பழி சுமத்திய குண்டுவெடிப்பு: `விளம்பரத்துக்காகச் செய்தேன்’ – போலீஸாரை அதிரவைத்த இந்து முன்னணி நிர்வாகி!

டவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட சாவர்க்கர், கடவுள் நம்பிக்கை கொண்ட பாமர மக்களை அடக்கியாள உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ்-ஸும் அதன் கிளை அமைப்புகளும், இந்து மக்களிடையே பரப்புவதற்கு கொள்கை எதுவும் இல்லாத காரணத்தால், மத ரீதியாக மனிதர்களைப் பிரித்து ஓட்டரசியல் லாபம் அடைந்து வருவதை இந்தியர்கள் அறிவர்.

இந்திய தேசத் தந்தையும் ராம பக்தருமான மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே தொடங்கி இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்-இன் “தொண்டர்கள்” மற்றும் “பிரமுகர்கள்”, வெடிகுண்டுகள், மதக் கலவரங்கள், பொய் பிரச்சாரங்கள் (fake news propaganda) ஆகிய தீவிரவாதச் செயல்களை நாடு முழுக்க நிகழ்த்திவிட்டு அதனை சிறுபான்மை சமூகங்களின் மீது பழி போடுவது தொடர்கிறது.

திரைமறைவில் இவர்கள் திட்டமிட்டு நடத்தும் பல்வேறு “சம்பவங்கள்” வெற்றிகரமாக சிறுபான்மையினர் மீது பழி போடப்பட்டாலும், குளறுபடி காரணமாகவும் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் மூலமாகவும் ஆங்காங்கே இந்த திட்டங்கள் வெளிச்சத்துக்கு வந்து, “தொண்டர்கள்” அல்லது “பிரமுகர்கள்” கையும் களவுமாக மாட்டிக் கொள்கின்றனர்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், பிறர் மீது பழி போட்டு நடத்தப்பட்ட தீவிரவாதி காவல்துறை விசாரணையில் கையும் களவுமாக மாட்டியபின்:

  1. தீவிரவாதி, மனநலம் குன்றிவிடுவார் – கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டார்
  2. தீவிரவாதி, சம்பவ நாளுக்கு முன் கட்சியை விட்டு நீக்கப் பட்டிருப்பார்
  3. தீவிரவாதி, 17 வயது பாலகனாக இருப்பார்
  4. தீவிரவாதி, பாஜகவின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவராக இருப்பார்
  5. தீவிரவாதி, விளம்பரத்திற்காக வீசினேன் என்பார் – கட்சியை காப்பாற்றி விடுவார்

அந்த வரிசையில் “தனக்குத் தானே” திட்டத்தை தமிழகமெங்கும் செயல்படுத்தி வரும் பாஜக-வும் அதன் அடிபொடிகளும் தன் வீட்டிற்கு தானே தீவைப்பது, தன் வாகனத்தைத் தானே கொளுத்துவது என வாரந்தோறும் நிகழ்த்தி வருகின்றனர்.

அதில் வெளிவந்த இவ்வார சம்பவம்:

“பெட்ரோல் குண்டு வீசியதாகச் சொன்னால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் இந்த நாடகத்தை நடத்தியதாக சக்கரபாணி கூறியது எங்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.” – போலீஸ்

கும்பகோணத்தில் இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றதாகக் கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் விளம்பரம் கிடைக்கும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தருவார்கள் என்பதற்காக இந்து முன்னணி நிர்வாகியே பாட்டிலை உடைத்துவிட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடியது போலீஸார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

கும்பகோணம், மேலக்காவேரி, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (38). கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி மாலதி (37), மகன் இனியன் (11). சக்கரபாணி இந்து முன்னணி மாநகரச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சக்கரபாணி தன் மனைவி, மகனுடன் வீட்டில் இருந்திருக்கிறார். அவருடைய வீட்டு வாசலில் வீசப்பட்ட கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறிக் கிடந்தது.

இதையடுத்து தன் வீட்டின் முன்பு யாரோ பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்றுவிட்டதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார் சக்கரபாணி. அந்தத் தகவலை இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளிடமும் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போலீஸார், உயரதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் சக்கரபாணி வீட்டின் முன்பு திரண்டனர். இந்தச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்பிரியா, ஏ.டி.எஸ்.பி-க்கள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன், தடயவியல்துறை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோர் சக்கரபாணி வீட்டுக்குச் சென்று ஆய்வுசெய்தனர். மோப்ப நாய் டாபி அழைத்து வரப்பட்டு துப்பறியும் பணியில் ஈடுபட வைத்தனர். டாபி கொஞ்ச துாரம் மட்டுமே ஓடி நின்றுவிட்டது.

வீட்டு வாசலில் உடைந்து கிடந்த பாட்டிலை, தடயவியல்துறையினர் ஆய்வுசெய்து அதில் பதிந்திருந்த கைரேகையைச் சோதனை நடத்தினர்.இந்த நிலையில் மண்ணெண்ணெய் வாசனையுடன் ஒரே இடத்தில் பாட்டில் உடைந்து கிடந்ததால் போலீஸாருக்கு சக்கரபாணி மீதே சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதில், தனக்கு விளம்பரம் கிடைக்கும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தருவார்கள் என்பதால், தானே பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி உடைத்துவிட்டு, பெட்ரோல் குண்டு வீசிச் சென்றதாக நாடகமாடினேன் என போலீஸிடம் சக்கரபாணி ஒப்புக்கொண்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். “அதிகாலை மர்ம நபர்கள் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசியதாக சக்கரபாணி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்குச் சென்று பார்த்ததுமே வெளி நபர்கள் யாரும் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை எனத் தோன்றியது. வீசப்பட்ட பாட்டிலில் பெட்ரோல் நிரப்பாமல் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டிருந்தது. அத்துடன் அந்தக் கண்ணாடி பாட்டிலை துாரத்திலிருந்து வீசினால் அது கீழே விழுந்து உடையும்போது எங்கும் சிதறிக் கிடக்கும்.

ஆனால், வாசலில் உடைந்து கிடந்த பாட்டில் சிதறாமல், ஒரே இடத்தில் உடைந்து கிடந்தது. மேலும், இந்து அமைப்புகளில் உள்ளவர்கள் செயல்பாட்டோடு சக்கரபாணியை ஒப்பிட்டு பார்த்தால் அவர் குறிப்பிடும்படியாக எதுவும் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் யாரிடமும் முன்விரோதமும் இல்லை என்பது தெரியவந்தது. இதையெல்லாம் வைத்து சக்கரபாணியிடம் விசாரணை மேற்கொண்டோம். அத்துடன் சக்கரபாணி மனைவியிடமும் தனியாக விசாரித்தோம். இதில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்.

முதலில் தான் இதைச் செய்யவில்லை என மறுத்தவர், பின்பு ஒப்புக்கொண்டார்.

பாட்டிலில் எரிந்த திரியின் துணி தங்களது வீட்டிலிருந்த போர்வையில் கிழித்தது என்றும், விளம்பரத்துக்காகத் தானே இதைச் செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

பெட்ரோல் குண்டு வீசியதாகச் சொன்னால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்பதால், இந்த நாடகத்தை நடத்தியதாக சக்கரபாணி கூறியது எங்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக மேலகாவிரி வி.ஏ.ஓ திருஞான சம்பந்தம் அளித்த புகாரின் பேரில், வெடிபொருளால் கட்டடத்தைச் சேதப்படுத்த முயன்றதாக சக்கரபாணி மீது வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர். நன்றி: விகடன் (22-11-2022)

திட்டமிட்டு நடத்தப்படும் இவ்வகை தீவிரவாதச் செயல்களில் வெளிவந்த சிலவற்றை சத்தியமார்க்கம்.காம் ஆவணப்படுத்தி வருகிறது. அவற்றை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்.