முன்னுரை:
“நாளைக்குச் செய்யலாம்” என்று நாம் தள்ளிப்போடும் வேலைகள் எத்தனை? “இன்னும் ஐந்து நிமிடம் தூங்கலாம்” என்று கடந்து போகும் அதிகாலைப் பொழுதுகள் எத்தனை? நம் வாழ்வின் பொன்னான நேரத்தை நமக்கே தெரியாமல் திருடிச் செல்லும் அந்த எதிரி யார்? அதுதான் சோம்பேறித்தனம். சோம்பேறித்தனம் என்பது, ஒரு மனிதனின் சிந்தனையையும் செயலையும் ஒருசேர முடக்குகின்ற ஒரு நோயாகும். செய்ய வேண்டிய கடமைகளையும் முடிக்க வேண்டிய வேலைகளையும் தள்ளிப்போட்டுவிட்டு, உழைக்க மனமில்லாமல் சோம்பியிருப்பதுமே அதன் அடையாளங்கள் ஆகும். இஸ்லாமிய மார்க்கத்திலும் உலகியல் வாழ்விலும் சோம்பேறித்தனம் எனும் செயலற்ற தன்மை, மனித முன்னேற்றத்தின் மிகப்பெரிய தடையாகக் கருதப்படுகின்றது.
சோம்பேறித்தனத்திற்கான காரணங்கள்:
மனிதன் சோம்பேறியாக மாறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன:
1. திட்டமிடல் இல்லாமை: அன்றாட வேலைகளை எவ்வாறு செய்வது எனும் தெளிவான கால அட்டவணை வகுத்துக் கொள்ளாதது.
2. இலக்குகளற்ற வாழ்க்கை: வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியம் அல்லது குறிக்கோள் இல்லாமல் இருப்பது.
3. தவறான உணவுப் பழக்கம்: உடலுக்குத் தேவையான அளவைவிட அதிகமாகத் தூங்குவதும் மந்தத்தன்மையை ஏற்படுத்தும் உணவுகளை உண்பதும்.
4. தொழில்நுட்ப அடிமைத்தனம்: கைபேசி, சமூக ஊடகங்கள் போன்றவற்றில் மூழ்கி, பொன் போன்ற நேரத்தை வீணடிப்பது.
இஸ்லாத்தில் உழைப்பும் சுறுசுறுப்பும் :
இஸ்லாம் உழைப்பை வணக்கமாகக் கருதுகிறது. சோம்பேறியாக அமர்ந்திருப்பதை குர்ஆன் கடுமையாக எதிர்க்கிறது.
சொந்த உழைப்பு: “மனிதனுக்கு அவன் முயன்று உழைத்(துப் பெறுவ)ததைத் தவிர வேறு எதுவும் இல்லை; அன்றியும், அவனுடைய முயற்சியி(ன் பல)னை அவன் நிச்சயமாகக் கண்டு (அடைந்து) கொள்வான்” (அல்குர்ஆன் 53:39-40). நாம் உழைத்தால் மட்டுமே அதற்கான பலன் உலகிலும் மறுமையிலும் கிடைக்கும் என்பதை இவ்வசனம் உணர்த்துகிறது.
கடமை உணர்வு: “தொழுகை முடிக்கப்பட்டு விட்டால், பூமியில் பரந்து சென்று, அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்” (அல்குர்ஆன் 62:10). ஆன்மீகக் கடமை முடிந்தவுடன், சோம்பேறியாகச் சோர்ந்து கிடந்துவிடாமல் உலகியல் வாழ்வாதாரத்தைத் தேடி உடனே உழைக்கச் செல்ல வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
நபியவர்களின் போதனைகள் :
தன் கைகளால் உழைத்து உண்பதே மிகச் சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்தார்கள்.
சிறந்த உணவு: “எவரும் தன் கைகளால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்டுவிட முடியாது” என்று நபி (ஸல்) கூறினார்கள் (ஸஹீஹுல் புகாரி: 2072).
நபியவர்கள் ஓதிய பிரார்த்தனை (துஆ):
சோம்பல் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் இந்த துஆவை ஓதி இறைவனிடம் பாதுகாப்புத் தேடினார்கள்:
“… இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் பலவீனத்திலிருந்தும் சோம்பேறித்தனத்திலிருந்தும் கஞ்சத்தனத்திலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கடன்பாரத்திலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன் …” (ஸஹீஹுல் புகாரி 2893).
சோம்பேறித்தனத்தால் ஏற்படும் விளைவுகள்:
பொருளாதார வறுமை: சோம்பிக் கிடப்பவரிடம் செல்வம் தங்காது. உழைக்காத மனிதன் வறுமையிலும் கடனிலும் மூழ்க நேரிடும்.
நேர விரயம்: வாழ்நாளில் கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றது. அப்படிப்பட்ட நேரத்தை, சோம்பேறித்தனம் விழுங்கி வீணாக்கிவிடுகின்றது.
மன அழுத்தம்: வேலைகளைத் தள்ளிப்போடுவதால், இறுதி நேரத்தில் ஏற்படும் பதற்றமும் ‘பிறரைவிட வாழ்வில் பின்தங்கித் தோற்றுவிட்டோம்’ என்ற கவலையையும் மன அழுத்தத்தையும் உருவாக்கும்.
மதிப்பு இழப்பு: உழைக்காமல் பிறரைச் சார்ந்து வாழும் சோம்பேறிகளை இந்தச் சமூகம் ஒருபோதும் மதிப்பதில்லை.
சோம்பலை முறியடித்துச் சுறுசுறுப்பாவது எப்படி?
அதிகாலை விழிப்பு: விடியற்காலையில் எழுவது உடலுக்கும் மனத்துக்கும் புத்துணர்ச்சியைத் தரும்.
இலக்குகளை நிர்ணயித்தல்: ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை எழுதிப் பட்டியலிட்டு, அதைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். பெரிய வேலைகளைச் சிறிய பகுதிகளாகப் பிரித்துச் செய்வது சுமையைக் குறைக்கும்.
நல்ல நண்பர்களின் சேர்க்கை: சுறுசுறுப்பாகவும் இலட்சியத்தோடும் வாழும் மனிதர்களுடன் நட்புறவு கொள்வது நமக்கும் ஊக்கத்தைத் தரும்.
உடற்பயிற்சி: உடலை எப்போதும் இயக்கத்தில் வைத்திருப்பதும், சீரான உடற்பயிற்சியும் சோம்பலை ஓட விரட்டும்.
முடிவுரை:
சோம்பல் என்பது தானாக வரும் நோயல்ல; அது நாமாக வளர்த்துக் கொள்ளும் ஒரு கெட்ட பழக்கம். உறங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் மனிதன் பிறக்கவில்லை; உழைப்பதற்கும் சாதிப்பதற்கும் பிறந்திருக்கின்றான். எனவே, சோம்பேறித்தனம் என்னும் விலங்கை உடைத்தெறிந்து, சுறுசுறுப்பு என்னும் ஆயுதத்தைத் தாங்கி, கடமைகளை உடனுக்குடன் செய்து முடிப்பதே இம்மை மற்றும் மறுமை வாழ்வின் வெற்றிக்கு ஒரே வழியாகும்.
சோம்பேறித் தனத்தை உதறித் தள்ளுவோம்; உற்சாகம் பெறுவோம்; உலகை வெல்வோம், இன்ஷா அல்லாஹ்!
– மு.நசீஹா பர்வீன்
