4 ஆண்டு மோடி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 13ல் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைகூட செயல்பாட்டுக்கு வரவில்லை : ஆர்டிஐ மனுவில் தகவல்.
புதுடெல்லி: ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய பா.ஜ கட்சி, கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றைக்கூட செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என ஆர்டிஐ மனு மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பா.ஜ தேர்தல் அறிக்கையில், ‘ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் தொடங்கப்படும்’ எனக் கூறப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்ததும் நாட்டின் பல பகுதிகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை மத்திய அரசு பெருமையாகக் கூறி வருகிறது. இவற்றின் தற்போதைய நிலவரம் பற்றி தகவல் தெரிவிக்கும்படி ஒரு பத்திரிகை நிறுவனம் ஆர்டிஐ மனு மூலம் தகவல் கேட்டிருந்தது. இதற்கு, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட பதிலில் கூறியிருப்பதாவது:
* மத்திய அரசு அனுமதித்த 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில், தமிழகம், குஜராத், பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இவற்றுக்கு கால நிர்ணயமும் நிர்ணயிக்கப்படவில்லை.
* உத்தரப் பிரதேசத்தில் 2020ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை 10 சதவீதத்துக்கும் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.1,011 கோடி. இதுவரை வழங்கிய தொகை ரூ.98.34 கோடி.
* ஆந்திராவில் ரூ.1,618 கோடியில் அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.233.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* மேற்குவங்கத்தில் ரூ.1,754 கோடியில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு இதுவரை ரூ.278.42 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* மகாராஷ்டிராவில் அனுமதிக்கப்பட்டது ரூ.1,577 கோடி. வழங்கிய தொகை ரூ.231.29 கோடி.
* அசாமில் திட்ட மதிப்பு ரூ.1,123 கோடி. வழங்கிய தொகை ரூ.5 கோடி.
* ஜார்கண்ட்டில் திட்ட மதிப்பு ரூ.1103 கோடி. வழங்கிய தொகை ரூ.9 கோடி. இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டள்ளது.
நன்றி : தினகரன்