1. முன்னுரை
கூடு என்பது பறவைகளுக்கு வெறும் தங்குமிடம் மட்டுமன்று; அது குஞ்சுகள் பாதுகாப்பாக வளரும் ஒரு சொர்க்கம். மனிதர்களின் குடும்ப அமைப்பும் அத்தகையதே. கணவனும் மனைவியும் இணைந்து உருவாக்கும் அன்பான குடும்பக் கூட்டுக்குள்தான் அடுத்த தலைமுறைக்கான குழந்தைகள் பாதுகாப்பாக வளர்கின்றார்கள். ஆனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய அவசரகதி நவீன உலகில், சகிப்புத்தன்மையின்மை மற்றும் இணையர்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத ஈகோ (Ego) காரணமாகக் குடும்பக் கூடுகள் மிக எளிதாக உடைந்து சிதறி விடுகின்றன (Divorce). கூடு சிதறும் போது, அதற்குள் இருக்கும் இறக்கை இல்லாப் பிஞ்சு குருவிகளான குழந்தைகள் தவித்துப் போகின்றார்கள் என்பதே கசப்பான உண்மை!
2. இஸ்லாத்தில் குடும்ப அமைப்பின் உன்னதம்
இஸ்லாம், திருமண வாழ்வை வெறும் ஒப்பந்தமாகப் பார்க்கவில்லை; அதை ஒரு மேன்மையான பிணைப்பாகவும், அமைதியின் இருப்பிடமாகவும் வர்ணிக்கிறது. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:“நீங்கள் அவர்களிடம் அமைதிபெறும் பொருட்டு உங்களுக்கான துணைகளை அவன் உங்களிலிருந்தே படைத்து, உங்களுக்கிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்திருப்பது அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும் …” (அல்குர்ஆன் 30:21). திருமணம் என்பது கணவன்-மனைவி இருவருக்குள் பரஸ்பர அன்பையும், விட்டுக் கொடுக்கும் தன்மையையும் வளர்க்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
3. அல்லாஹ் வெறுக்கும் அனுமதிக்கப்பட்ட காரியம்
சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தம்பதியினர் பிரிவது அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அதை இஸ்லாம் ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை. பிரிவினை என்பது ஷைத்தானுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் ஆகும். சிறு சிறு கருத்து வேறுபாடுகளுக்காக நீதிமன்றப் படிகள் ஏறும் தம்பதியினர், கீழ்க்காண்பவற்றை மேலோட்டமாக அல்லாமல் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்:
4. தவிக்கும் குருவிகள்
குழந்தைகளின் மனக் குமுறல்:
பெற்றோர் பிரிந்துவிடும் போது, சற்றும் பாவமே அறியாத குழந்தைகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்.
அடையாளச் சிக்கல்:
“நான் அம்மா கூட இருக்கணுமா? அப்பா கூட இருக்கணுமா?” என்ற கேள்வி ஒரு குழந்தையின் பிஞ்சு நெஞ்சில் ஆழமான வடுக்களை ஏற்படுத்திவிடுகின்றது.
பாதுகாப்பற்ற உணர்வு:
ஒரு சிறகு உடைந்த பறவையைப் போல, சமூகத்தில் தங்களை ஏளனமாகப் பார்ப்பார்களோ என்ற பயமும், தாழ்வு மனப்பான்மையும் அவர்களுக்குள் குடியேறுகின்றது.
வழிகாட்டுதல் இல்லாமை:
தந்தையின் கண்டிப்பும் தாயின் அரவணைப்பும் ஒரு சேரக் கிடைக்காத குழந்தைகள், பிற்காலத்தில் தவறான வழிகளில் செல்வதற்கோ அல்லது மன அழுத்த நோயாளிகளாக மாறுவதற்கோ அதிக வாய்ப்புகள் உள்ளன.
5. குடும்பம் உடைவதைத் தவிர்க்க
சண்டைகள் சின்னச் சின்னதாகத் துளிர்விடும்போதே, துணையின் குறைகளைத் துருவித் துருவிப் பார்க்காமல் அவர்களிடம் உள்ள நிறைகளைப் பார்க்க வேண்டும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“பெண்களுக்கு நல்ல உபதேசம் செய்யுங்கள் (அவர்களைக் கனிவுடன் நடத்துங்கள்). ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றாள். விலா எலும்பின் மேல் பகுதிதான் மிகவும் கோணலானது. நீ அதை நிமிர்த்த முயன்றால் உடைத்துவிடுவாய்; அப்படியே விட்டுவிட்டால் கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களுக்கு நல்ல உபதேசங்களை (நற்போதனைகளை) வழங்குங்கள். பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். ” (நூல்: ஸஹீஹுல் புகாரி 3331, 5186).
மேலும், தம்பதியினருக்குள் பிரச்சினை ஏற்படும் போது, இருதரப்பு குடும்பப் பெரியவர்களும் அமர்ந்து பேசி சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும் என்று குர்ஆன் (4:35) வழிகாட்டுகின்றது.
6. முடிவுரை
கூடுகள் சிதறுவது சுலபம்; ஆனால் அதை மீண்டும் கட்டுவது கடினம். கணவன்-மனைவி இருவருக்குள் ஏற்படும் ஈகோ சண்டைகளில், பலியாகப் போவது நம் சொந்தக் குழந்தைகள்தாம் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காகத் தம்பதியினர் சகிப்புத்தன்மையையும் மன்னிக்கும் குணத்தையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தவிக்கும் பிஞ்சுக் குருவிகளின் கூடுகள் சிதறிவிடாமல் பாதுகாப்பது, ஒரு சமூகமாக நம் அனைவரின் கடமையாகும்.
oOo
வாசகர்களின் கருத்துகள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன. தங்களின் கருத்துகள், எனது ஆக்கங்களை நான் கூர் தீட்டிக்கொள்ள உதவும். மின்னஞ்சல் :
nasifanaa@gmail.com
மு.நசீஹா பர்வீன்
