சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 82

Share this:

82. டமாஸ்கஸ் – ஓர் இனிய தொடக்கம்

மாஸ்கஸுக்குத் தெற்கே 135 கி.மீ. தொலைவில், ஜோர்டான் நாட்டின் எல்லைக்கு அண்மையில் உள்ளது புஸ்ரா. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம்முடைய இளைய பருவத்தில் தம் பெரியப்பா அபூதாலிபுடன் வணிகப் பயணமாக சிரியா சென்றிருந்தபோது, அவர்களுடைய நபித்துவ அடையாளத்தைக் கண்டறிந்து அபூதாலிபிடம் முன்னறிவித்தார் கிறிஸ்தவத் துறவி பஹிரா. அது நிகழ்ந்த பட்டணம்தான் புஸ்ரா.

பண்டைய காலப் பட்டணம் அது. பைஸாந்தியர்களின் ஆட்சியின்போது அவர்களுடைய மாகாணத்தின் வளமான தலைநகரமாகத் திகழ்ந்தது. அங்கு இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ரோமர்களின் காட்சியரங்கம் (The Roman Theatre at Bosra) மிகவும் பிரசித்தம். கி.பி. 634ஆம் ஆண்டு அந்நகரை பைஸாந்தியர்களிடமிருந்து கைப்பற்றினார் காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு. அன்றிலிருந்து டமாஸ்கஸின் புறக்காவல் நகரமானது புஸ்ரா.

கி.பி. 1174ஆம் ஆண்டு அந்நகரின் ஆளுநராக ஆட்சியில் இருந்தவர் புஸ்ராவின் ஷம்சுத்தீன். அங்கு அக்டோபர் மாதம் படையொன்று வந்திருந்தது. அதை சிரியாவுக்கு அழைத்தவர்களுள் ஷம்சுத்தீனும் ஒருவர். படையினரை வரவேற்றவர் அவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். படை மேற்கொள்ளவிருக்கும் பெரும் பணியுடன் ஒப்பிட்டால் அவர்கள் வெகு சொற்பம். அவர்களின் தலைமை காழீயிடம் விசாரித்தார் ஷம்சுத்தீன்.

“உங்களுடன் வேறு படை ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. சிரியாவோ பரந்து விரிந்த நிலம். இப்படிப்பட்ட சிறிய படையுடனெல்லாம் இதை ஆக்கிரமிக்க முடியாது. ஒரு மணி நேரம் நீங்கள் தாக்குப் பிடித்தாலே அதிகம்; நாட்டுப்புறத்தில் உள்ள பதுஊக்களே போதும் உங்களை வீழ்த்துவதற்கு. உங்கள் தலைவர் அதிகளவு பணம் கொண்டுவந்திருந்தால், அதை வாரி வழங்கியாவது சிரியாவை வசப்படுத்தலாம்”

அதற்குக் காழீ, “நிறையப் பணம் உள்ளது. 50,000 தீனார்” என்று பதிலளித்தார்.

அத்தொகை யானைப் பசிக்குச் சோளப்பொரி. “அழிந்தீர்கள், எங்களையும் அழித்தீர்கள்!” என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார் ஷம்சுத்தீன். உண்மையில் நிலவரம் மேலும் மோசம். படைத் தலைவர் சுல்தான் ஸலாஹுத்தீன் வெறும் 10,000 தினார்களை மட்டுமே கொண்டு வந்திருந்தார். அவருடன் வந்திருந்தவர்கள் 700 குதிரைப் படையினர். டமாஸ்கஸை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவரது படை வலிமை அவ்வளவே.

எனில் ஸலாஹுத்தீனின் திட்டம்?

oOo

இப்னு முகத்தம் மனஉளைச்சலில் இருந்தார். நூருத்தீனின் மைந்தர் இள வயது மன்னர் அஸ்-ஸாலிஹ் அலெப்போவில் குமுஷ்திஜினின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டார். நூருத்தீனின் படைவீரர்களும் பிரிந்து பெரும்பாலானோர் அலெப்போவின் பக்கம் சாய்ந்துவிட்டனர். மூன்றில் ஒரு பங்கு வீரர்கள் மட்டுமே டமாஸ்கஸில் இப்னு முகத்தமிடம் மீந்திருந்தனர். அதனால் குமுஷ்திஜினின் தூண்டுதலில் அலெப்போவிலிருந்து படையொன்று எப்பொழுது வேண்டுமானாலும் கிளம்பி வந்து பாயக்கூடிய ஆபத்து டமாஸ்கஸுக்கு இருந்தது. மோஸுலில் உள்ள ஸைஃபுத்தீனை நட்பு அணியாக ஆக்கிக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பலனில்லை. மாறாக அலெப்போவும் மோஸுலும் இணக்கமாகி விட்டன. அது ஒருபுறம் என்றால், மறுபுறம் பரங்கியர்களின் அச்சுறுத்தல். ஏற்பட்டுள்ள அரசியல் புயலில் இப்படியே பாதுகாப்பற்ற நிலையில் எப்படி நீடிப்பது, எத்தனை நாள்தான் தாக்குப் பிடிப்பது?

அமீர்களை அழைத்து ஆலோசித்தார் இப்னுல் முகத்தம். ‘அலெப்போவில் நிலைமை சற்றுச் சீரானதும், மன்னர் அஸ்-ஸாலிஹைத் தம்முடன் அழைத்துக்கொண்டு குமுஷ்திஜின் நம் மீது படையெடுத்து வரத்தான் போகிறார். அங்கு இப்னுல் தயா சகோதரர்களுக்கு அவர் இழைத்த அநீதியே நமக்கும் விதியாகும். மோஸுலில் உள்ள ஸைஃபுத்தீனை அழைத்தோம். ஆனால் மோஸுலும் அலெப்போவும் நட்பாகிவிட்டன. இனி அவர்களின் கூட்டணி நம் மீது படையெடுக்க ஏது தடை?”

அவர்களுக்குத் தென்பட்ட ஒரே வழி, ஸலாஹுத்தீனிடம் டமாஸ்கஸை ஒப்படைப்பது. முடிவெடுத்தார்கள்; அவரை டமாஸ்கஸுக்கு வரவேற்றுக் கடிதம் எழுதி அனுப்பினார்கள். நார்மன்களின் படையெடுப்பு, அஸ்வானில் தோன்றிய கிளர்ச்சி இரண்டையும் வெற்றிகரமாக அடக்கி முடித்துவிட்டு, சிரியாவைப் பற்றிய கவலையைத் தொடர்ந்துகொண்டிருந்த ஸலாஹுத்தீனிடம் சரியான தருணத்தில் வந்து சேர்ந்தது அம்மடல். தமது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்குத் தடங்கலும் இல்லை; தயங்குவதற்கும் இனி வேலை இல்லை என்றானது அவருக்கு. வெகு துரிதமாக காரியத்தில் இறங்கினார். எகிப்தின் ஆட்சிப் பொறுப்பைத் தம் தம்பி (முதலாம் ஆதில்) ஸைஃபுத்தீன் அபூபக்ருவிடம் ஒப்படைத்தார். 700 குதிரைப்படையினரைத் திரட்டினார். காழீ அல்-ஃபாதில், தம்பி ஸைஃபுல் இஸ்லாம் துக்தகீன், அண்ணன் (நூருத்தீன் ஷாஹின்ஷாவின்) மகன்கள் தகீயுத்தீன் உமர், இஸ்ஸத்தீன் ஃபாரூக் ஷா ஆகியோரை அழைத்துக்கொண்டார். பையில் 10,000 தீனார்கள் ரொக்கம்.

அக்டோபர் 1174. கெய்ரோவிலிருந்து சிரியாவை நோக்கிக் கிளம்பினார் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி. புழுதியைக் கிளப்பிப் பறக்கவிட்டு விரைந்தன குதிரைகள். அவர் முதலில் புஸ்ராவை அடைந்த போது விரைவான அவரது நடவடிக்கைகள் அம்மக்களுக்கு அளித்த வியப்பைவிட அவரது படையணியின் எண்ணிக்கை ஏற்படுத்திய அதிர்ச்சியே மிக அதிகம். தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார் புஸ்ராவின் அமீர் ஷம்சுத்தீன்.

மிகவும் சிந்தித்து, திட்டமிட்டு, நிதானமாக காரியமாற்றும் ஸலாஹுத்தீனின் குணத்திற்கு இது நேர்மாற்றமாகத் தெரியலாம்; சிரியாவின் கவர்ச்சி அவரை மயக்கிவிட்டதோ என்று கூடத் தோன்றலாம். ஆனால், அவை ஸலாஹுத்தீனின் ஆழமான தீர்மானங்களைப் பற்றிய தவறான மதிப்பீடாகவே அமையும். உண்மையில் அது துணிவான மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கை என்று பின்னர் நிகழ்ந்தவற்றின் அடிப்படையில் அதை விளக்குகின்றார் வரலாற்று ஆசிரியர் A.R. ஆஸம்.

சிரியாவில் மக்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று ஸலாஹுத்தீனுக்குத் தெரியாது. அது எப்படி இருப்பினும் நூருத்தீனின் இலட்சியத்தைத் தொடர்பவராகத் தம்மைக் கருதிய அவர், அதை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டியது அவசியமாக இருந்தது. அவரது குறிக்கோள் வலிமையான இராணுவத்தைக் கொண்டு ஸெங்கி வம்சத்தைத் தோற்கடித்து ஒழிப்பதன்று. மாறாக நூருத்தீன் படையினரின் மனங்களை வெல்வது; அவர்களது ஆதரவைப் பெறுவது. அவர்கள் வெகு முக்கியமானவர்கள், நூருத்தீனுக்கும் அவருடைய மகனுக்கும் தீவிரமான விசுவாசத்துடன் இருப்பவர்கள். தம்மை நம்பி அவர்கள் இணைய வேண்டுமெனில் உள்ளன்போடு அவர்கள் மாற வேண்டும். அதற்கு அணுசரனையும் அன்பும் பரோபகாரமுமே சிறந்த ஆயுதங்கள் என்று திட்டமிட்டார் ஸலாஹுத்தீன்.

அடுத்தது, சிரியாவின் மக்கள் தம்மை அயல்நாட்டு ஆக்கிரமிப்பாளரைப் போல் கருதி விடக்கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். தாம் அங்கு நுழைவது வெளிநாட்டுக்குச் சென்ற மகன், தன் வீட்டுக்குத் திரும்புவதைப் போல் அமைய வேண்டும் என்பதும் அவர் விருப்பம். சண்டையின்றி, இரத்தமின்றி அமைதியான அணிவகுப்பாக டமாஸ்கஸிற்குள் நுழைந்தால் அமீர்களும் வீரர்களும் மற்றவர்களும் தம் பக்கம் தாமாக மனமுவந்து வந்து இணைவார்களல்லவா? அவருக்கு ஏராள தன்னம்பிக்கை. அது வீண்போகவில்லை. அமீர்களும் காவற்படைத் தளபதிகளும் சாரிசாரியாக அவரது படையணியில் இணைந்தனர். அஸாதுத்தீன் ஷிர்குஹ்வின் மகன் நாஸிருத்தீனும் அவர்களுள் ஒருவர்.

oOo

எகிப்துக்குக் கடிதம் அனுப்பிய பின் இப்னுல் முகத்தம் தம் ஆட்களை நகருக்குள் அனுப்பிச் சில முன்னேற்பாடுகளைச் செய்தார். ஸலாஹுத்தீனைப் பற்றி நற்செய்திகளைப் பரப்புவது; எதிர்பார்ப்பைக் கிளறுவது; மக்களிடம் உற்சாகத்தைத் தூண்டுவது அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணி. ஆனால் அதற்கு முன்பே குடிமக்கள் மத்தியில் ஸலாஹுத்தீனின் மீது மதிப்பும் அபிமானமும் அதிகரித்திருந்தன. அண்மையில் அலெக்ஸாந்திரியாவில் நார்மன்களின் கடற்படையை அவர் தோற்கடித்து விரட்டிய செய்தி பரவி, அதுவும் தன் பங்கிற்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. விளைவாக –

ஹி. 570 ரபீஉல் ஆஃகிர் மாத இறுதியில் (அக்டோபர் 1174) டமாஸ்கஸினுள் வெற்றி வீரராக அடியெடுத்து வைத்தார் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி. தனது வாயில்களை அகலத் திறந்து அவரை ஆரத் தழுவி வரவேற்றது அந்நகரம். அவர் தம் இள வயதில் ஓடியாடி வளர்ந்த நகரில் நிகழ்ந்தது சுல்தானாக அவரது இராஜப் பிரவேசம்.

முதல் காரியமாக உமையாத் பள்ளிவாசலுக்குச் சென்ற ஸலாஹுத்தீன் அங்குத் தொழுகையை நிறைவேற்றினார். உமய்யாத் கிலாஃபத்தின் போது டமாஸ்கஸ் நகரம் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட பின், கலீஃபா முதலாம் அல்-வலீதின் ஆட்சியில் கி.பி. 715ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் அது. கட்டடக்கலையில் சிறந்தோங்கும் அந்தப் பள்ளிவாசல் சிரியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு வரலாற்று ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் மிகவும் நெருக்கமான ஒன்று. இன்றும்கூட, டமாஸ்கஸைக் கைப்பற்றுபவர்கள் அந்தப் பள்ளிவாசலில்தான் தங்களது வருகையை முதலாவதாகப் பதிவு செய்கின்றார்கள்.

அன்றிரவு தம் தந்தை வாழ்ந்த இல்லத்திற்குச் சென்று தங்கினார் ஸலாஹுத்தீன். குடிமக்களின் மனத்தில் ‘அந்நியரல்லர் இவர் நமக்கு’ என்ற எண்ணத்தை அக்காரியங்கள் பதித்தன. அவரிடம் நகரின் பொறுப்பை ஒப்படைத்தார் இப்னுல் முகத்தம். கோட்டை மட்டும் ரைஹான் என்ற அலியின் வசம் நீடித்தது.

நூருத்தீனுக்கு ஆலோசகராக இருந்த காழீ கமாலுத்தீன், முன்னர் இப்னுல் முகத்தமுக்கும் அமீர்களுக்கும் ஸலாஹுத்தீனைப் பற்றி அறிவுறுத்தினாரல்லவா, அவரது இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார் ஸலாஹுத்தீன். மாலிக் அஸ்-ஸாலிஹின் மம்லூக் நான். அவருக்கு உதவவும் பணியாற்றவும் அவரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்து அளிக்கவும் மட்டுமே நான் வந்துள்ளேன். பரங்கியர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது வெகு முக்கியம் ’ எனத் தமது நோக்கங்களைத் தெரிவித்தார். தாம் ஓர் ஆக்கிரமிப்பாளரல்லர் என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிவித்தார்.

‘மனநிறைவு அடையுங்கள், ஆணையும் உங்களுடையதே, நகரமும் உங்களுடையதே’ வாழ்த்தினார் காழீ கமாலுத்தீன்.

அரசு நிர்வாகம், அறக்கட்டளைகள் ஆகிய அனைத்தின் அதிகாரபூர்வ குரலாகத் திகழ்ந்தார் அந்தக் காழீ. அவரது வாழ்த்து டமாஸ்கஸ் குடிமக்கள் அவருடைய ஆணைக்கு முற்றிலும் அடிபணிய வேண்டும் எனும் அறிவிப்பைத் தெளிவாகக் கடத்தியது. அவரது செல்வாக்கை ஸலாஹுத்தீனும் நன்கு அறிந்திருந்தார். அதனால், ‘கோட்டையை ஒப்படைக்கச் சொல்லுங்கள்’ என்று அந்த காழீயை ரைஹானிடம் தூது செல்லக் கோரினார். ஆயுத பலத்தைப் பிரயோகிக்காமல் தவிர்ப்பதில் அவருக்கு மிகுந்த கவனம் இருந்தது.

கமாலுத்தீன், ரைஹானைச் சந்தித்தார்; எடுத்துச் சொன்னார்; ஒப்புக்கொள்ள வைத்தார். ஸலாஹுத்தீனிடம் கோட்டையை ஒப்படைத்தார் ரைஹான். கருவூலம் டமாஸ்கஸின் அதிகாரபூர்வ ஆட்சியாளரான ஸலாஹுத்தீன் வசமானது. ‘உங்கள் வசம் சொற்பமே தீனார்களா?’ என்று வியந்தாரே அமீர் ஷம்சுத்தீன், அது மாறி நிறைந்தது நிதி. ஏராளமாக வெளிப்பட்டது ஸலாஹுத்தீனின் தாராளம். மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வினியோகிக்கப்பட்ட நிதியினால் அவர்களுக்குச் சொல்லி மாளாத மகிழ்ச்சி.

நூருத்தீனின் மறைவுக்குப் பிறகு அவர் தடை செய்திருந்த இஸ்லாத்திற்குப் புறம்பான வரிகள், அனாச்சாரங்கள் புதிய ஆட்சியாளர்களால் மீண்டும் அமல்படுத்தப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் உடனே தடை செய்தார் ஸலாஹுத்தீன். மூடப்பட்டிருந்த சந்தைகள் திறக்கப்பட்டன. ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன் இரு நாள்கள் அவர் நேரடியாக மக்களைச் சந்தித்துக் குறை கேட்பது நடைமுறையானது. குறைகளைக் களைய நிவர்த்தி, நிவாரணம் முடுக்கி விடப்பட்டன. நீதி நிலைநாட்டப்பட்டது. அவை யாவும் குடிமக்களிடம் அவர் மீதான மதிப்பையும் அபிமானத்தையும் மளமளவென்று உயர்த்தின.

இக்பால் என்ற அலி, கிழக்கு உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்தவர். நூருத்தீனின் ஆலோசனைக் குழுவில் இருந்தவர். அவருக்கு இப்பொழுது வேலை தேவைப்பட்டது. ஸலாஹுத்தீனை அணுகி அவர் தமது தேவையைக் கூற, தூதராகவும் ஆலோசகராகவும் பணியாற்ற ஆணையிடப்பட்டது. மான்கலான் என்றோர் அமீர். குர்தியர். அவரிடம் நிலங்கள் இருந்தன. ஆனால் போதிய வருமானம் இன்றி நொடித்துப் போயிருந்தார். ’உதவுங்கள் ராஜாவே!’ என்று அவர் விண்ணப்பத்தை நீட்ட, அவருக்குத் தேவையான உதவிகள் வழங்கியதோடு மட்டுமின்றி, அவருடைய இராணுவத் திறமையை அறிந்து தம்முடைய பாதுகாவலர் குழுவிலும் பணிக்கு அமர்த்தினார் ஸலாஹுத்தீன். அந்த இரக்கம் வீண் போகவில்லை. பாதுகாவலராக மான்கலான் பின்னர் ஆற்றிய சாகசம் ஒன்று பெருமைக்குரியதாய் நிலைத்துப் போனது. அதைப் பின்னர் உரிய நேரத்தில் பார்ப்போம்.

ஸலாஹுத்தீன் மக்களிடம் உரையொன்று நிகழ்த்தினார். அதன் சாராம்சம் –

”அல்லாஹ் டமாஸ்கஸை ஆயுதப் பிரயோகத்திற்கான தேவையின்றி அமைதியான வழியில் எம் வசமாக்கினான். அவனது கருணையால் பாவம் ஏதும் நிகழ்வதற்கான விதியாக இந்நகர் எமக்கு ஆகாமற் போனது. ‘நடந்தது நடந்துவிட்டது மன்னிப்போம்’ எனச் சிலர் சொல்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், தகாத செயல்கள் எதுவும் நிகழவில்லை.

காற்றில் பறக்கும் உமி, விடியலில் நீங்கும் இருள், மறைந்துவிடும் கடலின் நுரை. அதைப்போலவே பொய்மை ஒரு நாள் நிச்சயம் தோற்கும். உண்மையே உறுதியாக வேரூன்றியிருக்கும். தீர்ப்பு அளிப்பதில் வாளின் வாய்மை கூர்மை என்பதை அறிவீர்கள். மன்னிப்பு என்பது இறைபக்திக்கு நெருக்கமானது, அதுதான் மிகப் பொருத்தமான வழி என்று யாம் நம்பிக்கை கொள்கின்றோம். எனவே, இரத்தம் சிந்தப்படுவதைத் தடுத்தோம்; உள்ளங்களுக்கு நிம்மதியை அளித்தோம்; ஆட்சியைத் தக்க வைத்தோம். வாள்களை உறைகளுக்குள் அடைத்து வைத்து, அவை ஒன்றையொன்று தாக்குவதைத் தவிர்த்தோம். காற்றை அதன் போக்கிற்கு (குறுக்கிடாமல்) விட்டுவிட்டோம். அது தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கும். பகைமையின் நெருப்புக்கு ‘ஓ நெருப்பே, குளிர்ச்சியாகி விடு’ என்று கூறிவிட்டோம்.

நூருத்தீன் வீட்டின் நிலையைப் பார்த்தோம் (அல்லாஹ் அதை மகிமைப்படுத்தட்டும்). அவ்வீட்டின் ஒளிகள் அணைந்துவிட்டன, அதைப் பற்றிய நினைவு ஏறக்குறைய மங்கிவிட்டது என்பதைக் காண்கின்றோம்”

நான் நூருத்தீனின் இலட்சியத்தைத் தொடர வந்துள்ளேன். ஜெருசலத்தை மீட்பது என் தலையாயப் பணி. ஜிஹாதிலிருந்து பின்வாங்குவது குற்றம். அதற்கு எவ்விதமான மன்னிப்பும் இல்லை என்ற அறிவிப்பு அவரிடமிருந்து தெளிவாக வெளிப்பட்டது. அதே நேரத்தில், தாம் நூருத்தீனின் மகன் இளம் மன்னர் ஸாலிஹுக்குக் கட்டுப்பட்ட மம்லூக் மட்டுமே என்ற விசுவாசப் பிரகடனமும் அவரிடமிருந்து தொடர்ந்து வெளிப்பட்டு வந்தது. ஜும்ஆக் குத்பாக்களில் மாலிக் அஸ்-ஸாலிஹின் பெயரே இணைக்கப்பட்டிருந்தது. அதுவே தொடர்ந்தது.

அவை யாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தது அலெப்போ. அதை நோக்கித் திரும்பியது சுல்தான் ஸலாஹுத்தீனின் பார்வை.

(தொடரும்)


Share this: