வாலிபம், விளிம்பில்!

மெல்ல வெளுக்குது
மீசையும் தாடியும்;
மெல்ல மறுக்குது
பற்களும் சொற்களும்!

வெண்மை மறைக்கிற
நரனே! நிறத்தின்
உண்மை மறுப்பது
சரியா அறிவா?

விடியலும் வெளிச்சமும்
வெண்மையின் பொழுதே
வெள்ளை மனதென்ப
உண்மையின் நிழலே!

வெள்ளையை மறைத்துக்
கருப்புச் சாயம்
வெள்ளி நிலவுக்கு
களங்கக் காயம்!

நரைத்த தாடியும்
நலிந்த நாடியும்
நுரைத்த கரையென
மிகைத்த அழகே!

நாற்றினூடான
களையல்ல நரை
பிடுங்கி எறியவும்
மருந்து அடிக்கவும்

வாலிபம்
வயோதிகத்துடன் கைகுலுக்கி
விடைபெறுகையில்
விட்டுச் சென்றது நரை!

பழம்
பழுத்ததைச் சொல்லும் மணம்
மழை
வலுத்ததைச் சொல்லும் நிலம்
வாழ்ந்து
முடித்ததைச் சொல்லும் நரை!

வயதின் முதுமையை
மட்டு மல்ல
வாழ்வின் முழுமையையும்
பறை சாற்றும்
நரை!

 

– சபீர்