தோல்வியை படுதோல்வி அடையச் செய்வோம்!

மீபத்தில், SSLC மற்றும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாநில / மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று  சாதனை படைத்தவர்கள் குறித்து பேசப்படும் நிலையில், தேர்வில் வெல்லும் / சாதிக்கும் வாய்ப்பை இழந்தவர்களைப்  பற்றியும் நிச்சயம் பேசியாக வேண்டும்.

தேர்வில் வெற்றியும் தோல்வியும் படிப்பை அளவிடும் அளவுகோல் மட்டுமே  தவிர வாழ்க்கையின் வெற்றி / தோல்விக்கான அளவீடு அல்ல.

10-12 ஆண்டுகள் பள்ளியில் படித்துவிட்டு ஒரு வாரம் நடக்கும் பரிட்சைகளில் தேர்ச்சிக்கான மதிப்பெண்களை பெறத் தவறியவர்கள்  தோல்வி அடைந்தவர்களல்லர்; மாறாக வெற்றி இலக்கை தவறவிட்டவர்களே என்ற நேர்மறை (Positive) சிந்தனையை  வாய்ப்பை தவறிவிட்டோரும், அவர்களின் பெற்றோரும் மனதில் இருத்தி,அடுத்தகட்ட முயற்சிகளில் கவனம் செலுத்த  வேண்டும்.

அரசு பொதுத் தேர்வுகளில் வெற்றி இலக்கைத் தவறவிட்டவர்கள் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு பல்வேறு வாய்ப்புகளை  கல்வித்துறை வழங்கியுள்ளது. மறுகூட்டல், மறுதேர்வு போன்ற வசதிகள் மூலம் மீண்டும் கல்விப் பயணத்தை தொடரலாம்.  முன்பெல்லாம் பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் ஒருவருடம் பின்தங்கும் நிலை இருந்தது. தற்போது  அதே ஆண்டிலேயே தேர்வெழுதி சகநண்பர்களோடு அதேவருடத்தில் படிப்பைத் தொடர முடியும்.

தேர்வுகளில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டதால் தங்களின் அந்த எதிர்பார்ப்பு தாமதமாகி விட்டதே என்ற நியாயமான ஆதங்கத்தை/கோபத்தை பெற்றோர்கள், உரிமையுடன் தமது பிள்ளைகளிடம் காட்டும்போது நிலை தவறி விடுகின்றனர். அதற்காக, தற்கொலை செய்து கொண்டுதான் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று நினைப்பது சரியல்ல.

பயணம் செய்ய வேண்டிய பேருந்தை தவறவிட்டவர்கள் எவ்வாறு அடுத்த பேருந்துக்கு தயாராவார்களோ அதுபோல்  டேக்-இட்-ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பேருந்தையோ ரயிலையோ தவற விட்டதற்காக யாரும் தற்கொலை  செய்து கொள்வோமா? அதுபோன்றே தேர்வில் வெற்றியைத் தவற விட்டதற்காக தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. 

தற்கொலை-நிச்சயமாக தீர்வல்ல. மாறாக சம்பந்தப்பட்ட பலருக்கு பல்வேறு வகைகளில் வரப்போகும் பிரச்சினைகளின்  தொடக்கம். பெற்று, வளர்த்து, நல்ல பள்ளியில் இடம்பிடித்து, தேவையானவற்றை எல்லாம் வாங்கித் தந்து மற்றவர்களைப்  போன்று தமது பிள்ளையும் நல்லநிலைக்கு வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எல்லா பெற்றோர்களுக்குமே உண்டு.

தேர்வுகளில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டதால் தங்களின் அந்த எதிர்பார்ப்பு தாமதமாகி விட்டதே என்ற நியாயமான  ஆதங்கத்தை/கோபத்தை பெற்றோர்கள், உரிமையுடன் தமது பிள்ளைகளிடம் காட்டும்போது நிலை தவறி விடுகின்றனர்.  அதற்காக, தற்கொலை செய்து கொண்டுதான் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று நினைப்பது சரியல்ல. மாறாக,  மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் காட்டுகிறேன் என்று சவால்விட்டு சாதிக்கலாம்.

முந்தைய முயற்சிகளில் எங்கு தவறு நடந்தது என்று கண்டறிந்து சரிசெய்தாலே போதும்! நீங்களும் வெற்றியாளராகி  விடலாம். தோல்வியைத் தவிர்ப்பதே வெற்றியடையும் வழியாகும். காதைக் கொடுங்கள்: வெற்றி பெற்றவர்களை விடவும்  வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்களுக்கே அதிக அனுபவம் உண்டு. இந்த ரகசியம் பலருக்குத் தெரியாது. ஏனெனில்,  தோல்வியுற்றவர்களுக்குத் தானே அதை எப்படி தவிர்க்க முடியும் என்றும் தெரியும்!

வெற்றியாளர்களையும் சாதனையாளார்களையும் விடவும் தோல்வியிலிருந்து மீண்டவர்களையே உலகம் பளிச்சென்று நினைவில் கொள்ளும் என்பதை மறந்து விடாதீர்கள். சாதாரணமாக வெற்றி பெறுவது பெரும்பாலோருக்குச் சாத்தியமாக  இருக்கலாம். ஆனால், தோல்வியிலிருந்து மீண்டு(ம்) வெற்றி பெறுவது சிலருக்கு மட்டுமே சாத்தியம்.

இதை உணர்ந்து  தோல்வியை படுதோல்வி அடையச் செய்வோம்.

– N. ஜமாலுத்தீன்