பசிக்குப் புசி!

ளு தூக்கும் பாவனையில்
உன்றன்
உடல் தூக்கும் மானிடா
வெறுமனே ஏனிந்தப்
பருமன்?

உள்நாக்குக் கடந்தபின்
உணவுக்கு ருசி ஏது?

உடற்கூறு அறிந்துகொள்
குடலுக்கு நாக்கேது – உட்
கொண்டதன் சுவை அறிய?

நொறுக்குத் தீனியைக்
கொரிப்பதற்கு முன்
செரிக்குமா என்று பார்

பிறகெடுத்து அசைபோட
பசுவல்ல நீ
விறகெடுத்து வேக வைக்க
வயிற்றிலில்லை தீ

தின்பவை செரிக்க
மென்று விழுங்குதல்
நன்று

உருசியேற்ற வேண்டி
உப்புக்கொட்டி உண்டால்
சப்புக்கொட்டும் நாவு

ஒப்புக்கொள்ளாத ரத்தம்
எல்லைதாண்டிக் குதிக்கும்
எகிறி ரத்தம் கொதிக்கும்

எச்சில் சுரந்து காட்டி
நாக்கு
ஏங்கிக் கேட்பதெல்லாம்
வாங்கிக் கொடுத்தால்

ருசித்ததுபோக
கசிந்ததை எல்லாம்
சேமித்துச் சேமித்து
கழிவுத் தொட்டியாய்
இழிவாகும் உடல்

நாவுக்கு ருசிப்பதெல்லாம்
நோவுக்கு வழிவகுக்க
தேவைக்குப் புசிப்பதொன்றே
தேகத்தின் ஆரோக்யம்

வாயைக் கட்டாவிடில்
உடம்பு
நோயைக் கட்டிக் கொள்ளும்
பாயைவிட்டு மீளாப்
படுக்கையில் போட்டுவிடும்

சரிவிகிதச் சாப்பாட்டை
தறிவைத்துத் தைத்ததுபோல்
நெறியோடு உட்கொண்டால்
நெய்து எடுப்பதை
நீயே உடுத்தலாம் – அல்லாவிடில்

சடுதியில்
உனதுடலைக் கிடத்தி
ஓருடையாய்ப் போத்திவிட
வழி வகுப்பாய் நீ!

– சபீர்