தாங்கி நிற்கும் சுவர்களுக்கும் வலி உண்டு!

Share this:

“அவர்களுக்கென்ன? ஆண்கள், எதையும் தாங்குவார்கள்!” – இந்த ஒற்றை வரியைக் கூறி, சமூக அமைப்பில் ஆண்களுக்கென நாம் கற்பித்து வைத்திருக்கும் உணர்வு ரீதியான கற்பிதங்கள் சாதாரணமானவை அல்ல. இஸ்லாமியச் சமுதாயத்தில் பெண்களின் உரிமைகள் குறித்தும், அவர்களின் மனநலம் குறித்தும் நாம் மேடைகளிலும் ஆய்வுக் கட்டுரைகளிலும் தொடர்ந்து பேசி வருகின்றோம். ஆனால், குடும்பத்தின் தூண்களாக நின்று, வெளியில் சொல்ல விரும்பாத, சொல்ல முடியாத அழுத்தங்களால் உள்ளுக்குள்ளேயே குமுறித் தவிக்கும் ஆண்களின் வலிகளைப் பற்றிப் பேச நாம் ஏனோ தவறிவிடுகின்றோம்.

தாங்கி நிற்கும் சுவர்களுக்கும் வலி உண்டு

பெண்களே! நம்மை நிம்மதியாக வாழ வைக்கத் தம் வாழ்நாளையே அர்ப்பணிக்கும் ஆண்களின் மௌனப் போராட்டங்களை ஒரு கணம் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போம்.

உணர்வுகள் பூட்டப்படும் சிறுவயதுச் சிறை!

ஒரு ஆண் குழந்தை அடிபட்டு அழும்போது, “ஏன் பெண் பிள்ளையைப் போல் அழுகின்றாய்? நீ ஆண் பிள்ளை, ஆண் பிள்ளை அழக் கூடாது” என்று கூறி அவனது இயல்பான உணர்வுகளைச் சிறுவயதிலேயே கிள்ளி எறிகின்றோம். அழுகை என்பதும், சோர்ந்து போவதும் பலவீனம் அல்ல; அது இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட ஓர் இயற்கை உணர்வு என்பதை நாம் ஏன் மறக்கின்றோம்?

ஆண்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் எனும் உள்ளச் சுமையை அவர்கள் வெளிப்படையாய் அழுது இறக்கி வைக்காததற்குக் காரணம் அவர்களின் நெஞ்சுரம் அன்று; “நான் அழுதுவிட்டால் குடும்பம் சோர்ந்துவிடுமே” எனும் அவர்களின் உன்னதமான பொறுப்புணர்வுதான்!

வெளிநாட்டு வாழ்க்கையின் கண்ணீர் நிழல்கள்!

இன்று நம் சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்கள், தாய்நாட்டையும் பெற்றவளையும் பிரிந்து, பனிப்பிரதேசங்களில் உறைந்தும் பாலைவனங்களில் வெந்தும் வாழ்நாளைக் கடத்துகின்றார்கள்.

தனிமையின் கொடூரம்:

ஒரு குறுகிய அறைக்குள் (Bedspace) அடைந்து கிடந்து, காய்ச்சல் என்று படுத்தால்கூட, ஒரு வாய் கஞ்சி காய்ச்சித் தர ஆள் இல்லாமல், நெஞ்சுக்குள் எழும் அழுகையைத் தொண்டைக்குள்ளேயே விழுங்கும் ஆண்களின் தனிமை நரகம் போன்றது எனலாம்.

பெருநாள் காலத் தனிமை ஏக்கம்:

பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு, ஊரில் இருக்கும் மனைவி மக்களிடம் போனில் பேசும்போது, “நீங்கள் இல்லாமல் இந்தப் பெருநாள் எங்களுக்கு நரகமாக இருக்கிறது” என்று நாம் சொல்லும் அந்த வார்த்தை, அங்கே அவர்களின் இதயத்தை சுக்குநூறாக உடைக்கிறது. அவர்கள் அங்கே உணவு சாப்பிட்டாலும், அது தொண்டைக்குள் இறங்காமல் கண்ணீராய் வழிவதைக் குடும்பத்தினர் உணர்வது சொற்பம்.

உழைப்பும் சகிப்புத்தன்மையும்:

காலநிலையின் மாறுபாடுகள், கடுமையான வேலைப்பளு, முதலாளிகளின் சுடுசொற்கள் என அத்தனையையும் தாங்கிக் கொண்டு, மாதத்தின் முதல் தேதி வந்தவுடன் ஊருக்குப் பணம் அனுப்பும் இயந்திரங்களாகவே அவர்கள் வாழ்கின்றார்கள்.

குடும்பத்திற்காகப் பாடுபடும் ‘பண இயந்திரங்கள்’ :

ஓர் ஆணின் தகுதி அவன் சம்பாதிக்கும் தொகையைக் கொண்டே பெரும்பாலும் இந்த உலகத்தால் அளவிடப்படுகிறது. காலையிலிருந்து நள்ளிரவு வரை ஓயாமல் உழைக்கும் ஓர் ஆண், தனக்காக எதையும் சேர்த்துக் கொள்வதில்லை. “என் பெற்றோர் மகிழ வேண்டும், என் மனைவி செழிப்புடன் வாழ வேண்டும், என் பிள்ளைகள் யாரிடமும் கையேந்திவிடக் கூடாது” என்ற லட்சியத்தோடு மட்டுமே அவன் ஓடுகின்றான்.

குடும்பத்திற்காகப் பாடுபடும் இந்த ஆண்களின் உழைப்பை நபி (ஸல்) அவர்களின் அமுதுமொழி எவ்வளவு கண்ணியப்படுத்துகிறது பாருங்கள்:
“ஒருவர் (இறைவனிடம் கிடைக்கும்) நன்மையை நாடித் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால், அதுவும் அவருக்கு தர்மம் ஆகும்” (ஸஹீஹுல் புகாரீ 55).

சுப்ஹானல்லாஹ்! அவர்கள் உழைத்துக் கொண்டு வந்து நம் கைகளில் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் தர்மத்தின் கணக்கில் அவருக்குச் சேர்கிறது. ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு வீடு திரும்பும் கணவனைப் பார்த்து, அல்லது வெளிநாட்டில் இருக்கும் கணவனிடம் போனில் பேசும்போது, “நீங்கள் எனக்காக என்ன செய்துவிட்டீர்கள்? பக்கத்து வீட்டாரைப் பாருங்கள்…” என்று மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கணவனைக் குறை சொல்லிப் பேசும்போதோ அல்லது வார்த்தைகளால் காயப்படுத்தும்போதோ, அந்த ஆணின் ஆன்மா சுக்குநூறாக உடைந்து போகிறது!

ஆடையின் இலக்கண உவமை:
தம்பதியருக்கான பாடம்!
அல்லாஹ் ஏன் கணவன்-மனைவி என்ற தூய உறவை ஏற்படுத்தினான் என்பதைத் திருக்குர்ஆன் வசனம் நமக்கு மிக அழகான உவமையுடன் போதிக்கிறது:
“… அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் … (அல்குர்ஆன் 2:187).

ஓர் ஆடை என்ன செய்யும்? உடலின் குறைகளை மறைக்கும்; தூய ஆடை கண்ணியம் தரும், உடலுக்குப் பாதுகாப்பையும் நிம்மதியையும் தரும்; காலநிலையின் அழுத்தங்களில் இருந்து உடலைக் காக்கும். ஒரு மனைவியாக நாம் நம் கணவனுக்கு அத்தகைய பாதுகாப்பான ஆடையாக இருக்கிறோமா? வணிகத்தில் நஷ்டம், கடன் சுமை, வேலை அழுத்தம் என்று அவர்கள் தலைக்கு மேல் வெள்ளம் ஓடும்போது, ஆற்றுப் படுத்தி அவர்களின் பாரத்தைக் குறைக்கும் ஆடையாக நாம் இருக்கிறோமா?

வெளியிலும் வெளிநாடுகளிலும் ஆயிரம் அவமானங்களையும் சோதனைகளையும் தாங்கிவிட்டுத் தன் இல்லத்திற்குள் நுழையும் அல்லது போனில் பேசும் கணவனுக்கு, “பரவாயில்லைங்க… இலாபமும் நஷ்டமும் வாழ்க்கையில் சகஜம்தான். படைத்த ரப்பிடம் பாரம் சாட்டிவிட்டு நீங்கள் நிம்மதி அடையுங்கள், நாம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழலாம்” என்று கைகளைப் பற்றி நம்பிக்கையூட்டும் ஒரு வார்த்தை கூறுங்கள். அந்த ஒற்றை வார்த்தை, அவர்களை உலகத்தையே வெல்லும் வலிமை கொண்டவர்களாக மாற்றும்!

கவலைகளை இறைவனிடம் ஒப்படையுங்கள்
என் அருமைச் சகோதரர்களே!

உங்களுடைய மனக்குமுறல்களையும் வேலை அழுத்தங்களையும் வெளியில் சொல்ல முடியாமல், உங்களை நீங்களே தவறான பழக்கங்களுக்கோ அல்லது எல்லைமீறிய கோபத்திற்கோ ஆளாக்கிக் கொள்ளாதீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துவதே உண்மையான ஆண்மை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
“தனது (உடல்) பலத்தால் (பிறரை) அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; மாறாக, (தனக்குக்) கோபம் மிகைக்கும்போது தன்னை அடக்கி ஆள்பவனே உண்மையில் வீரன் ஆவான்” (ஸஹீஹுல் புகாரீ6114).

உள்ளம் உடையும் தருணங்களில் மனிதர்களிடம் போய் உங்கள் பலவீனங்களைக் கொட்டித் தீர்க்காதீர்கள்; மனிதர்கள் உங்களைக் கேலி செய்யக்கூடும். மாறாக, தொழுகை விரிப்பை விரித்து, ரஹ்மானிடம் கையேந்தி அழுது உங்களுடைய கவலைகளை ஒப்படையுங்கள். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

“… அறிந்து கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன” (அல்குர்ஆன் 13:28).

முடிவுரை:

ஆண்களும் மனிதர்கள்தாம். வலிகளின் போது அவர்களின் மௌனம் என்பது சகிப்புத்தன்மையின் உச்சமே தவிர, அவர்களுக்கு வலிக்கவில்லை என்று அர்த்தமல்ல. உங்களை வாழ வைக்கத் தன் சொந்த ஊரை, உற்றார் உறவினரைத் தியாகம் செய்துவிட்டுப் பரதேசம் வாழும் ஆண்களைக் கொண்டாடுங்கள்; அவர்களின் மௌன மொழிகளைப் புரிந்து கொள்ளுங்கள். சோதனைகள் யாவும் தற்காலிகமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

“நெருக்கடியுடன் நிச்சயமாக இலகு இருக்கின்றது” (அல்குர்ஆன் 94:6).

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்து, விட்டுக் கொடுத்து,விட்டுக் கொடுத்து, ஆண்களின் மனக் கஷ்டங்களுக்கு மருந்தாக மாறும் உன்னத இல்லங்களாக நம் இல்லங்களை மாற்ற அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக! ஆமீன்.

oOo

வாசகர்களின் கருத்துகள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன. தங்களின் கருத்துகள், எனது ஆக்கங்களை நான் கூர் தீட்டிக்கொள்ள உதவும். மின்னஞ்சல் :

nasifanaa@gmail.com
மு.நசீஹா பர்வீன்


Share this: