திருமண முறிவு ஏற்பட்ட தம்பதியரின் பிள்ளைகள் நிலை என்ன?

Share this:

ஐயம்:
சுமார் மூன்று வயதுள்ள ஒரு பெண் குழந்தை இருக்கும் பட்சத்தில் குலா சட்டத்திட்டம் என்ன?, அந்தப் பெண் குழந்தை யாரிடம் இருக்க வேண்டும்?

மின்னஞ்சல் வழியாக சகோதரி Rahamath

தெளிவு:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இஸ்லாமியப் பார்வையில் தலாக், குல்வு சட்டங்களின் உள்பிரிவில் சிறு மாற்றமிருந்தாலும் இரண்டும் மணமுறிவுக்காகப் பயன்படுத்தும் வழிமுறைகளே. இணைந்து வாழும் தம்பதியர் மனக்கசப்பு ஏற்பட்டு, இனிமேல் சேர்ந்து வாழ்வது சாத்தியமேயில்லை என்ற இறுதி முடிவுக்கு வந்துவிடும் நிலையில் ‘தலாக்’ என்பது ஆணுக்கான விவாகரத்து உரிமையாகவும், ‘குல்வு’ என்பது தலாக் கேட்டுப்பெறும் பெண்ணுக்கான விவாகரத்து உரிமையாகவும் பின்பற்றப்படுகிறது.

 

தம்பதியருக்குக் குழந்தைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலாக், குல்வு சட்டத்தில் மாற்றம் ஏற்படாது. திருமணத்தால் இணைந்த தம்பதியர் விவாகரத்தால் பிரியலாம். ஆனால் பெற்றோர் விவாகரத்துச் செய்து பிரிந்தால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ‘மணமுறிவு’ என்பது இஸ்லாத்தில் இருசாராருக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமை என்றாலும் பிள்ளைகளின் நலன் கருதி, அதைக் கடைசித் தேர்வாகப் பயன்படுத்துமாறு இஸ்லாம் அறிவுறுத்துகிறது. சேர்ந்துவாழும் பெற்றோருக்கு இணையாக, பிரிந்துவிடும் பெற்றோரில் இருவரில் ஒருவர் பிள்ளைகளின்மீது அன்பு செலுத்தும் சந்தர்ப்பம் குறைந்து போய்விடும் என்பதைக் கவனத்தில் கொண்டு விவாகரத்து முடிவைப் பலமுறை ஆலோசித்து இறுதிசெய்யவும். (இது ஓர் ஆலோசனை மட்டுமே)

கேள்விக்கு வருவோம்.

தம்மால் (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (எவரேனும்) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும் உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன்மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்குமேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர்மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 002:233).

திருமண முறிவுதான் முடிவு என்கிற இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்ட பெற்றோருக்குப் பிள்ளைகள் மீதான கடமை என்ன? என்பதை அறிவுறுத்துவதோடு, பிள்ளைகள்மீது தாய் தந்தையருக்குள்ள பொறுப்புகளையும் இந்த வசனம் எடுத்துரைக்கின்றது. அவற்றில், பிள்ளையைக் காரணம் காட்டிப் பெற்றோர் ஒருவரையொருவர் துன்புறுத்திக் கொள்ளக்கூடாது எனச் சொல்லியிருப்பது பிரிந்துவிடும் தம்பதியர் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சமாகும்.

விவாகரத்துச் செய்வதால் கணவன்-மனைவி என்ற மணஉறவு முறிந்துவிடுமேதவிர தாய், தந்தை, பிள்ளைகள் என்கிற இரத்தஉறவு ஒரு போதும் முறிந்துவிடுவதில்லை. இதையறியாத தம்பதியர் சிலர் விவாகரத்திற்குப் பிறகு ”என் பிள்ளையை உனக்குத் தரமாட்டேன்” என்று ஒருவருக்கொருவர் எதிரியெனக் கருதி, தாய் குழந்தையைத் தகப்பனுக்குக் காட்டுவதில்லை என வன்மம் கொள்வதும் தந்தை குழந்தையைத் தாயிடம் செல்ல அனுமதிப்பதில்லை எனப் பழிதீர்க்க முயல்வதும் மிகச்சில குடும்பங்களில் நடைமுறையில் உள்ளதைப் பார்க்கிறோம். இவ்வாறு பிள்ளையை வைத்து ஒருவரை ஒருவர் பழி தீர்த்துக்கொள்வது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியதாகும். ஏனெனில் பிள்ளைகள்மீது தாய்க்கும் தந்தைக்கும் அவரவர்க்குள்ள உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒருபெண் வந்து, ”யா ரஸுலல்லாஹ்! இந்த என் மகனுக்கு என் வயிறு, சுமக்கும் பையாகவும் என் மடி தாங்கும் தொட்டிலாகவும், என் மார்பகம் பாலூட்டும் பாத்திரமாகவும் இருந்தன. இவனுடைய தந்தை என்னைத் தலாக் செய்து விட்டார். (இவனை) என்னிடமிருந்து பிரிக்க எண்ணுகிறார்” என்று முறையிட்டார். ”நீ வேறு திருமணம் செய்யாதவரை நீயே இந்தக் குழந்தையின் விஷயத்தில் அதிக உரிமை படைத்தவள்” என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். -அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) (நூல்கள்: அபூதாவூத் 2276, அஹ்மத்).

இந்த ஹதீஸில் பிள்ளையின்மீது தாய்க்கு அதிக உரிமையுள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். அந்த உரிமை, அப்பெண் மறுமணம் செய்துகொள்ளும் வரையே என்ற வரையறையோடு சுட்டிக் காட்டியுள்ளார்கள். பிள்ளைகளின் பால பருவத்தையும் தாய்-தந்தை ஆகிய இருவரில் பிள்ளை யாரிடம் அதிகம் ஒட்டுதலாக இருக்கிறது என்பதையும் இதுபோன்ற சூழலில் கருத்தில் கொள்ள வேண்டும். மற்றொரு ஹதீஸ்,

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ”யா ரஸுலல்லாஹ்! என் கணவர் என் மகனை எடுத்துக்கொள்ள எண்ணுகிறார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீங்கள் இருவரும் சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்யுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அவருடைய கணவர், “என் மகன் விஷயத்தில் யார் உரிமை கொண்டாட முடியும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”இதோ உன் தந்தை! அதோ உன் தாய்? நீ விரும்பியவரின் கையைப் பிடி” என்றார்கள். அந்தக் குழந்தை தாயின் கையைப் பிடித்தது தாய் குழந்தையைக் கூட்டிச் சென்றுவிட்டார். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: அபூதாவூத் 2277, நஸயீ, திர்மிதீ, அஹ்மத், தாரிமீ).

பெற்றோர் இருவரில் பிள்ளை யாரிடம் இருக்கவேண்டும் என்பதில் பிரச்சனை ஏற்பட்டால் சீட்டு எழுதிப்போட்டுத் தேர்தெடுத்துக் கொள்ளும்படி இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. இதையும் கடைப்பிடிக்கலாம். ஓரளவு விபரம் தெரிந்த சிறுவர்/சிறுமியாக இருந்தால், தாய் தந்தையரில் தமக்கு விருப்பமானவரைத் தேர்வு செய்யும் உரிமையைப் பிள்ளைக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. எனவே, யாருடன் சேர்வது என்பதைப் பிள்ளையின் விருப்பத்திற்கும் விட்டுவிடலாம். எவ்வாறாயினும் இவ்வேற்பாடுகள் அனைத்தும் சிறுவயதில் பிள்ளைகள் யாருடன் வாழ்வது என்பதை முடிவு செய்யவே உதவும். பிள்ளையின் மீதான தாயின் உரிமை என்பது ஒரு தற்காலிகம். அது, தற்காலிகமா நிரந்தரமா என்பதை தாய்-தந்தை இருவரும் ஒப்புதலுடன் பேசி முடிவு செய்து கொள்ளலாம். பிள்ளைக்குப் பாலூட்டும் காலத்துக்குத் தாயின் உணவுக்கும் உடைக்கும் பொறுப்பேற்க வேண்டியது தந்தையின் கடமை எனும் குர்ஆன் வசனத்தின் மூலம் பால்மறந்த பின்னர் தாயிடம் ஒரு பிள்ளை எத்தனை ஆண்டுகள் வளர்ந்தாலும் பிள்ளைக்கான உணவு, உடை, கல்வி, திருமணம் ஆகிய அனைத்துக்கும் தகப்பனே பொறுப்பாளியாவர் என்று விளங்குகிறோம். சுருக்கமாக – எத்தனை பிள்ளைகள் தாயின் பராமரிப்பில் இருந்தாலும் வளர்ந்தபின்னர் அனைவரும் தந்தைக்கு உரியவர்களே. பிள்ளைகளின் நலன் கருதி, இருவரும் இணக்கமான முடிவு எடுத்துப் பின்பற்றுவதில் தவறேதுமில்லை.

குல்வு எனும் குலா

கணவரிடமிருந்து பிரிந்துவிட முடிவெடுத்த நபித் தோழி ஒருவரைப் பற்றிய நபிமொழி:
ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவரின் குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும் நான் இறைநிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “சரி! அவரது  தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவரும் “ஆம்” என்று ஒப்புதல் கூறினார். பின்னர், (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். -அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி 5276, நஸயீ, இப்னுமாஜா).

கணவன் மனைவியைத் தலாக் சொல்லும்போது திருமணத்தில் பெற்ற மஹர் தொகையை மனைவித் திருப்பித்தர வேண்டியதில்லை. மனைவி முன்வந்து கணவனிடமிருந்து தலாக் வேண்டும் என்று அணுகும்போது மஹராகப் பெற்றதைத் திரும்பத் தந்துவிட வேண்டும் என்று ஹதீஸ்களிலிருந்து விளங்குகிறோம். இவையே தலாக், குல்வு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.

(இறைவன் மிக்க அறிந்தவன்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.