‘போதும்’ என்ற மனம்!

Share this:

முன்னுரை:

னிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் எனும் ‘உயிர்வளி’ (பிராணவாயு) எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதிகமாக இன்றைய மனிதன் ‘பணவளி’யை நம்பி வாழத் தொடங்கிவிட்டான். பணம் இருந்தால் மட்டும்தான் சமுதாயத்தில் மதிப்பு, பணம் இருந்தால் மட்டும்தான் நிம்மதி என்று எண்ணி, மனிதன் பணத்தின் பின்னால் தன் வாழ்நாளைக் கடத்துகின்றான். ஆனால், வியப்பான விஷயம் என்னவென்றால், பணத்தைத் துரத்தி ஓடும் மனிதன், பணம் சேர்ப்பதற்காகப் பலவிதத் தகிடுதித்த முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மனிதநேயத்தின் உயிர்வளியையே கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று விடுகின்றான். இந்தப் பேராசையின் எதார்த்தத்தை இஸ்லாமிய நெறிகளின் ஒளியில் இக்கட்டுரை விளக்குகிறது.

பணத்தின் பின்னால் ஓடும் பேராசை:

மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு சொத்துகள் சேர்த்தாலும் அவனுக்கு மனநிறைவு ஏற்படுவதில்லை. பல ஏக்கர் நிலங்கள், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் எனச் சேர்த்து வைப்பதிலேயே ஆயுளைக் கழிக்கின்றான். இந்தத் தற்காலிக உலகத்தில் பணத்தின் இருப்பை நிரந்தரமாக்கத் துடிக்கின்றான். மனிதனின் இந்த முடிவில்லாத பேராசையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹீஹ் புகாரி ஹதீஸில் மிக அழகாக எச்சரித்துள்ளார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமின் மக(னான மனித)னுக்கு இரு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை(மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது …”

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸுக்கு இமாம் புகாரீ (ரஹ்) கொடுத்த தலைப்பு ‘அஞ்சப்பட வேண்டிய செல்வத்தின் சோதனை’ (ஸஹீஹுல் புகாரீ 6436).

பணப் பேராசையால் அழியும் மனிதநேயம்:

பணம் சேர்ப்பதை மட்டுமே நேசிக்கும் மனிதன், அதன் வழியே வரும் வருமானம் நேர்மையானதா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மற்றவர்களை ஏமாற்றியாவது, வதந்திகளின் சுவையில் பிறரை வீழ்த்தியாவது பணத்தைச் சம்பாதிக்கத் துடிக்கிறான். இந்த நிலையைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றே எச்சரித்துள்ளார்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மனிதர்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒருவன் தான் சம்பாதிப்பது ஹலாலா (அனுமதிக்கப்பட்டதா)? அல்லது ஹராமா (விலக்கப்பட்டதா)? என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான்” (ஸஹீஹுல் புகாரீ 2059).

பொருளாதாரத்தின் மீது வைக்கும் இந்த அளவுக்கதிகமான பற்று, மனிதனின் உள்ளத்தில் இருக்கும் இறையச்சத்தையும், மனிதநேயத்தையும் அடியோடு அழித்துவிடும்.

உண்மையான செல்வம் எது?:

மனிதன் பணத்தின் மதிப்பைத் தன் வங்கிக் கணக்கில் உயர்த்துவதைத் தான் வெற்றி என்று எண்ணுகிறான். ஆனால், இஸ்லாத்தின் பார்வையில் உண்மையான செல்வம் என்பது கானல் நீராய் அழியும் பணத்தாசையல்ல; மாறாகப் போதுமென்ற மனமும், உள்ளத்தின் நிறைவுமே ஆகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “செல்வச் செழிப்பென்பது உலகப் பொருட்களின் பெருக்கத்தினால் ஏற்படுவதன்று; மாறாக, உண்மையான செல்வம் என்பது உள்ளத்தின் போதுமென்ற மனமே (மன நிறைவு) ஆகும்.” (ஸஹீஹுல் புகாரீ 6446).

“வீட்டார்களின் சிரிப்பு என்ன விலை?” என்று யோசித்துப் பார்த்தால், லட்ச ரூபாய் பணத்தை விடக் குடும்பத்தின் மகிழ்ச்சியும், மன அமைதியும் தான் விலைமதிப்பற்றது என்பது புரியும்.

முடிவுரை:

மிதமிஞ்சிச் செல்வம் சேர்ப்பது என்பது என்பது ஒரு போலிக் கற்பனை. மரணம் என்ற ‘அடுத்தகட்டப் பயணம்’ வரும்போது, மனிதன் அரும்பாடுபட்டுச் சேர்த்த எந்தப் பணமும் அவனது இறுதி மூச்சைக் காப்பாற்றப் போவதில்லை. அத்தனை பணமும் வெறும் காகிதமாக இங்கேயே எஞ்சியிருக்கும்; அவனது நற்செயல்களின் சுவடுகள் மட்டுமே அவனுடன் மண்ணறைக்கு வரும். எனவே, பேராசையைத் துறந்து, நேர்மையான வழியில் வாழ்ந்து, பிறருக்கு உதவி செய்து, நம் வாழ்வின் இருப்பை அர்த்தமுள்ளதாக மாற்றி இரு உலகிலும் வெற்றி பெற நாம் உறுதியேற்போம்!

oOo

வாசகர்களின் கருத்துகள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன. வாசகர்களின் கருத்துகள், எனது ஆக்கங்களை நான் கூர் தீட்டிக்கொள்ள உதவும். மின்னஞ்சல் :

nasifanaa@gmail.com
– மு.நசீஹா பர்வீன்


Share this: