103. ஸலாஹுத்தீனும் இரண்டாம் கிலிஜ் அர்ஸலானும்
முந்தைய அத்தியாயத்தில் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி பரங்கியர்கள் கட்டிய கோட்டையைத் தரைமட்டமாக்கியதைப் பார்த்தோமில்லையா? அந்தச் சண்டை மும்முரமாக இருந்த நேரத்தில், சேனாதிபதிகள் அடங்கிய கூட்டமொன்று பெரும் எண்ணிக்கையில் ஐரோப்பாவிலிருந்து வருவதாகத் தகவல் வந்தது. அந்த சேனாதிபதிகளுக்குத் தலைமை தாங்கியிருந்தவர் இரண்டாம் ஹென்றி (Henry II of Champagne). அச்செய்தி பரங்கியர்களுக்கு ஏகப்பட்ட நம்பிக்கையை அளித்தது. தம்முடன் இணைவார்கள், ஸலாஹுத்தீனை உண்டு இல்லை என்றாக்கி விடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் வந்து சேர்ந்த அந்தப் படையினரின் நோக்கமோ ஜெருசலத்திற்குப் புனித யாத்திரை என்றளவில் மட்டும் சுருங்கியிருந்தது. அதற்கேற்ப வந்தார்கள், ஜெருசலத்தை தரிசித்தார்கள்; புனித யாத்திரையை முடித்துக்கொண்டு பிரான்சுக்குக் கப்பல் ஏறிவிட்டார்கள்.
ஆபத்து ஏதுமின்றி அந்நிகழ்வு கடலோடு திரும்பிவிட்ட போதிலும் எந்நேரமும் ஐரோப்பாவிலிருந்து கடல்வழியே படையும் உதவியும் வருவதற்குத் தடையேதும் இல்லை என்பதை ஸலாஹுத்தீன் உணர்ந்தார். அதில் கவனத்தைச் செலுத்தி, 1179ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தம்முடைய கப்பற்படையை ‘ஏக்கர்’ துறைமுகத்தில் நின்றிருந்த பரங்கியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்க ஏவினார். பரங்கியர்களின் கப்பல்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது முஸ்லிம்களின் கப்பற்படை. வர்த்தகப் பொருட்களுக்கு ஏராள நாசம். அதற்கு அடுத்த ஆண்டு, சிலுவைப்படையினரின் கப்பல்கள் பல பிடிக்கப்பட்டன; சேதப்படுத்தப்பட்டன. சிலுவைப்படையின் கப்பற்படையினர் ஆயிரக்கணக்கில் கைதாயினர். அதன் பின் அடுத்த நான்கு ஆண்டுகள் (ஹி. 575-579 / கி.பி. 1180-1183), ஸலாஹுத்தீன் அய்யூபியின் கப்பற்படை சிலுவைப்படையினருக்கு எதிராகக் கடலில் போர் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு, பரங்கியர்கள் தொடுத்த தாக்குதல்களை எல்லாம் முறியடித்தது.
அய்யூபி அரசின் கப்பற்படை விரிவாக்கம், 1182ஆம் ஆண்டு செங்கடலில் அது சாதித்த பெருவெற்றி, ஆகியனவற்றைப் பின்னர் பார்ப்போம். அதற்கு முன் வேறு பல முக்கிய நிகழ்வுகளை நாம் கடக்க வேண்டியிருக்கிறது.
oOo
1180ஆம் ஆண்டு தொடங்கிய போது சிரியாவில் கடும் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டு, இரு தரப்பும் கடும் சோதனைக்கு உள்ளாயின. முஸ்லிம்களையும் பரங்கியர்களையும் பஞ்சம் பிடுங்கித் தின்றது. தொழுநோய் ராஜா நான்காம் பால்ட்வின், “நாம் தற்காலிகமாகப் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்வோமே” என்று ஸலாஹுத்தீனுக்குத் தகவல் அனுப்பினார். எகிப்தில் தம்முடைய ஆட்சி விவகாரங்களைச் சீர் செய்யவும் சிரியாவில் தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் ஸலாஹுத்தீனுக்கும் அவகாசம் தேவைப்பட்டதால் அதை ஏற்றுக்கொண்டார். மே மாதம் இரண்டாண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிரியாவில் தொடர் போர்களில் பரங்கியர்களை அடுத்தடுத்து வீழ்த்தியது, அவர்கள் கட்டிய கோட்டையைத் தகர்த்தெறிந்தது என்று ஸலாஹுத்தீன் தொடர் வெற்றிகளை ஈட்டியிருந்த போதும் அவரைத் தொடர்ந்தபடி இருந்த முக்கிய பிரச்சினை மற்றொன்று. அது இதரப் பகுதி முஸ்லிம் ஆட்சியாளர்களின் மீதான முழு அதிகாரம். அவர்கள் அனைவரும் தம்முடைய ஒற்றைத் தலைமையை ஏற்று, கட்டுப்பட்டு, போர்களில் ஒத்துழைக்க முன்வரும் வரை ஜெருசலத்தை மீட்கும் முழு அளவிலான போர் முன்னெடுப்புப் பிசுபிசுத்துப் போகும் என்பதை அவர் அறிந்திருந்தார். அதற்கேற்பப் பல பகுதிகளிலிலும் தொந்தரவுகளும் எழுந்தன.
போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு, 1179ஆம் ஆண்டின் போதே, சிரியாவின் வடக்கில் ரோம ஸல்தனத்தில், புதிதாய் உதித்தது ஒரு பிரச்சினை. மைரீயோஹ்கெஃப்ஹலோன் யுத்தம் நிகழ்ந்தது, அதில் இரண்டாம் கிலிஜ் அர்ஸலான் பைஸாந்தியத்தின் இடுப்பைச் சுக்கு நூறாக ஒடித்துப் போட்டார் என்று வாசித்தது நினைவிருக்கலாம்.
அப்போது சுல்தான் கிலிஜ் அர்ஸலானுக்கு 23 வயது. பதினொரு மகன்கள். எண்களால் விழிகள் விரிகின்றன அல்லவா? அவர்களிடம் பலதார திருமணம் வழக்கத்தில் இருந்ததை நினைவில் நிறுத்தினால் இத்தகவலில் நமக்கு ஏற்படும் வியப்பைத் தவிர்க்கலாம். அதுவன்று பிரச்சினை. தம் மகன்களுக்கு நிலங்களையும் கோட்டைகளையும் அன்பளிப்பாக எழுதி வைக்க நினைத்தார் கிலிஜ் அர்ஸலான். அதற்காக, சிரியாவின் வடக்கில் உள்ள சில பகுதிகளில் தமக்கு உரிமை கோரினார். அதுதான் சிக்கலைத் தோற்றுவித்தது.
அவரது கோரிக்கைக்குள் மற்றொரு ஆசையும் ஒளிந்திருந்தது. அது தாமும் ஆளுமை மிக்க சுல்தானாக உருவாக வேண்டும் என்ற விருப்பம். யூஃப்ரட்டீஸ் நதிக்கு உறுதியான வழித்தடம் கிடைத்துவிட்டால் அகண்ட ரோம ஸல்தனத் சாத்தியமாகும் என்றொரு கனவு அவருக்கு. டமாஸ்கஸில் வீற்றிருந்த ஸலாஹுத்தீனைச் சந்திக்கத் தம் தூதுக்குழுவை அனுப்பி வைத்தார்.
தூதுவர்கள் டமாஸ்கஸ் வந்தனர். சுல்தான் ஸலாஹுத்தீனைச் சந்தித்தனர். ரோம ஸல்தனத்தின் தெற்கே, சிரியாவின் வடக்கே இருந்த ருபான் (Ruban), கைஸும் (Kaysoom) எனும் இரு கோட்டைகளைக் கேட்டனர். அலெப்போ, சுமைசாத் (Sumaysat) நகரங்களுக்கு இடையிலான எல்லையில் வீற்றிருந்தது ருபான். அது யூஃப்ரட்டீஸ் நதிக்கு அண்மைப் பகுதி. பெரும் நகரங்களுள் ஒன்று. கைஸும் என்பது ஒரு கிராமம். அது சுமைசாத் நகருக்குப் புறப்பகுதியில் இருந்தது.
‘அவை இரண்டும் முன்னர் ரோம ஸல்தனத்தின் ஸெல்ஜுக்கியர்களுக்கு சொந்தமாக இருந்தன. இரண்டாம் கிலிஜ் அர்ஸலானின் தந்தை அவற்றைத் தம் பகுதிக்குள் இணைத்திருந்தார். ஆனால் நூருத்தீன் ஸெங்கியிடம் அவற்றை அவர் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நூருத்தீன் ஸெங்கியோ மரணமடைந்து விட்டார். ஆகவே இப்பொழுது எங்களுக்கு அவற்றைத் திருப்பித் தந்துவிடுங்கள்’ என்று அவர்கள் வாதிட்டனர். அது ஸலாஹுத்தீனை எரிச்சலடைய வைத்தது. தூதுவர்களிடம் கடுமையாகப் பேசிவிட்டு, இரண்டாம் கிலிஜ் அர்ஸலானுக்கு எச்சரிக்கையும் விடுத்து அவர்களை வெளியேற்றிவிட்டார்.
ஏமாற்றத்துடன் கொன்யாவுக்குத் திரும்பினார்கள் தூதுவர்கள். கிலிஜ் அர்ஸலானிடம் உதட்டைப் பிதுக்கி பதிலைத் தெரிவித்தனர். அவருக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டது. ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் படை திரட்டினார். அணிவகுத்து வந்து ருபான் கோட்டையைத் தாக்கினார். தூரான்ஷா பிரச்சினையை ஸலாஹுத்தீன் தீர்த்து வைத்தபோது அலெப்போவின் தெற்கில் உள்ள வளமான நிலங்கள் இப்னுல் முகத்தமுக்கு மானியமாக அளிக்கப்பட்டன என்று பார்த்தோமில்லையோ? அதில் இந்த ருபான் ஒன்று. அதன் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றிருந்தார் இப்னுல் முகத்தம்.
கிலிஜ் அர்ஸலானை எதிர்த்து உறுதியுடன் நின்றார் அவர். அவருக்கு உதவியாக உடனே ஆயிரம் குதிரைப்படையினரைத் திரட்டி, ‘சென்று வென்று வாருங்கள்’ என்று ஸலாஹுத்தீன் கட்டளையிட, விறுவிறுவென்று அங்குச் சென்று சேர்ந்தது படை. ஸலாஹுத்தீனுக்கு அணுக்கமான, நம்பகமான தளபதி அவருடைய சகோதரர் மகன் தகீயுத்தீன். ஸலாஹுத்தீனுடன் எகிப்தில் இருந்தவர்; பலமுறை தம்முடைய விசுவாசத்தை நிரூபித்தவர். மாண்ட்கிசார்ட் (ரம்லா) போரில் தம் மகனை இழந்தவர். அவரை அப்படைக்குத் தளபதியாக நியமித்து கிலிஜ் அர்ஸலான் பிரச்சினையை முடித்து வைக்கும் பொறுப்பை அளித்தார் ஸலாஹுத்தீன்.
கிலிஜ் அர்ஸலானின் படையினரின் முகாம்களை நெருங்கியதும் ஒற்றர்கள் முன் சென்று வேவு பார்த்தனர். வரும் ஆபத்தை உணராமல் நிம்மதியாக ஓய்வாக வீற்றிருந்தது ஸெல்ஜுக்கியர்களின் படை. தகீயுத்தீன் தம்முடைய ஒரு பகுதிப் படையினரை வாத்தியக் கருவிகளுடன் முகாமைச் சுற்றி நிறுத்திவிட்டு, அவர்களுக்குச் சில உத்தரவுகள் இட்டார். மீதப் படையினருடன் திடீர் தாக்குதல் தொடுக்க ஏற்பாடுகள் செய்தார். அனைவரும் தயாரானதும் அவர் சமிக்ஞை அளிக்க, பெரும் ஓசையுடன் இசை முழக்கம் எழுப்பியது வாத்தியப் படை. திடுதிடுவென்று பலர் ஓடும் காலடி ஓசையும் எழுப்பப்பட்டது. அதே நேரத்தில் ஆயுதங்களை ஓங்கியபடி பாய்ந்தனர் தகீயுத்தீன் தலைமையிலான படையினர். ஸெல்ஜுக் படைவீரர்கள் இந்த இரைச்சலையும் குதிரைகளின் குளம்பொலியையும் ஆயுதங்களின் உரசல் ஒலியையும் கேட்டதும் அதிர்ச்சியில் திகைத்துவிட்டனர். களேபரமடைந்து போட்டது போட்டபடித் தப்பித்து ஓடினர். அவர்களைப் பதுங்கி இருந்து தாக்கியது தகீயுத்தீனின் குதிரைப்படை. பலரைக் கொன்றது; மற்றும் பலரைக் கைது செய்தது. சின்னாபின்னமானது கிலிஜ் அர்ஸலானின் ஸெல்ஜுக் படை. இறுதியில் தகீயுத்தீன் போர் வெகுமானங்களை மட்டும் சேகரித்துக்கொண்டு கைதிகளை விடுவிக்க, தோல்வியுடன் மலாட்யாவுக்குத் திரும்பினார் கிலிஜ் அர்ஸலான்.
இந்த முதலாம் மோதலுக்குப் பின், 1180ஆம் ஜெருசல ராஜாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பின், கிலிஜ் அர்ஸலானுக்கும் ஸலாஹுத்தீனுக்கும் இடையே வெடித்தது இரண்டாம் மோதல். இம்முறை மையப் பிரச்சினையாக அமைந்தது குடும்ப விவகாரம் ஒன்று.
oOo
ஹஸன்கெய்ஃப் என்ற பகுதியின் ஆட்சியாளராக இருந்தார் நூருத்தீன் முஹம்மது இப்னு ஃகரா அர்ஸலான் (Noor ad-Deen Muhamamd ibn Qara Arslan) என்றொருவர். அவரிடம் நட்பு பாராட்டிய இரண்டாம் கிலிஜ் அர்ஸலான், அதை உறவாக மாற்ற, தம் மகள் ஸெல்ஜுக்காஹ் காத்தூன் என்பவரை நூருத்தீன் முஹம்மதுக்கு மணமுடித்து வைத்தார். மணக்கொடையாகப் பல கோட்டைகளையும் மருமகனுக்கு அளித்தார். சில காலத்திற்குப் பிறகு, பாடகி ஒருத்தியிடம் நூருத்தீன் முஹம்மதுக்குக் காதல் ஏற்பட்டு, அவளை மணந்துகொண்டார். அவளிடம் மிகைத்த காதலால் முதல் மனைவி செல்ஜுக்காஹ்விடம் அவரது அன்பு குறைந்தது. அந்த மனைவிக்குரிய உரிமைகள் பாராமுகமாயின. பெயரளவில் மட்டுமே தாம் மனைவி என்றானதும் சோகமும் கவலையுமாகத் தம் தந்தை கிலிஜ் அர்ஸலானுக்கு விபரங்களைத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் செல்ஜுக்காஹ் காத்தூன்.
தந்தைக்கு எப்படியிருக்கும்? ஒரு தந்தைக்கு ஏற்பட வேண்டிய கோபம் அதன் அளவுக்குச் சற்றும் குறைவின்றி அவருக்கு ஏற்பட்டது. முதல் நடவடிக்கையாக, ‘என் மகளைச் சரியாகக் கவனித்துக்கொள். அவளுக்குண்டான உரிமையைக் கொடு. அல்லது விவாகரத்துச் செய்துவிடு’ என்று மருமகனுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் நூருத்தீன் முஹம்மது அதைச் சட்டை செய்யவில்லை. பாடகியுடன் தம் காதல் வாழ்வில் மும்முரமாகவே இருந்தார். பேச்சுவார்த்தை சரிவராது என்பது கிலிஜ் அர்ஸலானுக்குப் புரிந்து விட்டது. படையைக் கிளப்பினார். ஹஸன்கெய்ஃபுக்கு அணிவகுத்தார். அப்பொழுதுதான் நூருத்தீன் முஹம்மதுக்கு சுயநினைவு மீண்டிருக்க வேண்டும். ‘உதவுங்கள் சுல்தானே’ என்று ஸலாஹுத்தீன் அய்யூபிக்கு அவசர அவசரமாகத் தகவல் அனுப்பினார்.
முந்தைய ஆண்டு ஸலாஹுத்தீன், கிலிஜ் அர்ஸலானத் தோற்கடித்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையில் பூசல் நிலவுகிறது. ஆகையால் அதைத் தந்திரமாகப் பயன்படுத்துவோம் என்ற திட்டத்துடன் நூருத்தீன் முஹம்மது இப்பிரச்சினையைத் தமக்கு சாதகமாகத் திரித்து ஸலாஹுத்தீனுக்குக் கடிதம் எழுதியிருக்க வேண்டும். பின்னர் கிலிஜ் அர்ஸலானின் தூதருக்கும் ஸலாஹுத்தீனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலில் இருந்து அதைத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. எது எப்படியோ, ஸலாஹுத்தீன், நூருத்தீன் முஹம்மதுக்கு உதவ முடிவெடுத்தார்.
கிலிஜ் அர்ஸலானுக்கு, ‘உமது இராணுவ நடவடிக்கையை நிறுத்தவும்’ என்று தகவல் அனுப்பினார். அவரோ, ‘என் மகளையும் தந்து, சீர்வரிசையாகப் பல கோட்டைகளையும் அளித்திருக்கிறேன். ஆனால் என் மகளை மஞ்சத்திலிருந்து ஒதுக்கிவிட்டு, பாடகியின் மடியில் தஞ்சமடைந்து கிடக்கிறார் நூருத்தீன் முஹம்மது. ஆகவே நான் அவருக்கு அளித்த கோட்டைகளை அவரிடமிருந்து பிடுங்காமல் விடமாட்டேன்’ என்ற ரீதியில் பதில் அனுப்பி விட்டார்.
இரு சுல்தான்களுக்கும் இடையில் அடுத்தொரு போர் ஏற்படும் சூழல். அதைத் தடுக்க தூதுவர்கள் இரண்டுபுறமும் அலைந்ததுதான் மிச்சம். சமரசத்திற்கு ஏதும் வழி ஏற்படவில்லை. ஸலாஹுத்தீன் தம் படையைத் திரட்டிக்கொண்டு கிலிஜ் அர்ஸலானை எதிர்த்து அனடோலியாவிற்குப் படையெடுத்தார். நூருத்தீன் முஹம்மதும் தமது படையுடன் ஸலாஹுத்தீனுடன் இணைந்துகொண்டார். ஸலாஹுத்தீன் படையுடன் வந்துள்ளதை அறிந்ததும் தம் தலைமைச் செயலாளரான மூத்த அமீரை அழைத்தார் கிலிஜ் அர்ஸலான்.
‘எனது நோக்கமெல்லாம் என் மருமகனை ஒழுங்குபடுத்தித் திருத்துவது மட்டுமே என்று அவரிடம் சொல்லுங்கள்’ என்ற தகவலுடன் அவரைத் தூது அனுப்பினார்.
ஆனால், அதுவும் ஸலாஹுத்தீனை சமாதானப் படுத்தவில்லை. ஸலாஹுத்தீனின் படையினரை நோட்டமிட்ட அமீருக்கு கிலிஜ் அர்ஸலான், ஸலாஹுத்தீனைப் போரில் வெல்ல முடியாது என்பது புரிந்தது. பிரச்சினை விபரீதம் ஆகாமல் எப்படித் தடுப்பது என்று சிந்தித்தவர் மறுநாளும் வந்து ஸலாஹுத்தீனைச் சந்தித்தார்.
‘இன்று நான் உங்களிடம் என மனத்திலுள்ளதைப் பகிர விரும்புகின்றேன். இது முழுக்க முழுக்க எனது கருத்து. கிலிஜ் அர்ஸலானின் தகவலன்று’ என்று தொடங்கினார்.
‘கூறுங்கள்’ என்று அனுமதியளித்தார் ஸலாஹுத்தீன்.
அமீர் மிகவும் புத்தி சாதுர்யத்துடன் தமது வாதத்தை முன் வைத்தார். ‘மன்னரே! நீங்கள் மிகச் சிறந்த, வலிமை மிக்க சுல்தான். அத்தகு மாண்புடைய நீங்கள் ஒரு பாடகியின் பொருட்டு, சிலுவைப்படை பரங்கியர்களுடன் போர் நிறுத்த உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு பெருமளவில் படை திரட்டி அபரிமித செலவு செய்து தொலைதூரத்திலிருந்து அணிவகுத்து வந்திருப்பதாகவும் புனிதப் போரையும் நாட்டு நலன்களையும் கைவிட்டு விட்டதாகவும் மக்கள் உங்களைக் குறித்துப் பேசினால் அது உங்களது புகழுக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கல்லவா? யாரும் உங்களிடம் இக்கேள்விகளை நேருக்கு நேர் கேட்கப்போவதில்லை. என்றாலும் இன்றைய சூழலை அப்படித்தானே அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
அதுபோக, சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்விடமும் கலீஃபாவிடமும் இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமும் உலகத்தாரிடமும் இதற்கான உங்களது பதில், சாக்குப்போக்கு என்னவாக இருக்கப்போகிறது?
ஒரு வாதத்திற்கு கிலிஜ் அர்ஸ்லான் இறந்துவிட்டதாகவும் அவருடைய மகளே தங்களிடம் வந்து பாதுகாப்புக் கோரி, தம் கணவரிடமிருந்து தமக்கு நீதி பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுப்பதாகவும் வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட சூழலில், நீங்கள் அந்தப் பெண்மணியின் கோரிக்கையை நிராகரிக்கமாட்டீர்கள் அல்லவா?’
அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்ட ஸலாஹுத்தீன், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நியாயம் உங்கள் பக்கம் உள்ளது. பின் விளைவுகளும் நீங்கள் குறிப்பிட்டது போலவே இருக்கிறது. நூருத்தீன் முஹம்மதோ என்னை நம்பி வந்துவிட்டார். நான் அவரைக் கைவிட்டேன் என்றிருக்க வேண்டாம். நீங்கள் அவரைச் சந்தியுங்கள். உங்கள் இருவருக்கும் இடையிலான விவகாரத்தை உங்கள் விருப்பப்படி தீர்த்துக்கொள்ளுங்கள். இவ்விவகாரத்தில் நான் உங்களுக்கு உதவுவேன். அவர் செய்த செயலுக்காக அவரைக் கண்டிப்பேன்’ என்று பதிலுரைத்தார்.
அதையடுத்து, நூருத்தீன் முஹம்மதுவுடன் பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. அவர் அந்தப் பாடகியை ஓராண்டிற்குள் விவாகரத்துச் செய்ய வேண்டும்; தவறினால், ஸலாஹுத்தீனும் கிலிஜ் அர்ஸலானுடன் இணைந்து அவர் மீது போர் தொடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டார் நூருத்தீன் முஹம்மது. ஒருவழியாக இரு சுல்தான்களுக்கும் இடையே போர் இன்றி இப்பிரச்சினை சுமுகமாக முடித்து வைக்கப்பட்டது.
அதையடுத்து சிலிசியாவில் உபத்திரவம் அளித்து வந்த அர்மீனியர்கள் மீது கவனத்தைத் திருப்பினார் ஸலாஹுத்தீன்.
oOo
சிலிசியாவின் அர்மீனிய ஆட்சியாளர் Turkomans எனப்படும் துருக்கிய நாடோடிப் பழங்குடியினரைத் தந்திரமாக ஏமாற்றி துஷ்டத்தனம் செய்திருந்தார். ‘உங்களுக்கெல்லாம் நான் பாதுகாப்பு அளிக்கிறேன். எனது நிலங்களில் உங்களது கால்நடை மந்தைகளை மேய்த்துக்கொள்ளுங்கள்’ என்று வெகு தாராளமாக அனுமதி வழங்கியிருந்தார். அதை நம்பி அவரிடம் வந்திருந்தார்கள் அந்தத் துருக்கியார்கள். ஆனால், அவர்களுள் ஆண்கள் பலரைக் கொன்று, பெண்களைச் சிறைபிடித்து, மந்தைகளையும் கைப்பற்றிக்கொண்டார் அர்மீனிய ஆட்சியாளர். அப்பட்டமான துரோகம்.
அவர் மீது படையெடுத்தார் ஸலாஹுத்தீன். அந்நிலப் பகுதி கரடுமுரடான மலைகள், குறுகிய கணவாய்கள் சூழ எளிதில் அணுக முடியாதபடி அமைந்திருந்தது. கோட்டைகளும் ஊடுருவ இயலாத அளவிற்கு வலிமையானவை . அங்கு வந்து முகாமிட்ட ஸலாஹுத்தீன் அப்பகுதி முழுவதும் தமது படையினரைப் பிரித்தனுப்பித் தாக்குதல் தொடுத்தார். வீரியத்துடன் புகுந்து சாகசம் நிகழ்த்தியது முஸ்லிம்களின் படை. கோட்டையை ஸலாஹுத்தீனின் படை கைப்பற்றிவிடும் நிலை நெருங்கியதும் அதை இடித்துத் தீயிட்டுக் கொளுத்தினார்கள் அர்மீனியர்கள். அதையறிந்து விரைந்து வந்து சேர்ந்தார் ஸலாஹுத்தீன். உள்ளே இருந்த உணவு தானியங்களும் இதரப் பொருட்களும் எரிந்து சாம்பலாகும் முன் கைப்பற்றப்பட்டன. தோல்வியுற்றுச் சரணடைந்த ஆட்சியாளர் தாம் சிறைபிடித்திருந்தவர்களை விடுவித்தார். துருக்கிய நாடோடிப் பழங்குடியினருக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்டஈடும் வழங்கினார்.
1180ஆம் ஆண்டின் மே மாதத்திலிருந்து அக்டோபருக்குள் இவ்விரண்டு பிரச்சினைகளும் நிகழ்வுற்று முடிந்தன. இவையன்றி நடந்த மற்றும் பல…
(தொடரும்)
