சுதந்திரத்தின் தலைவிதி!

சுதந்திர இந்தியர்கள்
அமீரக விமான நிலையத்தில்
சாரைசாரையாக வருகை
பொதி தள்ளிக் கொண்டும்
விதி இழுத்துக் கொண்டும்

சுதந்திர இந்தியாவின்
தந்திர அரசியலால்
சொந்த மண்ணில்
வேலையிலிருந்து விடுதலை

கடந்த முறையும்
சுதந்திர தினம் கொண்டாடப் பட்டது
அபலைகளாலும் அடிமைகளாலும்

மூவர்ணக் கொடியைக்
குத்தி கொலை செய்தனர்
ஊழல் அரசியல்வாதிகள்
தத்தம்
கதர் சட்டைகளில்

ஒருநாள் மட்டுமே மிட்டாய்
எல்லா நாட்களும் அல்வா
வாயினிக்கிறது இந்தியனுக்கு
வயிற்றுப் பசியோ
இன்னமும் அடிமையாக்கியே வைத்திருக்கிறது

சுதந்திர தினத்தில்
வருடா வருடம்
தலைவன் அவிழ்க்கும்
கொடியிலிருந்து பூமழை
தொண்டனுக்கோ சுதந்திரத்திற்கு நினைவாஞ்சலி

வெள்ளையர்களை வெளியேற்றி
கொள்ளையர்களைக் குடியமர்த்தி
சொந்த செலவில்
சூனியம் வைத்துக் கொண்டது
இந்திய தேசம்

பேச்சுரிமை மூர்ச்சையாகிவிட
எழுத்துச் சுதந்திரம்
இழுத்துக் கொண்டது

சுதந்திரத்தின் சூத்திரத்தைத்
தப்பர்த்தம் செய்துகொண்டு
கவர்ச்சி காட்டுவோரைக்
கற்பழிக்கிறது
காளையின் சுதந்திரம்

இலவசத்திற்கு
இன்னோர் பெயரிட்டு
‘விலையில்லாப் பொருள்’ தந்து
அடிமைப் படுத்துகிறது அரசியல்
கையேந்தும் சுதந்திரத்தைக்
கச்சிதமாகப் பயன்படுத்துகிறது பொதுசனம்

கருத்துச் சுதந்திரம் என்னும்
துருப்புச் சீட்டு கையிலெடுத்து
நடித்துக் காட்டும் ஊடகம்
படித்தவர் ஆடும் நாடகம்

சுதந்திர இந்தியாவில்
உழைக்க வேண்டாம் உணவு இலவசம்
கடமை செய்யாதே கனவு காண்
காசு படைத்தோர் கற்க கசடற

பட்டொளி வீசியே
பறக்கிறது கொடி
பாட்டாளி பீதியில்
பட்டினிப் பிணி

கொடியேற்றக் கூட
கோடி ரூபாய் கேட்கும் நாள்
வெகுதூரம் இல்லை!

– சபீர்