பகிர்!

பூட்டி வெச்சப் பொட்டிகளோ
பூதங் காத்தப் பொதையலு
புழுப் புழுத்துப் பொகஞ்சி போகும்
போற எடம் வேற யாகும்

சேத்து வச்ச சிந்தனையும்
காத்து வச்ச காசு பணம்
செல்லரிச்சி செதஞ்சு போகும்
செலவழிச்சா செறப்புச் சேரும்

கற்ற கல்வி பெற்ற ஞானம்
கத்துக் கொடுத்தா வளர்ந்திடும்
கஞ்சி சோறு கழனி காடு
கலந்து உண்டா பெருகிடும்

தெளிஞ்சி வந்த நீரானாலும்
தேங்கி நின்னா குட்டையாகும்
மூளைக்குள்ளே மொடக்கி வச்சி
தூங்கினா மதி கெட்டுப்போகும்

பூமிக்குள்ளே பொதைச்சு வச்ச
பொக்கிஷந் தான் வெதைகளும்
தரைபொளந்து தலநிமிர்ந்தா
தழைக்கும் இந்த ஒலகமும்

தாவரங்கள் காட்டித் தரும்
தியாகத்தை நாம் படிக்கனும்
ஞானத்தோடு தானங்களையும்
ஞாலத்துக்கே வழங்கனும்

கொண்டு வந்ததொன்னுமில்லே
கொண்டுபோக வழியுமில்லே
கட்டிக்கொண்டு கெடந்திடவோ
கடுங் குழிக்குள் எடமில்லே

கற்றதெல்லாம் கத்துக்கொடு
பெற்றதெல்லாம் பிரிச்சிக்கொடு
முற்றுப்பெறும் வாழ்க்கையிலே
முதல் பகுதி வெற்றி பெறு

அத்தனையும் அறியப்படும்
கணக்கு வழக்கில் பதியப்படும்
கேள்வி கணக்கு நாளினிலே
கெடைக்கும் அந்த சொர்க்கம் பெறு!


– சபீர்