|
சத்திய மார்க்கம்.காம் தளத்தின் வாசகச் சகோதரி நஸீஹா பர்வீன் அவர்களின் ‘வார்த்தைகளின் வலிமை’ எனும் நற்சிந்தனை ஆக்கத்தை இங்கு வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கின்றோம்! இது போன்ற அறிவார்ந்த ஆக்கங்கள் வழங்குவதற்கு அல்லாஹ் சகோதரிக்கு அறிவருள் புரிவானாக! |
முன்னுரை
“வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது” என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், அது உண்மைதான். நாம் தினமும் சாதாரணமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளால் ஒருவரை வாழ வைக்கவும் முடியும், அப்படியே மனமுடைந்து போகச் செய்யவும் முடியும். இன்றைய அவசர உலகில் நாம் பல நேரங்களில் கோபத்திலோ அலட்சியத்திலோ பேசும் சில வார்த்தைகள், அடுத்தவர் மனத்தை எவ்வளவு ஆழமாகக் காயப்படுத்துகின்றன என்பதை நாம் சிந்திப்பதே இல்லை. தவறுதலாகப் பயன்படுத்திவிடும் ஒரு சிறிய கத்தி எப்படி உடலைக் கீறிக் காயப்படுத்திவிடுமோ, அதேபோல நாம் யோசிக்காமல் பேசிவிடும் சொற்கள், சொந்த உறவுகளையே துண்டு துண்டாக வெட்டி விடும்.
குடும்ப உறவுகளில் வார்த்தைகள்
நமது அன்றாட வாழ்க்கையில், மிக நெருக்கமான குடும்ப உறவுகளுக்குள்தான் நாம் வார்த்தைகளில் அதிக அலட்சியம் காட்டுகின்றோம். கணவன்-மனைவி இடையேயோ அல்லது பெற்றோர்-குழந்தைகள் இடையேயோ கோபத்தில் கணப்பொழுதில் பேசிவிடும் கடுமையான சொற்கள், பல வருட பாசத்தை நொடியில் உடைத்துப் போட்டு விடுகின்றன. குறிப்பாக, குழந்தைகளை, “உனக்கு ஒன்றும் தெரியாது”, “நீ உருப்படமாட்டாய்” என்று எதிர்மறையாகப் பேசுவது அவர்களின் எதிர்கால நம்பிக்கையையே சிதைத்துவிடும். அதற்குப் பதிலாக, “பரவாயில்லை, இன்னும் முயன்றால் அடுத்த முறை உன்னால் முடியும்” என்ற ஒரு நல்வார்த்தை அவர்களைச் சாதனையாளர்களாக மாற்றும்.
மார்க்கம் காட்டும் வழி
புறம் பேசுவதும் (Backbiting) ஒருவரைக் கேலி செய்வதும் சபைகளில் பிறரை அவமானப்படுத்துவதும் எவ்வளவு பெரிய பாவம் என்பதை இஸ்லாமிய மார்க்கம் நமக்குத் தெளிவாகக் கற்றுத் தந்துள்ளது. மனிதன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வானவர்களால் பதியப்படுகிறது என்பதைத் திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:
“மனிதன் பேசும் எந்தச் சொல்லையும் கண்காணித்துக் குறிப்பெடுப்பெடுத்துப் பதிபவர் அவனிடம் இல்லாமல் இல்லை” (அல்குர்ஆன் 50:18).
“நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள்; இல்லையெனில் மௌனமாக இருங்கள்” என்பது நபிமொழியாகும். இன்முகத்தோடு ஒருவருக்கு ஸலாம் சொல்வதும், சோகத்தில் இருப்பவருக்கு ஆறுதலான ஒரு நல்வார்த்தை கூறுவதும் கூட ஒரு சிறந்த தர்மம் (ஸதகா) என்று நமது மார்க்கம் நமக்கு வழிகாட்டுகிறது. நாவைக் கட்டுப்படுத்துவது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
“… அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஈமான் (நம்பிக்கை) கொண்டவர், ஒன்று நல்லதைப் பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும்” (நூல்: முஸ்லிம் 2914).
நாம் சாதாரணமாக நினைத்துப் பேசும் வார்த்தைகள் மறுமையில் நமக்கான அந்தஸ்தையோ அல்லது தண்டனையையோ தீர்மானிக்கின்றன என்பதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் நபிமொழி நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது:
“ஓர் அடியார் அல்லாஹ்வின் அன்புக்குரிய ஒரு வார்த்தையை (அதன் வினைப் பயனை அறியாமல்) சர்வசாதாரணமாக பேசுகின்றார். அதன் காரணமாக அவருடைய தகுதிகளை அல்லாஹ் உயர்த்தி விடுகின்றான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகின்றார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகின்றார்” (நூல்: புகாரி 6478).
முடிவுரை
நாம் பேசத் தொடங்கும் முன் ஒரு நொடி யோசிக்க வேண்டும். நாம் பேசப்போகும் வார்த்தை உண்மையானதா? அது அடுத்தவருக்குப் பயனுள்ளதா? அது அன்பானதா? என்று சிந்தித்துப் பேசப் பழகிக்கொள்ள வேண்டும். நமது நாவைக் கட்டுப்படுத்தி, எப்போதுமே இனிமையான வார்த்தைகளைப் பேசி, நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் மனத்தில் அன்பையும் நம்பிக்கையையும் இன்ஷா அல்லாஹ் விதைப்போம்! அல்லாஹ்வின் அருள் பெறுவோம்!
– மு.நசீஹா பர்வீன்
