1956-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம். மதியம் தொடங்கி, மாலை வரை ஓயாமல் விவாதம் அனல் பறக்கிறது. தனிநபர் மசோதா ஒன்றின் மீதான விவாதம் இவ்வளவு நேரம் அன்றைய நாள் வரை நாடாளுமன்றத்தில் நடந்ததே இல்லை. ஆனால், அந்த மசோதாவைக் கொண்டுவரக் குரல் கொடுத்தவரோ நாட்டின் ஜனநாயகத் தூணைத் தூக்கி நிறுத்தத் தேவைப்பட்ட அனைத்துத் தர்க்க நியாயங்களையும் அடுக்கிக் கொண்டே இருந்தார். இறுதியில், கடுமையான விவாதத்திற்குப் பிறகு அந்த மசோதா, சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
அந்தச் சட்டம் – பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம்.
அதனை முன்மொழிந்தவர் – திரு. பெரோஸ் காந்தி.
அப்போதைய பிரதமர் – திரு. ஜவஹர்லால் நேரு.
பத்திரிகையாளர்களின் நலன் சார்ந்து, பத்திரிகையாளர் சுதந்திரம் என்பது ஜனநாயகத் தேவை என்பதை உணர்ந்து அதனை முன்னெடுத்த பெரோஸ் காந்தி ஒரு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். அப்போதைய பிரதமர் நேரு அவர்களும் காங்கிரஸ். ஆனால், கட்சி என்பதையும் தாண்டி ஜனநாயக உரிமைகளைப் போராடி மீட்பதே ஒரு நாடாளுமன்றவாதியின் அடிப்படைக் கடமை என்கிற அறப்பார்வை பெரோஸ் காந்திக்கும், அதை ஏற்றுக்கொண்டு சட்டமாக்கும் பெருந்தன்மை நேரு அவர்களுக்குமிருந்தது.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு ‘எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு (RSF)’ என்கிற அமைப்பு வெளியிட்ட 2022-ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர தர வரிசையில் இந்தியா 150-வது இடம்பெற்றிருப்பது குறித்தும், சனநாயகக் குரல்களான பத்திரிகைகளின் மீது கடந்த எட்டாண்டுகளாக கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் ஒன்றிய அரசின் ஒடுக்குமுறை குறித்தும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அவர்களோ பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் வரலாறு காணாத அளவில் உச்சாணிக் கொம்பில் தான் இருக்கிறது என்கிற ரீதியில் பூசிமொழுகினார்.
ஆளும் சங்பரிவார் – RSS கும்பல்களுக்கு இந்தப் பூசிமொழுகும் வேலையொன்றும் புதிதல்ல. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, பாபர் மசுதி இடிப்பு, குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை, முதலாளிகளுக்கு நாட்டை தாரை வார்ப்பது என்று இந்தியா கண்ட, கண்டுகொண்டிருக்கும் அனைத்து அவலங்களையும் முன்னின்று நடத்திவிட்டு ராமர் கோயில், படேல் சிலை, மேக் இன் இந்தியா, வந்தே பாரத், இந்தி திணிப்பு, சமஸ்கிருத வளர்ப்பு என்று இன்றளவும் பூசி மொழுகுவது தொடந்துகொண்டேதான் இருக்கிறது.
ஆனால், பத்திரிகை சுதந்திர தரவரிசையில் இந்தியா தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதை எந்தச் சலனமும் இல்லாமல் மக்கள் கடந்து சென்றால் அதன் விளைவுகள் மிகவும் கொடூரமாகவே இருக்கும். அதுமட்டுமல்ல, உலகளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் நாடுகளின் தரவரிசையில் இந்தியா 10-க்குள் ஒன்றாக நுழைந்து இடம்பிடித்துவிட்டது. பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் தலைவர்களில் இந்தியாவின் மோடி முன்னணியில் இருக்கிறார்.
இந்த மக்கள் விரோத சாதனைகளில் இடம்பெற, மோடியரசு செய்த சனநாயகப் படுகொலைகள் ஏராளம்..! ஏராளம்..!
ஹிந்துத்வா – பாசிச சித்தாந்தங்களை விமர்சித்ததற்காக கௌரி லங்கேஷ், சுதிப் டத்தா பவுமிக் போன்ற பத்திரிகையாளர்களின் உயிர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டன! மோடியரசின் தொடர் நிர்வாகத் தோல்விகளையும், முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகளையும் தோலுரித்துக் காட்டியதற்காக ‘தி வயர்’ சித்தார்த் வரதராஜன், ‘ஆல்ட் நியூஸ்’ ஜுபைர், சித்திக் காப்பன் உள்ளிட்ட எத்தனையோ பத்திரிகையாளர்கள் அரசின் பொய் வழக்குகளுக்கு ஆளாகி அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்கள். தீவிரவாத ஊடுருவல் என்கிற காரணத்தைச் சொல்லி கஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் ஒன்றிய அரசு கட்டவிழ்க்கும் அரச பயங்கரவாதத்தையும், ராணுவ போலி என்கவுண்டர்களையும் பொதுவெளிக்குக் கொண்டுவரும் எட்வர்ட் பால் கெமிட், ஷாஹித் தந்த்ரே போன்ற எத்தனையோ பத்திரிகையாளர்கள் ராணுவ அச்சுறுத்தலுக்கும், சிறைக் கொட்டடிக்கும் ஆளாகி இருக்கிறார்கள்.
இதுமட்டுமல்ல, மோடி பதவியேற்ற கடந்த எட்டாண்டுகளில் ஏறத்தாழ 25000-க்கும் மேற்பட்ட இணையப் பக்கங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. ஏபிபி செய்தித் தொலைக்காட்சியின் ‘புன்ய பிரசூன் பாஜ்பாய்’ எனும் பிரபல செய்தி நெறியாளர் பாஜக செய்த ஊழல்களையும், அதிகார அத்துமீறல்களையும் நிகழ்ச்சியாக தொகுத்தளித்ததற்கு அந்தத் தொலைக்காட்சிக்கு விளம்பர வருமானத்தைத் தடுத்தல், வருமான வரி சோதனை, ஒளிபரப்பில் இடையூறு என தொடர்ச்சியான அழுத்தங்கள் கொடுத்து அவரை அந்தத் தொலைக்காட்சியிலிருந்தே வெளியேற வைத்தனர். மலையாள செய்தி நிறுவனமான ‘மீடியா ஒன்’ மீது ஒளிபரப்புத் தடைவிதித்தனர். ஆனால், அவர்களோ சட்டப்போராட்டம் நடத்தி தடைக்கு, தடைபோட்டனர்.
பாஜக அரசின் நிர்வாகத் தோல்வியையும், ஹிந்துத்வா பேரினவாதத்தையும் கேள்வி கேட்கும் ஊடகங்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் ஏவப்படும் அடக்குமுறைகள் ஒருபக்கமெனில், சிறுபான்மையினரின் மீது குறிப்பாக முஸ்லிகள் மீதான வெறுப்பை உமிழ, அதன்வழியே தன் ஆட்சியை தக்கவைக்க, தன்னோடு நட்பில் உள்ள அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு பாஜக சார்பு தொலைக்காட்சி ஆரம்பிக்க கடனுதவி வழங்குதல், அவர்களுக்கு RSS-ன் வழிகாட்டுதல்களை நிகழ்ச்சிகளாக வடிவமைக்கவும், ‘பிரைம் டைம்’ விவாதங்களில் மோடி புகழ்பாடுவதற்கும் வழிகாட்டுதல் வழங்குதல், வரிச்சலுகைகள் என தன்னால் இயன்ற அத்தனை சகாயங்களையும் செய்து வெறுப்பையே பொதுக்கருத்தாக்கும் மூன்றாந்தர ஊடகங்களையும் வளர்த்திருக்கின்றார்கள்.
உலகெங்கிலும் வலதுசாரி-பாசிச ஆதிக்கவாதிகள் அரசியல் அதிகாரம் பெறுவதையும், அவர்களை ஒப்பற்ற உலகத் தலைவர்களாய் ஊடகங்கள் மிகைப்படுத்துவதையும் இந்த தசாப்தம் நமக்குக் கண்ணுக்குக் கண்ணாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. சிறுபான்மை மக்களைப் பொதுவிரோதியாகக் கட்டமைத்து பெரும்பான்மை மக்களிடம் செல்வாக்குப் பெறும் ஈனப் பொதுவிதியைத்தான் இந்த வலதுசாரிகள் உலகெங்கிலும் பின்பற்றுகிறார்கள். என்றாலும், அமெரிக்காவின் ட்ரம்ப், இங்கிலாந்தின் போரிஸ் ஜான்சன், பிரேசிலின் எல் பொன்சாரோ உள்ளிட்ட வலதுசாரி-பாசிச ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டிருப்பது சிறு ஆறுதல்! இந்த ஆறுதலுக்கும் பத்திரிகையாளர்களின் பங்குதான் அளப்பரியதாக அமைந்தது.
கொரோனாக் கால நிர்வாகத் தோல்வியையும், முஸ்லிம்கள், கறுப்பின மக்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரத்தால் நாட்டில் நிலவிய அமைதியற்றத் தன்மையையும் வெளிக்கொண்டு வந்து ட்ரம்பின் ஆட்சியிழப்பிற்குக் காரணமாய் இருந்தவர்கள் அந்நாட்டுப் பத்திரிகையாளர்கள். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்குப் பதவியை வழங்கியது, மக்களின் வரிச்சுமையை அதிகரித்தது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது, கொரோனாக் காலங்களில்கூட கேளிக்கைக் கூட்டங்களை நடத்தியது என்று அனைத்துத் தவறுகளையும் அட்டவணையிட்டு, மக்களின் மன்றத்திற்குக் கொண்டு சென்று விவாதப் பொருளாக்கி, போரிஸ் ஜான்சனை இங்கிலாந்தின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கக் காரணமாய் இருந்தவர்கள் அந்நாட்டுப் பத்திரிகையாளர்கள்! நாட்டையே தனியார் மயமாக்கும் நாசக்காரப் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கிய பிரேசிலின் எல் பொன்சாரோ தேர்தலில் தோல்வியடையக் காரணமாய் இருந்தவர்களும் ஊடகத்துறையினரே! பெரும்பாலான ஊடகங்கள் சுயலாபங்களுக்காக விலைபோன நிலையிலும், உண்மையை உலகுக்குச் சொன்ன எத்தனையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட பின்னரும்கூட உண்மையை எழுதினார்கள் அந்தப் பத்திரிகையாளர்கள். ஆம், அந்தச் சொற்பப் பத்திரிகையாளர்கள்! அவர்கள் பொதுவெளியில் வைத்த உண்மை, ஆட்சியையே மாற்றியது.
‘மீடியா ஒன்’ நிறுவனர் திரு. சித்திக் ஹசன் அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டார், “எங்கள் பேனாக்கள் உடையலாம்; ஆனால், ஒருபோதும் வளையாது” என்று. நம் இந்திய அரசோ ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ஐ தேசியப் பத்திரிகையாளர் நாளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் நாட்டின் பத்திரிகையாளர்களோ அரசின் குற்றங்களைச் சுட்டிக்காடியதற்காகக் கொலைகளுக்கும், சிறை சித்திரவதைகளுக்கும் வரலாறு காணாத எண்ணிக்கையில் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
உடைந்தாலும் வளையமாட்டோம் என்று நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து நிற்கும் பேனாக்களின் சிறு கூட்டமே இந்திய ஜனநாயகத்தின் நான்காவதுத் தூணைத் தள்ளாடமல் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது!
– மு காஜாமைதீன்
(+91 9976412260)