கற்காலமும் சொற்காலமும் (கவிதை)

நாகரிகமற்ற மனிதரின்
மிருக வேட்டை
அக்கற்கால ஏடுகளில்

நகருற்ற மனிதரின்
மனித வேட்டையோ
இச்சொற்கால ஏடுகளில்

குருதி வழிய மிருகம் இறக்க…
ஒருகை தின்று வயிறு தணிய…
அக்காலம் கற்காலம்!

குரோதம் எரிய மமதை பிறக்க…
ஒருகை பார்த்துச் செருக்கு வளர…
இக்காலம் சொற்காலம்

இலைதழையே ஆடையாக…
இண்டுஇடுக்கும் இல்லமாக…
அக்காலம் கற்காலம்

அலைபாயும் மனமும் அம்மணமாக
அடுக்கிய ஆசையின் இருப்பிடமாக
இக்காலம் சொற்காலம்

கற்கள் உரசியே
சமையலானது
அக்காலம் கற்காலம்

சொற்கள் உரசிட
சூழ்ச்சிகள் சமைப்பது
இக்காலம் சொற்காலம்

பகையெனப் பிற உயிர்…
பாதுகாக்க ஆயுதங்கள்…
அக்காலம் கற்காலம்!

பகையே சகமனிதரென…
பார்வையும் எரிப்பதாக…
இக்காலம் சொற்காலம்

வீழ்த்திடுங் கருவிகள்
வெளியில் தேடியது
அக்காலம் கற்காலம்

வீழ்த்தவே கறுவிடும்
உள்ளுக்குள் வன்மம்
இக்காலம் சொற்காலம்

திருத்தவந்த தலைவரையெல்லாம்
தீர்த்துக்கட்டியது
அக்காலம் கற்காலம்

தீர்க்கமில்லா மனிதர்பின்னே
திரண்டுச் செல்வது
இக்காலம் சொற்காலம்.

அறிவுதேடி ஆர்வம் புரள
அலையெனப் பாய்ந்தது
அக்காலம் கற்காலம்

அழிவுதேடி அறிவே புரள
கலையென ஆய்வது
இக்காலம் சொற்காலம்.

– இப்னு ஹம்துன்