சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 76

Share this:

76. நூருத்தீனும் ஸலாஹுத்தீனும்

ஹி. 567/கி.பி. 1172 – முஹர்ரம் 20. அல்-ஆதித் மரணமடைந்து பத்து நாட்களே ஆகியிருந்தன. இறுதி ஃபாத்திமீ கலீஃபாவின் மரணம்; முற்றிலுமான ஆட்சி மாற்றம் என்று பெரியதொரு திருப்பத்தைச் சந்தித்திருந்தது எகிப்து. அந்த நிலையில் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபியின் தலைமையில் எகிப்திலிருந்து கிளம்பியது படை. கட்டளையிட்டிருந்தார் நூருத்தீன். கட்டுப்பட்டுக் கிளம்பியிருந்தார் ஸலாஹுத்தீன்.

ஷவ்பக் கோட்டை வலுவாக உருப்பெற்றதையும் அதன் முக்கியத்துவத்தையும் 35ஆம் அத்தியாத்திலும் 72ஆம் அத்தியாயத்திலும் பார்த்தோமில்லையா? சிரியாவிலும் எகிப்திலும் நூருத்தீனின் அதிகாரம் வலுப்பெற்றுவிட்ட நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதையில் தகவல் தொடர்பிற்கும் பயணத்திற்கும் உபத்திரவமாக, சண்டித்தனம் செய்தபடி வீற்றிருக்கும் அக்கோட்டையைப் பரங்கியர்களிடமிருந்து மீட்க வேண்டியது முஸ்லிம்களுக்கு முக்கியமான காரியமாக ஆகிவிட்டது. தெற்கிலிருந்து ஸலாஹுத்தீன் முற்றுகையிட, வடக்கே டமாஸ்கஸிலிருந்து நூருத்தீன் தம் படையுடன் வந்து அவருடன் இணைந்து போரிட்டு அக்கோட்டையைக் கைப்பற்றுவதாகத் திட்டம். கிளம்பி வந்த ஸலாஹுத்தீனின் படை முற்றுகை இட்டது. நூருத்தீனின் தலைமையில் டமாஸ்கஸிலிருந்து பெரிய அளவில் படை திரண்டு வந்துகொண்டிருந்தது.

ஜெருசலம், நூருத்தீனின் இந்த நகர்வைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் ராஜா அமால்ரிக் படையைத் திரட்டி ஷவ்பக் கோட்டையில் இருந்த பரங்கியர்களின் உதவிக்கு உடனே கிளம்பி வர இயலவில்லை. திகைத்து திக்குமுக்காடிப் போன கோட்டையின் தளபதி ஸலாஹுத்தீனிடம் தற்காலிகப் போர் நிறுத்தமாகப் பத்து நாள் அவகாசம் கோரினார். அவரும் இணங்கினார்.

நூருத்தீனின் படை நெருங்கிக்கொண்டிருந்தது. போர் நிறுத்தமும் முடிவடைய ஒரு சில நாட்களே இருந்தன. ஷவ்பக் வெற்றி உறுதி என்ற நிலை. அச்சமயம் அது நிகழ்ந்தது. யாரும் சற்றும் எதிர்பார்க்காத திருப்பம். ஸலாஹுத்தீன் முற்றுகையைக் கைவிட்டார். எகிப்துக்குத் திரும்பினார். கோட்டையில் இருந்த பரங்கியர்கள் விழி விரிய வியப்புடன் அதைப் பார்த்தனர். ஸலாஹுத்தீனின் படையினரேகூடத் திகைப்படைந்தனர். அச்செயல் நூருத்தீனுக்கு எப்படி இருந்திருக்கும்? அது ராஜ துரோகமாகக் கருதப்படுமா இல்லையா? எந்தளவு அதிர்ச்சியும் ஆத்திரமும் ஏற்பட வேண்டுமோ அந்தளவு நூருத்தீனுக்கு ஏற்பட்டன.

ஆனால் ஸலாஹுத்தீனின் அச்செயலுக்குக் காரணம்? இரண்டு இருந்தன.

முதலாவது, ஸலாஹுத்தீன் எகிப்தில் இல்லாததால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கிளர்ச்சியில் இறங்க ஃபாத்திமீ ஆதரவாளர்கள் முடிவெடுத்துவிட்டனர் என்று அவருக்கு வந்த தகவல். அரும்பாடுபட்டு ஃபாத்திமீ வமிசத்துக்கு முற்றுப்புள்ளியிட்டு அப்பாஸிய கிலாஃபத்துக்குள் கொண்டுவந்த எகிப்தை எப்படிச் சட்டெனப் பறிகொடுக்க முடியும்? எகிப்தைத் தக்கவைப்பது அனைத்தையும் விட முன்னுரிமையா இல்லையா? எனவே ஸலாஹுத்தீன் எகிப்துக்குத் திரும்ப வேண்டியது கட்டாயமானது.

ஸலாஹுத்தீனிடம் அவருடைய ஆலோசகர்கள் கூறியதாக வரலாற்று ஆசிரியர் இப்னுல் அஸீர் வரைந்துள்ளது அடுத்த காரணம். அது –

“பரங்கியர்கள் முற்றுகையிடப்பட்டுள்ள இந்நிலையில் நூருத்தீன் வந்து சேர்ந்தால், கோட்டையை அவர்தான் கைப்பற்றுவார். நூருத்தீனின் பாதையிலிருந்து பரங்கியர்கள் அகற்றப்பட்ட பின், உங்களுக்கு எகிப்தில் அதிகாரம் இல்லாமல் போகும். தவிர, அவர் இங்கு இப்பொழுது உங்களிடம் வரும்போது, அவரை நீங்கள் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருக்கும். அவர் தமது அதிகாரத்தைத் தம் விருப்பத்திற்கு ஏற்றபடி உங்கள் மீது பிரயோகிப்பார். அவர் விரும்பினால், உங்களைத் தனியே அப்படியே பதவியில் நீடிக்க விட்டுவிடலாம். அல்லது உங்களை நீக்கலாம். எனவே இச்சமயம் புத்திசாலித்தனமான செயல் யாதெனில் நீங்கள் எகிப்துக்குத் திரும்புவதே!”

எகிப்தில் ஸலாஹுத்தீன் நிகழ்த்தியுள்ள சாதனைகளும் சக்தி வாய்ந்த ஆளுமையாக அவர் பரிணமித்துள்ளதும், தமது தலைமைக்கும் சிரியாவுக்கும் கட்டுப்பட்டவராக இல்லாமல் தனி அதிகாரமிக்க எகிப்தின் சுல்தானாக அவரை ஆக்கி விடுமோ என்ற சந்தேகமும் கவலையும் நூருத்தீனுக்கு இருந்தன. ஸலாஹுத்தீனும் அந்தச் சூழலின் அசௌகரியத்தை உணர்ந்திருந்தார்தான். ஆயினும் முக்கியமான அத்தருணத்தில் ஸலாஹுத்தீன் தமது ஆட்சி, அதிகார சுயநலத்திற்காக அப்படியொரு முடிவை எடுத்திருப்பாரோ?

‘ஸலாஹுத்தீன் தன்னிச்சையான சுதந்தரத்திற்கு முடிவெடுத்தார் என்பதற்கான ஆதாரம் வெகு குறைவு அல்லது இல்லை’ என்றே குறிப்பிடுகின்றார் சமகால வரலாற்று ஆசிரியர் தாமஸ் ஆஸ்பிரிட்ஜ் (Thomas Asbridge). அரசியல் ரீதியாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஆனால் அது அவர்களது உறவை மோசமாக்கியதா, எந்தளவு என்பது யாருக்கும் துல்லியமாகத் தெரியாது என்கின்றார் மற்றொரு வரலாற்று ஆசிரியர் அஸ்ஸாம் (A.R. Azzam).

அமால்ரிக்கும், பைஸாந்தியர்களும் ஸலாஹுத்தீனுக்கு எதிராகப் போரிட வந்த போது, தாமதமே இன்றித் தமது படைகளை உடனே அனுப்பி வைத்தார் நூருத்தீன். சிரியாவுக்கும் எகிப்துக்கும் இடையே விரிசலும் ஆயுத மோதலும் ஏற்படுமேயானால் அதன் முழுப் பயனும் பரங்கியர்களுக்குப் போய்ச் சேரும் என்பதை அவர் நன்றாகவே அறிந்திருந்தார்.

‘ஸலாஹுத்தீன் எகிப்தின் வஸீர் ஆன பின், அங்கு அவர் தம் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுத்த போதே நூருத்தீனுக்கும் ஸலாஹுத்தீனுக்கும் இடையேயான இயல்பான உறவு பாதிப்படைந்தது; விரிசலை ஏற்படுத்தியது என்று பண்டைய வரலாற்று ஆசிரியர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். அதிகாரச் சமநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டு இரு ஆளுமைகளுக்கும் இடையே ஏற்பட்ட கசப்பு பெரிதாக உருவாகும் சாத்தியம் ஏற்பட்டது உண்மையே; ஆரம்பத்தில் ஓரளவு உராய்வுகள் இருந்தன. என்ற போதிலும் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்த ஒத்துழைப்பும் பரஸ்பர ஆதரவும் தடையின்றித் தொடர்ந்தன என்பதற்கே ஏராளமான ஆதாரங்கள் உள்ளன’, என்று தாமஸ் ஆஸ்பிரிட்ஜ் அதை மேலும் உறுதிப்படுத்துகிறார்.

ஆனால், இச்சமயம் நிகழ்ந்த வெகு நிச்சயமான விளைவு யாதெனில் நூருத்தீனுக்கும் ஸலாஹுத்தீனுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல். அது பெரும் பகையாக, ஆயுதப் போராக மாறவிருந்த சூழல். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்தோ சந்தேகமோ இல்லவே இல்லை. அந்த அபாயத்தை, வெகு திறமையாக மதி நுட்பத்துடன் சாதுரியமாகக் கட்டுக்குள் கொண்டுவந்து அடக்கினார் இராஜ தந்திரம் மிகைத்த ஒருவர். ஸலாஹுத்தீனின் தந்தை நஜ்முத்தீன் அய்யூபி.

oOo

எகிப்துக்குத் திரும்பிவிட்ட ஸலாஹுத்தீன் மன்னிப்புக்கோரி நூருத்தீனுக்குக் கடிதம் எழுதினார். ‘ஃபாத்திமீ ஆதரவாளர்கள் எகிப்தைக் கைப்பற்ற சதித் திட்டம் தீட்டுவதாகத் தகவல் வந்தது; நான் தொலைவில் இருந்த அந்நேரத்தில் அங்குப் பொறுப்புச் சுமத்தி வந்தவர்களை அவர்கள் எளிதில் தூக்கி எறிந்துவிட்டு, வலுவாக வேரூன்றி விடுவார்களே என்று அச்சப்பட்டுத் திரும்பிவிட்டேன்’ என்று அதில் தன்னிலை விளக்கம் அளித்திருந்தார். அது நூருத்தீனின் கோபத்தைத் தணிக்கவில்லை. தமக்கு ஸலாஹுத்தீன் மாறு செய்துவிட்டதாகவே நூருத்தீன் கருதினார். கெய்ரோவுக்குத் தம் படையினருடன் அணிவகுக்கத் திட்டமிடுகிறார் என்றொரு தகவல் எகிப்துக்கு வந்து சேர்ந்தது.

பிரச்சினையின் வீரியம் ஸலாஹுத்தீனுக்கு மிக நன்றாகப் புரிந்தது. அவசர ஆலோசனை நிகழ்த்த தம் குடும்பத்தினரையும் ஆலோசகர்களையும் அமீர்களையும் வரவழைத்தார். அனைவரும் ஒன்று கூடினர். நூருத்தீனை எதிர்த்து நிற்பது குறித்துக் கலவையான பதில் வந்தது. ஸலாஹுத்தீனின் சகோதரர் மகன் தகீயுத்தீன் உமர் மட்டும் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்:

“சிரியாவின் அரசர் படையெடுத்து வந்தால் நாம் அவரை எதிர்த்துப் போரிடுவோம். அவரைத் திருப்பி விரட்டுவோம்”

தலைகனம் மிக்க இந்த வார்த்தைகள் டமாஸ்கஸில் தோற்றுவிக்கும் பின்விளைவு, இரு ஆளுமைகளுக்கும் இடையே ஏற்படுத்திவிடக் கூடிய நிரந்தரப் பிளவு, பரங்கியர்களுக்கும் இதர எதிரிகளுக்கும் அளிக்கக்கூடிய உவப்பு ஆகியனவற்றைத் துல்லியமாகக் கணித்தார் நஜ்முத்தீன் அய்யூபி. ஆவேசத்துடன் குறுக்கிட்டு, தகீயுத்தீனைக் கண்டித்து அமரச் சொல்லிவிட்டு ஸலாஹுத்தீனிடம் மிகத் தெளிவாகக் கூறினார்:

“நான் உன்னுடைய தந்தை. இவர் உன்னுடைய தாய் மாமன் ஷிஹாபுத்தீன் அல்-ஹாரிமி. இங்குக் குழுமியிருக்கும் மற்றவர்களைவிட நாங்கள் உன்னை அதிகம் நேசிக்கின்றோம். அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கின்றேன். நானும் உன் மாமனும் நூருத்தீனைக் கண்ணுற்றால், அவரது காலடி மண்ணை முத்தமிடுவதைத் தவிர வேறொன்றும் செய்வதறியோம். அவர் உன்னுடைய தலையை வாளால் சீவியெறியச் சொன்னால், அதைச் செய்து முடிப்போம். நாங்களே இப்படி என்றால், மற்றவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாய்? உன் முன் வீற்றிருக்கும் இந்த அத்தனை அமீர்களும் நூருத்தீனைப் பார்த்த மாத்திரத்தில், தம் குதிரைச் சேணங்களில் அமர்திருக்கவும் துணிய மாட்டார்கள்.

இது அவருடைய நாடு. அதன் அதிகாரத்தை அவர் உனக்கு அளித்திருக்கின்றார். நாம் இதில் அவருடைய மம்லூக்குகள், துணை அதிகாரிகள். அவர் உன்னைப் பதவி நீக்க நினைத்தால், அவர் எகிப்திற்கு வரவேண்டிய அவசியமே இல்லை; உன்னை விலகச் சொல்லி ஒரு தகவல் அனுப்பினால் போதும். நாங்கள் செவிமடுப்போம்; கட்டுப்படுவோம். இப்பொழுது உனக்குள்ள ஒரே சிறந்த வழிவகை என்னவெனில், அவருக்குச் சமாதானக் கடிதம் எழுதி அனுப்புவது மட்டுமே. அதை நான் சொல்வது போல் எழுது:

‘நீங்கள் எகிப்தின் மீது படையெடுக்கக் கருதியுள்ளதாக அறிந்தேன். அதற்கான தேவை என்ன ஏற்பட்டு விட்டது? என் எசமானனாகிய நீங்கள், ஒரு பணியாளை ஏவி, அவரது தலைப்பாகைத் துணியால் என் கழுத்தைக் கட்டி உங்களிடம் இழுத்து வரச் சொல்லுங்கள் போதும். அதை எதிர்க்க இங்கு யாரும் இல்லை. நம் பிழைகளை அல்லாஹ் மன்னிப்பானாக!’ இது போதும்”

அத்துடன் ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்தது. அனைவரும் கலைந்து சென்றனர். நஜ்முத்தீன் அய்யூபி மட்டும் தம் மகனுடன் தனித்திருந்தார். மேலதிகமாகச் சிலவற்றை ஸலாஹுத்தீனிடம் பகிர்ந்தார்.

“நீ செயல்பட்டது என்னவிதமான புத்திசாலித்தனம்? பெருங்கூட்டத்தைக் கூட்டி உனது இரகசியங்களைப் பகிர்கின்றாய். நூருத்தீனுக்கு இங்குள்ள நடவடிக்கைகளைத் தெரிவிக்க ஒற்றர்கள் இருப்பார்கள். அவரைத் தூண்டுவது அர்த்தமற்றது. நீ எதிர்க்கப் போகிறாய், போரிடப் போகிறாய் என்பதை அவர் அறிய வந்தால், நமது பிரச்சினையை முடித்து வைப்பதைத்தான் வெகு முக்கியமாகத் தம்முடைய கருத்தில் கொள்வார், உடனே இங்கு அணிவகுப்பார் என்பதை நீ உணரவில்லையா? அதன் பின் அவருக்கு எதிராகச் செயல்பட நீ எவ்விதச் சக்தியும் அற்றவனாகி விடுவாய். ஆனால் இப்பொழுது, இங்கு என்ன நடந்தது என்பதும் அவர் மீதான நமது விசுவாசமும் அவருக்குப் போய்ச் சேரும். நம்மை அப்படியே விட்டுவிட்டு, இதர முக்கியக் காரியங்களில் தம்முடைய கவனத்தைச் செலுத்தி அதில் மூழ்கிவிடுவார். விதி அதன் போக்கில் செல்லும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நூருத்தீன் ஒரு கரும்புத் துண்டின் அளவிற்காவது இங்கிருந்து எடுக்க நினைத்தாலும்கூட, நானே (உன்னுடன் சேர்ந்து) போரிட்டு அதைத் தடுப்பேன்; அல்லது மடிவேன்”

நஜ்முத்தீன் அய்யூபி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தவை ஊரறிந்த இரகசியம். அதையடுத்து தந்தைக்கும் மகனும் இடையே நடைபெற்ற அந்தரங்க உரையாடல் என்று இப்னுல் அஸீர் தமது வரலாற்று நூலில் எழுதியுள்ளதைக் கேள்விக்கு உட்படுத்துகிறார் வரலாற்று ஆசிரியர் அஸ்ஸாம் (A.R. Azzam). ஸெங்கி வமிசத்தின் மீது பெரும் பற்று கொண்டிருந்தவர் இப்னுல் அஸீர். ஸலாஹுத்தீனின் மீது அவருக்கு அதிருப்தியும் இருந்தது. நஜ்முத்தீன் அய்யூபி ஸலாஹுத்தீனிடம் தனிமையில் ஆலோசனை கூறினார் எனில் அந்த அந்தரங்கப் பேச்சை இப்னுல் அஸீர் எப்படி அறிந்திருப்பார்? எனவே அது இப்னுல் அஸீரின் கற்பனை அல்லது யூகமே என்கின்றார் அஸ்ஸாம். அது எப்படியோ. ஆனால் நூருத்தீனுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தந்தை பொதுவில் அறிவுறுத்தினாரோ அதை அப்படியே ஏற்றுச் செயல்பட்டார் ஸலாஹுத்தீன். பின் தொடர்ந்த ஆண்டுகளிலும் தம் தந்தையின் ஆலோசனைகளையே முழுக்கப் பின்பற்றினார்.

நஜ்முத்தீன் அய்யூபி எதிர்பார்த்ததைப் போலவே நிகழ்ந்தது. நூருத்தீனுக்கும் ஸலாஹுத்தீனுக்கும் இடையே ஆயுத மோதல் என்றோர் அசம்பாவிதம் நிகழாமல் முடிவுற்றது. எனினும் இருவருக்கும் இடையே ஒரு விரிசல், சிக்கலான சூழல் தவிர்க்க முடியாததாகவே தொடர்ந்தது.

இமாதுத்தீன் இஸ்ஃபஹானி அந்தத் தடுமாற்றத்தைத் தொகுத்துள்ளார். நூருத்தீனிடமும் பின்னர் ஸலாஹுத்தீனிடமும் பணியாற்றிய அறிஞர், வரலாற்று ஆசிரியர் அவர். ‘நூருத்தீன் சிரியாவில் மேற்கொள்ளும் ஜிஹாது முயற்சிகளுக்கு எகிப்தின் நிதியுதவி தேவைப்பட்டது. எகிப்து வசமான நாளிலிருந்து, தமது ஜிஹாதுப் போரின் செலவினங்களுக்காக, தொகையொன்றை ஒப்பந்தமாக ஏற்படுத்திக்கொண்டு எகிப்து அதை அனுப்ப வேண்டும் என்று அவர் விரும்பினார். ஸலாஹுத்தீனிடம் அதை அவர் கேட்கவில்லை. தாமாகவே அவர் அதைக் குறிப்பிடட்டும் என்று காத்திருந்தார். ஆனால் நடைமுறையிலோ ஸலாஹுத்தீனுக்கு வேறு சில பிரச்சினைகள் காத்திருந்தன. கெய்ரோவில் பதுங்கியிருந்த ஃபாத்திமீ கிளர்ச்சியாளர்களின் சதி, அவர்களால் விளையக் காத்திருந்த ஆபத்து. அவற்றின் முழுப் பரிமாணத்தை நூருத்தீன் அறிந்திருக்கவில்லை’, என்பதே அதன் சுருக்கம்.

அதன் அர்த்தம் ஸலாஹுத்தீன் நூருத்தீனுக்குத் திறை ஏதும் அனுப்பவில்லை என்பதன்று. 1173ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எகிப்திலிருந்து ஃபாத்திமீக்களின் மதிப்புமிக்கப் பழங்காலச் சடங்கு அங்கி, முந்தைய ஃபாத்திமீ கலீஃபா ஒருவரின் தலைப்பாகை, ஓரிலட்சம் தீனார் ஆகியன சென்றன. அதையடுத்து மேலும் சில செல்வமும் 60,000 தீனாரும் அனுப்பப்பட்டன. ஆனாலும் அது நூருத்தீனின் பண எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை; எகிப்தின் மீதான அவரது சந்தேகத்தையும் முற்றிலும் நீக்கவில்லை. இவ்விதம் அவ்வப்போது வரும் தொகையைவிட, தொடர்ச்சியாக வரும் குறிப்பிட்ட வருமானத்தையே அவர் விரும்பினார். பரங்கியர்களை எதிர்த்து நிகழ்த்த வேண்டிய ஜிஹாதைத் திட்டமிட அதுதானே உதவியாக இருக்கும்.
விளைவு? எகிப்தின் வரவு செலவைக் கணக்கிட நூருத்தீனின் வஸீர் இப்னுல் ஃகைஸரானி தணிக்கையாளராக கெய்ரோ வந்து சேர்ந்தார். அதற்கு முன் பிரச்சினைக்குரிய மற்றொரு நிகழ்வு மீண்டும் ஏற்பட்டது. அதற்குக் காரணமும் தீர்வுமாக அமைந்தார் நஜ்முத்தீன் அய்யூபி.

oOo

ஹி. 568 / கி.பி. 1173, மே-ஜுன் மாதம். கெராக் கோட்டையை முற்றுகையிடும்படி ஸலாஹுத்தீனுக்கு நூருத்தீனிடமிருந்து கட்டளை வந்தது. ஸலாஹுத்தீனும் தம் தந்தையிடம் எகிப்தின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு படையுடன் கிளம்பிச் சென்றார். முந்தைய ஷவ்பக் முற்றுகையைப் போலவே, இம்முறையும் இருபுறமிருந்து ஸலாஹுத்தீனும் நூருத்தீனும் சுற்றிவளைக்கத் திட்டமிட்டனர். அசந்தர்ப்பமாக இம்முறையும் ஸலாஹுத்தீனின் நடவடிக்கை முன்னைப் போலவே அமைந்தது. ஸலாஹுத்தீன் கோட்டையை முற்றுகை இட்டிருக்க நூருத்தீனும் தம் படையுடன் டமாஸ்கஸிலிருந்து கெராக்கை நெருங்கி விட்டார். இரண்டு நாள் பயண தூரம்தான் இருக்கும். அந்நேரம் பார்த்து, ஸலாஹுத்தீன் அவசர அவசரமாகத் தம் படையினருடன் எகிப்துக்குத் திரும்பிவிட்டார்.

நஜ்முத்தீன் அய்யூபிக்குக் குதிரை சவாரியிலும் போலோ விளையாட்டிலும் பேரார்வம். எந்தளவுக்கு எனில், அவர் விளையாடுவதைக் கவனிப்பவர்கள், ‘இவர் குதிரையில் இருந்து விழுந்துதான் இறப்பார் போலும்’ என்று பேசிக்கொள்ளும் அளவிற்கு அவர் அவற்றின் சாகச விரும்பி. அப்படித்தான் நிகழ்ந்தது. ஒருநாள் அவர் பயணிக்கும்போது குதிரை காட்டுத்தனமாகத் துள்ளியதில் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார் நஜ்முத்தீன். அவர் உயிருக்குப் போராடும் தகவல் ஸலாஹுத்தீனுக்கு வந்து சேர்ந்தது. ஆருயிர் தந்தையின் அவ்விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி ஒருபுறமிருக்க, தாம் அங்கு இல்லாத நிலையில் தலைமை தவறினால் எதிரிகளால் விளையக்கூடிய ஆபத்து எச்சரிக்கை மணி அடித்தது.

‘என்னுடைய பிரதிநிதியாகத் தந்தை நஜ்முத்தீனை எகிப்தில் விட்டு வந்தேன். விபத்தினால் அவரது உடல்நலம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. மரணத்தின் வாசலில் இருக்கிறார். எகிப்து பறிபோகும் நிலை’ என்று தாம் திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்துக் கடிதம் எழுதி, சில அன்பளிப்புகளுடன் தம் தூதுவர்கள் மூலம் நூருத்தீனுக்கு அனுப்பிவிட்டு, உடனே எகிப்துக்குத் திரும்பிவிட்டார். தூதுக்குழு நூருத்தீனைச் சந்தித்தது. ஏமாற்றமும் கோபமும் மிகைத்தாலும் எதையும் வெளிக்காட்டாமல், ‘எகிப்தைப் பாதுகாப்பது எல்லாவற்றையும் விட எம் பார்வையில் முக்கியமானது’ என்று சொல்லி முடித்துக்கொண்டார் நூருத்தீன்.

ஸலாஹுத்தீன் எகிப்து வந்து சேர்வதற்குள், சில நாள்கள் உயிருக்குப் போராடிவிட்டு, துல்ஹஜ் 27, ஹி. 568 (ஆகஸ்ட் 7, 1173) அன்று மரணமடைந்தார் தந்தை நஜ்முத்தீன் அய்யூபி. இமாதுத்தீன் ஸெங்கி, நூருத்தீன் ஸெங்கி இருவரிடமும் சிறந்த நிர்வாகியாகவும் தம் மகன் ஸலாஹுத்தீனுக்குச் சிறந்த ஆசோகராகவும் இராஜ தந்திரியாகவும் திகழ்ந்த நஜ்முத்தீனின் வாழ்க்கை முற்றுப்பெற்றது. உறவுகளைப் பேணுவது, உபசாரம், தயாளம், தான தர்மங்களில் தாராளம், மார்க்க அறிஞர்களுடன் நெருக்கம், உபரித் தொழுகைகள், சகிப்புத்தன்மை, கனிவு, என அவரது சிறப்புகளைப் பட்டியலிட்டு எழுதி வைத்துள்ளார்கள் அவர் காலத்து வரலாற்று ஆசிரியர்கள்.

சகோதரர் அஸாதுத்தீன் ஷிர்குஹ்வின் மண்ணறைக்கு அருகிலேயே நஜ்முத்தீன் அய்யூபி அடக்கம் செய்யப்பட்டார்.

அதையடுத்து வெளித் தோன்றியது ஃபாத்திமீ-பரங்கியர்களின் கூட்டுச் சதி.

அது –

(தொடரும்)


Share this: