சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 101

Share this:

101. ஃபாரூக்‌ஷாவின் சமர்

பீஉல் அவ்வல், 574 / செப்டெம்பர், 1178. யாக்கோபின் நீர்க்கடவுப் பகுதியில் பரங்கியர்கள் கோட்டையைக் கட்ட அடிக்கல் நாட்டுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு அது. ஹமா நகரின் மீது பரங்கியர்கள் படையெடுத்தார்கள். குதிரைப் படையினரும் காலாட்படையினரும் பெரும் எண்ணிக்கையில் இணைந்திருந்தனர். ஆவேசத்துடன் கிளம்பி வந்த அவர்கள், சுற்றுப்புற கிராமங்களைக் கொள்ளையடித்தனர்; எரித்தனர்; மக்களைக் கொன்றனர்; பலரைச் சிறைபிடித்தனர். ஊர்கள் நாசமடைந்தன. ஹமாவில் வீற்றிருந்த முஸ்லிம் படையினர் எண்ணிக்கையோ குறைவு. திகைத்துப்போன அவர்கள் அடுத்து வெறுமனே வீற்றிருக்கவில்லை. தற்காத்துப் போரிட்டனர். அத்துடன் நின்றுவிடாமல் முன்னேறிச் சென்று எதிர்த்துத் தாக்கினர். விளைவாக பரங்கியர்களில் பலர் கொல்லப்பட்டனர்; போர்க் கைதிகள் ஆயினர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இறைவனின் அருளால் முஸ்லிம்கள் வெற்றியடைந்தனர்.

அச்சமயம் ஸலாஹுத்தீன் தம் படையினருடன் ஹும்ஸுக்கு வெளியே முகாமிட்டிருந்தார். பரங்கியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் கொய்யப்பட்ட அவர்களின் தலைகளும் பரிசாக அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டன. போர்க் கைதிகளை இழுத்து வந்திருந்தார்கள். ஜெருசலத்தைக் கைப்பற்றியபின் ஸலாஹுத்தீன் தம் எதிரிகளிடம் எத்தகு பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதை முஸ்லிம் விரோத வரலாற்று ஆசிரியர்களும்கூடத் தவிர்க்க இயலாமல் எழுதி வைத்துள்ளார்கள். ஆனால், அந்தக் கருணையை அவர் அனைத்துப் போர்களிலும் எல்லாத் தருணங்களிலும் வெளிப்படுத்தியதில்லை. எங்கு எத்தகு கடுமை தேவை என்பதை அறிந்து வைத்திருந்த அவருக்கு அதைச் சரியே பிரயோகிக்கும் சாமர்த்தியமும் தலைமை குணமும் மிகைத்திருந்தன. அதன் மேற்கோள் நிகழ்வு ஒன்று அன்று அரங்கேறியது. ஹமாவின் மீது அநியாயப் போர் தொடுத்து, கைதிகளாகச் சிக்கியிருந்த பரங்கியர்களுக்கு அவர் அளித்த தீர்ப்பு – மரண தண்டனை! பொதுவாக அதை இராணுவத் தளபதிகள், படையைச் சேர்ந்தவர்கள் நிறைவேற்றுவதே நடைமுறை. இம்முறை அதற்கு மாறாக, பாரசீக அறிஞரும் கவிஞருமான இமாதுத்தீன் வரவழைப்பட்டார்.

சுல்தான் ஸலாஹுத்தீனுடன் இமாதுத்தீனுக்கு அணுக்கமான பிணைப்பு இருந்தது. சிலுவைப்போர்களின் போது ஸலாஹுத்தீனுடன் இணைந்து பயணித்தவர் அவர். பல சந்தர்ப்பங்களில் சிலுவைப் படையினரிடம் ஸலாஹுத்தீன் காட்டிய தாராள மனப்பான்மையைத் துணிச்சலுடன் விமர்சிக்கும் அளவுக்கு சுல்தானிடம் அவருக்கு நெருக்கம் இருந்தது. ‘சுல்தான் அழைத்து வரச்சொன்னார்’ என்று தகவல் வந்ததும், ஏதோ முக்கியமான காரியத்திற்காக நான் தேவைப்படுகிறேன் போலும் என நினைத்துக்கொண்டு விரைந்தார் அவர். வந்தவரிடம் ஸலாஹுத்தீன் வாளைக் கொடுத்து, இந்தக் கைதிகளின் தலைகளைக் கொய்துவிடவும் என்றதும் திகைத்துவிட்டார் இமாதுத்தீன்.

‘சுல்தான்! நான் எழுதுகோல் கரத்தினன்; வாளேந்துபவனல்லன். தங்களின் வெற்றிகளை அறிவிப்பவன்; மரண தண்டனை நிறைவேற்றும் தொழில் முறையாளன் அல்லன்’ என்று தம் தடுமாற்றத்தைத் தெரிவித்தார்.

தம் செயலாளரின் பதிலைக் கேட்டுச் சிரித்துவிட்டார் ஸலாஹுத்தீன். அவருக்கு அன்பளிப்பாக ஓர் அடிமையை அளித்துவிட்டு, போர்க் கைதிகளை வாளுக்கு இரையாக்கினார். இவ்விதம் இந்தப் போரில் தோற்று நாசமடைந்த பரங்கியர்களின் கவனம் முழுவதும், அடுத்த ஆறு மாதங்களுக்கு, யாக்கோபின் நீர்க்கடவில் மூழ்கியது. அதற்குப் பின், ஏப்ரல் 1179இல் மூண்டது அடுத்த சண்டை. அதைப் பார்க்கும் முன் கான்ஸ்டபிள் ஒருவரை அறிமுகப் படுத்திக்கொள்வோம்.

oOo

லெபனானில் உள்ள டைர் நகரிலிருந்து சிரியாவிலுள்ள டமாஸ்கஸ் செல்லும் சாலையில் ’தோரன்’ என்றொரு மலைக்கோட்டை உள்ளது. முதலாம் சிலுவைப்போருக்குப் பின் கி.பி. 1106ஆம் ஆண்டு கட்டப்பட்ட அக்கோட்டை சிலுவைப்படையினருக்கு முக்கியமானதாய் விளங்கியது. அதன் கான்ஸ்டபிளாக இருந்தவர் இரண்டாம் ஹம்ஃப்ரே (Humphrey II). அவரது திருமணங்கள், வாரிசு, அந்த வாரிசின் வழியாக மில்லீயின் ஸ்டெஃபனி வரை நீளும் உறவுச் சங்கிலி, ஷட்டியோனின் ரேனால்ட்டை எட்டித் தொடும் கதை பெரிய வலைப்பின்னல். தற்சமயம் நமக்கு அது தேவையற்ற சிக்கல். ஆனால் ஒற்றை வரி உபதகவலாக, தோரனின் கான்ஸ்டபிள் ஹம்ஃப்ரேவுக்கு ஷட்டியோனின் ரேனால்ட் எட்டிக்காய் கசப்பு என்பது மட்டும் போதும்.

காவல் துறையின் தாணாக்காரராக இருப்பவர்தாம் இன்று நமக்கெல்லாம் பரிச்சயமான ’கான்ஸ்டபிள்’. இந்திய நடைமுறையில் அது கௌரவத்திற்குரிய பதவியாகக் கருதப்படுவதும் இல்லை. மாறாக, இடைக்கால ஐரோப்பாவில், கான்ஸ்டபிள் என்பது கோட்டை ஆளுநரின் பதவிப்பெயர். 1140ஆம் ஆண்டுவாக்கில், ஜெருசலம் இராஜ்ஜியத்திற்குக் கட்டுப்பட்ட தோரன் கோட்டையின் ஆளுநராக அமர்த்தப்பட்டார் இரண்டாம் ஹம்ஃப்ரே. அதற்குப் பின் அவர் வரலாற்றில் தோரனின் கான்ஸ்டபிள் ஹம்ஃப்ரே (Constable Humphrey of Toron) என்றாகிவிட்டார். 1153ஆம் ஆண்டு மூன்றாம் பால்ட்வின் ஜெருசலத்தின் ராஜாவாக ஆனதும் ஜெருசலத்தின் கான்ஸ்டபிள் பதவி ஹம்ஃப்ரேவுக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜெருசல ராஜா அமால்ரிக் ஆட்சியின்போது பன்யாஸின் ஆட்சிப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பன்யாஸ் கோட்டையை அந்த கான்ஸ்டபிள் ஹம்ஃப்ரேவிடமிருந்துதான் கைப்பற்றினார் நூருத்தீன்.

ஜெருசலத்தில் அமால்ரிக் மரணத்திற்குப் பின் தொடர்ந்த நான்காம் பால்ட்வினின் ஆட்சியில் ஷட்டியோனின் ரேனால்ட் முக்கியத்துவம் பெற ஆரம்பித்ததும் கான்ஸ்டபிள் ஹம்ஃப்ரேவின் செல்வாக்கு மட்டுப்பட்டது. அதற்கொரு காரணம், அவர் திரிப்போலியின் மூன்றாம் ரேமாண்டின் ஆதரவாளர் என்பதாகும். அரசியல் வாழ்க்கையில் அவர் இவ்வாறான மாற்றத்தைச் சந்தித்த போதும் தொழுநோய் ராஜா பால்ட்வின் மீதிருந்த அவரது அபிமானமும் விசுவாசமும் மட்டும் குறைந்துவிடவில்லை. அவை தொடர்ந்தன. உயிரையே கொடுக்குமளவிற்கு மிகைத்திருந்தன.

துல்கஃதா 574 / ஏப்ரல் 1179. பரங்கியர்களின் படையொன்று டமாஸ்கஸுக்கு அண்மையில் அட்டகாசம் செய்துகொண்டிருப்பதாக ஸலாஹுத்தீனுக்குத் தகவல் வந்தது. படைக்குத் தலைமை ராஜா நான்காம் பால்ட்வின். அதில் இடம்பெற்றிருந்த முக்கியப் புள்ளி, கான்ஸ்டபிள் ஹம்ஃப்ரே. யாக்கோபின் நீர்க்கடவுப் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தனவல்லவா? அங்கிருந்தவர்களின் உணவுத் தேவைக்காக, மேய்ச்சல் நிலங்களுக்கு மந்தைகளுடன் சென்றிருந்த முஸ்லிம்களைத் தாக்கி, ஆட்டு மந்தைகளைத் துரத்திக்கொண்டு வந்த பால்ட்வினின் படை, வழியெங்கும் கொள்ளையடித்து, மக்களைக் கொன்றது. பிழைத்தவர்களைக் கைதிகளாக்கி, அடிமைப்படுத்தி இழுத்துச் சென்றது. தங்கள் இயல்புக்கு ஏற்ற அராஜகங்களைக் கட்டவிழ்த்தபடி முன்னேறியது.

அப்பகுதியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் 1,000 வீரர்களுடன் முஸ்லிம்களின் படையொன்று முகாமிட்டிருந்தது. ஸலாஹுத்தீன் தம் மூத்த அண்ணனின் மகன் ஃபாரூக்‌ஷாவுக்குத் தகவல் அனுப்பினார். ‘அந்த 1,000 வீரர்களை அணிதிரட்டிப் படைக்குத் தலைமை தாங்கி பரங்கியர்களை எதிர்த்துச் செல். அவர்களை அண்மியதும் புறாவின் மூலம் தகவல் அனுப்பு. நானும் வந்து இணைவேன். அதுவரை மோத வேண்டாம். காத்திருக்கவும்’ என்று கட்டளைகளையும் விவரித்திருந்தார். படையுடன் புறப்பட்டார் ஃபாருக்க்ஷா. இரவு முழுவதும் பரங்கியர்களைத் தேடினார்கள் அவர்கள். விடியற்காலை நேரமும் நெருங்கியது. ஷகீஃப் அர்னூன் என்றொரு பலம் வாய்ந்த கோட்டை. பன்யாஸுக்கு அண்மையில் உள்ளது. அப்பகுதியில், என்ன, ஏது என்று உணர்வதற்குள் ஃபாரூக்‌ஷாவையும் அவருடைய படையினரையும் சூழ்ந்தது பரங்கியர்கள் படை. மூர்க்கத்துடன் தாக்க ஆரம்பித்தது. ஆபத்து சுற்றி வளைத்தபின் ஸலாஹுத்தீனுக்குப் புறா அஞ்சல் அனுப்புவதற்கெல்லாம் எங்கிருக்கிறது நேரம்? தம் படையினருடன் உடனே போரில் குதித்தார் ஃபாரூக்‌ஷா.

ஜெருசல ராஜாவின் படையினரை எதிர்த்து சூரத்தனமாகச் சுழன்றது முஸ்லிம்களின் படை. வாள் வீச்சும் மழையாகப் பொழிந்த அம்புகளுமாக தூள் பறந்தது களம். முஸ்லிம்கள் பரங்கியர்கள் பலரை வெட்டித் தள்ளியதில், குருதிப்பெருக்கால் சிவந்தது நிலம். ஒரு கட்டத்தில் ராஜா பால்ட்வினின் குதிரை முஸ்லிம் படைகளின் நடுவே மாட்டி, அவர் வசமாகச் சிக்கிவிடும் சூழலும் ஏற்பட்டுவிட்டது. அந்த ஆபத்தைப் பார்த்துவிட்ட காண்ஸ்டபிள் ஹம்ஃப்ரே ராஜாவைக் காப்பாற்ற முன்னோக்கிப் பாய்ந்து குதித்தார். பால்ட்வின் மீது பாய்ந்த தாக்குதலை எல்லாம் தாம் ஏற்றுக்கொண்டார். ஓர் அம்பு அவரது மூக்கைத் துளைத்து, சில பற்களை உடைத்து, தாடை வழியாக வெளியேறியது; மற்றொரு அம்பு அவரது பாதத்தைக் கிழித்து, உள்ளங்காலில் தைத்தது; மூன்றாவது அம்பு அவரது முழங்காலைத் தாக்கியது. அவை போதாதென்று, அவரது உடலின் பக்கவாட்டில் மூன்று காயங்கள். இரண்டு விலா எலும்புகளில் முறிவு. விளைவாக, உயிர் தப்பினார் ஜெருசல ராஜா நான்காம் பால்ட்வின். அடுத்த சில நாட்களில் தமது காயங்களின் பாதிப்பால் உயிரிழந்தார் தோரனின் கான்ஸ்டபிள் ஹம்ஃப்ரே. மேலும் பிரபுக்கள் பலரும் கூட அப்போரில் கொல்லப்பட்டனர்.

1 துல் கஃதா 574 / 11 ஏப்ரல் 1179. ஃபாரூக்‌ஷாவுக்குப் பெருவெற்றியாகவும் ராஜா பால்ட்வினுக்குப் பேரிழப்பாகவும் முடிந்தது அந்தப் போர். இழிவுக்கும் தோல்விக்கும் உள்ளாகி அவமானத்துடன் தங்கள் பகுதிகளுக்குத் திரும்பியது பரங்கியர்களின் சிலுவைப்படை. கான்ஸ்டபிள் ஹம்ஃப்ரேவின் மரணம் அவர்களது மன உறுதியை மேலதிகமாகச் சிதைத்து விட்டது. ஆனால், அதே அளவிற்கு அந்தச் செய்தி முஸ்லிம்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சியாக அமைந்துவிட்டது. அக்கால வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர், “இந்த ஹம்ஃப்ரே எப்படிப்பட்டவர் என்பதை உங்களுக்கு எப்படிப் புரிய வைப்பேன். அவரது வீரமும் போர்க்களத் திறமையும் பழமொழியாக விளங்கக் கூடியவை. (அதன் விளைவாக) முஸ்லிம்களுக்கு அவர் இறைவன் விதித்த சோதனையாக இருந்தார். இப்போது இறைவன் அவரது தீய செயல்களிலிருந்து நிவாரணம் அளித்து விட்டான்…” என்று எழுதி வைத்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பரங்கியர்களைத் தோற்கடித்து அடைந்த வெற்றியும் கெட்ட சொப்பனமாக விளங்கிய கான்ஸ்டபிள் ஹம்ஃப்ரேவின் மரணமும் சேர்ந்து முஸ்லிம்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக ஆகிவிட்டன.

ஃபாரூக்‌ஷாவின் வெற்றிச் செய்தியைச் சுமந்தபடி டமாஸ்கஸுக்குப் பறந்தன புறாக்கள். ஹம்ஃப்ரேவின் மரணமும் கொய்யப்பட்ட தலைகளும் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையும் அந்தப் போரில் ஃபாரூக்‌ஷா சாதித்த வெற்றியின் முழுப் பரிமாணத்தை ஸலாஹுத்தீனுக்கு விவரித்தன. இந்த வெற்றி அளித்த உத்வேகத்தில் யாக்கோபின் நீர்க்கடவு கோட்டையின் பிரச்சினைக்குத் தீர்வு காண டமாஸ்கஸுக்குத் திரும்பினார் ஸலாஹுத்தீன். அந்தக் கோட்டையை முற்றுகையும் இட்டார். ஆனால் அது இருதரப்பினரும் ஒருவரையொருவர் எடைபோட அமைந்த முன்னோட்ட முயற்சி போல் முடிந்தது. பிறகு திரும்பி வந்து அதைக் கவனிப்போம் என்று ஸலாஹுத்தீன் முடிவெடுத்தார். சில நாட்களில் அந்த முற்றுகையை முடித்துக்கொண்டார்.

அதையடுத்து ஸலாஹுத்தீனின் கவனம் குவிந்த பகுதி கலிலீயின் வடக்கு. பரங்கியர்கள் ஆக்கிரமித்திருந்த சிடோன், பெய்ரூட், இதர கடலோர நகரங்கள் ஆகியன அவரது தாக்குதல்களுக்கு இலக்காயின. விளைச்சல்கள் கைப்பற்றப்பட்டன. பொதிபொதியாகக் கோதுமைக் கதிர்களைச் சுமந்தபடி டமாஸ்கஸுக்குத் திரும்பியது ஒட்டக அணிவகுப்பு. ராஜா பால்ட்வினைத் தோற்கடித்துப் பெற்ற வெற்றியின் தாக்கம் ஸலாஹுத்தீன் தரப்பில் தொடர்ந்தபடி இருக்க, ராஜா பால்ட்வினுக்கோ அது தோல்விப் புண்ணில் ஈட்டியைச் செருகியது போல் கோபத்தை அதிகப்படுத்தியது. முஸ்லிம் படைகளை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து மூன்றாம் ரேமாண்ட்டையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு, படையுடன் அடுத்த போருக்குக் கிளம்பினார் அவர்.

அது–
(தொடரும்)


Share this: