நிமிட முள்ளின் பொறுப்பு!

Share this:

ரு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் கடிகாரத்தை நாம் உற்றுப் பார்க்கும்போது, நம் கண்கள் முதலில் தேடுவது மணி முள்ளைத் தான். “மணி என்ன ஆகிறது?” என்ற கேள்விக்கு விடையாகத் திகழும் அந்த மணி முள் நகர்வதற்குப் பின்னால், ஒரு நிமிட முள்ளின் ஓயாத உழைப்பும் பொறுப்புணர்வும் இருக்கிறது என்பதை நாம் சிந்திப்பதில்லை. நிமிட முள் சோர்வின்றித் தன் சுற்றைத் தொடர்ந்தால் மட்டுமே மணி முள்ளால் தன் அடுத்த இலக்கை அடைய முடியும். இந்த எளிய கடிகாரத் தத்துவம் நம் மனித வாழ்க்கைக்கு, குறிப்பாக நம்முடைய பொறுப்புகளுக்கும் நேர மேலாண்மைக்கும் ஒரு மாபெரும் பாடத்தைக் கற்றுத் தருகிறது.

சிறு கடமைகளின் தொடர் ஓட்டம்

வாழ்க்கையில் நாம் அடையும் பெரிய வெற்றிகள் அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. அவை ஒவ்வொன்றும் அன்றாடம் நாம் செய்யும் சிறிய அளவிலான தொடர் முயற்சிகளின் விளைவே ஆகும். கடிகாரத்தின் நிமிட முள் ஒவ்வொரு வினாடியையும் பொறுப்புடன் கடந்து, அறுபது நிமிடங்களை நிறைவு செய்யும் போதுதான் மணி முள் ஒரு படி முன்னேறுகிறது. இதேபோல், நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சிறிய நற்காரியங்களும், நாம் காட்டும் கடமை உணர்வும் தான் நம் ஒட்டுமொத்த வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

இறைதூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நற்செயல் எதுவென்றால், மிகச் சிறிய நற்செயலாக இருந்தாலும் தொடர்ச்சியாகச் செய்யப்படுவதாகும்” (ஸஹீஹுல் புகாரி: 6465).

நாம் செய்யும் செயலின் அளவு சிறியதாக இருந்தாலும், அதைத் தொய்வில்லாமல் பொறுப்புடன் செய்வதே உயர்வு தரும் என்பதற்கு நிமிட முள்ளின் ஓட்டமே ஒரு சிறந்த சான்றாகும்.

வெளிச்சத்திற்கு வராத உழைப்பு

சமூகத்திலும் சரி, நம் குடும்ப அமைப்புகளிலும் சரி, பலர் ‘மணி முள்’ போல எப்போதும் வெளிச்சத்திலும் அங்கீகாரத்திலும் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னால், தங்களின் பொறுப்புகளை உணர்ந்து திரைக்குப் பின்னால் உழைக்கும் ‘நிமிட முள்’ போன்ற மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தை அரவணைத்து, அதன் தேவைகளை உணர்ந்து, அலட்டிகொள்ளாமல் உழைக்கும் தாய்மார்களின் பொறுப்புணர்வு இதற்கு மிகச் சிறந்த உதாரணம். அவர்கள் தங்களின் கடமையிலிருந்து ஒரு நிமிடம் தவறினாலும் ஒட்டுமொத்த குடும்பத்தின் ஓட்டமும் தடைபட்டுவிடும். இந்த நிமிட முள் போன்ற மனிதர்களின் பொறுப்புணர்வே சமூகத்தை சீராக இயங்க வைக்கின்றது.

மறுமைக்கான பொறுப்புக்கூறல்

காலம் என்பது இறைவன் நமக்கு அளித்த ஆகப்பெரும் அமானிதம் (ஒப்படைப்பு). கடந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்நாளின் பக்கங்களிலிருந்து நிரந்தரமாகக் கிழித்து எறியப்படும் பக்கங்களாகும். அந்த நிமிடங்களை நாம் எவ்வாறு கழித்தோம், நம் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றினோமா என்பதில் தான் நம் மறுமையின் வெற்றியும் அடங்கியிருக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இரண்டு அருட்கொடைகளின் விஷயத்தில் பெரும்பாலான மனிதர்கள் ஏமாறி (இழப்புக்குகுள்ளாகி) விடுகின்றார்கள்: 1. ஆரோக்கியம், 2. ஓய்வு (நேரம்)” (ஸஹீஹுல் புகாரி: 6412).

கடிகாரத்தின் நிமிட முள் தனக்கு அளிக்கப்பட்ட பாதையில் சற்றும் பிசகாமல் ஓடுவது போல, மனிதர்களாகிய நாமும் நமக்கு அளிக்கப்பட்ட வாழ்நாளை வீணான காரியங்களில் கழிக்காமல், பயனுள்ள வழிகளில் திட்டமிட்டு வாழப் பழக வேண்டும்.

முடிவுரை

பெரிய இலக்குகளை அடைய நினைப்பவர்கள், தங்களின் தற்போதைய சிறிய பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது. நிமிட முள் தன் பொறுப்பை உணர்ந்து சுழல்வதால் தான் கடிகாரத்திற்கே மதிப்பு கிடைக்கிறது. அதுபோல, நம் வாழ்வில் நமக்குக் கொடுக்கப்பட்ட சிறிய பொறுப்புகளையும், கடந்து போகும் ஒவ்வொரு நிமிடத்தையும் மதித்து, கடமை உணர்வோடு வாழப் பழகிக் கொண்டால், நம் வாழ்வின் நிம்மதியும் வெற்றியும் நிச்சயம் நம்மை வந்தடையும்.

– மு.நசீஹா பர்வீன்

 


Share this: