ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்போடு
ஓடிப்போனது…
பெற்றோருக் கிடை
வகுப்புக் கலவரம்!
போய்ச் சேர்ந்த இடத்தில்
தேடிச் சென்றது இல்லை –
வீட்டுப் பாடம் ஒன்றும்
விபரம் புரியவில்லை –
கோனார் உரையிலும்
குறிப்பெதுவும் இல்லை!
குறுஞ்செய்தியில்
முடங்கிய விரல்களால்…
வெறுங்கஞ்சிக்குக்கூட
வேலை யில்லை!
கண்கள் வழி
கற்ற காதலும்…
காதலன் வழி
பெற்ற காமமும்…
வயிற்றுப் பசியில்
வெற்றாகிப் போனது!
கண்மணியும் பொன்மணியும்…
காவியமும் ஓவியமும்…
காசில்லா கதிகேட்டில்
காலாவதி யானது!
அவனுக்கு அவளும் –
அவளுக்கு அவனும் –
அலுத்துப் போன தொரு
அதிகாலையில்…
அரவணைக்க அம்மா,
ஆறுதலுக்கு அப்பா,
அந்தரங்கத் தோழியென
அவதரித்த அக்கா,
அம்மா சாயலில்
அருமைத் தம்பி,
இடுக்கண் களைய
இனியதொரு சகி,
இழந்ததெற் கெல்லாம்
ஏங்கியது மனது…!
மின்வெட்டு இரவொன்றில்
மிதக்கும் மின்மினி…
மழையற்ற தினமொன்றில்
புல்நுனியில் பனித்துளி…
என –
மிகைத்த காதல்;
முடியாத இரவு…
விடியாத வானம்…
படியாத உறவு …
உலர்ந்த மலர்வனம்…
உருகாத மேகம்…
என –
எதிர்மறை எண்ணங்களில்
அஸ்தமித்தது!
ஏனோ…
பிடிமண் இடுகையில்
நொடிநேரம் காட்டும்
முகமொன்று –
குழிக்குள்…
மின்னி மறைந்தது
முடிவைத் துவக்கமென்று
மயங்கும் பிஞ்சுகளே
பழுக்கும் பருவம்வரை
பொறுத்தலே பகுத்தறிவு!
– சபீர்