சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 102

Litani River
Share this:

102. அழிந்தது கோட்டை

யாக்கோபின் நீர்க்கடவுக் கோட்டையின் முன்னோட்ட முற்றுகை முடிந்ததும் பன்யாஸுக்குத் திரும்பிவிட்டார் சுல்தான் ஸலாஹுத்தீன். அங்கிருந்தபடி, சீடோனிலிருந்து பெய்ரூட் வரை தாக்குதல் தொடுக்கத் தம் படையொன்றை அனுப்பி வைத்தார் அவர். படைக்குத் தலைமை ஃபாரூக்‌ஷா. அந்நகரங்களெல்லாம் இன்றைய லெபனான் பகுதிகள். மத்தியதரைக்கடல் நகரங்கள். படை சென்றது; தாக்கியது; ஏகப்பட்ட போர் வெகுமானங்களுடன் திரும்பத் தொடங்கியது. ஜெருசலம் ராஜாவின் ஒற்றர்கள் இத்தகவலை அவரிடம் வந்து தெரிவித்தார்கள்.

‘நமது பகுதிகள் கொள்ளையடிக்கப்பட்டன. அவற்றுடன் திரும்பிக்கொண்டிருக்கிறது ஸலாஹுத்தீனின் படை’ என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் உடனே காரியத்தில் இறங்கினார் ராஜா பால்ட்வின்.

Marjayoun
Marjayoun

575 ஹி / 1179 கி.பி. அது கோடைக் காலம். லிட்டானி நதிக்கும் (Litani river) ஜோர்டான் நதியின் மேல் பகுதிக்கும் இடையே மர்ஜாயூன் (Marjaayoun) என்றொரு பள்ளத்தாக்கு உள்ளது. அங்கு ஃபாரூக்‌ஷாவையும் அவரது படையையும் வழிமறிக்க ராஜா பால்ட்வின் தம் படையுடன் கிளம்பிச் சென்றார். ‘வெற்றிக் களிப்பில், மமதையில் வருகிறார்கள். அவர்களைத் தடுத்துத் தாக்குவது எளிது; வெற்றி நிச்சயம்; முந்தைய தோல்வியை நேர் செய்துவிடலாம்’ என்பது அவரது கணக்கு. அதற்கேற்ப, அங்குச் சண்டையும் மூண்டு, மும்முரமடைந்து, முஸ்லிம்களின் படை சிதறுவதும் நிகழ்ந்தது.

திரும்பி வரும் தம் படை தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்ற எச்சரிக்கை சுல்தான் ஸலாஹுத்தீனுக்கும் இருந்தது. மிகுந்த விழிப்புணர்வுடன் பாதைகளைக் கண்காணித்து வந்த அவர், ஜோர்டான் நதியின் மறுகரையில் கால்நடைகள் மிரண்டு ஓடுவதைக் கண்டுவிட்டார். பரங்கியர்களின் படை வந்துவிட்டது; சண்டை நிகழ்கிறது என்பதை யூகித்துவிட்ட அவர், உடனே தம் படையைத் திரட்டிக்கொண்டு அங்கு விரைந்தார். அதே நேரத்தில், டெம்ப்ளர்களின் படையும் திரிப்போலியின் மூன்றாம் ரேமாண்ட் தலைமையிலான ஒரு படையும் பள்ளத்தாக்கின் மேல்பகுதிக்கு முன்னேறி வந்து சேர்ந்தன. முஸ்லிம்களின் பகுதிக்குள் ஊடுருவுவதற்கு நிலப்பரப்பை வேவு பார்த்தனர் அவர்கள். வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சற்று முயன்றால் டமாஸ்கஸ் மீதே கூடத் தாக்குதல் தொடுத்துக் கைப்பற்றி விடலாம் என்று கணித்தனர் அவர்கள். அந்தளவு அவர்களுக்குத் துணிவும் நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டன.

அங்கே ஃபாரூக்‌ஷாவின் படை பின்னடைவைச் சந்தித்து, மீண்டெழும் முயற்சியில் இருந்த நேரத்தில், ஸலாஹுத்தீனின் தலைமையில் கிளம்பி உதவிக்கு விரைந்த படை இங்கே ரேமாண்டின் படையை எதிர்கொண்டது. இரு தரப்புக்குமே அது எதிர்பாராத ஒரு சந்திப்பு; திகைப்பு; அதிர்ச்சி. சுதாரித்த டெம்ப்ளர் வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டனர். உடனடியாகப் போரில் ஈடுபடத் துடித்தனர். ரேமாண்டும் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஸலாஹுத்தீனைத் திடீரெனத் தாக்கத் தொடங்கினார். ரம்லா போரின் தோல்விக்குப் பிறகு ஸலாஹுத்தீன் பரங்கியர்களுடன் நேருக்கு நேராக மோதிய அடுத்த போர் இது. இம்முறை அவர் விரைந்து வியூகம் அமைத்தார். உறுதியுடன் களத்தில் நின்று எதிர் தாக்குதலைத் தொடங்கினார். இரு தரப்பும் மூர்க்கத்துடன் மோதின. டெம்ப்ளர்கள் தாறுமாறாகத் தாக்கினர். கடுமையடைந்தது சண்டை.

அது சிறிது நேரம் தான். ஸலாஹுத்தீனின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் வெகு விரைவில் பின்வாங்கியது பரங்கியர் படை. உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் புறமுதுகிட்டு ஓடினர் படையினர். சிலர் மலைகளில் ஏறி அபயம் தேடினர். மற்றவர்கள் அருகிலிருந்த கோட்டையின் பக்கம் தஞ்சம் புகுந்தனர். இதனிடையே ஃபாரூக்‌ஷாவைத் துரத்தி வந்ததே பரங்கியரின் படை, அது விழுந்தடித்து ஓடி வரும் தம் இதரப் படையினரைக் கண்டு பீதியடைந்தது. அச்சமும் கலக்கமுமாக அவர்களும் இவர்களும் சேர்ந்து ஸலாஹுத்தீனிடமிருந்து தப்பி ஓடினர். விரட்டி விரட்டிப் பலரைப் பிடித்தனர் முஸ்லிம்கள். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

போரின் முடிவில் சுமார் இருநூற்று எழுபதுக்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். பெருந்தலைகளான ரம்லாவின் ஆட்சியாளர் பால்ட்வின், கலிலேயாவின் கோமகன் ஹியூ (Hugh), ஹாஸ்பிட்டலர்களின் தலைவர்கள் ஆகியோர் சிக்கியிருந்தனர். அவர்களுள் வெகு முக்கியமான பெருந்தலை டெம்ப்ளர்களின் தளபதி ஓடோ டி செயின்ட் அமண்ட் (Odo de St Amand). அந்தக் களேபரத்தில் ஜெருசல ராஜா நான்காம் பால்ட்வின் மட்டுமே தப்பித்து ஓடியிருந்தார். அவரது பிரத்யேகக் காவலர்கள் அவரைக் காப்பாற்றியிருந்தனர். டெம்ப்ளர்களுக்குத்தாம் தங்களின் தலைவர் மாட்டிக்கொண்டது பேரிழிவாகப் போய்விட்டது.

போர்க் கைதிகள் ஸலாஹுத்தீனின் கூடாரத்தின் முன் அணிவகுத்து நிறுத்தப்பட்டனர். கைதிப் பரிமாற்றமாக ஜெருசலம் சிறையில் அடைபட்டிருந்த அமீரின் விடுதலை டெம்ப்ளர் ஓடோவிற்குப் பணயமாய்த் தெரிவிக்கப்பட்டது. ‘ஒரு முஸ்லிம் எனக்குச் சமமாக முடியுமோ? அப்படிப்பட்ட விடுதலை எனக்குத் தேவையே இல்லை’ என்று மறுத்துவிட்டார் ஓடோ. அந்தளவு இறுமாப்பு; அகங்காரம். அந்தளவு இஸ்லாமிய வெறுப்பு, மத வெறி அவரது மனத்தைக் கரையானாய் அரித்திருந்தது. ‘நல்லது. அப்படியே ஆகட்டும்’ என்று அவரை டமாஸ்கஸில் உள்ள ஒரு சிறையில் அடைத்துப் பூட்டினார்கள். ஓராண்டிற்குப் பிறகு கைதியாகவே சிறையில் மரணமடைந்தார் ஓடோ. ’அவரது மரணத்திற்கு யாரும் பெரிதாக துக்கம் மேற்கொள்ளவில்லை’ என்று டைரின் வில்லியம் எழுதி வைத்துள்ளார். இமாதுத்தீன் இஸ்ஃபஹானி, ‘டெம்ப்ளர்களின் தலைவன் தனது சிறை அறையிலிருந்து நரகத்தின் பாதாளச் சிறைக்குச் சென்று சேர்ந்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். டெம்ப்ளர்கள்தாம் மனம் பொறுக்காமல் தாங்கள் சிறைபிடித்து வைத்திருந்த ஒரு முஸ்லிம் பிரமுகரை விடுவித்து ஓடோவின் சடலத்தை மீட்டுக்கொண்டு சென்றார்கள்.

ஸலாஹுத்தீனுக்குப் பெரு வெற்றியாய் அமைந்தது அப்போர். முந்தைய போரில் அவர் அடைந்த தோல்விக்கு மருந்தானது அவ்வெற்றி. முஸ்லிம் படையினருக்கு ஃபாரூக்‌ஷாவின் முந்தைய வெற்றியும் ஸலாஹுத்தீனின் இந்த வெற்றியும் பெரும் உத்வேகத்தை அளித்து விட்டன. கான்ஸ்டபிளையும் ஓடோவையும் பறிகொடுத்திருந்த ஜெருசலம் தரப்போ சோகத்திலும் மனச் சோர்விலும் ஆழ்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு இப்பொழுது தமது கவனத்தை பைத்துல் அஹ்ஸான் கோட்டையின் பக்கம் திருப்பினார் சுல்தான் ஸலாஹுத்தீன்.

oOo

1179 ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம். யாக்கோபின் நீர்க்கடவுக் கோட்டையின் மீது முழு அளவிலான தாக்குதலைத் தொடுக்க ஆயத்தமானார் ஸலாஹுத்தீன். முந்தைய முற்றுகையின் போதே, கோட்டை உருப்பெற்றிருந்த நிலையில், எதற்கு வீணே முற்றுகை, போர், உயிரழப்பு என்று ஸலாஹுத்தீன் தரப்பில் பேரம் பேசுவதும் நிகழ்ந்திருந்தது. ‘அனைத்தையும் தவிர்க்கலாம். கட்டிய கோட்டையை நீங்களே இடித்து விடுங்கள்’ என்று தகவல் அனுப்பியிருந்தார் ஸலாஹுத்தீன். ‘ஹஹ்! ஏகப்பட்ட செலவு செய்திருக்கிறோம், இழப்பீடாக என்ன தருவீர்கள்?’ என்ற கேள்வி பதிலாக வந்தது. ஸலாஹுத்தீன் அறுபதாயிரம் தீனார் அளிக்க முன் வந்தார். அதை அவர்கள் நிராகரித்தார்கள். ஒரு இலட்சம் தீனார் தருவதாகக் கூறினார். அதையும் அவர்கள் நிராகரித்தார்கள். சமயோசிதமாக அதை அன்று பெற்றுக்கொண்டு அவர்கள் சமரசத்திற்கு உடன்பட்டிருக்கலாம். செலவழித்த பணமாவது அவர்களுக்குத் தேறியிருக்கும். வறட்டுப் பிடிவாதம் இன்று முழு நஷ்டத்தில் அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தது.

பேரத்திற்கு அவர்கள் படியவில்லை என்றதும், ‘அந்தப் பணத்தை நம் படை வீரர்களுக்கு சன்மானமாக அறிவியுங்கள். கோட்டையை இடித்துத் தள்ளும் வேலையை அவர்கள் கச்சிதமாக முடித்து வைப்பார்கள்’ என்று ஸலாஹுத்தீனின் அண்ணன் மகனும் ஃபாரூக்‌ஷாவின் அண்ணனுமான தகீயுத்தீன் ஆலோசனை வழங்கினார்.

ஆகஸ்ட் 24 ஆம் தேதி சனிக்கிழமையன்று கோட்டை முற்றுகையிடப்பட்டது. ஸலாஹுத்தீனின் நோக்கம் யாவும் இம்முறை விரைவாகக் கோட்டைக்குள் புகுந்து அதைத் தரைமட்டமாக்க வேண்டும் என்பதே. அச்சமயம் தொழுநோய் ராஜா பால்ட்வின் தென்மேற்கே அரை நாள் பயணத் தொலைவில் உள்ள கலீலிக் கடலின் கரையில் அமைந்துள்ள திபேரியாவில் முகாமிட்டிருந்தார். முற்றுகை விஷயமறிந்து அவர் மீட்புப் படையைத் திரட்டி வருவதற்குள் இங்கு காரியத்தை சாதித்து விட வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார் ஸலாஹுத்தீன்.

கோட்டையின் பாதுகாப்பு அரணை உடைக்க டெம்ப்ளர்களுடன் முஸ்லிம்களின் படை போராடத் துவங்கி, அடுத்த ஐந்து நாள்கள் மூர்க்கமான தாக்குதல்கள் தொடர்ந்தன. கிழக்கு-மேற்கு இருபுறமிருந்து கோட்டையின் மீது குண்டாய்ப் பொழிந்தன கவண் கற்கள். அலெப்போவைச் சேர்ந்த Sapper எனப்படும் சுரங்கம் தோண்டும் விற்பன்னர்கள் சுவர்களின் வடகிழக்கு மூலைக்குக் கீழே குழி பறிக்கும் வேலையில் கிடுகிடுவென்று இறங்கினார்கள். ஒரு சுரங்கம் உருவானது. மரக்கட்டைகளை நிரப்பி, தீயும் மூட்டப்பட்டது. ஆனால் அது சுவர்களில் பிளவை ஏற்படுத்தும் அளவிற்குப் போதுமானதாக இல்லை. எனவே, அடுத்து சுரங்கத்தை விரிவுபடுத்தும் பணி இரவும் பகலும் தொடர்ந்தது. இதற்கிடையே, திபேரியாவில் ராஜா பால்ட்வின் படையுடன் தயாரானார். ஆகஸ்ட் 29 விடியற்காலை அங்கிருந்து புறப்பட்டது அவரின் படை. அதற்குள் இங்கே சுரங்கத்தை விரிவாக்கும் பணி நிறைவேறி, மீண்டும் மூட்டப்பட்டது தீ. திகுதிகுவென்று எரிந்தது நெருப்பு. அதில் கோட்டையின் அடிப்பகுதி முட்டுக்கட்டைகள் சாம்பலாயின. மேலிருந்த சுவர்கள் நொறுங்கி விழுந்தன. தீப்பிழம்புகள் பரவி, ‘நெருப்புக் கடலில் மிதக்கும் ஒரு கப்பலை’ப் போல் கோட்டை காட்சியளித்ததாகத் தெரிவித்துள்ளார் ஸலாஹுத்தீன்.

தீயில் உடைந்து விழுந்த சுவர்களின் வழியே முஸ்லிம் படைகள் உள்ளே பாய்ந்தன. டெம்பளர்களுடன் கடுமையான கைகலப்புச் சண்டை மூண்டது. கொலை வெறியுடன் அடித்துத் தாக்கியது முஸ்லிம்களின் படை. டெம்ப்ளர்கள் வீரத்துடன் போரிட்ட போதிலும் முஸ்லிம்களின் தாக்குதலினால் அவர்கள் இரத்தத்தில் தோய்ந்தனர். சண்டை உக்கிரமடைந்தது. டெம்ப்ளர் படைத் தளபதி தமது குதிரையின் மீது ஏறி, கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பிற்குள் பாய்ந்து சாம்பலானார். அக்காட்சியின் நேரடி சாட்சியான முஸ்லிம் வீரர், ‘நெருப்பின் கடுமையான வெப்பத்தைப் பற்றிய அச்சமின்றி, தீக் குழிக்குள் அவர் பாய்ந்து மாண்டார். இவ்வுலக நெருப்புக் குண்டத்திலிருந்து, நரக நெருப்புக் குண்டத்திற்கு உடனடியாகப் போய்ச் சேர்ந்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அரண்கள் முற்றிலும் உடைந்து விழுந்து, பரங்கிப் படையினர் முஸ்லிம்களால் சூழப்பட்டனர். 700 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு அன்று கருணை மறுக்கப்பட்டது. இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் அப்பட்ட மதவெறியில் திளைத்திருந்த, ஆபத்தின் உருவமான டெம்ப்ளர்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார் ஸலாஹுத்தீன். அனைவரும் வாழைக்குலைகளைப் போல் வெட்டித் தள்ளப்பட்டனர். அண்மைக் காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களினால் தோண்டியெடுக்கப்பட்ட அப்பகுதி அன்றைய போரின் நிகழ்வுகளை இன்று ஆவணமாக விளக்கி வைத்துள்ளது.

‘சுற்றுச்சுவருக்குள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், அந்தத் தாக்குதலின் மூர்க்கத்தனத்திற்குச் சான்றாக விளங்குகின்றன. ஓர் ஆணின் மண்டையோட்டில் மூன்று தனித்தனி வாள் வெட்டுகளுக்கான தடயங்கள் காணப்பட்டன; அவற்றில் கடைசி வெட்டு தலையைப் பிளந்து, மூளையை நசுக்கியிருந்தது. மற்றொருவன் கொல்லப்படுவதற்கு முன்பு, அவனது முழங்கைக்கு மேலே கை துண்டிக்கப்பட்டிருந்தது’ என்று விரிகின்றன அதிலுள்ள விவரங்கள்.

பரங்கியர் படையினரில் பாதிக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1000 கவசங்கள், யுத்த வெகுமானங்கள் மலைபோல் குவிந்தன. போர்க்களத்தின் பெரும் பகுதி திகுதிகுவெனத் தீயில் எரிந்தது. வடக்கு நோக்கித் தம் படையுடன் விரைந்த ராஜா பால்ட்வின், அடிவானத்தில் புகையைக் கண்டார். அழிந்தது கோட்டை என்று புரிந்துவிட்டது அவருக்கு. அடுத்த இரண்டு வாரங்களில், கோட்டையைக் கல், கல்லாகப் பெயர்த்தெடுத்துத் தரைமட்டமாக்கியது ஸலாஹுத்தீனின் படை. அஸ்திவாரப் பகுதிகளைத் தம் கைகளாலேயே பிடுங்கியதாகவும் ஸலாஹுத்தீன் கூறியுள்ளார். கொல்லப்பட்ட சிலுவைப்படையினர் சடலங்கள், குதிரைகள், கோவேறு கழுதைகளின் பிணங்கள் கோட்டையின் நீர்த்தேக்கத்தை நிரப்பி விட்டதன் விளைவாகக் கொள்ளைநோய் பரவி, ஸலாஹுத்தீனின் படையில் சிலரின் உயிரைப் பறித்தது அது. அவருடைய அண்ணன் மகன் தகீயுத்தீன், ஷிர்குஹ்வின் மகன் நஸ்ருத்தீன் இருவரும் நோய்வாய்ப்பட்டு மீண்டனர். ஆனால் ஸலாஹுத்தீனின் பத்து அமீர்கள் அந்தத் தொற்றுநோய்க்குப் பலியாயினர்.

யாக்கோபின் நீர்க்கடவுக் கோட்டை அழிந்து, இடிபாடாக எஞ்சி நிற்க, அக்டோபர் மாத மத்தியில் அங்கிருந்து வெற்றியுடன் கிளம்பினார் சுல்தான் ஸலாஹுத்தீன்.

(தொடரும்)


Share this: