முன்னுரை
இன்றைய நவீன உலகில், மனிதன் சுவாசிக்க மறந்தாலும் மறப்பான், ஆனால் தன் கையில் இருக்கும் அலைபேசியை (Phone) எடுக்க மறக்கவே மாட்டான். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், ஒரு மணி நேரம் அலைபேசி இல்லாமல் இருப்பது என்பது, ஒரு வருடம் அடர்ந்த காட்டில் தனியாக மாட்டிக்கொண்டதைப் போன்ற ஒரு பிரமையைத் தருகின்றது.
அன்றாட வாழ்வின் எதார்த்தம்
இப்போதெல்லாம் நம்முடைய காலைப் பொழுதுகள் அல்லாஹ்வின் நினைவோடு தொடங்குவதைவிட, அலைபேசியின் திரையோடுதான் அதிகம் தொடங்குகின்றன. காலையில் கண் விழித்ததும் நாம் தேடும் முதல் பொருள் அலைபேசிதான். உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிப்பதற்கு முன்பாக, அலைபேசிக்கு வந்திருக்கும் அறிவிப்புகளை (Notifications) சரிபார்ப்பதே பலரது அன்றாடக் கடமையாகிவிட்டது.
அன்பானவர்களே! உலகமே இந்தச் சிறிய திரைக்குள் சுருங்கிவிட்ட சூழலில், என் மனத்தில் ஒரு கேள்வி எழுந்தது— “ஏன் நாம் ஒரு மணி நேரம் அலைபேசியின் நினைவு இல்லாமல் இருந்து பார்க்கக் கூடாது?” என்ற ஒரு சிறிய ஆன்மீகப் பரிசோதனையை நான் செய்து பார்த்தேன்.
முதல் 10 நிமிடங்கள்: பதற்றத்துடன் ஒரு போராட்டம்
அலைபேசியைப் பக்கத்தில் வைத்துவிட்டு அமர்ந்தால், இரண்டு நிமிடங்கள்கூட ஆகியிருக்காது. ஆனால், கை தானாகவே சென்று பாக்கெட்டைத் தடவிப் பார்க்கிறது. “யாராவது குறுஞ்செய்தி அனுப்பியிருப்பார்களோ? அவசர அழைப்பு வந்திருக்குமோ?” என்று மனத்துக்குள் உலகப் பேராசை வந்து தொற்றிக்கொண்டது. கையில் இருந்த பொம்மை கைநழுவி விழுந்ததும் அழத் தொடங்கும் ஒரு சிறு குழந்தையைப் போல, என் மனம் அலைபேசி இல்லாமல் தவிக்கத் தொடங்கியது. இதற்குக் காரணம் நாம் இந்த ஜடப்பொருளுக்கு அடிமையாகிவிட்டோம் என்பதுதான்!
அடுத்த 20 நிமிடங்கள்: இயற்கையின் விழிப்புணர்வும் நரகத்தின் நினைவூட்டலும்
அந்தப் பதற்றம் கொஞ்சம் தணிந்த பிறகுதான், என்னைச் சுற்றி இருக்கும் நிஜ உலகமும் அல்லாஹ்வின் படைப்புகளும் என் கண்ணுக்குத் தெரியத் தொடங்கின. ஜன்னல் வழியாக நுழைந்த தென்றல் காற்று, வெளியே காகம் கரையும் சப்தம், சமையலறையில் அம்மா அன்போடு பேசும் பேச்சு என எல்லாமே எனக்குப் புதிதாகத் தோன்றின. இவ்வளவு நாட்களாக இந்த அழகான எதார்த்த உலகத்தைத் தொலைத்துவிட்டு, வெறும் செயற்கையான சிறிய திரைக்குள்ளேயே மூழ்கிக் கிடந்திருக்கின்றோமே என்ற குற்ற உணர்வும் வியப்பும் என்னுள் ஏற்பட்டது.
ஜன்னல் வழியே வந்த அந்தத் தட்ப-வெப்ப மாற்ற நிலையை உணர்ந்தபோது, இயற்கையின் பின்னால் இருக்கும் மார்க்கத்தின் உண்மை என் நினைவுக்கு வந்தது.
இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்:
நரகம் தன் இறைவனிடம், ‘‘என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறு பகுதியைத் தின்கின்றதே” என்று முறையிட்டது. ஆகவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக்கொள்ள அனுமதியளித்தான். அவைதான் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும் (ஸஹீஹுல் புகாரீ 3260).
அலைபேசித் திரைக்குள் மூழ்கிக் கிடந்ததால், அல்லாஹ்வின் இத்தகைய மாபெரும் சான்றுகளையும் எச்சரிக்கைகளையும் சிந்திக்க மறந்திருந்தேனே என்பதை என் மனம் உணர்ந்தது.
கடைசி 30 நிமிடங்கள்: மன அமைதியும் கண் பாதுகாப்பும்
கடைசி அரை மணி நேரம் எனக்குள் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! மனம் அலைபாயாமல் அமைதியடைந்ததால், நல்ல மார்க்கப் புத்தகம் ஒன்றை எடுத்து வாசித்தேன். பின்பு, இறைவனுக்கான கடமையை (2 ரக்அத் தொழுகை) நிறைவேற்றி, துஆவின் மூலம் அல்லாஹ்விடம் உளமாரப் பேசினேன். அப்போதுதான் என் மனத்திற்குள் ஒரு தூய்மையான, நிம்மதியான அமைதி படர்வதை உணர்ந்தேன்.
அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
“அறிந்து கொள்க! அல்லாஹ்வின் நினைவால்தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன” (13:28).
மேலும், இந்த ஓய்வு என் மனத்திற்கு மட்டுமல்ல, இவ்வளவு காலமாகத் திரையைப் பார்த்துச் சோர்வடைந்திருந்த என் கண்களுக்கும் மாபெரும் நிம்மதியாக அமைந்தது. அல்லாஹ் நமக்குத் தந்த கண் என்ற அமானிதம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
“… நிச்சயமாக உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு உண்டு; உமது கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உண்டு” (நூல்: ஸஹீஹுல் புகாரி: 1975).
ஒரு மணி நேரத்திற்குப் பின்: புரிந்த உண்மை
குறிப்பிட்ட அந்த ஒரு மணி நேரம் முடிந்து, ஆர்வத்தோடு என் அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். ஆச்சரியம்! அங்கே ஒரு முக்கியமான குறுஞ்செய்தியோ, அவசர அழைப்போ வரவில்லை. உலகம் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை, அஃது இயல்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அந்த ஒரு மணி நேரத்தில் என் அலைபேசியின் பேட்டரி குறையாமல் அப்படியே இருந்தது; அதைவிட முக்கியமாக, என் மனம் முழுமையாக ஆன்மீக ரீதியாக ‘சார்ஜ்’ (Full charge) ஆகி புத்துணர்ச்சியோடு இருந்தது.
சகோதர, சகோதரிகளே! உண்மை என்னவென்றால், அலைபேசி இல்லாததால் இந்த உலகம் நம்மை எங்கும் தேடவில்லை. ஆனால், இவ்வளவு நாட்களாக அலைபேசியோடு வாழ்ந்த நாம், நம்மையே முற்றிலும் தவறவிட்டிருந்தோம் (Miss பண்ணியிருந்தோம்).
நாம் ஏமாறி இழக்கும் அருட்கொடைகள்
நாம் அலைபேசியில் வீணடிக்கும் அந்த ‘ஓய்வு நேரம்’ எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்:
“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்: 1. ஆரோக்கியம், 2. ஓய்வு” (ஸஹீஹுல் புகாரீ 6412).
காலம் எவ்வளவு விரைவாகச் செல்கிறது என்பதையும், நேரத்தை வீணடிப்பவன் நஷ்டத்தில் இருப்பான் என்பதையும் அல்லாஹ் அல்குர்ஆனில் மிகத் தெளிவாக எச்சரிக்கின்றான்:
“காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, நற்செயல்கள் செய்து, ஒருவருக்கொருவர் சத்தியத்தை உபதேசம் செய்து, மேலும் ஒருவருக்கொருவர் பொறுமையையும் உபதேசம் செய்கின்றார்களோ அவர்களைத் தவிர” (103:1-3).
நிறைவுரை
தொழில்நுட்பம் என்பது தவறான ஒன்று அல்ல; அது நம் வாழ்வை எளிதாக்கும் ஒரு சிறந்த கருவி மட்டுமே. ஆனால், அந்த ஒரு கருவியே நம் அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை விழுங்கி, நம்மை அதிலேயே மூழ்கடித்து, ஏமாறிவிடக் காரணியாக ஆகிவிடக்கூடாது. வாரத்தில் ஒரு மணி நேரமாவது உங்கள் அலைபேசியை அணைத்து வையுங்கள் (Off பண்ணுங்கள்); உங்கள் வாழ்க்கையைத் தொடங்குங்கள் (On பண்ணுங்கள்).
ஏனெனில், இந்தச் செயற்கையான உலகத்தோடு நாம் துண்டிக்கப்படும்(Disconnect) போதுதான், நம்முடைய உண்மையான சுயத்தோடும் நம்மைப் படைத்த இறைவனோடு நம்மால் முழுமையாக இணைந்து(Connect) கொள்ள முடியும்.
முயல்வோம்; வெல்வோம், இன்ஷா அல்லாஹ்!
– மு.நசீஹா பர்வீன்
