வேலூர் (அக்டோபர் 25) : இந்திய ராணுவ பாதுகாப்புப் படைகள் தொடர்பான முக்கியத் தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் பகிர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் பாபு (52 வயது) வேலூரில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ராணுவ கேப்டன், வேலூர் நகரின் புறநகரில் உள்ள கீழவளம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என போலீசார் தெரிவித்தனர்.
மத்திய புலனாய்வு அமைப்புகளிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கண்ணியம்பாடி போலீசார் பாபுவின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இந்திய ராணுவத்தின் பீரங்கி பிரிவில் 28 ஆண்டுகள் பாபு பணியாற்றியதாகவும், கடந்த 2022-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதன் பின்னர், அவர் தனது மனைவி தமிழரசி மற்றும் குடும்பத்தினருடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தார்.
மத்திய புலனாய்வு அமைப்புகள் (National Investigation Agency NIA) நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடம் பாதுகாப்புப் படைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை பாபு பகிர்ந்ததாகவும் விசாரணையில் ஆதாரப் பூர்வமாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய ராணுவ அதிகாரி பற்றிய செய்தி, வேலூர் உட்பட தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய ராணுவ கேப்டன் பாபுவின் செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பாபு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியில் இருந்த சமயத்தில் இருந்தே பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து வந்துள்ளாரா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சத்தியமார்க்கம்.காம்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ கேப்டன் பாபு மீது காவல்துறையினர், பி.என்.எஸ்., சட்டம் 152வது பிரிவு மற்றும் 1923ம் ஆண்டு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் 3(1)(c), 5(1)(a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தடுக்கும் வகையில் பி.என்.எஸ்., சட்டத்தின் 152வது பிரிவு உள்ளது. மின்னணு தகவல் தொடர்பு, பேச்சு அல்லது பணப் பரிவர்த்தனை மூலம் பிரிவினை, ஆயுதக் கிளர்ச்சி அல்லது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களைத் தூண்டுவது அல்லது அதற்கு முயற்சிப்பது இப்பிரிவின் கீழ் தண்டனைக்குரியதாகும்.
அதேபோல், அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் 3(1)(c) பிரிவானது, எதிரி நாடு அல்லது வெளிநாட்டு அரசுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பயனளிக்கும் வகையில் ரகசிய ஆவணங்கள், தகவல்கள் அல்லது ராணுவத் தளவமைப்பு தொடர்பான விவரங்களை பெறுதல், சேகரித்தல், பதிவு செய்தல் அல்லது பரிமாறுதல் போன்ற உளவு நடவடிக்கைகளுக்கு பொருந்தும்.
கடுமையான பி.என்.எஸ்., மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது, இந்த உளவு வலையமைப்பின் தீவிரத்தையும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலின் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
- சத்தியமார்க்கம்.காம்
தொடர்புடைய செய்திகள்:
https://www.thehindu.com/news/national/tamil-nadu/ex-army-captain-arrested-in-vellore-over-military-intelligence-leak/article71623053.ece
https://timesofindia.indiatimes.com/city/chennai/retired-army-captain-arrested-for-leaking-military-secrets-to-woman-on-whatsapp/articleshow/135187672.cms
https://www.dinamalar.com/news/tamil-nadu-news/military-secrets-leaked-ex-army-officer-arrested/4358586
