சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 81

Share this:

81. சிசுலியின் படையெடுப்பு

த்தாலி நாட்டின் தெற்கே அதன் கால் கட்டை விரலையொட்டி அமைந்துள்ளது சிசுலி தீவு. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அரபியர்கள் பைஸாந்தியர்களிடமிருந்து அதைக் கைப்பற்றி, அடுத்து 250 ஆண்டுகள் அங்கு ஆட்சி செலுத்தினர். அவர்களிடமிருந்து அதை மீட்க, 1038ஆம் ஆண்டு பைஸாந்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்தியர்கள் கிரேக்கத் தளபதி ஜார்ஜ் மணியேஸ் (George Maniakes) தலைமையில் படையெடுக்கத் தொடங்கியிருந்தனர். அந்தப் படையில் தங்களுக்குத் துணையாக நார்மன் கூலிப்படைகளையும் சேர்த்திருந்தனர்.

யார் இந்த நார்மன்கள்?

பத்தாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் வடமேற்கே சிற்றரசு ஒன்று அமைந்திருந்தது. பிரெஞ்சு மொழியில் டச்சி (Duchy) எனப்படும் அந்தச் சிற்றரசில் குடியிருந்த மக்கள்தாம் நார்மன்கள் (Normans). அவர்களின் பெயர் அந்தச் சிற்றரசின் பெயருடன் இணைந்து நார்மன்டியின் டச்சி (Duchy of Normandy) என்றானது. அந்த நார்மன்கள்தாம் கூலிப்படையாக பைஸாந்தியர்களுடன் இணைந்தனர்.

1043ஆம் ஆண்டு பைஸாந்தியர்களுக்குள் சச்சரவு ஏற்பட்டு, அது உள்நாட்டுப் போராகி, அந்தச் சண்டையில் பலியானார் கிரேக்க தளபதி ஜார்ஜ் மணியேஸ். அத்துடன் பைஸாந்தியப் படை தன் நோக்கத்தைக் கைவிட்டு சிசுலியை விட்டுப் பின் வாங்கி வெளியேறியது. ஆனால், கூலிப்படையாகப் போருக்கு வந்திருந்த நார்மன்கள், ‘மிச்ச வேலையை முடித்து, மொத்தத் தீவையும் நமதாக்குவோம்’ என்று ஆட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களது நோக்கத்துக்கு அருளாசி புரிந்தது போப்பின் திருச்சபை. சந்தர்ப்பக் கேடாக, சிசுலி முஸ்லிம் ஆட்சியாளர்கள் இடையே பிளவு ஏற்பட்டு, ஒற்றுமை குலைந்து, அவர்கள் பலவீனம் அடைந்திருந்ததும் நார்மன்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்து விட்டது. விளைவாக, 1091ஆம் ஆண்டு நார்மன்கள் வசமானது சிசுலி; உருவானது அவர்களது சிசுலி இராஜாங்கம்.

கூடவே வட ஆப்பிரிக்காவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள –இன்றைய துனிசியா அல்ஜீரியா, லிபியா நாடுகளைச் சேர்ந்த– பல நகரங்களும் அவர்களது போர் வேட்கைக்குத் துணைப் பரிசுகளாக ஆயின. அவற்றைக் கைப்பற்றித் தனக்குக் கீழ்ப்படிந்த ஆட்சியாளர்களை அமர்த்தியது சிசுலி இராஜாங்கம். பின்னர் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொராக்கோவில் உருவான அல்மொஹாத் முஸ்லிம் இராஜாங்கம் வட ஆப்பிரிக்கப் பகுதிகளை நார்மன்களிடமிருந்து மீட்டது தனி வரலாறு.

சிறிய ஆட்சி வர்க்கமாகத்தான் நார்மன்கள் உருவானார்கள். ஆனால் கொடூரம் அவர்களது மிகப் பெரும் அடையாளமாக ஆகிவிட்டது. அதற்கும் அவர்களது வளர்ச்சிக்கும் வினையூக்கியாக இருந்தது போப்பின் திருச்சபை. சிசுலியிலும் இத்தாலியின் தெற்குப் பகுதிகளிலும் தங்களது ஆதிக்கம் உருவானதும் நார்மன்களின் மூத்த தலைவரான ராபர்ட் குயிஸ்கார்ட் (Robert Guiscard) போப் இரண்டாம் நிக்கோலஸின் (Pope Nicholas II) அங்கீகாரத்தைப் பெற நினைத்தார். அதிரடி அறிவிப்புடன் அவரை அணுகினார். அது, ‘சிசுலியில் உள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்’.

அதைக் கேட்டுத் திருச்சபைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒன்று, இத்தாலியின் தெற்கே நுழைந்து விட்ட நார்மன்களால் ரோமில் தனது இருப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் திசை திருப்பலாம். அடுத்தது, கிறிஸ்துவர்களின் சிலுவைப்படைக்கு அவர்களது ஒத்தாசையைப் பெறலாம். அதனால் தயக்கமின்றித் தமது அங்கீகாரத்தை அளித்தார் போப் இரண்டாம் நிக்கோலஸ். அதன் அடையாளமாகப் புனிதப் பதாகை ஒன்றையும் ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். ரோமில் உள்ள தமக்கு அன்பளிப்புகளை அனுப்புவதை விட, கிறிஸ்துவுக்காக முஸ்லிம்களின் மீது நிகழ்த்தும் போர் வெற்றி முக்கியம் என்ற தகவல் ஒன்றும் கூடவே சென்றது. கொடூரத்திற்கு அங்கீகாரமும் ஆசீர்வாதமும் கண்ணசைவும் கிடைத்தால் என்னாகும்? சிசுலியைக் கைப்பற்றிய நார்மன்கள் அங்கிருந்த பல அரபு நகரங்களையும் பட்டணங்களையும் அழித்து ஒழித்தனர். இன்று அரபியர்களின் வெகு சில சுவடுகள் மட்டுமே அங்கு மிச்சம்.

சிசுலியில் அவ்விதம் ராஜாங்கத்தை நிறுவி எண்பத்துச் சொச்சம் ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நார்மன்களைத்தாம் ஸலாஹுத்தீனுக்கு எதிராக நிகழ்த்தும் தங்களது கலகத்திற்கு உதவுமாறு, தகவல் அனுப்பியிருந்தனர் எகிப்தின் ஃபாத்திமீ கலவரக்காரர்கள். சிசுலியிலிருந்து கப்பற்படை திரண்டு வந்து அலெக்ஸாந்திரியாவை முற்றுகை இட வேண்டும் என்று பேசித் திட்டம் தீட்டியிருந்தனர்.

oOo

நார்மன்களின் கப்பற்படை சிசுலியிலிருந்து கிளம்பி வருவதற்குள் இங்கு கெய்ரோவில் கலவரக்காரர்களின் சதி முறியடிக்கப்பட்டிருந்தது. அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். தவிர, நில மார்க்கமாகத் தமது படையுடன் வரவேண்டிய ஜெருசல ராஜா அமால்ரிக்கும் மரணமடைந்திருந்தார். இத்தகவல்கள் எந்தளவிற்கு நார்மன் படையினருக்குத் தெரிய வந்திருக்கும் என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் இடையே யூகம் நிலவுகிறது. ஆனால் சந்தேகத்திற்கு இடமே இன்றி நிகழ்ந்த விஷயம் நார்மன்களின் படையெடுப்பு.

சிசுலியின் மன்னர் இரண்டாம் வில்லியம் தம்முடைய கப்பற்படையை அதன் புகழ்பெற்ற தலைவர் மார்கரிட்டஸ் (Margaritus) தலைமையில் அனுப்பி வைத்தார். 200 கப்பல்கள்; 50,000 படை வீரர்கள்; 1500 சேனாதிபதிகள்; 500 டர்கோபோல்ஸ் கூலிப்படையினர். 80 சரக்குக் கப்பல்கள். அதில் படையினருக்கான குதிரைகள், ஆயுதங்கள், போர்த் தளவாடங்கள், உணவுப் பொருட்கள். பேரளவில் பேரலையாகக் கடலில் திரண்டு வந்தது நார்மன் கப்பற்படை. துல்ஹஜ் 26, ஹி. 569 / 28 ஜூலை 1174 அலெக்ஸாந்திரியாவை அடைந்தது.

கப்பற்படை அலெக்ஸாந்திரியாவை அடைந்த தகவல் சில மணி நேரத்திற்குள் கெய்ரோவில் இருந்த சுல்தான் ஸலாஹுத்தீனுக்கு வந்து சேர்ந்திருந்தது. அது அலெக்ஸாந்திரியாவில் இருந்த முஸ்லிம் படைகள் அனுப்பியதா, அல்லது அதற்கு முன் கான்ஸ்டண்டினோபிளில் இருந்து பைஸாந்திய சக்கரவர்த்தி அனுப்பியதா என்பது தெரியவில்லை. ஏனெனில், பைஸாந்திய சக்கரவர்த்தி மேனுவல், தம் மகளை வில்லியமுக்கு மணமுடித்துத் தருவதாகச் சொல்லியிருந்தார். பிறகு ஏதோ பிரச்சினை. மனம் மாறி மறுத்துவிட்டார். அதனால் இருவருக்கும் இடையே விரோதம், பகை. அதனால் இந்த சந்தர்ப்பத்தை சக்கரவர்த்தி பயன்படுத்திக்கொண்டார் என்கிறார் சமகால வரலாற்று ஆசிரியர் ஜான் மேன் (John Man).

போர்க் கப்பல்கள் அலெக்ஸாந்திரியாவை வந்தடைந்த நேரத்தில் நகரில் முஸ்லிம்களின் படையணி எண்ணிக்கை மிகக் குறைவு. படையினர் பலர் ஊருக்கு வெளியே உள்ள தத்தம் நிலப்பகுதிகளுக்கு விவசாய வேலைகளைக் கவனிக்கச் சென்றிருந்தனர். கப்பல்களை கலங்கரைவிளக்கத்தின் அருகே நங்கூரமிட்டு, நார்மன் படையினர் நகரை நோக்கி முன்னேறினர். அதைக் கண்டு, ஊரெங்கும் போர்க் காய்ச்சலும் பரபரப்பும் சடுதியில் பரவின. முஸ்லிம்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு அவர்களைத் தடுக்க விறுவிறுவென்று ஓடினர். நகரின் ஆட்சி நிர்வாகத்தில் இருந்த ஒருவர் மக்களைத் தடுத்து, ஒழுங்குபடுத்தி, நகரின் அரண் சுவருக்கு அருகே அணிவகுத்து நிற்கும்படிக் கட்டளையிட்டார்.

நார்மன் படையினர் முற்றுகைக் கோபுரங்களையும் கவண் இயந்திரங்களையும் கிடுகிடுவென்று நிர்மாணித்தனர். தாக்குதலைத் தொடங்கினர். அதை சமாளித்து எதிர்த்து நின்றது தற்காப்புக்குத் திரண்டிருந்த முஸ்லிம்களின் அணி. எளிதில் வேலையை முடித்து விடலாம் என்று நினைத்திருந்த எதிரிகளுக்கு அலெக்ஸாந்திரிய மக்களின் அந்தத் திடவுறுதி பெரும் வியப்பை அளித்தது. அடுத்த மூன்று நாள்கள் அலெக்ஸாந்திரியாவில் இருந்த முஸ்லிம்களுக்கும் நார்மன் கப்பற்படைக்கும் இடையே தூள் பறந்தது சண்டை.

முதல் நாள் இருள் சூழும் வரை நடைபெற்ற சண்டை இரவுக்கு இடைவெளி விட்டு மறுநாள் தொடர்ந்தது. நார்மன்கள் தங்களது தாக்குதலை மேலும் தீவிரமாக்கி, தங்களது முற்றுகைக் கோபுரத்தை நகரை நோக்கி உருட்டி, அங்குலம் அங்குலமாக முன்னேறத் தொடங்கினர்; நகரின் அரண் சுவருக்கு அருகிலும் வந்து விட்டனர். அதற்குள் புறப்பகுதிகளுக்குச் சென்றிருந்த முஸ்லிம் படையினர் தகவல் அறிந்து விரைந்து வந்து சேர்ந்து விட, மக்கள் மத்தியில் ஊக்கம் பரவி, மன வலிமை அதிகரித்து, களத்தில் ஓங்கியது அவர்களது ஆயுதங்களின் வீர ஒலி.

மூன்றாம் நாள். எதிரிகள் சற்றும் எதிர்பார்க்காத தருணமொன்றில் முஸ்லிம் படையினர் நகரின் வாயிற் கதவைத் திறந்து வெள்ளமாகப் பாய்ந்தனர். எதிரிகளை நாலாபுறத்திலிருந்தும் தாக்கினர். முற்றுகைக் கோபுரங்களை நெருங்கி அதைப் பற்றவைக்க, திகுதிகுவென்று பற்றி எரிந்தது தீ. வானத்தை மூடியது அதன் கரும்புகை. திகைத்துப் போன நார்மன் படையினரைக் கலங்கடித்தது உச்சஸ்தாயியில் ஒலித்த தக்பீர். மும்முரமடைந்தது போர். இடைவிடாமல் இரவு வரை நீண்டது சண்டை. எதிரிப் படையினர் தரப்பில் ஏராளமான உயிரிழப்பு. பலருக்குப் படுகாயம். அவை எல்லாம் சேர்ந்து மனத்தளவிலும் உடலளவிலும் மிகவும் பலவீனமடைந்தனர் நார்மன் படையினர்.

பெருமகிழ்ச்சி ஆரவாரத்துடன் நகருக்குத் திரும்பியது முஸ்லிம்களின் படை.

இதனிடையே ஸலாஹுத்தீன் கெய்ரோவில் தம் படையைத் திரட்டி அலெக்ஸாந்திரியா விரைந்தார். முன்னெச்சரிக்கையாக மற்றொரு கடற்கரை நகரான தமீதாவின் தற்காப்புக்காகவும் துருப்புகளை அனுப்பி வைத்தார். தம் மம்லூக் ஒருவரிடம் தம் படை வரும் செய்தியைத் தெரிவிக்கச் சொல்லி அலெக்ஸாந்திரியாவுக்கு அனுப்பி வைத்தார். குதிரையில் பறந்தார் அந்தத் தூதுவர். மதியத் தொழுகை நேரத்தில் அங்கு வந்து சேர்ந்து, ஸலாஹுத்தீன் வந்துகொண்டிருக்கும் செய்தியைத் தெரிவிக்க, அதுவரை நிகழ்ந்த சண்டையினால் ஏற்பட்டிருந்த களைப்பும் வலியும் மறைந்து, படையினரை உயர் அழுத்த மின்சாரமாக உற்சாகம் தொற்றியது. நார்மன் படையினருக்கோ, ‘அமால்ரிக் போய்ச் சேர்ந்துவிட்டார்; திட்டப்படி ஜெருசலப் படைகள் வரவில்லை.; ஸலாஹுத்தீனோ கெய்ரோவில் கலகக்காரர்களைக் கொன்று ஒழித்துவிட்டு, தம் பங்கிற்குப் படையுடன் வந்துவிட்டார்.; அலெக்ஸாந்திரியா படையோ நினைத்ததை விட வலிமையாக இருக்கிறது…” என்ற எண்ணங்கள் ஓடி அவர்களின் படையினரின் மனவுறுதியைச் சிதைத்துவிட்டன. பலவீனமும் களைப்பும் அவர்களுக்கு அதிகமாயின.

முஸ்லிம் படைவீரர் ஒவ்வொருவரும், ‘என் தலைவர் பார்க்கட்டும் என் வீரத்தை’ என்றபடி ஆக்ரோஷமாக எதிரியின் மீது பாய்ந்து சண்டையைத் தொடங்கினர். இருட்டிய பிறகும் விடாமல் தாக்குதலை மும்முரப்படுத்தினர். முன்னேறி, முன்னேறிப் பரங்கியர்களின் கூடாரங்களுக்குள்ளும் புகுந்துவிட்டனர். எதிரிகளின் ஆயுதங்களும் உடைமைகளும் கிடுகிடுவென்று கைப்பற்றப்பட்டன. சிக்கிய எதிரிப் படையினர் எல்லாம் முஸ்லிம்களின் வாள் வீச்சில் கண்டதுண்டமாயினர். உயிர் பிழைத்தவர்கள் அதைக் கையில் பிடித்துக்கொண்டு கடலை நோக்கித் தாறுமாறாக ஓடினார்கள். கப்பல்களில் ஏறித் தப்பிக்க முயன்றார்கள். அந்த களேபரத்தில் கடலில் மூழ்கியவர்கள் பலர். இதனிடையே, முஸ்லிம் படை வீரர் ஒருவர் கடலில் குதித்து ஒரு கப்பலுக்கு ஓட்டையிட, உள்ளிருந்தவர்களுடன் சேர்ந்து கடல் நீரில் மூழ்கியது அது. மீந்தவர்கள் இதரக் கப்பல்களில் பின்வாங்கி ஓடினர். முந்நூறு சேனாதிபதிகள் மலைக்குன்றின் உச்சியில் தஞ்சம் அடைந்தனர்.

மறுநாள் நண்பகல் வரை விடாமல் தொடர்ந்து சண்டையிட்ட முஸ்லிம்கள் தீர்க்கமான வெற்றியுடன் அந்தப் போரை முடித்து வைத்தார்கள். மாண்டவர்கள் போக மீந்த எதிரிகள் சிறைபிடிக்கப்பட்டனர். ஃபாத்திமீ ஆதரவாளர்கள் தங்களது கலவரத்திற்கு விரிவாக அமைத்திருந்த வியூகம் அலெக்ஸாந்திரியாவில் இவ்விதம் முற்றுப்பெற்றது.

oOo

கெய்ரோவிலிருந்து தெற்கே அஸ்வான் நகரைத் தாண்டி உள்ள நைல் நதி பள்ளத்தாக்கு வரை மேல் எகிப்து (Upper Egypt) என்றும் வடக்கே மத்தியதரைக் கடல் வரை கீழ் எகிப்து (Lower Egypt) என்றும் குறிப்பிடப்படுகின்றது. பண்டைய காலத்திலேயே உருவான புவியியல் வரையறை அவை. பனூ அல்-கன்ஸ் (Banu al-Kanz) என்றொரு அரபு கோத்திரம் அரபிய தீபகற்பத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்து மேல் எகிப்தில் குடியமர்ந்தது. அஸ்வான் நகரில் அவர்களது அரசாட்சி அமைந்தது. எகிப்தில் ஃபாத்திமீ இராஜாங்கம் கோலோச்சிய போது பனூ அல்-கன்ஸுக்கு அவர்களின் அங்கீகாரமும் கிடைத்தது. ஆட்சித் தலைவராகப் பதவியேற்கும் பனூ அல்-கன்ஸின் அமீருக்கு கன்ஸ் அத்-தவ்லா (Kanz al-Dawla) என்பது பட்டம்.

ஹி. 568 / கி.பி. 1172 நுபியர்களின் ஊடுருவலை எதிர்த்து ஸலாஹுத்தீன் தம் படையை அனுப்பிய போது அச்சமயம் கன்ஸ் அத்-தவ்லாவாக இருந்தவர் ஸலாஹுத்தீனின் படைக்குத் தம் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார். நுபியர்களும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். இப்பொழுது ஹி. 570இல், வடக்கே அலெக்ஸாந்திரியாவில் நார்மன்கள் விரட்டியடிக்கப்பட்ட சில நாட்களிலேயே ஸலாஹுத்தீனின் ஆட்சியை எதிர்த்துக் கலகத்தில் இறங்கினார் கன்ஸ் அத்-தவ்லா. ஃபாத்திமீ இராஜாங்கத்தை மீட்போம் என்ற அவரது சூளுரையைக் கேட்டு, நுபியர்கள், அரபியர்கள், உள்ளூர் மக்கள் என்று பெரியதொரு கூட்டம் அதற்கு ஆதரவாக அவருடன் இணைந்தது. நிறையச் செலவு செய்து கணிசமான அளவில் படை திரட்டினார் கன்ஸ் அத்-தவ்லா. ஸலாஹுத்தீன் அய்யூபியின் அமீர் ஒருவரைக் கொன்றார். கன்ஸின் ஆதரவாளனான கியாஸ் இப்னு ஷாதி ஃகுஸ் பகுதியைக் கைப்பற்றிக் கொள்ளையிட்டு, தன் பங்குக்கு அட்டகாசம் நிகழ்த்தினான். மேல் எகிப்தில் பிரகாசமடைந்தது அபாய விளக்கு. கெய்ரோவுக்குச் செய்திகள் வந்தடைய, ஸலாஹுத்தீன் பெரியதொரு படையைத் திரட்டி, தம் தம்பி அல்-மாலிக் அல்-ஆதிலின் தலைமையில் அனுப்பினார். கியாஸ் இப்னு ஷாதியையும் கன்ஸ் அத்-தவ்லாவையும் கொன்று அவர்களது படையைச் சின்னாபின்னமாக்கி அக்கலகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அல்-ஆதில்.

தீர்க்கமாகவும் தைரியமாகவும் தேவைக்கேற்ப மூர்க்கமாகவும் எகிப்தில் ஸலாஹுத்தீன் இவ்விதம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் அவரது ஆளுமைக்குச் சான்றாக அமைந்தன. பின் தொடரவிருக்கும் அவரது சாகசத்திற்கு முன்னோட்டமாயின.

எகிப்தின் பிரச்சினைகள் எல்லாம் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், டமாஸ்கஸிலிருந்து வந்தது ஒரு மடல். சுல்தான் ஸலாஹுத்தீனின் சிரியா பிரவேசத்திற்குக் கம்பளம் விரித்தது அதில் இருந்த தகவல்.

மைய வரலாற்றை நோக்கிய அவரது ராஜபவனி இனி,

தொடரும்

-நூருத்தீன்


Share this: