பிள்ளையார் சிலையை உடைத்துவிட்டு, பழியை முஸ்லிம்கள் மீது சுமத்திய கோயில் பூசாரி !

Share this:

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக் கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரும் அறிந்ததே! சமூக நல்லிணக்கத்தைக் குலைத்துப் பெரும் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் உத்திரப் பிரதேசத்தில் கோயில் பூசாரி ஒருவரே பிள்ளையார் சிலையை உடைத்துவிட்டு, பழியை அப்பகுதி முஸ்லிம்கள் மீது போட்டது அம்பலமாகியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் கிழக்கு மாவட்டத்தின் ’கதேலா சமாய்மதா’ காவல் நிலையத்தில், கடந்த 16.7.2024 அன்று, க்ரிச் ராம் என்பவர் (பிள்ளையார் கோவில் பூசாரி) ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், தனது சொந்த ஊரான தவ்லிஹவா கிராமத்தின் கோவிலில் இருந்த பிள்ளையார் சிலையை மன்னான், சோனு ஆகிய இரு முஸ்லிம்கள் உடைத்துவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இரு முஸ்லிம்களும் தன்னை பூஜை, புனஸ்காரங்களைச் செய்யவிடாமல் தடுத்து, தன்னை மிரட்டியதாகவும் – தடுக்க வந்த தன் மனைவியைத் தள்ளிவிட்டு அடித்ததாகவும் புகார் மனுவில் கூடுதலாகத் தெரிவித்திருந்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், மதக் கலவரத்தை ஏற்படுத்தும் எண்ணத்தோடு, இந்துக்களின் வழிபாட்டுத் தலத்தில் முஸ்லிம்கள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் செய்ததாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ததோடு விசாரணையைத் துவங்கியது காவல்துறை.

இந்து மதத்தை இழிவு செய்யும் நிகழ்வு என்பதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி நிலைமையை மோசமாக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு, காவல்துறை இணை கண்காணிப்பாளர் தர்வேஷ் குமார், வட்ட காவல்துறை அதிகாரி ஷொராட்கர் ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டனர்.

வட்ட, வட்டார நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினருக்கு, விசாரணையின் முடிவில் நம்ப முடியாத அதிர்ச்சி காத்திருந்தது!

ஆம். பிள்ளையார் சிலையை உடைத்தவர்கள் முஸ்லிம்கள் அல்லர்; மாறாக, புகார் கொடுத்த பூசாரியே சிலையை உடைத்துவிட்டுப் பொய்ப் புகார் கொடுத்தார் என்பது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த, நேரில் கண்ட 8-10 வயது சிறுவர்கள் கொடுத்த வாக்குமூலங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

”சிறுவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், ‘உரிய’ முறையில் விசாரித்தபோது, குற்றத்தைப் பூசாரி ஒப்புக்கொண்டார்” என்று காவல்துறை அதிகாரி குமார் கூறினார்.

மேலும், மன்னான் மற்றும் சோனுவோடு ஏற்கனவே தனக்கு முன் விரோதம் இருந்ததாகவும் அவ்விருவரையும் ஏதேனும் குற்றச் செயலில் மாட்டிவிடவேண்டும் என்று தான் காத்திருந்ததாகவும் அதற்காகவே பிள்ளையார் சிலையைத் தானே உடைத்துவிட்டு, முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டுப் புகார் கொடுத்ததாகவும் பூசாரி க்ரிச் ராம் உண்மையை ஒப்புக் கொண்டார்.

“தானே சிலையை உடைத்துவிட்டு, முஸ்லிம்கள் மீது பழியைப் போட்ட குற்றதை ஒப்புக்கொண்ட பூசாரி மீது குற்ற வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்போது பதட்டம் நீங்கி நிலைமை சீராக உள்ளது” என்று காவல் அதிகாரி குமார் தெரிவித்துள்ளார்.

நன்றி : தி வயர்

முஸ்லிம்களுக்கு இறைவனின் கட்டளை :

பிற மதத்தவர் பிரார்த்திக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள் … (அல்குர் ஆன் 6:108).


Share this: