கோவை (04 அக்டோபர் 2026): இந்திய ராணுவம் தொடர்புடைய ரகசியத் தகவல்களை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்த பாகிஸ்தான் உளவாளி பிரதீப் முகர்ஜி கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி (31), இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார். கோவை ரெட்ஃபீல்ட் பகுதியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையமான ஐஎன்எஸ் அக்ரானியில் நடைபெறும் மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் கடந்த ஒரு வாரமாக தங்கி பிரதீப் முகர்ஜி பயிற்சி பெற்றார்.
இந்நிலையில், ஆந்திர காவல் துறையில் பயங்கரவாதக் குழுக்கள், எல்லை தாண்டிய உளவு மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விசாரிக்கும் சிறப்பு உளவுப் பிரிவு போலீஸார் இருதினங்களுக்கு முன் கோவைக்கு வந்து இவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது:
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத் துறை அதிகாரிக்கு, இந்திய கடற்படையின் ரகசிய பாதுகாப்புத் தகவல்களை பிரதீப் முகர்ஜி கசிய விட்டிருப்பது சிறப்பு உளவு பிரிவினருக்கு முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் பாகிஸ்தானிய பெண் உளவாளியிடம், விசாகப்பட்டினம் கடற்படை தள அமைப்பு, கடற்படை கப்பல்களின் இயக்கம் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்ந்தது’ விசாரணையில் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, ஆந்திர சிறப்பு பிரிவு போலீஸார் (Counter Intelligence), பிரதீப் முகர்ஜி குறித்த தகவல்களை தெரிவித்து கைது செய்ய இந்திய கடற்படை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர்.
தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து நேற்று (03 அக்டோபர் 2026) சிறப்புக் குழுவினர் கோவைக்கு வந்தனர். கோவை ‘ரெட்பீல்ட்ஸ்’ பகுதியில் உள்ள ஐ.என்.எஸ்., அக்ரானியில் மேலாண்மை மேம்பாட்டு பயிற்சியில் பிரதீப் முகர்ஜி பங்கேற்றிருந்தபோது, ஆந்திர போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்
அதைத் தொடர்ந்து, பிரதீப் முகர்ஜியை கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், விசாரணைக்காக ஆந்திர மாநிலம், விஜயவாடாவிற்கு அழைத்து சென்றனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் உளவுப்பிரிவு காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
இச்செய்தி தொடர்புடைய ஊடகங்களில் வெளியானவை:
https://www.hindutamil.in/news/tamilnadu/navy-sailor-arrested-in-coimbatore

