிவைக் குறித்து வைத்துள்ள நிகழ்வுகளுள் ஒன்று இது.
விளைவாக, சிரியா, மோஸூல், தியார் பக்ரு, ஹிஸ்னு கிஃப்ரு, மர்தின் மாநிலப் படைகள் ஒன்றிணைந்த வலிமை வாய்ந்த, வியக்க வைக்கும் எண்ணிக்கையிலான பெரும் படை திரண்டது.
1164 ஆம் ஆண்டு பிறந்தது. அந்த ஆண்டு, ‘அர்தா ஆண்டு (the year of Artah)’ என்று பெயர் பெற்றது. காரணம்? அந்த ஆண்டு நூருத்தீன் அர்தாப் போரில் நிகழ்த்திக் காட்டிய பிரம்மாண்ட வெற்றி!
oOo
அந்தாக்கியாவினர் வசம் இருந்த ஹாரிம் நகரை நோக்கி அணிவகுத்தார் நூருத்தீன். அந்நகர் முற்றுகை இடப்பட்டது. தாக்குதல் தொடங்கியது. நூருத்தீனின் படையெடுப்பை அறிந்திருந்த பரங்கியர்களும் முழு மூச்சுடன் போருக்கு முன்னேற்பாடுகளுடன் ஆயத்தமாகவே இருந்தனர். அந்தாக்கியாவின் மூன்றாம் பொஹிமாண்ட், திரிப்போலியின் மூன்றாம் ரேமாண்ட், மூன்றாம் ஜோஸ்லின், அர்மீனியாவின் தோரஸ், சிலிசியாவின் கிரேக்க ஆளுநர் ஆகியோரின் தலைமையில் 600 சேனாதிபதிகள் உள்ளடங்கிய 10,000 பேர் கொண்ட பரங்கியர் படை எதிர்த் தாக்குதலில் இறங்கியது.
நூருத்தீன் வியூகத்தை மாற்றினார். இலத்தீன் கிறிஸ்தவர்களின் குடியிருப்புகள் நிரம்பியிருந்த அர்தா பகுதிக்குத் தமது படையை நகர்த்தினார். அந்தாக்கியாவிலிருந்து தொலை தூரத்துக்கு எதிரியை இழுக்க வேண்டும் என்பதே அவரது திட்டம். பரங்கியர்களின் கூட்டணிப் படை தளர்ச்சியுடன் நெருங்கியது. திறந்த வெளியில் கடலென இருதரப்புப் படைகள். உயர்த்திப் பிடிக்கப்பட்ட வாள்கள், ஈட்டிகள், சிலுவைகள்; காற்றில் படபடக்கும் கொடிகள், பதாகைகள்; பாய்வதற்குக் காத்திருந்த குதிரைகளில் கவசம் தரித்த குதிரை வீரர்கள்; களத்தில் போர் அனல்!
முழக்கத்துடன் உக்கிரமாகத் தொடங்கியது யுத்தம். சுழன்றன வாள்கள்; பறந்தன அம்புகள்; உருண்டன தலைகள்; படர்ந்தது புழுதி. நூருத்தீன் வகுத்திருந்த திட்டப்படி ஒரு தருணத்தில் அவரது வலப்புற அணி போலியாகப் பின்வாங்கியது; ஓடியது. அதைக் கண்ட இலத்தீன் சேனாதிபதிகள் மகிழ்ச்சியில் குதித்து அந்தத் தூண்டிலில் விழுந்தனர். சற்றும் யோசிக்காமல் அவர்கள் முஸ்லிம் படைகளைப் பின் தொடர்ந்து ஓட, படையின் மையப் பிரிவிலிருந்து அவர்களைப் போதுமான தூரம் இழுத்து வந்தது உறுதியானதும் சடாரெனத் திரும்பியது முஸ்லிம்களின் அந்தப் படையணி. தனியாக மாட்டிய பரங்கியர் அணி அப்பொழுதுதான் விபரீதத்தை உணர்ந்தது. வாழைக் குலைகளைப் போல் அவர்களை வெட்டி வீழ்த்தியது முஸ்லிம்களின் படை. பேரழிவுக்கு உள்ளானார்கள் அந்தப் பரங்கியர்கள்.
அதே நேரத்தில் அங்குப் போரின் மையக் களத்திலும் முஸ்லிம்களின் கை ஓங்க ஆரம்பித்தது. சடசடவெனத் தரையில் வீழ்ந்தபடி இருந்தன பரங்கியர் தலைகள். அதைக் கண்டு துவண்டு, தலைமை ஏற்றிருந்த இலத்தீன் கிறிஸ்தவப் பெருந்தலைகள் பின்வாங்க முயன்றால், தம் பணியைத் திறம்பட முடித்த திருப்தியுடன் விரைந்து திரும்பி வந்த வலப்புற அணி அவர்கள் எதிரே தென்பட்டது. இடையில் வசமாகச் சிக்கிய எதிரிகளை வெகு நெருக்கத்தில் இரு புறத்திலிருந்தும் முஸ்லிம் படைகள் பேரிரைச்சலுடன் தாக்க, பரங்கியர்களின் உறுதி அத்துடன் முற்றும் குலைந்தது. முஸ்லிம் படைகள் அவர்களைச் சுற்றிச் சூழ, நடுவில் சிக்கிய அவர்கள் தங்களது தோல்வியை உணர்ந்தார்கள். அப்படியே சரணடைந்தார்கள்.
இலத்தீன் கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர் ஒருவர் அன்று அவர்கள் தோற்ற அவலத்தை மிகுந்த கசப்புடன் எழுதி வைத்துள்ளார்:
‘முஸ்லிம்களின் வாள்கள் பரங்கியரைத் துண்டாடின. பலிபீடத்தில் வெட்டப்படுபவர்களைப் போல் அவர்கள் சிதைந்தனர். தங்களது கௌரவத்தை இழந்து, தங்களது ஆயுதங்களை வீசி எறிந்துவிட்டு, அவர்கள் உயிர் பிச்சை வேண்டினர். தோரஸ் களத்தை விட்டு ஓடினார். பொஹிமாண்ட், ரேமாண்ட், ஜோஸ்லின் அனைவரும் சரணடைந்தனர்; அவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, அலெப்போவுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்; சிறையில் அடைக்கப்பட்டனர்’.
இந்த இனிய வெற்றி பொகியா போரின் தோல்விக் கசப்பை மட்டும் களையவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பரங்கியர்களின் பெருந்தலைகளைக் கைதிகளாக்கி நூருத்தீனுக்குச் சிறந்த வெகுமானமாக அளித்திருந்தது. ஹாரிமின் உதவிக்கு வந்தவர்களை அர்தாவுக்கு இழுத்துத் துவைத்துச் சாத்திவிட்டு, நூருத்தீன் அடுத்தச் சில நாட்களில் தம் படையினருடன் ஹாரிம் திரும்பினார். மீட்பார் இனி யாருமில்லை என்பதை உணர்ந்த ஹாரிம் அப்படியே சரணடைந்தது. அன்றிலிருந்து ஹாரிம் நகரம் முஸ்லிம்களின் நிரந்தர வாழ்விடமாகியது.
இந்த வெற்றிக்குப் பிறகும்கூட அந்தாக்கியாவைக் கைப்பற்றுவதை நூருத்தீன் தவிர்த்தார். அந்தாக்கியாவில் தாம் நுழைய முயன்றால் பைஸாந்திய சக்கரவர்த்தி படையுடன் சிரியாவுக்குள் நுழைவார்; தமது ஜெருசல இலக்கிற்கு அவருடனான பகைமை தடையாக அமைந்துவிடும்; இரு தரப்பில் எதிரிகளைச் சந்திக்க நேரிடும் என்பதால் அந்தாக்கியா மட்டும் அவரது திட்டத்திற்குள் இடம் பிடிக்காமலே தப்பித்தது.
நூருத்தீன் தாமே கூறியதை வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர் எழுதி வைத்துள்ளார்: ‘பைஸாந்திய சக்கரவர்த்தி எனக்கு அண்டை மாநிலத்தவராக வந்து அமர்வதைவிட பொஹிமாண்ட் ஆட்சியாளராகத் தொடர்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’. இதை மனத்தில் கொண்டோ என்னவோ, மிக அதிகப் பணயத் தொகையைப் பெற்றுக்கொண்டு அந்தாக்கியாவின் மூன்றாம் பொஹிமாண்டை மட்டும் விடுவித்துவிட்டார். மற்றவர்களிடம் பேரத்திற்கான உரையாடல்கூட நடைபெறவில்லை. அவர்கள் போர்க் கைதிகளாகச் சிறையில் பூட்டப்பட்டனர்.
அடுத்து, அவரது கவனம் குவிந்த திசை ஜெருசலம் அமைந்திருந்த தெற்கு. முக்கிய நகரமான பன்யாஸ், போதுமான காவல் இன்றிக் கிடந்தது. அதன் ஆட்சியாளராக இருந்த தோரனின் ஹம்ஃப்ரே (Constable Humphrey of Toron) புதிய ஜெருசல ராஜா அமால்ரிக்குடன் சேர்ந்துகொண்டு எகிப்து விவகாரங்களில் மும்முரமாக இருந்தார். நூருத்தீன் தம் படை பரிவாரங்களுடனுடம் இயந்திரங்களுடனும் பன்யாஸை அடைந்து முற்றுகையிட்டார். ஒரு பக்கம் தொடர்ந்து கவண் தாக்குதல், மறுபுறம் கோட்டையின் அஸ்திவாரத்தைச் சிதைப்பவர்களின் குழி தோண்டும் பணி என்று வேகவேகமாகக் காரியங்கள் நிகழ்ந்தன. பன்யாஸின் தளபதிகளும் விலைக்கு அடிபணிந்தனர். அடுத்தச் சில நாட்களில் பன்யாஸ் நூருத்தீனிடம் சரணடைந்தது. ஹாரிமைப்போல் இந்நகரமும் முஸ்லிம்களுக்கு நிரந்தரமான வெற்றியானது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ‘சாஸில் நுஃப்’ எனும் பகுதியில் இருந்த இலத்தீனியர்களின் கோட்டை அழிக்கப்பட்டு, பரங்கியர்கள் வசமிருந்த ஃபலஸ்தீனுக்குத் திறக்கப்பட்டது புதிய பாதை.
இந்த வெற்றிகள் யாவும் நூருத்தீனின் ஆளுமைத் திறனை அதிகப்படுத்தின. பரங்கியர்கள் மீது ஆண்டுக் கப்பம் விதிக்கப்பட்டது. வருவாயில் பங்கு அளிக்கும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டன. பேச்சுக்கு இடமின்றி நூருத்தீன் பரங்கியர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவானார். சிலுவைப்படை கிறிஸ்தவர்களுக்குப் பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது, ‘துறவி அரசர்’ நூருத்தீனின் பிம்பம்.
இங்கு இவை நிகழ்ந்த நேரத்தில், அங்கு எகிப்தில் முக்கியமான அரசியல் களேபரங்கள் நடைபெற்றன. நூருத்தீனின் பிரதிநிதியாக அதன் முன்னணியில் வீற்றிருந்தார் அஸாதுத்தீன் ஷிர்குஹ். அவருடன் தளபதியாக இணைந்திருந்தார் இளைஞர் ஒருவர். தம்முடைய பிற்காலச் சாதனைக்கு அச்சமயம் அங்கு முன்னுரை எழுதிக்கொண்டிருந்தார் அந்த இளைய தளபதி ஸலாஹுத்தீன் அய்யூபி.
(தொடரும்)