ஷைத்தானோடு தோழமை!

னிதனின் எதிரிகளுள் ஆற்றல் மிக்க எதிரி யாராக இருக்க முடியும் என்றால் அவன் ஷைத்தான் தான்.

ஷைத்தானின் குணங்கள் மனிதனின் நாடி நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவற்றுள் தலையாயது மனித மனங்களுள் உண்மைக்கு மாறான சந்தேகங்களைப் புகுத்துவது.

நபி (ஸல்) (ரமளானின் இறுதிப் பத்து நாட்களில்) ‘இஃதிகாஃபி’ல் இருந்தபோது, அவர்களைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் நான் சென்றேன். அவர்களிடம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தபோது, என்னை வழியனுப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் எழுந்தார்கள். அப்போது உஸாமா பின் ஸைத் (ரலி) இல்லத்தை அடுத்து என் வசிப்பிடம் இருந்தது.

அப்போது அன்ஸாரிகளில் இருவர் (எங்களைக்) கடந்து சென்றனர். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் விரைவாக நடந்தனர். அப்போது நபி (ஸல்), “சற்று நில்லுங்கள். இவர் (என் துணைவி) ஸஃபிய்யா பின்த்தி ஹுயை ஆவார்” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் இருவரும், “அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்!)” என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்), “மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தைப் போட்டுவிடுவானோ என்று நான் ஐயுற்றேன்” என்றோ, அல்லது “எதையேனும் போட்டுவிடுவான்” என்றோ சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஸஃபிய்யா பின்த்தி ஹுயை (ரலி) – முஸ்லிம் 2124.

மனிதனை என்னென்ன தந்திரங்களைக் கையாண்டு வழிகெடுக்கலாம் என்று ஷைத்தான் சிந்தித்தவனாகவே இருப்பான். அவற்றுள் ஒன்று, சோம்பேறித்தனத்தை மனிதனிடம் ஏற்படுத்துவது.

சோம்பேறியாகிவிட்ட ஒரு மனிதனின் முதல் பண்பு என்னவாக இருக்கும்? அது, பயனுள்ள எந்தச் செயலும் செய்யாமல் இருப்பது தான்.

ஷைத்தானின் முக்கிய நோக்கம் மனிதனைத் தன் வழியில் வளைத்திழுப்பதே. அதற்காக அவன் பலவிதமான தந்திரங்களைப் புதிது புதிதாக உருவாக்கி, மனிதனைத் தன் வலையில் விழ வைப்பான்.

தந்திரத்தின் மூலம், பலவீனமான மனிதனைத் தன் நண்பனாக்கிக் கொள்வான்.

இரண்டு முக்கிய விசயத்தில் ஷைத்தான் மனிதனைப் பயனற்றவனாக மாற்றுகிறான்.

(1) உண்மையிலிருந்து விலகியவனாக
மனிதன் உண்மையிலிருந்து விலகி, நயவஞ்சகனாக மாறும்போது அவன் தனக்கான மதிப்பை இழக்கிறான், அவனது செயலும், நோக்கமும் பிறரிடம் மதிப்பற்றதாக மாறிவிடுகின்றது. அவனின் செயல்பாடுகள் அவனுக்கு நன்மையை ஈட்டுத் தருவதிலிந்து அந்நியமாகிவிடுகின்றது.

“நயவஞ்சகனின் குணம் மூன்றாகும்:
1.பேசும்போது பொய் பேசுவான்
2.நம்பினால் மோசடி செய்வான்
3.வாக்களித்தால் மாறு செய்வான்”
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) – புகாரி 2749.

(2) எதிலும் ஈடுப்பாடற்ற தளர்ச்சியடைந்தவனாக
ஆரோக்கிமற்ற பழக்கவழக்கங்களும், உயிர்வாழத் தேவையான தேடல்களில் வரம்பற்ற பேராசையும் மனிதன் அன்றாட செய்கைகளாக மாறி வருகின்றது. அந்தத் தேடல், அல்லாஹ்வின் நினைவிலிருந்து மனிதனை தொலைதூரத்திற்குக் கொண்டு செல்வதாக இருக்கின்றது. அல்லாஹ்வை நினைவுக்கூரும் விசயங்களிலும் மனிதன் சோம்பேறியாக, மார்க்க விசயங்களில் ஈடுப்பாடற்றவனாக மாறிப்போகின்றான்.

சோம்பலிலிருந்து பாதுகாவல் தேட:
“இறைவா! துக்கம், கவலை, பலவீனம், சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மற்றவர்களின் அடக்குமுறை ஆகிய அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்ற துஆவை நபி(ஸல்) ஓதுபவர்களாக இருந்தார்கள் – புகாரி 5425, 6369

சோம்பேறி முஸ்லிமின் நான்கு பண்புகள்:
ஷைத்தானும் அவனது பிடியும் உறுதியாகும் போது, மனிதனின் மனத்தில் எதிர்மறை உணர்வுகள் ஆழமாக ஊடுருவும். அப்போது சோம்பல், சோர்வு, தனிமை, வெறுமை போன்ற குணங்கள் மனிதனில் பெருகி அவன் வாழ்வைத் தொந்தரவு செய்யத் தொடங்கும்.

நபி (ஸல்) கூறினார்கள்:
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீ அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது நுகர்ந்து கொள்ளலாம். கொல்லனின் உலை உனது வீட்டையோ உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து துர்நாற்றத்தையாவது நீ பெற்றுக்கொள்வாய் – புகாரி 2101.
இந்த ஹதீஸில் கூறப்பட்ட கொல்லனின் உலையின் உவமைபோல் நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு ஒரு தீய நண்பனாகவே இருக்கின்றான்.

1-மார்க்கத்தைப் புறக்கணித்தல்
ஷைத்தான் நம் மனத்தில் ஊடுருவி, அவனுடைய தடத்தை நம்மில் பதிப்பதால், அல்லாஹ்வுடனான நம் பிணைப்பு வலுவிழக்கும், நம் வழிபாட்டுச் செயல்கள் குறையத் தொடங்கும்.

2-பிரார்த்தனையை நிறுத்துதல்
நம்முடைய உலக இன்பங்களைத் தேடத் தூண்டும் துவாவைத் தவிர மற்ற நன்மைக்கான பிரார்த்தனைகள் அனைத்திற்கும் நம் கைகள் உயராது நின்றுவிடும்.

3-பொறுமையற்ற மனம்
நாம் பொறுமையற்றவனாக இறைவனிடம் உடனடி திருப்தியைக் கோருவோம். அல்லாஹ்விடம் நாம் ஒரு விசயத்தை இறைஞ்சி அது நமக்கு உடனே கிடைக்க வேண்டும் என்ற அவசர எண்ணம் நம் மனத்திற்குத் தோன்றும்.

4-எழுதப்பட்ட விதிக்கு மாறுபட்டு நடத்தல்
நாம் உள்ளப்பூர்வமாக ஷைத்தானின் வழியை பின்பற்றும் போது,
நமக்கான விதியை உருவாக்க கடினமாக உழைப்பதை விட்டுவிடுகின்றோம் என்பதை மறந்து, நம் நண்பனான ஷைத்தானின் வழிமுறையை நாம் உண்மையுடன் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுவோம்.

மனிதன் ஷைத்தானைப் பின்பற்றுபவனாக இருப்பினும் அல்லாஹ் தன் அடியானுக்குப் பலப் பல வாய்ப்புகளை வழங்குகிறான்.

அவன் தன் குர்ஆனில்,
மேலும், உங்கள் இறைவன் இவ்வாறு அறிவித்திருந்ததையும் நினைவு கூருங்கள்: “நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயம் நான் உங்களுக்கு மேன்மேலும் வழங்குவேன்; நீங்கள் நன்றி கொல்வீர்களாயின் திண்ணமாக எனது தண்டனை மிகக்கடுமையானதாகும்”
(அல்குர்ஆன் : 14:7)

மேலும் அவன்,
ஆணாயினும் பெண்ணாயினும் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம்.
(அல்குர்ஆன் : 16:97) என்று கூறுகின்றான்.

மனிதர்களாகிய நாம் ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் தீய செயல்கள் எவ்வளவு செயசெய்திருந்தாலும் அல்லாஹ் நமக்கு வாய்ப்பை வழங்கி, அவனிடம் மன்னிப்புக்கேட்டு அவனையே பின்பற்றச் சொல்கிறான். அவ்வாறு செய்வோமாயின் அவன் நமக்கு நிச்சயம் மன்னிப்பு வழங்கக்கூடியவனாக இருக்கின்றான்.

நிச்சயமாக மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்களே. எனவே, நம் இதயத்தில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டால், நம்முடைய தற்போதைய தீயதோழனான ஷைத்தானிடமிருந்து பிரிந்துது, நம் படைப்பாளனானிடம் நாம் நெருங்குவோம்.

அன்பான சகோதர சகோதரிகளே,
ஷைத்தானுடன் நட்பு கொள்ள பல சாக்குகள் உள்ளன. அல்லாஹ்விடம் திரும்புவதற்கு நமக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே தேவை – அதுதான் உறுதியான நம்பிக்கை.
அவன், அல்-அஸீஸ் (வல்லமையுள்ளவன்); அவனுடன் நட்பு கொள்வதற்கு அவன் நமக்கு 99 காரணங்களைக் கற்பிக்கின்றான்.

-ஆங்கில ஆக்கத்தைத் தழுவி தமிழில்: ரிஃபானா காதர்