ஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்!

Share this:

ன்று 67 ஆவது சுதந்திர தினம்! எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர்.

சின்னத் திரைகளில், நாட்டுக்கு உழைத்த(!) சினிமா நட்சத்திரங்களின் பேட்டி மற்றும் திரைப்படங்களுடன் வீட்டினுள் விமர்சையாக பெரியோர்கள் கொண்டாடிக் கொள்கின்றனர். வீட்டிற்கு வெளியிலோ, தாம் தான் தேச விடுதலைக்குப் பாடுபட்டது போலவும் தேசப் பற்றின் சொந்தக்காரர்களாக இருக்கத் தகுதி படைத்தவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முகமாக சாலைகளில் அரை டவுசருடனும் கைத்தடியுடனும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் வலம் வருகின்றனர்!

67 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தச் சடங்கின் மூலம், புதிய தலைமுறையினருக்கு வரலாற்றின் முக்கிய பக்கங்கள் வசதியாக மறைக்கப்பட்டு வருகிறது.

90 களுக்குப் பின்னர் நாட்டில் சாதாரணதொரு நிகழ்வு போன்றாகி விட்ட குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் இயங்கும் அபினவ் பாரத் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகள் அம்பலப்பட்டு விட்ட போதிலும் எவ்வித வெட்கமும் இன்றி தம்மைத் தேசியவாதிகளாக முன்னிறுத்துவதில் இந்தப் பயங்கரவாத அமைப்பு முனைப்புடனே செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், வரலாற்றில் பதிந்து மக்கள் கவனத்திலிருந்து விலகிவிட்ட சில உண்மைகளை இந்தியச் சுதந்திர நாளான இன்று நினைவுகூர்வது ஒவ்வொரு இந்தியனின் மீதும் கட்டாய கடமையாகிறது!

இந்திய தேச விடுதலைக்காகப் பாடுபட்டு, தேசத்தந்தை எனப் போற்றப்படும் காந்தியிலிருந்தே அதனைத் தொடங்குவோம்!

ஒன்றுபட்ட இந்தியாவை இரண்டாகப் பிரித்து, 1947 ஆகஸ்ட் 14 ல் ஒரு பகுதிக்கும் ஆகஸ்ட் 15 ல் இன்னொரு பகுதிக்கும் சுதந்திரம் தந்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறினான் ஆங்கிலேயன். அவன் செல்லும்போது, தம்மை எதிர்த்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய காந்தியை முழுதாக உயிருடன் தந்துவிட்டு போனான். ஆனால், சுதந்திரம் கிடைத்து முழுமையாக ஒரு ஆண்டு ஆகும் முன்னரே சுதந்திர இந்தியாவில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரைக் கொன்றது யார்? நாதுராம் கோட்சே! இவன் ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ் உறுப்பினன் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதனை மறுக்கும். காந்தி கொலை செய்யப்படும்போது கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து விலகியிருந்தான் என மழுப்பல் காரணம் சொல்லப்படும். எனினும், நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே முதல் காந்தியின் பேரன் வரை அனைவரும் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸால் ஏவப்பட்டே காந்தியைச் சுட்டுக் கொன்றான் என ஒருமித்தக் குரலில் சொல்வர்!

காந்தியைக் கொல்வதில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு என்ன இலாபம்? எதற்காக காந்தியை ஆர்.எஸ்.எஸ் கொல்ல வேண்டும்? இது குறித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமெனில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் என்ன? அதன் கொள்கை என்ன? என்பதைத் தெளிவாக புரிய வேண்டும்.

1925 ஆம் ஆண்டு நாக்பூரில் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் என்ற சித்பவ பார்ப்பனரால் ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டது.

அதாவது சுதந்திரத்துக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டுவிட்டது. ஹெட்கேவரைக் குறித்து கூறும்போது, “சுதந்திரப் போராட்ட வீரரான ஹெட்கேவர், நாட்டுக்காக தம் முழு வாழ்வையும் அர்ப்பணித்தார்” என்று ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் போதிக்கப்படும்.

ஆனால் உண்மையோ வேறு. இராணுவத்துக்கு ஒப்பான பயிற்சிகளுடன் இலட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டதாக எந்தத் தகவலும் இல்லை. மாறாக, ஆங்கிலேயர்களின் அரசாங்கப் பதவிகளில் ஒட்டிக் கொண்டு, தம்மை வளர்த்துக் கொள்வதிலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முழு கவனமும் செலுத்தி வந்தனர்.

ஒருமுறை நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் பங்கு கொண்ட காந்தி, பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, இந்த இயக்கம் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனக் குறிப்பிட்டார். அவருடைய கணிப்பு, அவரின் உயிருக்கும் சேர்த்தேதான் உலை வைத்தது!

உண்மையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம் என்ன? இதனைத் தெரிந்துகொள்ள, காந்தி கொல்லப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ்ஸின் சர் சங் சாலக்காக இருந்த கோல்வால்க்கரின் “சிந்தனைக் கொத்துகள்” என்ற புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

பிப்ரவரி 1906 ஆம் ஆண்டு பிறந்த கோல்வால்க்கர், பனாரஸ் இந்து பல்கலை கழகத்தில் படித்து கொண்டிருக்கும்போதே ஹெட்கேவரால் கவரப்பட்டு ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்தார். 1940 ல் ஹெட்கேவர் இறந்த பின்னர், தம் 34 ஆவது வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்ஸின் சர் சங் சாலக்காக பதவியேற்ற கோல்வார்க்கர் தம் மரணம் வரை சுமார் 30 ஆண்டுகாலம் ஆர்.எஸ்.எஸ்ஸை வழி நடத்தினார்.

இக்காலக் கட்டத்தில் அவர் ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் பேசிய பேச்சுக்களையும் சிந்தனைகளையும் தொகுத்து எழுதப்பட்டதுதான் “சிந்தனை கொத்துகள் (Bunch of thoughts).

மனிதநேயமற்ற வெறுப்பின் மொத்த உருவம் எதுவென கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு கோல்வால்க்கர் என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களிடையே கோல்வால்க்கர் வெறுப்பு விஷத்தை ஊட்டியுள்ளதைச் சிந்தனை கொத்துகளில் கண்டு கொள்ளலாம்.

இதனாலேயே குரு என அறியப்பட்டிருந்த கோல்வால்க்கரை, “வெறுப்பின் குரு” என ராமச்சந்திர குஹா தி இந்துவில் வர்ணித்துள்ளார்.(http://www.hindu.com/mag/2006/11/26/stories/2006112600100300.htm)

ஆர்.எஸ்.எஸ் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியினை இப்புத்தகத்தில் கோல்வால்க்கர் விவரிப்பதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கமென்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் என்பதன் சுருக்கமே ஆர்.எஸ்.எஸ்! ராஷ்ட்ரீயம் என்றால் தேசம், நாடு என்று பொருள். தேசத்துக்குச் சேவையாற்றுபவர்கள் என்பது பொருள் என்று அர்த்தம் கொண்டால், அது உங்கள் தவறல்ல! இவ்வாறு தவறாக புரிந்துகொண்டு, எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்ஸை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதுதான் ஹெட்கேவரின் விருப்பம்! அது சரியாகவே நடந்துள்ளது.

இங்கே ராஷ்ட்ரீயம் என்றால் இந்து என்பது பொருள். அதாவது இந்துவுக்குச் சேவையாற்றுபவர்கள் என்பதுதான் சரியான பொருள். ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைய அடிப்படை தகுதியே, இந்துவாக இருக்கவேண்டுமென்பதுதான். அதாவது, இந்து என்றால் தேசம்; (இந்திய)தேசம்(ராஷ்ட்ரம்) என்றால் இந்து என்பதுதான் ஹெட்கேவரின் தத்துவம்!

சிந்தனை கொத்தில் ஒரு இடத்தில் இதனை கோல்வால்க்கர் விவரிப்பதைக் கவனித்தால் புரியும்.

மும்பையில் “இந்து காலனி”யின் பெயரிடும் கூட்டத்துக்கு கோல்வால்க்கர் அழைக்கப்படுகிறார். கூட்டத்தில் கலந்து கொண்ட கோல்வால்க்கர், தம்மால் “இந்து காலனி” எனப் பெயரிட முடியாது என மறுக்கிறார். இந்துக்களுக்குச் சேவை செய்யும் அமைப்பிலிருந்து கொண்டு அவரே இதனை எதிர்ப்பது அங்குள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு அவர் விளக்கம் கொடுக்கும்போது, “அமெரிக்காவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஒரு பகுதிக்கு இந்து காலனி எனப்பெயரிடுவது பொருத்தமாக இருக்கும். இந்தியா அல்லாத வேறு ஒரு நாட்டில் இந்து காலனி என்பது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்தியாவுக்குள் ஏன் இந்து காலனி? இந்தியா என்றாலே இந்துதான். எனவே ராஷ்ட்ரீய காலனி என்று பெயர் மாற்றுங்கள். இதனாலேயே, இந்து ஸ்வயம் சேவக் என்று வைக்காமல் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் என பெயர் வைக்கப்பட்டது” என விளக்குகிறார்.

இதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கமென்பது வெள்ளிடை மலையாக விளங்கியிருக்கும். சுதந்திரத்துக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்த ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம், இந்தியாவை இந்து நாடாக்க வேண்டுமென்பதுதான். அந்தத் திட்டமிடலின் இறுதி விளைவுதான், ஆர்.எஸ்.எஸ் நபரான சர்தார் வல்லபாய் பட்டேலால் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்கத்தில் வந்து முடிந்தது.

இதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் முதலிடத்தில் இருந்தவர் காந்தி. இந்து நாடு உருவாக்கத்துக்கு, “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள்” ஆகியோரை ஒழிக்கவேண்டுமெனவும் அவர்கள் தான் இந்து நாட்டுக்கு எதிரிகள் எனவும் சிந்தனை கொத்தில் கோல்வால்க்கர் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்.

முதலில் முஸ்லிம்கள் என்ற லட்சியத்திலேயே பாகிஸ்தான் ஆர்.எஸ்.எஸ் ஆல் உருவாக்கப் பட்டது. ஒருங்கிணைந்த இந்தியாவினைத் துண்டாடிய இந்த ஆர்.எஸ்.எஸ் இனர்தான் இன்று தம்மைத் தேசத்தின் பாதுகாவலர்களாகவும் தேசப் பற்றாளர்களாகவும் தம்மை முன் நிறுத்துகின்றனர்.

காந்தி கொலை செய்யப் படுவதற்கும் ஆறு வாரங்களுக்கு முன்னர், டெல்லியில் நடந்த இரு வேறு ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் காங்கிரஸ் தலைவர்களைக் கொலை செய்வதற்கு கோல்வால்க்கர் தலைமையில் திட்டங்கள் தீட்டப்பட்டதாக மேற்கண்ட தி ஹிந்து கட்டுரையில் ராமச்சந்திர குஹா குறிப்பிடுகிறார்.

காந்தியின் கடுமையான எதிர்ப்பை மீறி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளைச் சேர்த்து பாகிஸ்தான் உருவாக்கப் பட்டது. மீந்துள்ள பகுதியினை இந்து பாகிஸ்தானாக உருவாக்க வேண்டுமென்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்பார்ப்பு. ஆனால், அதனையும் காந்தி கடுமையாக எதிர்த்தார்.

முஸ்லிம்களுக்கு இந்தியாவில் தங்கிவிட எந்த அதிகாரமும் இல்லை; அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விடவேண்டும். மீறி இந்தியாவில் தங்கினால், அதற்கு இந்துக்கள் பொறுப்பாளிகள் அல்ல; காந்தியும் அரசும்தான் அதற்கு முழு பொறுப்பாளிகள் என கோல்வால்க்கர் எச்சரித்தார். எனினும், பாகிஸ்தானுக்குச் செல்ல நாடுபவர்கள் செல்லட்டும். இந்தியாவிலேயே தங்கிவிடும் முஸ்லிம்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே இருக்குமெனவும் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய பங்கு தொகையினை இந்திய அரசு கண்டிப்பாக கொடுக்க வேண்டுமெனவும் காந்தி பிடிவாதமாக இருந்து சாதித்து கொண்டார்.

“தாங்கள் எதிர்பார்த்தது போன்று இந்தியா ஒரு இந்து நாடாக ஆகாமல் போனதற்குக் காந்தியின் இருப்பே காரணம்” என்ற வெறுப்பின் உச்ச நிலையிலேயே திட்டமிட்டபடி காந்தியை வெற்றிகரமாகப் போட்டுத் தள்ளியது ஆர்.எஸ்.எஸ்.

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்கள் மற்றும் இனக் கருவறுப்புகளுக்கு கோல்வால்க்கரின் சிந்தனை தொகுப்பே மூலக் கருவாக இருந்து வருகிறது.

முதலில் முஸ்லிம்கள்; பின்னர் கிறிஸ்தவர்கள்; அதன் பின் கம்யூனிஸ்டுகள்! இறுதியில் இந்து இந்தியா!

நடைபெறாமல் போன தங்களின் இந்து இந்தியா லட்சியத்துக்கு முதல் பலி காந்தி; தொடர்ந்து இன்று வரை நடந்துவரும் முஸ்லிம், கிறிஸ்தவ இனக் கலவரங்கள்!

“மதச்சார்பற்ற, ஜனநாயக, மக்கள் குடியரசு” என மிகத் தெளிவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறும் நிலையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட மாட்டேன். அதற்கு உட்பட்டு மக்கள் சேவையாற்றுவேன்” என சத்தியப் பிரமாணம் எடுத்து முதல்வராகியுள்ள ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி மோடி தன்னை “இந்து தேசியவாதி” என பகிரங்கமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக அறிவித்துக் கொள்ளும் நிலையும் அதனை இந்தியச் சட்டம் வேடிக்கை பார்க்கும் நிலையும் நாடு சுதந்திரம் அடைந்த இந்த 67 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் அடைந்துள்ள மிகப் பெரிய முன்னேற்றம்தான் என்றால் அது மிகையில்லை!

இப்போது சிந்திக்க வேண்டியது இந்திய மண்ணின் மீது நேசம் கொண்ட இந்தியர்களாகிய நாம்தான்!

இந்நாட்டின் சுதந்திரத்துக்காக ஒரு சிறு துரும்புகூட அசைத்துப்போடாத ஒரு கூட்டம், வெறுப்பு அரசியல் மூலம் இந்நாட்டை ஆளத் திட்டமிட்டதன் விளைவுகளில் ஒன்று பாகிஸ்தான் உருவாக்கவும் காந்தி படுகொலையும்!

பல மொழி, இனம், கலாச்சாரத்துடன் சுமார் 120 கோடி மக்கள் வாழும் மதச்சார்பற்ற இந்த இந்திய திருநாட்டின் சுதந்திரத்துக்கான உண்மையான பாதுகாவலர்கள் யார்? துரோகிகள் யார்?

இந்தச் சுதந்திர நன்னாளில், நம் நாட்டின் ஒற்றுமைக்காக தம் இரத்தத்தை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்துக்கு ஈடாக கொடுத்த காந்தியை நினைவில் வைப்பதோடு, அந்த ஒற்றுமையைக் கட்டிக்காக்க உறுதி எடுப்போம்! நாட்டு ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை வேரறுப்போம்!

வளர்க இந்தியா; ஓங்குக மக்கள் ஒற்றுமை!

– அபூ சுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.